Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விசேஷ கவனிப்பு தேவைப்படும் பிள்ளைகளை வளர்க்க . . .

விசேஷ கவனிப்பு தேவைப்படும் பிள்ளைகளை வளர்க்க . . .

விசேஷ கவனிப்பு தேவைப்படும் பிள்ளைகளை வளர்க்க . . .

பின்லாந்திலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மார்குஸுக்கு (இடது) 20 வயதாகிறது. ஆனாலும் தானாக சாப்பிடத் தெரியாது, குடிக்கத் தெரியாது, குளிக்கவும் தெரியாது. இரவில் சரியாகத் தூங்குவதும் கிடையாது. அதனால், இரவு முழுதும் அவனுக்கு கவனிப்பு தேவைப்படுகிறது. அதுபோக, அடிக்கடி அவனுக்கு அடிபட்டுவிடுவதால் எந்நேரமும் முதலுதவி தேவைப்படுகிறது. இப்படியெல்லாம் இருந்தாலும், மார்குஸின் பெற்றோர் அவன்மீது ரொம்பவே பாசம் வைத்திருக்கிறார்கள்; அவன் சாந்தமாகவும், அன்பாகவும், பாசமாகவும் நடந்துகொள்வதைப் பார்த்து ரசிக்கிறார்கள்; அவனுக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருந்தாலும் அவனை நினைத்துப் பெருமைப்படுகிறார்கள்.

உலக ஜனத்தொகையில் மூன்று சதவீதத்தினருக்கு ஏதோவொரு வகை மனவளர்ச்சிக் குறைபாடு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டிருக்கிறது. பரம்பரை நோய்கள், பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படும் மூளை நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், போதைப் பொருள்களை உபயோகித்தல், மதுபானம் குடித்தல், இரசாயனங்களின் பாதிப்புகள் ஆகியவற்றால் ஒருவருக்கு மனவளர்ச்சி குன்றிப்போகலாம். ஆனால், பெரும்பாலோருடைய விஷயத்தில், அதற்கான காரணங்கள் தெரிவதில்லை. விசேஷ கவனிப்பு தேவைப்படும் பிள்ளைகளுடைய பெற்றோர் என்ன செய்யலாம்? இவர்களை உற்சாகப்படுத்த நாம் என்ன செய்யலாம்?

அதிர்ச்சி தரும் செய்தி காதில் விழ . . .

தங்கள் பிள்ளைக்கு மனவளர்ச்சிக் குறைபாடு இருக்கிறதென்ற விஷயம் பெற்றோருக்கு எப்போது தெரியவருகிறதோ அப்போதே அவர்களுடைய இக்கட்டான காலம் ஆரம்பித்துவிடுகிறது. “எங்கள் மகளுக்கு டெளன் குறைபாடு (மனவளர்ச்சிக் குறைபாடு) இருக்கிற விஷயத்தை நானும் என் கணவரும் கேள்விப்பட்டபோது எங்கள் மனம் சுக்குநூறாகிப்போனது” என்கிறார் ஸிர்க்கா. மார்குஸின் தாய் ஆன் இவ்வாறு சொல்கிறார்: “அவன் மனவளர்ச்சிக் குன்றியவனாக இருப்பான் என்று எனக்குத் தெரிந்தபோது, ஐயோ! மற்றவர்கள் அவனை எப்படி நடத்தப்போகிறார்களோ என்று நினைத்துக் கவலைப்பட்டேன். ஆனால், சீக்கிரமே அந்தக் கவலைகளையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு அவனுக்கு என்னென்ன தேவைப்படும் என்றும், அவனுக்காக என்னால் என்னென்ன செய்ய முடியும் என்றும் யோசிக்க ஆரம்பித்தேன்.” இம்கார்டு என்ற பெண்மணியும்கூட அதேவிதமாகச் செய்தார்: “எங்கள் மகள் யூனிக்கிற்கு மனவளர்ச்சிக் குறைபாடு இருக்கிறது என்று டாக்டர் சொன்னபோது என் செல்லக்குட்டிக்கு நான் எப்படியெல்லாம் உதவ முடியும் என்ற யோசனையில் மூழ்கிப்போனேன்.” ஆன், இம்கார்டு, ஸிர்க்கா ஆகியோரைப் போன்ற பெற்றோர், தங்கள் பிள்ளைக்கு ஒரு குறைபாடு இருக்கிற விஷயம் தெரியவரும்போது என்ன செய்யலாம்?

குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஐ.மா. தேசிய தகவல் பரப்பு மையம் இவ்வாறு பரிந்துரைக்கிறது: “நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் தகவல்களைத் திரட்டுவதாகும். உங்கள் பிள்ளையின் குறைபாடு பற்றியும், அதற்குக் கிடைக்கும் உதவிகள் பற்றியும், உங்கள் பிள்ளை உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் முடிந்தவரை வளர்ச்சி பெற நீங்கள் திட்டவட்டமாகச் செய்ய முடிந்த காரியங்கள் பற்றியும் தகவல்களைத் திரட்டுங்கள்.” உங்கள் பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பவற்றைத் தெரிந்துகொண்டு அவற்றின்படி செய்வதற்கு அந்தத் தகவல்கள் உதவும். இது எப்படி இருக்கிறதென்றால், சாலை வரைபடத்தை வைத்துக்கொண்டு, உங்கள் பயணத்தில் எவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள், எந்தெந்த இடங்களைத் தாண்டி வந்திருக்கிறீர்கள் என்பவற்றைக் குறிப்பதுபோல் இருக்கிறது.

நம்பிக்கைச் சுடர்

மனவளர்ச்சிக் குறைபாட்டால் இருண்டுபோன குழந்தைப்பருவம் சவால்மிக்கதாக இருந்தாலும், நம்பிக்கைச் சுடர் வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எப்படி?

முதலாவதாக, மனவளர்ச்சி குன்றிய அநேக குழந்தைகள் வேதனையில் தவிப்பதில்லை என அறிந்து பெற்றோர் நிம்மதியாக இருக்கலாம். டாக்டர் ராபர்ட் ஐசக்ஸன், மனவளர்ச்சி குன்றிய குழந்தை என்ற தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “இவர்களில் அநேகருக்கு, சந்தோஷமாக இருக்க முடிகிறது, பிறருடன் சகஜமாகப் பழக முடிகிறது, இசையிலும் சில வகை விளையாட்டுகளிலும் ஆர்வங்காட்ட முடிகிறது, ருசியான உணவை உண்ணவும் நண்பர்களுடன் இருக்கவும் பிடிக்கிறது.” சாதாரண குழந்தைகளுடன் ஒப்பிடும்போது இவர்களுடைய உலகமும் சாதனையும் சிறியதுதான். என்றாலும், புரிந்துகொள்ளும் திறன் அதிகமுள்ள குழந்தைகளைவிட இவர்களே பொதுவாய் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இரண்டாவதாக, இப்படிப்பட்ட பிள்ளைகள் கஷ்டப்பட்டு சாதிக்கிற காரியங்களைக் குறித்துப் பெற்றோர் பெருமைப்படலாம். ஒவ்வொரு காரியத்தையும் கற்றுக்கொண்டு செய்வது அத்தகைய பிள்ளைகளுக்கு இமாலயச் சாதனையாக இருக்கிறது. ஆனால், அச்சாதனைகளைப் பார்க்கும்போது, அந்தப் பிள்ளையும் சரி, அதன் பெற்றோரும் சரி, பரமதிருப்தி அடைகிறார்கள். உதாரணத்திற்கு, பிரையன், ஒருவித ஸ்க்லரோஸிஸ் நோயினாலும் (Tuberous sclerosis), வலிப்புகளினாலும், தற்சிந்தனை நோயினாலும் (autism) கஷ்டப்படுகிறான். வெகு புத்திசாலியாக இருந்தாலும், அவனால் பேச முடியாது, கைகளை நினைத்தபடி அசைக்க முடியாது. அதனால், கீழே சிந்தாமல் அரை கப் பால் குடிப்பதும்கூட அவனுக்கு ஒரு பெரிய சாதனை. ஆனாலும், படிப்படியாக அதைக் கற்றுக்கொண்டான். தன் உடலையும் மனதையும் இந்தளவு ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்க கற்றுக்கொண்டதால், தான் விரும்பிக் குடிக்கும் பாலை இப்போது அவனால் தானாகவே பருக முடிகிறது.

