செர்னோபில் நகருக்கு ஒருநாள் சுற்றுலா
செர்னோபில் நகருக்கு ஒருநாள் சுற்றுலா
உக்ரைனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
செர்னோபில் நகரில் 20 வருடங்களுக்கு முன்பு மின்னணு நிலையத்தில் ஏற்பட்ட விபத்து, அதுவரை நடந்திராத ஒன்றாகும். ஏப்ரல் 26, 1986 அன்று அங்கிருந்த நான்கு மின்னணு உலைகள் ஒன்றில் நாசகரமான கதிரியக்கக் கசிவு ஏற்பட்டது. இயற்கையாகவோ மனித குறுக்கீட்டினாலோ ஏற்படுகிற பல பேரழிவுகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இடங்களைச் சுத்தப்படுத்தி மறுபடியும் சீரமைக்க முடியும். ஆனால், இந்த விபத்தோ நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் கழிவுப்பொருட்களை வெளியிட்டது.
சமீப காலங்களில், மின்னணு நிலையத்திற்கு அருகே முன்பு வசித்தவர்கள் தாங்கள் விட்டுவந்த வீடுகளைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு வருடமும் மே 9-ம் தேதியன்று சுற்றுலா செல்கிறார்கள். அவை இப்போது இடிபாடான நிலையில் இருக்கின்றன. சில சமயங்களில் தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் தங்களோடு அழைத்துச் செல்கிறார்கள். கதிரியக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை ஆராய விஞ்ஞானிகளும் அங்கு செல்கிறார்கள். அங்கு குடியிருந்தவர்கள் ஈமச்சடங்கு செய்வதற்காகவும் பிணங்களைப் புதைப்பதற்காகவும் வேறு சமயங்களில் செல்கிறார்கள். இவற்றைத் தவிர, உக்ரைன் நாட்டு சுற்றுலா கம்பெனிகள் சமீபத்தில், இந்த இடத்திற்கு வழிகாட்டியுடன் கூடிய ஒரு-நாள் சுற்றுலா ஏற்பாட்டைச் செய்திருக்கின்றன.
ஜூன் 2005 தேதியிட்ட த நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் முதல்பக்க கட்டுரையில், “உடல் ஆரோக்கியத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல்” a “வழிகாட்டியுடன் [பிரிப்பெட் நகரத்திற்கு சிறிய] சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்ற செய்தி வெளியிடப்பட்டது. பிரிப்பெட் நகரம் 1970-ல் உருவானது. இங்கு சுமார் 45,000 பேர் குடியிருந்தார்கள். இங்கிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மின்னணு உலைகள் இருக்கின்றன. என்றாலும், மற்ற அநேக இடங்களைப் போலவே மின்னணு நிலைய பேரழிவுக்குப் பிறகு இந்த நகரமும் வெறிச்சோடிவிட்டது. கதிரியக்கக் கசிவின் காரணமாக இங்குள்ள நகர்ப் பகுதிகளும் புறநகர்ப் பகுதிகளும் தடைவிதிக்கப்பட்ட இடங்களாக மாறின. ஆனா ருட்னிக்கும் விக்டர் ருட்னிக்கும் பிரிப்பெட் b நகரத்திற்கு வந்து சுமார் ஒரு வருடத்தில் இந்த மின்னணு நிலைய விபத்து ஏற்பட்டது.
மின்னணு நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் மிகச் சிறிய நகரமான செர்னோபில் (மின்னணு நிலையத்தின் பெயரும் செர்னோபில்) அமைந்துள்ளது. இந்நகரில் வசித்தவர்கள் வருடத்தில் ஒருமுறை தங்கள் சொந்த ஊரை வந்து பார்க்க இப்போதெல்லாம் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த செர்னோபில் நகரமே ருட்னிக் குடும்பத்தின் சொந்த ஊராக இருப்பதால், இந்த முறையும் அவர்கள் அங்கு சென்றார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் என் மனைவியும் அங்கு சென்று வந்ததை உங்களுக்கு விவரிக்க விரும்புகிறேன்.
சோகம் தோய்ந்த விடுமுறை
உக்ரைனின் தலைநகரமான கீவிலிருந்து எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். வடக்கே சென்ற இரு வழிச் சாலை அது. நாங்கள் சிறிய சிறிய நகரங்கள் வழியே கடந்து சென்றோம். தெருக்களில் வீடுகள் வரிசையாக இருந்தன. பூத்துக்குலுங்கிய ட்யூலிப் மலர்கள் வீடுகளின் முன்புறத்தை அலங்கரித்தன. காய்கறித் தோட்டங்களை மக்கள் பராமரித்து வந்தார்கள். நகரங்களுக்கிடையே சோளம், கோதுமை, சூரியகாந்தி வயல்கள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணப்பட்டன.
