Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சமாதானத்தை நாடுவதில் நன்மை உண்டா?

சமாதானத்தை நாடுவதில் நன்மை உண்டா?

பைபிளின் கருத்து

சமாதானத்தை நாடுவதில் நன்மை உண்டா?

இயேசு கிறிஸ்து, தமது பிரபலமான மலைப் பிரசங்கத்தில் “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று கூறினார். அதுமட்டுமல்ல, “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்” என்றும் கூறினார். (மத்தேயு 5:5, 9) சமாதானம் பண்ணுகிறவர்கள் சாந்த குணமுள்ளவர்களாக இருப்பதோடு, அவர்களாகவே முன்வந்து மற்றவர்களுடன் சமாதானமாக இருக்க முயற்சி செய்கிறார்கள்; எப்போதும் சமாதானத்தை ஊட்டி வளர்க்கிறார்கள்.

அன்று இயேசு சொன்ன வார்த்தைகள் நம் காலத்திற்கு ஒத்துவருமா? மற்றவர்களை அதட்டி, மிரட்டி, தேவைப்பட்டால் அடித்து உதைத்தால்தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியுமென்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், பழிக்குப் பழி வாங்குவது ஞானமா, அல்லது சமாதானமாக இருப்பது ஞானமா? “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைகளுக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு மூன்று காரணங்களைப் பார்க்கலாம்.

◼ மன அமைதி “மன அமைதி உடல் நலம் தரும்” என்று நீதிமொழிகள் 14:30 (பொது மொழிபெயர்ப்பு) சொல்கிறது. கோபப்படுகிறவர்களுக்கும் விரோதம் வளர்ப்பவர்களுக்கும் பக்கவாதம், மாரடைப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகமென பல மருத்துவ அறிக்கைகள் காட்டுகின்றன. இருதய நோயுடைய ஆட்கள் கோபத்தில் கொதித்தெழுவது விஷத்தைப் போல் ஆபத்தானது என்று சமீபத்தில் ஒரு மருத்துவப் பத்திரிகை கூறியது. ஒருவர் “எல்லைமீறி கோபப்படுவது” அவரது “உடலைப் பயங்கரமாகப் பாதிக்கிறது” என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. ஆனால், சமாதானம் செய்கிறவர்கள் “மன அமைதி” பெற்று, நன்மை அடைவார்கள்.

61 வயதான ஜிம் என்பவரின் வாழ்க்கை இதற்குச் சிறந்த உதாரணம். வியட்னாமீஸ் மொழியினருக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்து வரும் அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஆறு வருடங்கள் ராணுவத்தில் இருந்தேன்; வியட்நாமில் மூன்று போர்களில் ஈடுபட்டேன். அதனால் வன்முறை, வெறுப்பு, விரக்தி பற்றியெல்லாம் எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. கடந்தகால நினைவுகள் என்னை வாட்டி வதைத்தன, என் தூக்கத்தைப் பறித்தன. இப்படி, கவலைகள் ஒருபக்கம் என்னை அலைக்கழிக்க, இன்னொரு பக்கம் வயிற்றுக் கோளாறுகளும் நரம்புக் கோளாறுகளும் என்னைப் பாடாய்ப் படுத்தின.” இந்தப் பிரச்சினைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைத்ததா? கிடைத்தது. எப்படி? அவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்ததால் உயிர் பிழைத்தேன். சமாதானமான புதிய உலகை கடவுள் கொண்டுவரப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன், அதுமட்டுமா, நான் எப்படி ‘புதிய மனிதனாக’ அடியோடு மாறலாம் என்பதையும் தெரிந்துகொண்டேன். இதனால் மன அமைதி கிடைத்தது, என் உடல்நிலைகூட தேறியது.” (எபேசியர் 4:22-24; ஏசாயா 65:17; மீகா 4:1-4) ஆக, சமாதானமாக இருக்க பழகிக்கொள்வது மனதையும் உடலையும் பாதுகாப்பதோடு, ஆன்மீக பலத்தையும் தருகிறது; இதுவே அநேகரின் அனுபவம்.​—நீதிமொழிகள் 15:13.