இது பிரையனின் இன்னொரு சிறிய சாதனை என்று அவன் பெற்றோர் கருதுகிறார்கள். அவனுடைய அம்மா, லோரி சொல்கிறார்: “எங்களுக்கு எங்கள் மகன், காட்டிலுள்ள உறுதியான மரத்தைப் போல இருக்கிறான். காட்டிலுள்ள மற்ற மரங்கள் மடமடவென்று வளர்ந்தாலும், உறுதியான மரம் மெதுவாகத்தான் வளரும், ஆனால், அதன் மரக்கட்டைகள் மதிப்புவாய்ந்தவை. அதுபோலத்தான் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளும். அவர்கள் மெதுவாக வளர்ந்தாலும் தங்கள் பெற்றோருக்கு எப்போதுமே மதிப்புவாய்ந்த சின்னஞ்சிறிய ஓக்கு மரமாகவும் தேக்கு மரமாகவும் இருக்கிறார்கள்.”

மூன்றாவதாக, தங்கள் பிள்ளை காட்டும் பாசத்தில் அநேக பெற்றோர் மனம்நெகிழ்ந்து போகிறார்கள். இம்கார்டு இவ்வாறு சொல்கிறார்: “யூனிக் எப்போதும் சீக்கிரமாகவே தூங்கப்போய்விடுவாள். ஒவ்வொரு நாளும் எங்கள் எல்லாருக்கும் வந்து முத்தம் கொடுத்துவிட்டுத்தான் தூங்கப்போவாள். ஒருவேளை, நாங்கள் எல்லாரும் வீடுவந்து சேருவதற்குள் அவள் தூங்கப்போனால், விழித்திருக்க முடியாததற்காக மன்னிப்புக்கேட்டு ஒரு சிறிய குறிப்பை எழுதிவைப்பாள். எங்கள் எல்லாரையும் நேசிப்பதாகவும் மறுநாள் காலை எங்களைப் பார்க்க ஆசைப்படுவதாகவும் அதில் எழுதியிருப்பாள்.”

மார்குஸ் தன் அப்பாவையும் அம்மாவையும் நேசிப்பதை அவர்களிடம் சொல்ல ஆசைப்பட்டான். ஆனால், அவனால் பேச முடியாது. ஆகவே, அதைச் சொல்வதற்காக மிகவும் சிரமப்பட்டு சைகை மொழியில் சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டான். டியா என்பவள் வளர்ச்சி குன்றிய இன்னொரு பிள்ளை. அவளுடைய பெற்றோர் தங்கள் உணர்ச்சிகளை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள்: “எங்கள் வாழ்க்கையை அவளுடைய பாசத்தினாலும் நேசத்தினாலும் கட்டித்தழுவல்களினாலும் அன்புமுத்தங்களினாலும் நிரப்பியிருக்கிறாள்.” இதிலிருந்து ஒருவிஷயம் தெளிவாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லிலும் செயலிலும் அன்பு காட்டி பாசத்தைப் பொழிந்து வளர்க்க வேண்டும்.

நான்காவதாக, தங்கள் பிள்ளைகள் கடவுள்மீது நம்பிக்கை வைக்கும்போது கிறிஸ்தவப் பெற்றோர் மிகவும் திருப்தி அடைகிறார்கள். இந்த விஷயத்தில் யூஹாவின் உதாரணம் மிகச் சிறந்தது. தன் அப்பாவின் சவ அடக்கத்தின்போது யூஹா, தான் ஒரு ஜெபம் செய்யலாமா என்று கேட்டுவிட்டு சுருக்கமாக ஒரு ஜெபம் செய்தான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். தன் அப்பா கடவுளுடைய நினைவில் இருக்கிறார் என்றும் கூடிய சீக்கிரத்தில் கடவுள் அவரை உயிர்த்தெழுப்புவார் என்றும் தன் நம்பிக்கையை ஜெபத்தில் குறிப்பிட்டான். அதோடு, தன் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருடைய பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு உதவும்படியும் ஜெபித்தான்.

யூனிக்கின் பெற்றோரும்கூட தங்களுடைய மகள் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். கற்றுக்கொள்கிற எல்லாக் காரியங்களையும் அவளால் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. உதாரணத்திற்கு, அவள் நிறைய பைபிள் கதாபாத்திரங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும் அந்தந்த நபர்களைப் பற்றிய விஷயங்களை அவர்களுடன் சம்பந்தப்படுத்தி அவளால் பார்க்க முடிவதில்லை. ஒரு ஜிக்ஸா புதிர் விளையாட்டில் படத்துண்டுகள் சேர்த்து வைக்கப்படாவிட்டால் அவை தனித்தனியாக இருக்கும், முழு படமாகாது. அதுபோல அவளுடைய மனதிலும் விஷயங்கள் தனித்தனியாக நிற்கின்றன. இருந்தாலும், சர்வ வல்லமையுள்ள கடவுள் கண்டிப்பாக ஒருநாள் உலகிலுள்ள பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவார் என்பது அவளுக்கு நன்றாகப் புரிகிறது. கடவுள் வாக்குறுதி அளித்துள்ள புதிய பூமியில் பூரண மன நலத்துடன் வாழ யூனிக் ஆவலோடு காத்திருக்கிறாள்.

