கடற்பஞ்சு எளிமையில் ஓர் அதிசயம்
கடற்பஞ்சு எளிமையில் ஓர் அதிசயம்
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
ஒரு விலங்கின் எலும்புக்கூட்டை வைத்து உடம்பு தேய்த்து குளிப்பீர்களா? கேட்கவே ஒருமாதிரியாக இருக்கிறதல்லவா? சொன்னால் நம்ப மாட்டீர்கள், கடற்பஞ்சு என்ற விலங்கின் நார் போன்ற எலும்புக்கூட்டைத்தான் சிலர் குளியலுக்குப் பயன்படுத்துகிறார்கள்.
“விலங்கின குடும்பத்திலேயே மிக ஆதிகாலத்தவைதான் இந்தக் கடற்பஞ்சுகள்” என்று நேஷனல் ஜியோக்கிராஃபிக் நியூஸ் சொல்கிறது. ‘அப்படியென்றால், எல்லா மிருகங்களும் மனிதர்களும் தோன்றியது ஒரு கடற்பஞ்சிலிருந்துதானா?’ என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். ஏன், ஒரு டிவி டாக்குமென்டரி இந்தக் கடற்பஞ்சை “உயிரினங்களுக்கெல்லாம் தாய்” என்றுகூட அறிவித்தது.
கடற்பஞ்சுகள் பற்றி விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? அவற்றை எளிய உயிரினங்களாகக் கருதுகிறார்களா, அல்லது அதிசய உயிரினங்களாகக் கருதுகிறார்களா?
இதயம் இல்லை, மூளை இல்லை—பிரச்சினையே இல்லை
கடற்பஞ்சுகள் பார்வைக்கு தாவரங்கள்போல் இருக்கலாம்; ஆனால் அரிஸ்டாட்டிலும் மூத்த பிளைனியும் அவற்றை விலங்குகள் என்று சரியாகவே விவரித்தனர். இந்தக் கடற்பஞ்சுகளில் ஏறத்தாழ 15,000 வகைகள் உலகெங்கிலுமுள்ள கடல்களிலும் ஏரிகளிலும் வாழ்வதாக வல்லுநர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கடற்பஞ்சுகளின் விதவிதமான நிறங்களும் வடிவங்களும் நம்மை அசத்துகின்றன. நீட்டநீட்ட விரல்போல்; குண்டுகுண்டு பீப்பாய்போல்; அகலஅகலமான பாய்போல்; அழகழகான விசிறிபோல்; பளபளப்பான பூஜாடிபோல் விதவிதமாக இருக்கின்றன. அதுமட்டுமா, இவை பலவிதமான அளவுகளிலும் உள்ளன; சில, அரிசிமணியைவிட சிறியவை, மற்றவை மனிதனைவிட பெரியவை. கடற்பஞ்சுகளின் ஆயுட்காலம் என்ன? அவற்றில் சில நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
“கடற்பஞ்சின் உடல் அமைப்பு, இயக்கம், வளர்ச்சி எல்லாமே மற்ற விலங்குகளிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. எந்த விதத்தில்? மற்ற விலங்குகளைப் போல் கடற்பஞ்சுகளுக்கு உள்ளுறுப்புகள் எதுவும் கிடையாது. இதயம், மூளை, நரம்பு மண்டலம் எதுவுமில்லாமல் இவை எப்படி உயிர்வாழ்கின்றன? இவற்றில் உள்ள மிகச் சிறிய செல்களின் தயவாலேயே உயிர்வாழ்கின்றன. உணவளிப்பது, ஊட்டச்சத்துக்களைக் கடத்துவது, கழிவுகளை வெளியேற்றுவது போன்ற பணிகளை ‘விசேஷித்த’ செல்கள் பார்த்துக்கொள்கின்றன. கடற்பஞ்சின் தோலும் நார்போன்ற எலும்புக்கூடும் உருப்பெறுவதற்கு சில செல்கள் உதவுகின்றன. இன்னும் சில செல்களோ, தேவைப்படுகையில் வேறு செல்களாக ரூபமெடுக்கின்றன.