இருந்தாலும், ஓர் இடத்திற்கு வந்ததும் திடீரென பெரிய வித்தியாசத்தை உணர முடிந்தது. ஏதோவொரு எல்லையைக் கடந்ததுபோல் உணர்ந்தோம். ஆனால், அதற்கு அடையாளமாக பெயர்ப் பலகை எதுவும் கண்ணில் படவில்லை, என்றாலும் எங்களுக்குப் புரிந்துவிட்டது. நகருக்கு நகர் மயான அமைதி. பாழடைந்துவரும் வீடுகளில் ஜன்னல்கள் உடைந்துபோயிருந்தன. கதவுகளில் பூட்டுகள் தொங்கின. வீட்டுக்கு முன்புறத்தில் களைகள் மண்டிக்கிடந்தன, தோட்டங்களோ புதர்மாதிரி காட்சியளித்தன.
தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் வந்துவிட்டோம். இங்கிருந்து கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்தில்தான் மின்னணு உலைகளின் நிலையம். “இந்தப் பகுதியிலுள்ள நகரங்களில் கதிரியக்க வீச்சு மிக அதிகமாக இருக்கிறது. அதனால், இங்குள்ள பல நகரங்களிலும் கிராமங்களிலும் வசித்துவந்த 1,50,000-க்கும் அதிகமான மக்கள், முன்னாள் சோவியத் யூனியனுக்கு அனுப்பப்பட்டார்கள்” என்று ஆனா சொன்னார்.
சீக்கிரமே இன்னொரு பகுதிக்குள் வந்துசேர்ந்தோம். அந்தப் பகுதியைச் சுற்றி போடப்பட்டிருந்த பிரமாண்டமான
முட்கம்பி வேலி அதைப் பிற ஊர்களிலிருந்து பிரித்துவைத்திருந்தது. அருகில், ஒரு மரக் கட்டடத்தில்—சுங்கத்துறை ‘செக்போஸ்ட்’ போன்ற ஒரு கட்டடத்தில்—காவலர்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்கள். காவலர் ஒருவர் எங்களுடைய பாஸ்போர்ட்டுகளைப் புரட்டிப் பார்த்தார், வண்டி விவரங்களைக் குறித்துக்கொண்டார், அதன்பிறகே வாயிற்கதவைத் திறந்துவிட்டார்.தடைசெய்யப்பட்ட பகுதிக்குள்ளேயே இப்போது நாங்கள் வந்துவிட்டோம். நான் நினைத்த மாதிரி கருகின மரங்களோ சுருங்கின செடிகளோ அங்கு இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, மரங்கள் புத்தம் புதிய இலைகளை உடுத்தி பச்சை வானமாக சாலைக்கு நிழல் தந்தன. மரங்களைச் சுற்றி கீழே வளர்ந்திருந்த புதர்கள் காட்டின் தரைக்கு கம்பளம் விரித்திருந்தன. எதிரே இருந்த ஒரு வெண்ணிற கற்பலகை நகரின் பெயரை எங்களுக்குச் சொன்னது. அதில் செர்னோபில் என்று நீல நிறத்தில் எழுதப்பட்டிருந்தது.
செர்னோபில் நகர எல்லைப் பகுதியில் ஒரு மருந்துக்கடை இருந்திருக்கிறது. விக்டரின் அம்மா ஒருசமயத்தில் அங்கு வேலை பார்த்தாராம். கடை நேரம் எழுதப்பட்டிருந்த பலகை, தூசு படிந்து அழுக்கடைந்த ஜன்னலில் இன்னும் தொங்கிக்கொண்டிருந்தது. கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்ற கட்டடம், பட்டணத்தின் சென்ட்ரல் பார்க் அருகே நின்றிருந்தது. ஒருகாலத்தில் பல நடிகர்கள் அங்கு அரங்கேற்றின நிகழ்ச்சிகளை வேலையெல்லாம் முடித்துவிட்டு ஓய்ந்திருந்தபோது தானும் மற்றவர்களும் கண்டு ரசித்த நினைவுகள் அப்போது ஆனாவின் மனத்திரைக்கு வந்தன. அதற்கு அருகிலேயே உக்ராயினா என்ற சினிமா தியேட்டரும் இருக்கிறது. வெளியே சூரியன் சுட்டெரித்தபோது குளுகுளுவென்று இருந்த தியேட்டரில் பிள்ளைகள் புதிதாக ரிலீஸான படங்களைப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. அன்று சிரிப்பலைகள் முட்டிமோதிய அந்த இருட்டுத் தியேட்டருக்குள் இன்று நிசப்தம் குடிகொண்டிருக்கிறது. ஆனாவும் விக்டரும் தாங்கள் முன்பு குடியிருந்த வீட்டிற்குச் செல்ல எங்களை அழைத்தார்கள். நகரின் மையப் பகுதியிலிருந்து கொஞ்ச தூரம்தான் நடந்திருப்போம், அவர்களுடைய வீடு வந்துவிட்டது. வீட்டின் முன்புற வாசல் வழியாகப் போக முடியாதளவு மரம் செடி கொடிகள் கன்னாபின்னாவென்று வளர்ந்திருந்தன. அதனால், காடு மாதிரி வளர்ந்து கிடந்த களைகள் நடுவே ஒருவர் பின் ஒருவராக நடந்து வீட்டின் பின்புற வாசலுக்குச் சென்றோம். அங்கே பார்த்தால், கதவையே காணவில்லை, அந்த இடத்தில் திறப்பு மட்டும் காணப்பட்டது.