சொந்தக் காலில் நிற்க உதவி

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் சிறு குழந்தைகளாகவே இருந்துவிடுவதில்லை, அவர்களும் பெரியவர்களாக ஆகிறார்கள். எனவே, விசேஷ கவனிப்பு தேவைப்படும் இந்தப் பிள்ளைகள் எல்லாவற்றிற்கும் மற்றவர்களையே சார்ந்திராமல் வாழ்வதற்கு பெற்றோர் கற்றுத்தர வேண்டும். மார்குஸுடைய தாய் ஆன், இவ்வாறு சொல்கிறார்: “மார்குஸை ஒன்றும் செய்ய விடாமல் நாங்களே அவனுக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டால் வேலை சீக்கிரமாகவும் முடிந்துவிடும், சுலபமாகவும் இருக்கும். ஆனால், அப்படிச் செய்யாமல், தனக்குத் தேவையான எல்லாவற்றையும் அவனே செய்துகொள்ள முடிந்தவரை உதவி செய்தோம்.” யூனிக்கின் தாய் இதையும் சொல்கிறார்: “யூனிக்கிற்கு நிறைய நல்ல குணங்கள் இருந்தாலும் சில சமயங்களில் அடம்பிடிப்பாள். அவளுக்குப் பிடிக்காத ஒரு காரியத்தை செய்ய வைப்பது கடினம்; அப்போது, ‘அப்படிச் செய்தால்தான் அப்பா அம்மாவுக்குச் சந்தோஷமாக இருக்கும்’ என்று அவளுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒருவழியாக கடைசியில், அதற்கு அவள் ஒத்துக்கொண்டாலும் அதைச் செய்து முடிக்கும்வரை கூடவே இருந்து அவளை ஊக்குவிக்க வேண்டியிருக்கிறது.

பிரையனுடைய அம்மா, லோரியும் அவனுடைய பிற்கால வாழ்க்கையை நல்லபடியாக அமைப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்கிறார். மூன்று வருடமாக முயற்சி செய்து அவரும் அவருடைய கணவரும் ஒருவழியாக பிரையனுக்கு டைப் அடிக்க கற்றுத்தந்தார்கள். இப்போதெல்லாம், பிரையன் ரொம்ப சந்தோஷமாக தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஈ-மெயில் அனுப்புகிறான். ஆனால், டைப் அடிக்கும்போது யாராவது அவன் மணிக்கட்டுகளை தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். முழங்கையைத் தாங்கிப் பிடித்தாலே போதுமென்கிற அளவுக்கு அவன் முன்னேற அவனுடைய பெற்றோர் உதவிசெய்து வருகிறார்கள். அப்படி அவன் செய்தால், அது ஒரு பெரிய சாதனைதான்.

என்றாலும், பெற்றோர்கள் அப்படிப்பட்ட பிள்ளையிடமிருந்து அளவுக்கதிகமாக எதிர்பார்க்கவோ அவர்களை வற்புறுத்தவோ கூடாது. ஒவ்வொரு பிள்ளைக்கும் வித்தியாசமான திறமை இருக்கிறது. விசேஷ கவனிப்பு தேவைப்படும் பிள்ளை என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சிபாரிசு செய்கிறது: “சிறந்த ஒரு முறை என்னவென்றால், தானாக காரியங்களைச் செய்ய பிள்ளையை ஊக்கப்படுத்த வேண்டும், அதேசமயம், பிள்ளை எரிச்சலடையாமல் இருக்க போதுமான உதவியும் அளிக்க வேண்டும்.”

பெரிய உதவி​—⁠எங்கிருந்து?

மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் பெற்றோருக்கு ரொம்பவே பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படுகிறது. பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வருகையில் அநேக பெற்றோர் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். வேலை செய்தே ஓய்ந்துவிடுகிறார்கள். தங்கள் நிலையை நினைத்து அழுகிறார்கள், பரிதாபப்படுகிறார்கள். ஆனால், இதற்கு விமோசனமே இல்லையா?

‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். (சங்கீதம் 65:2) கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள தைரியத்தையும், நம்பிக்கையையும், பலத்தையும் அவர் தருவார். (1 நாளாகமம் 29:12; சங்கீதம் 27:14) உடைந்துபோன மனதிற்கு ஆறுதல் அளிப்பார்; பைபிள் தரும் ‘நம்பிக்கையிலே [அவர்கள்] சந்தோஷமாயிருக்க’ வேண்டுமென்பதுதான் யெகோவாவின் விருப்பம். (ரோமர் 12:12; 15:4, 5; 2 கொரிந்தியர் 1:3, 4) எதிர்காலத்தில் குருடரின் கண்கள் பார்க்கும்போது, செவிடரின் செவிகள் கேட்கும்போது, முடவரின் கால்கள் துள்ளும்போது, ஊமையரின் நாவு சந்தோஷத்தில் கெம்பீரிக்கும்போது, தங்களுடைய செல்லக் குழந்தையின் மனமும் உடலும்கூட பூரண சுகத்தைப் பெறும் என்பதில் தேவபயமுள்ள பெற்றோர்கள் நிச்சயமாயிருக்கலாம்.​—ஏசாயா 35:5, 6; சங்கீதம் 103:2, 3.

பெற்றோர்களுக்கு . . .

உங்கள் பிள்ளையின் குறைபாடு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

எப்போதும் நம்பிக்கையாக இருங்கள்.

உங்கள் பிள்ளை முடிந்தளவு தன் வேலைகளைத் தானே செய்துகொள்ள உதவுங்கள்.

கடவுளிடமிருந்து தைரியத்தையும் நம்பிக்கையையும் பலத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

மற்றவர்களுக்கு . . .

பிள்ளையின் வயதுக்குத் தகுந்தாற்போல் பேசுங்கள், உண்மையான அக்கறையுடன் பேசுங்கள்.

பிள்ளையைப் பற்றி அதன் பெற்றோரிடம் பேசுங்கள், அவர்களைப் பாராட்டுங்கள்.

பெற்றோருடைய உணர்ச்சிகளை மதித்து, தகுந்த விதத்தில் நடந்துகொள்ளுங்கள்.

விசேஷ கவனிப்பு தேவைப்படும் பிள்ளைகளுடனும் பெற்றோருடனும் சேர்ந்து காரியங்களைச் செய்யுங்கள்.

[பக்கம் 26-ன் பெட்டி/படம்]

பிறர் உதவ வழிகள்

மாரத்தான் ஓட்டக்காரர்கள் சோர்ந்துவிடாமல் தொடர்ந்து ஓடுகிறதைக் கண்டு பார்வையாளர்கள் வியந்து ரசிக்கிறார்கள். அதுபோலவே, வளர்ச்சி குன்றிய பிள்ளையின் பெற்றோரும் சோர்ந்துவிடாமல்​—⁠24 மணிநேரமும்​—⁠பிள்ளையைப் பராமரிப்பதைக் கண்டு நீங்கள் வியந்துபோகலாம். ஓட்டப்பாதை நெடுக இருக்கும் பார்வையாளர்கள், மாரத்தான் ஓட்டக்காரர்களுக்கு பொதுவாக தண்ணீர் கொடுத்து புத்துணர்ச்சி அளிக்கிறார்கள். அவ்வாறே, விசேஷ கவனிப்பு தேவைப்படும் பிள்ளையை காலம் பூராவும் பராமரிக்க வேண்டிய பொறுப்புடைய பெற்றோருக்கு நீங்கள் புத்துணர்ச்சி அளிக்க முடியுமா?

முடியும். அதற்கு ஒரு வழி, அவர்கள் மகனிடமோ மகளிடமோ பேசுங்கள். ஆனால், ஆரம்பத்தில் அந்தப் பிள்ளை ஒழுங்காகப் பதில் சொல்லவில்லை என்றால் அல்லது எந்தப் பதிலும் சொல்லவில்லை என்றால் உங்களுக்குச் சங்கடமாக இருக்கலாம். என்றாலும், அப்படிப்பட்ட பிள்ளைகள் காதுகொடுத்துக் கேட்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள், நீங்கள் சொல்வதை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்கக்கூடும். சில சந்தர்ப்பங்களில் அவர்களுடைய மனம் நீருக்கடியில் மறைந்திருக்கும் பெரிய பனிப்பாறைபோல் இருக்கிறது. அவர்களுடைய முகத்திலோ எவ்வித உணர்ச்சியையும் பார்க்க முடியாது. a