கடற்பஞ்சுகள் இன்னும் பல விதங்களில் அதிசயமானவை. உயிரோடுள்ள ஒரு கடற்பஞ்சை சல்லடையில் வைத்து நசுக்கிப் பிழிந்தால் என்னவாகும் தெரியுமா? அதன் செல்கள் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு மீண்டும் கடற்பஞ்சாகிவிடும்! இரண்டு கடற்பஞ்சுகளை ஒன்றாகச் சேர்த்து அரைத்துவிட்டால்? அந்த இரண்டு கடற்பஞ்சுகளின் செல்களும் மெதுவாகப் பிரிந்து பழையபடியே இரண்டு கடற்பஞ்சுகளாக ஆகிவிடும்! “உலகிலுள்ள வேறெந்த தாவரமோ விலங்கோ கடற்பஞ்சைபோல் தன்னைத்தானே உயிர்பித்துக்கொள்ள முடியாது” என்று நேஷனல் ஜியோக்கிராஃபிக் நியூஸ் சொல்கிறது.
கடற்பஞ்சுகள் மலைக்க வைக்கும் விதத்தில் இனவிருத்தி செய்கின்றன. அதற்காக, சில கடற்பஞ்சுகள் விசேஷ செல்களை வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. சிலகாலம் செயல்படாமல் இருக்கும் அந்தச் செல்கள், பொருத்தமான இடத்தைக் கண்டுபிடித்தவுடன் மறுபடியும் செயல்படத் துவங்கி புதிய கடற்பஞ்சுகளாக உருவெடுக்கின்றன. வேறு சில கடற்பஞ்சுகள், இணைசேருவதன் மூலம் இனவிருத்தி செய்கின்றன. தேவைக்கு ஏற்றாற்போல் இவை ஆண் செல்லாக அல்லது பெண் செல்லாக மாறிக்கொள்கின்றன. இன்னும் சில கடற்பஞ்சுகளோ முட்டை இடுகின்றன. “நாம் நுணுக்கமாக ஆராய ஆராய, மிகமிக எளிய ஜீவராசிகளில்கூட படுசிக்கலான வடிவமைப்பைக் காண்கிறோம்” என்கிறார் பால் மோரிஸ் என்ற எழுத்தாளர்.
கடலில் ஒரு ‘வாக்யூம் கிளீனர்’
“கடற்பஞ்சு மற்ற விலங்குகளைப்போல் அல்லாமல் வித்தியாசமாகச் சாப்பிடுகிறது” என்று எழுதுகிறார் விலங்கியல் நிபுணரான ஆலென் கோலின்ஸ். அதன் மேற்தோலில் மிகச் சிறிய துவாரங்கள் இருக்கின்றன; அவற்றிற்கு அடியில் கால்வாய்களும் அறைகளும் கொண்ட வலைப்பின்னல் உடல் முழுக்க காணப்படுகிறது. இந்தக் கால்வாய்களின் சுவர்களில் ‘துடுப்பு வலிக்கும்’ கோடிக்கணக்கான நுண்ணிய செல்கள் அல்லது கொயனோசைட்டுகள் வரிசையாக அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு செல்லிலும் காற்றாடியின் வால்மாதிரி நீளமான இழை உள்ளது. இது முன்னும் பின்னுமாக அசைந்தாடுகிறது. “படகில் துடுப்பு வலிக்கும் ஆட்களைப் போல், [இந்தச் செல்கள்] இடைவிடாமல் அவற்றின் இழைகளை முன்னும் பின்னுமாக அசைத்து தண்ணீரை
கடற்பஞ்சுக்குள் தள்ளுகின்றன, விசேஷமாக வடிவமைக்கப்பட்ட மற்ற செல்களோ நீரிலுள்ள உணவுத் துணுக்குகளை உட்கொள்கின்றன” என்று பேண் ஹார்டர் என்ற எழுத்தாளர் விளக்குகிறார். கடற்பஞ்சு அதன் உடலைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமான நீரை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை ‘பம்ப்’ செய்கிறது. இப்படி நீரை ‘பம்ப்’ செய்யும்போது