ருட்னிக் தம்பதியர் வாசம் செய்த வீட்டில் எல்லாமே நாசமாகிப் போயிருந்தன. துருப்பிடித்துப்போன கட்டிலில் பூஞ்சணம் பூத்த ஒரு மெத்தை அமுங்கியிருந்தது. வால்பேப்பர்கள் அழுக்குப் படிந்த பனித் திவலைகள்போல் கிழிந்து தொங்கின. அறையெங்கும் சிதறிக்கிடந்த குப்பைகளிலிருந்து ஆனா ஒரு பழைய ஃபோட்டோவைக் கண்டெடுத்தாள். “நான் திரும்பிவரும்போது வீட்டில் விட்டுச் சென்ற பொருள்கள் எல்லாம் அப்படியே இருக்குமென்று எதிர்பார்த்தேன். ஆனால், இப்போது வீடு குப்பைக்கூளமாக மாறியிருப்பதைப் பார்க்கும்போது நெஞ்சம் கனக்கிறது. வருடங்கள் பல கடந்ததால் எங்கள் பொருட்களெல்லாம் திருடு போய்விட்டன!” என்கிறார் ஆனா துக்கத்துடன்.
ருட்னிக் வீட்டிலிருந்து கிளம்பிய நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். தெரு முனையில் ஒரு கும்பல் எதையோ ஆர்வம் பொங்கப் பேசிக்கொண்டிருந்தது. நாங்கள் அரை கிலோமீட்டர்வரைதான் நடந்திருப்போம். ஒரு பூங்கா வந்துவிட்டது.
மேட்டுப் பகுதியில் அமைந்திருந்த அந்தப் பூங்காவிலிருந்து, அமைதியாகப் பாய்ந்துசென்ற ஆற்றைக் கண்டுகளிக்க முடிந்தது. செஸ்ட்நட் மரங்களின் வெண்ணிற மலர்கள் காற்றில் தலையசைத்துக் கொண்டிருந்தன. அதோ, அங்கே ஒரு படித்துறை! வளைந்து நெளிந்து சென்ற அந்தப் படிக்கட்டில், 1986-ல் நூற்றுக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருந்தார்கள், படகில் ஏறி அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதற்காக.போன வருடம்தான் முதல்முறையாக ருட்னிக் குடும்பத்தார் பிரிப்பெட்டிலுள்ள தங்கள் பழைய வீட்டிற்குச் சென்றிருந்தார்கள். மின்னணு நிலையத்தின் கதிரியக்கக் கசிவுக்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறி அப்போது 19 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
சிந்திப்பதற்கான சமயம்
ஏப்ரல் 2006-ல் இந்த மின்னணு நிலைய பேரழிவின் 20 ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும். அதற்காக பலவித சடங்குகளும் நடைபெறும். மனிதன் கடினமாக முயற்சி செய்தாலும் கடவுளின் வழிநடத்துதலின்றி பூமியில் நடக்கும் காரியங்களை அவனால் தனியாகக் கட்டுப்படுத்த முடியாது என்பதற்கு இந்தச் சடங்குகள் நிதர்சனமான உதாரணம்.—எரேமியா 10:23.