குழந்தை நரம்பியல் நிபுணரான டாக்டர் ஆனிக்கி காய்ஸ்டினென், நல்ல விதத்தில் பேச்சுத்தொடர்பு கொள்வதற்கு சில ஆலோசனைகள் தருகிறார்: “முதலில் நீங்கள் அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி அல்லது பொழுதுபோக்குகள் பற்றி கேட்கலாம். அவர்களுடைய உண்மையான வயதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப பேசுங்கள், சிறு குழந்தையிடம் பேசுவதுபோல் பேசாதீர்கள். ஒரு விஷயத்தைப் பேசி முடித்த பிறகு அடுத்த விஷயத்தைப் பேசுங்கள். சிறுசிறு வாக்கியங்களில் அவர்களிடம் பேசுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை அவர்கள் யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் கொடுங்கள்.”

அவர்களுடைய பெற்றோரிடத்திலும் நீங்கள் பேச வேண்டும். அவர்களுடைய மனவேதனைகளைத் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் மீதுள்ள உங்கள் அனுதாபம் அதிகரிக்கும். உதாரணத்திற்கு, மார்குஸின் அம்மா ஆன், தன் நேச மகனை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று ஏங்குகிறார். தன் மகன் தான் நினைப்பதை வாய் திறந்து சொல்ல முடியாததை நினைத்துக் குமுறுகிறார். மகனுக்கு முன் தான் இறந்துவிட்டால் தன் மகன் தாயின்றித் தவிப்பானே என்று நினைத்துக் கவலைப்படுகிறார்.

மனவளர்ச்சி குன்றியிருக்கும் தங்கள் பிள்ளைக்கு எவ்வளவுதான் உதவி செய்தாலும் அதில் பெற்றோர் திருப்தி அடைவதில்லை, இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றே நினைக்கிறார்கள். பிரையனின் தாய், லோரி, தன் மகனைக் கவனிக்கும்போது தான் செய்துவிடுகிற ஒவ்வொரு சிறிய தவறுக்கும் தன்னை நொந்துகொள்கிறார். அதேசமயம் தன்னுடைய மற்ற பிள்ளைகளுக்கு அதிக கவனம் செலுத்த முடியாததை நினைத்தும் மனம் வருந்துகிறார். அப்படிப்பட்ட பெற்றோரிடம் நீங்கள் அக்கறை காட்ட வேண்டும், அவர்களுடைய உணர்ச்சிகளையும் நீங்கள் மதிக்க வேண்டும்; அப்படிச் செய்வதன் மூலம் அவர்களையும் அவர்கள் பிள்ளைகளையும் கெளரவிக்க முடியும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் முடியும். இதைக் குறித்து இம்கார்டு இவ்வாறு சொல்கிறார்: “என் மகள் யூனிக்கைப் பற்றிப் பேச எனக்கு ரொம்ப ஆசை. அவளை வளர்ப்பதில் எனக்கிருக்கும் சுகங்களையும் சுமைகளையும் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.

அவர்களுக்கு உதவ இன்னும் நிறைய வழிகள்​—⁠பெரிய, சிறிய வழிகள்​—⁠இருக்கின்றன. ஒருவேளை, அத்தகைய பெற்றோரையும் பிள்ளையையும் உங்கள் வீட்டுக்கு அழைக்கலாம். உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சில காரியங்களைச் செய்ய அவர்களை அழைக்கலாம். அதோடு, அந்தப் பெற்றோர் ஓய்வெடுக்கும்போது அவர்கள் பிள்ளையுடன் சில மணிநேரம் செலவிடலாம்.

[அடிக்குறிப்பு]

[பக்கம் 26-ன் படம்]

உண்மையான அக்கறை காட்டுவது பெற்றோரையும் பிள்ளையையும் கௌரவிக்கிறது

[பக்கம் 27-ன் படம்]

யூனிக்கைப் போன்ற மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பெரியவர்களாக ஆனாலும் தொடர்ந்து அவர்களுக்கு அன்புகாட்ட வேண்டும்

[பக்கம் 28-ன் படம்]

தன் மகன் பிரையன் பிறருடைய உதவியின்றி வாழ்வதற்காக அவனுக்கு டைப் அடிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார், லோரி