சத்துப் பொருள்களையும் நச்சுத்தன்மையுடைய இரசாயனங்களையும் 90 சதவீதத்திற்கும் அதிகமான பாக்டீரியாக்களையும் நீரிலிருந்து வடிகட்டி உடலில் வைத்துக்கொள்கிறது. மேலும், நீரோட்டத்தைப் பொறுத்து நீரை அதிகமாகவோ குறைவாகவோ ‘பம்ப்’ செய்கிறது; சில சமயம் திசை மாற்றி ‘பம்ப்’ செய்வதன் மூலம் உடலிலுள்ள கழிவுகளை அப்புறப்படுத்துகிறது. “கடற்பஞ்சுகள் . . . கடலின் சிறந்த வாக்யூம் கிளீனர்கள்” என்கிறார் டாக்டர் ஜான் ஹூப்பர்.கடற்பஞ்சின் உடல் வழியாக உணவும் தண்ணீரும் இடைவிடாமல் போய்க்கொண்டிருப்பதால், கூனிறால்களும் நண்டுகளும் மற்ற சின்னஞ்சிறிய பிராணிகளும் குடிகொள்வதற்கு வசதியான இடமாக இருக்கிறது. ஒரு கடற்பஞ்சின் உடலில் 17,128 பிராணிகள் குடியிருந்தன. கடற்பஞ்சுகளின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்களும், பாசிகளும், காளான்களும் கூட்டுச்சேர்ந்து வாழ்கின்றன. நீரிலுள்ள கடற்பஞ்சுகளின் எடையில் சுமார் பாதிக்குப் பாதி பாக்டீரியாக்களுடையது.
இந்தக் கடற்பஞ்சுகளிலிருந்தும் அதனுடன் கூட்டுச்சேர்ந்து வாழும் மற்ற உயிரினங்களிலிருந்தும் புதுவிதமான மருந்துகளைத் தயாரிக்க முடியுமென்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எய்ட்ஸ், புற்றுநோய், மலேரியா போன்ற நோய்களை இந்த மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம் என்று அவர்களில் சிலர் சொல்கிறார்கள். இதைக் குறித்து ஆராய்ச்சியாளரான ஷர்லி பாம்போனி இவ்வாறு கூறுகிறார்: “கம்ப்யூட்டரின் உதவியால் தயாரிக்கப்படுகிற எவ்வித செயற்கை மருந்துகளையும்விட பல மடங்கு சிறந்த மருந்துகளை இயற்கையே அள்ளித் தருகிறது.”
கண்கவர் முள் உடல்
உடல் தேய்க்க பயன்படுத்தப்படும் கடற்பஞ்சுகளைப் போலவே மற்ற எல்லா கடற்பஞ்சுகளும் மென்மையாக இருப்பதில்லை; அவை சொரசொரப்பாக அல்லது கெட்டியாக இருக்கின்றன. இவற்றில் கோடிக்கணக்கான நுண்முள்கள் இருக்கின்றன, அதாவது, சிறிய ஊசிபோன்ற கூரிய முனைகள் உள்ளன. இந்த நுண்முள்களை நுண்ணோக்கி வழியாகப் பார்த்தால், ஆஹா! எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? இந்த நுண்முள்கள் பல விதங்களில் ஒன்றோடொன்று இணைந்து, எலும்புகளின் வலைப்பின்னலை உருவாக்குகின்றன, கவசமாக செயல்படுகின்றன, ஏன், கயிறுகளாகவும் உருவெடுக்கின்றன. இந்தக் கயிறுகள் மூன்று மீட்டர்வரை நீண்டிருக்கும், ஒரு சென்டிமீட்டர்வரை தடிமனாக இருக்கும். மாமிசம் தின்னும் கடற்பஞ்சுகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கு மீன்பிடிக்கிற வலை போன்ற ஓர் உறுப்பு இருக்கிறது. ‘வெல்க்ரோ’போல் இருக்கும் இந்த உறுப்பின் உதவியோடு இந்தக் கடற்பஞ்சு இரை தேடுகிறது.