ஐக்கிய நாட்டு சங்கத்தின் ஆதரவோடு விஞ்ஞானிகள் இந்தப் பெருவிபத்தை மறு ஆய்வு செய்து, போன வருடம் செப்டம்பர் மாதம் ஓர் அறிக்கையை வெளியிட்டார்கள். அதில், விபத்து நடந்த அந்தச் சமயத்தில் 56 பேர் இறந்தார்கள் என்றும், கதிரியக்கத்தால் விளையும் நோய்களால் 4,000 பேர் மட்டுமே இறப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, மொத்தத்தில் 15,000 முதல் 30,000 பேர்வரை இறப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. எனவே, “மின்னணு சக்தி விளைவித்த பயங்கர ஆபத்துகளை மூடிமறைக்க முயலுகிறது என்பதாகச் சொல்லி,” ஐ.நா. வெளியிட்ட அறிக்கைக்கு விரோதமாக “எதிர்ப்புக்குரல் எழுப்பினர், சுற்றுச் சூழலில் அக்கறையுள்ள பல தொகுதியினர்” என செப்டம்பர் 8, 2005 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் தலையங்கக் கட்டுரை குறிப்பிட்டது.
மின்னணு பேரழிவுக்குப் பிறகு, தன் படைப்பாளரான, யெகோவா தேவனைப் பற்றித் தெரிந்துகொண்ட விக்டர் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் துக்கமெல்லாம் பறந்துபோய்விட்டது. ஏனென்றால், கடவுளுடைய ராஜ்யம் வந்தபிறகு இதுபோன்ற படுபயங்கர விபத்துகள் இனி ஒருபோதும் ஏற்படாது என்பது எங்களுக்குத் தெரியும். செர்னோபில்லிற்குப் பக்கத்திலுள்ள எங்கள் இனிய இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதியும் பாழ்நிலையிலிருந்து பரதீஸ் நிலைக்கு மாறும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.”
பூமி, ஆதியில் இருந்த பரதீஸ் நிலைக்குப் புதுப்பிக்கப்பட்டு, முழு பூமியும் மீண்டும் பரதீஸ் ஆகப்போகிறது என்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. செர்னோபில் பேரழிவு ஏற்பட்டது முதல் லட்சக்கணக்கானோர் இதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். (ஆதியாகமம் 2:8, 9; வெளிப்படுத்துதல் 21:3, 4) கடந்த 20 ஆண்டுகளின்போது உக்ரைனில் மட்டுமே 1,00,000-க்கும் அதிகமான ஆட்கள் இந்த வாக்குறுதியில் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்! கடவுளின் சித்தத்தைக் கற்க ஆர்வமுள்ளோருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கும் பிரகாசமான எதிர்காலத்தில் நீங்களும் நம்பிக்கை வைக்கத் தூண்டப்படுவீர்களாக.
[அடிக்குறிப்புகள்]
a இந்த இடங்களைப் பார்க்கச் செல்பவர்கள் அவ்வாறு பார்த்துவிட்டு உடனே திரும்புவதில் எந்த ஆபத்துமில்லை என பல அதிகாரிகள் சொல்கின்றனர். ஆனாலும் ஒருவர் அங்கு சுற்றுலா செல்வதற்கு விழித்தெழு! சிபாரிசு செய்வதும் இல்லை, ஆதரிப்பதும் இல்லை.
b ஏப்ரல் 22, 1997 விழித்தெழு! இதழின் 12-15 பக்கங்களைப் பார்க்கவும்.
[பக்கம் 16-ன் பெட்டி/படம்]
சமாதி கட்டியவர்களுக்குச் சமாதி
செர்னோபில் மின்னணு உலை விபத்தில் ஏற்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்தினவர்கள், சமாதி கட்டியவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். சாதாரணமாக எழுப்பப்படும் சமாதியைவிட மிகப் பெரிய சமாதி இவர்களுக்காக எழுப்பப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் தீயை அணைத்து, புகைந்துகொண்டிருந்த மின்னணு உலைக்கு சமாதி கட்டி, நச்சுப்பொருள்களை அகற்றினார்கள். மொத்தத்தில், லட்சக்கணக்கான இப்படிப்பட்ட ஆட்கள் இந்த வேலையில் ஈடுபட்டார்கள். சுமார் 4,000 பேர் மின்னணு உலை விபத்தின் நேரடி பாதிப்பால் இறப்பார்கள் என முன்னறிவிக்கப்பட்டதில் பெரும்பாலோர் மின்னணு நிலையத்தின் கழிவுகளை அப்புறப்படுத்த வந்த ஆட்களே ஆவர்.
[பக்கம் 15-ன் படங்கள்]
செர்னோபில்லின் பெயர்ப் பலகையும், சினிமா தியேட்டரும்
[பக்கம் 15-ன் படங்கள்]
ருட்னிக் தம்பதியரும் செர்னோபில்லில் அவர்களுடைய வீடும்
[பக்கம் 16-ன் படங்கள்]
பிரிப்பெட்டில் ருட்னிக் தம்பதியர் வாழ்ந்த அப்பார்ட்மென்ட்டிலிருந்து (உட்படம்) சுமார் மூன்று கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது கதிரியக்கக் கசிவு ஏற்பட்ட மின்னணு நிலையம்