Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

பிரேசில் நாட்டில், பசியை மறக்கடித்து எடையைக் குறைக்கும் ஆம்பீடமைன் மருந்துகளை உபயோகிப்பது 1997-2004-⁠க்குள் 500 சதவீதம் அதிகரித்துள்ளது.​—⁠ஃபோல்யா ஆன்லைன், பிரேசில்.

◼ காஸ்மிக் கதிர்கள் விமானிகளைப் பெருமளவு பாதிக்கின்றன; இதனால் மற்றவர்களைவிட அவர்களே கண்புரையால் மூன்று மடங்கு அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.​—⁠த வால் ஸ்டீர்ட் ஜர்னல், அமெரிக்கா.

◼ அடுத்த பத்து ஆண்டுகளில், ஆசியாவிலுள்ள 127 கோடி பிள்ளைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு சுத்தமான தண்ணீர், உணவு, உறைவிடம், உடல்நலப் பராமரிப்பு, கல்வி போன்ற சில அடிப்படை வசதிகள் கிடைக்காது.​—⁠பிளான் ஏஷியா ரீஜனல் ஆஃபீஸ், தாய்லாந்து.

◼ புகைபிடிப்பவர் ஊதித்தள்ளும் புகையைச் சுவாசிப்பவர்கள் “இதுவரை மதிப்பிட்டதைவிட மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்” என்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில், கொலரடோவிலுள்ள ப்வீப்லோ நகரில், அலுவலகங்கள், ரெஸ்டாரண்டுகள் போன்ற பொது இடங்களில் புகைப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது; அதற்கு 18 மாதங்களுக்குப் பிறகு அந்நகரில் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 27 சதவீதம் சரிந்தது.​—⁠டைம், அமெரிக்கா.

விண்ணைத் தொடும் விவாகரத்து விகிதம்

ஸ்பெயின் நாட்டில், திருமணங்களுக்கும் விவாகரத்துகளுக்கும் இடையிலான விகிதம் கணக்கிடப்பட்டது. வருடம் 2000-⁠த்தில், அது இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் 2004-⁠ல் அது மூன்றுக்கு இரண்டு என உயர்ந்தது. 1981-⁠ல் விவாகரத்தை அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது; அதுமுதல், பத்து கோடிக்கும் அதிகமான பிள்ளைகள் தங்கள் அப்பா, அம்மா பிரிந்துபோயிருப்பதை அல்லது விவாகரத்து செய்திருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அதிகமதிகமானோரின் திருமணம் இப்படி முறிந்துபோவது ஏன்? “இன்றைய கலாச்சார மாற்றங்கள், ஆன்மீக மற்றும் தார்மீக நெறிமுறைகளின் சீரழிவு, பெண்கள் வேலைக்குப் போவது, வீட்டு வேலைகளில் ஆண்கள் ஒத்துழைக்காதது ஆகியவையே மண வாழ்க்கை ஆட்டம்காணக் காரணம்” என பாட்ரிஸ்யா மார்டினெஸ் என்ற மனோவியல் நிபுணர் சொல்கிறார்.

கொழுகொழு சீனர்கள்

சீனாவில் “அளவுக்குமீறி குண்டாக இருப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த 10 வருடங்களில் 20 கோடியை எட்டும்” என லண்டனில் வெளியாகும் த கார்டியன் என்ற செய்தித்தாள் சொல்கிறது. ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் “நகரங்களில் திரும்பிய பக்கமெல்லாம் தென்படுகின்றன; அதோடு, இன்றைய நடுத்தர வர்க்கத்தாருக்கு உடலை வளைத்து வேலை செய்வதென்றாலே கசக்கிறது; கார் இல்லாமல் அவர்கள் எங்கேயும் போவதில்லை; டிவி, கம்ப்யூட்டர், வீடியோ என்றால் மணிக்கணக்காக உட்கார்ந்துவிடுகிறார்கள்.” கொழுகொழு குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 8 சதவீதம் அதிகரிக்கிறது. ஷாங்காய் நகரிலுள்ள ஆரம்பப் பள்ளி பிள்ளைகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஏற்கெனவே கொழுக்மொழுக்கென்று இருக்கிறார்கள்.

‘இரசாயன’ நதி!

இத்தாலி நாட்டிலுள்ள போ என்ற நதியின் தண்ணீர் பரிசோதிக்கப்பட்டது; அதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை சுற்றுச்சூழல் நலன் என்ற ஆங்கில பத்திரிகையில் வெளிவந்தது. அந்நதிக் கரையில் வசிப்பவர்கள் எந்தளவு கோகேனை உட்கொள்கிறார்கள் என்பது முன்னரே அதிகாரப்பூர்வமாகக் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் உண்மையான எண்ணிக்கை அதைவிட பல மடங்கு அதிகம் என்பது இந்தப் பரிசோதனையில் தெரியவந்தது. கோகேனை உட்கொள்பவர்களின் சிறுநீரில் பென்சாய்லெகோனைன் என்ற இரசாயனப் பொருள் காணப்படுகிறது. பெரும்பாலும் இதுவே கோகேன் பயன்படுத்தப்பட்டதற்கான சட்டப்பூர்வ ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. நதியில் கலக்கும் கழிவுநீரில் உள்ள அந்த இரசாயனப் பொருளின் அளவு எதைக் காட்டுகிறது தெரியுமா? வடிகால் பகுதியில் வசிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் சுமார் நான்கு கிலோ கோகேன் உபயோகிப்பதைக் காட்டுகிறது; வேறு வார்த்தைகளில், அவர்கள் 40,000 முறை கோகேன் உட்கொள்வதைக் காட்டுகிறது; இது முன்னர் கணக்கிடப்பட்டதைவிட 80 மடங்கு அதிகம்.

சாவைத் தடுக்கலாமே

“பிள்ளைகளின் சாவைப் பெருமளவு தடுக்க வழியிருந்தும், இந்த வருடம் ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1,10,00,000 பிள்ளைகள் இறந்துபோவார்கள்” என உலக சுகாதார நிறுவனத்தின் 2005-⁠ம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுகிறது. சுமார் 90 சதவீத மரணங்களுக்கு சில காரணிகளே இருக்கின்றன; குறை மாதத்தில் பிறப்பதும், பிறந்தவுடன் தொற்றுகளோ மூச்சுத் திணறலோ ஏற்படுவதும் பச்சிளங்குழந்தைகளின் உயிரைப் பறிக்கின்றன; அதோடு, மூச்சுத் தடத்தின் கீழ்ப்புறத்தில் ஏற்படும் நிமோனியா போன்ற தொற்றுகள், வயிற்றுப்போக்கு, மலேரியா, அம்மை, ஹெச்ஐவி/எய்ட்ஸ் ஆகியவற்றாலும் பிள்ளைகள் இறக்கிறார்கள். “இன்று கிடைக்கும் எளிய, அதிக செலவு பிடிக்காத, தரமான சிகிச்சையை அளித்தாலே போதும், இந்த மரணங்களைப் பெரும்பாலும் தவிர்க்க முடியும்” என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதுமட்டுமல்ல, “சிறந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற முடியாத” ஒரே காரணத்தினால் ஒவ்வொரு வருடமும் ஐந்து கோடிக்கும் அதிகமான பெண்கள் கர்ப்ப காலத்திலோ பிரசவ காலத்திலோ இறக்கிறார்கள்.