‘தேவதையின் மலர்கூடை’ என்ற கடற்பஞ்சு ஆழ்கடலில் வாழ்கிறது. இதன் நுண்முள்கள், நெருக்கமாகப் பின்னப்பட்ட கண்ணாடி இழைகள்போல் காட்சியளிக்கிற அழகே அழகு. சிலிக்காவினால் ஆன இந்தத் தூய்மையிலும் தூய்மையான நுண்முள்கள் பார்ப்பதற்குச் செயற்கை கண்ணாடி நுண்ணிழைகள்போல் (fiber optics) காட்சியளிக்கின்றன. “உயிருள்ள இந்தக் கண்ணாடி நுண்ணிழைகள் உறுதியிலும் உறுதியாக இருக்கின்றன. அவற்றை ஒன்றோடு ஒன்றுசேர்த்து இறுக்கமாக முடிச்சுப்போட்டாலும் உடையாது, செயற்கை கண்ணாடி நுண்ணிழைகளோ உடைந்துவிடும்” என்கிறார் ஒரு விஞ்ஞானி. இந்தளவு உறுதியான இழைகள் கடல்நீரில், அதுவும் குளிர்ந்த நீரில் எப்படி உருவாகின்றன என்பதை இன்னும் விஞ்ஞானிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை. “மின்சாரம் மற்றும் ஒளியியல் தொழில்நுட்பத்திலுள்ள சிக்கல்களையும் கட்டட பொருள்களை உற்பத்தி செய்வதிலுள்ள சிக்கல்களையும் சுலபமாகத் தீர்ப்பதற்கு இந்த எளிமையான பிராணி கற்றுத்தருகிறது” என்று பெல் என்ற ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் செரி முர்ரே என்பவர் கூறுகிறார்.
எதேச்சையாக வந்ததா, படைக்கப்பட்டதா?
கடற்பஞ்சின் அதிசயமான உடல் உறுப்புக்களை ஆராய்ந்த பிறகு டாக்டர் ஹூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “இந்தக் கடற்பஞ்சு எளிமையான ஜந்துவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் மிகமிக சிக்கலான வடிவமைப்புடைய [விலங்காகும்]. இன்றுகூட இந்த விலங்கை யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.” அப்படியென்றால், பின்வரும் கேள்விகளைக் கேட்பது நியாயமே: சிக்கலான வடிவமைப்புடைய இந்த உயிரினம் தோன்றியது எப்படி, எதனால்? இது எதேச்சையாக வந்துவிட்டதா? அல்லது புத்திகூர்மையுள்ள ஒருவரால் படைக்கப்பட்டதா?
படைப்பாளர் ஒருவர் இருப்பதை சிலர் நம்புவதில்லைதான்; என்றாலும், பூர்வத்தில் வாழ்ந்த ஒரு பைபிள் கவிஞர் சொன்ன பின்வரும் வார்த்தைகளை அநேகர் ஒத்துக்கொள்கிறார்கள்: ‘யெகோவாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. . . . , சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.’—சங்கீதம் 104:24, 25.
[பக்கம் 23-ன் படங்கள்]
கடற்பஞ்சின் கட்டமைப்பு. நீரை உடலுக்குள் ‘பம்ப்’ செய்யும் செல்கள்
[பக்கம் 24-ன் படம்]
கடற்பஞ்சின் நுண்முள்கள்
[பக்கம் 24-ன் படம்]
‘தேவதையின் மலர்கூடை’
[பக்கம் 23-ன் படங்களுக்கான நன்றி]
கடல் குதிரை: Rudie H Kuiter; வலது பக்கத்திலுள்ள 3 உள்படங்கள்: Dr. John Hooper, Queensland Museum
[பக்கம் 24-ன் படங்களுக்கான நன்றி]
மேலே: Eye of Science/Photo Researchers, Inc.; கீழே: Kim Taylor / Warren Photographic