◼ சந்தோஷமான உறவுகள் நாம் சமாதானமாக இருக்கப் பழகினால்தான் மற்றவர்களுடன் உள்ள உறவு மேம்படும். “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் . . .  நீங்கக்கடவது” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 4:31) மூர்க்க குணமுடையவர்கள் பொதுவாக யாரையும் கிட்டே சேர்ப்பதில்லை, அதனால் சிநேகிதர்கள் யாருமில்லாமல் தனிமையிலேயே அவர்கள் வாடுகிறார்கள். “கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்” என்று நீதிமொழிகள் 15:18 சொல்கிறது.

நியு யார்க் நகரில் வசிக்கும் 42 வயதான ஆன்டி என்ற கிறிஸ்தவ மூப்பர், வன்முறை நிறைந்த ஒரு சூழலில் வளர்ந்தார். அவர் இவ்வாறு விளக்குகிறார்: “எட்டு வயதாக இருந்தபோதே குத்துச் சண்டையில் பயிற்சி பெற ஆரம்பித்தேன். என்னோடு மோதியவர்களை வெறியோடுதான் பார்த்தேன், ‘குத்து, இல்லன்னா, உனக்குக் குத்து விழும்’ என்றுதான் எப்போதும் என் மனசு சொல்லிக்கொண்டிருக்கும். சீக்கிரத்திலேயே ஒரு ரெளடி கும்பலோடு சேர்ந்தேன். தெருவில் சண்டைபோடுவது, கலாட்டா செய்வது என்று எதையுமே விட்டுவைக்கவில்லை. மற்ற ரெளடிகள் துப்பாக்கி காட்டி என்னை மிரட்டியிருக்கிறார்கள், கத்தியை நீட்டி பயமுறுத்தியிருக்கிறார்கள். என் கோஷ்டியிலிருந்த நிறைய பேரோடு எப்போதுமே எனக்குத் தகராறுதான். பயந்து பயந்து பழக வேண்டியிருந்தது.”

ஆன்டி எப்படிச் சமாதானமான ஆளாக மாறினார்? அவரே அதற்குப் பதில் சொல்கிறார்: “ஒருநாள் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்குப் போயிருந்தேன். அங்கிருந்தவர்கள் மத்தியில் அன்பு பளிச்சென்று தெரிந்தது. சமாதானமான அந்த மக்களுடன் பழக ஆரம்பித்ததால் நானும் சமாதானமான ஆளாக ஆனேன், என்னுடைய மூர்க்க குணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மண்தோண்டி புதைத்தேன். இப்போது எனக்கு நல்ல நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.”

◼ எதிர்கால நம்பிக்கை நாம் சமாதானமாக இருக்க வேண்டியதன் முக்கிய காரணம், நம்மைப் படைத்தவரின் விருப்பத்திற்கு மதிப்பும் மரியாதையும் காட்டுவதற்கே. நாம் ‘சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர’ வேண்டுமென கடவுள் விரும்புவதாக பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:14) யெகோவா தேவன் உயிருள்ள தேவன் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்; உயிர்காக்கும் அவரது போதனைகளைக் கற்றுக்கொண்டு அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்; அப்படிச் செய்யும்போது அவருடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள முடியும். இப்படியாக நாம் ‘தேவசமாதானத்தைப்’ பெற்றுக்கொள்ள முடியும். வாழ்க்கையில் மலைபோன்ற சோதனைகள் வந்தாலும் நம்முடைய இந்தச் சமாதானத்தை யாராலும் குலைத்துப் போட முடியாது.​—பிலிப்பியர் 4:6, 7.

அதுமட்டுமல்ல, இப்போது சமாதானமாக இருப்பதன் மூலம் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க விரும்புகிறோம் என்பதைக் காட்டுகிறோம். கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் சமாதானமான புதிய உலகில் வாழ நாம் தகுதியுள்ளவர்கள் என்பதை அவருக்கு நிரூபித்துக் காட்டுகிறோம். கடவுள் துன்மார்க்கரை அழித்த பிறகு, இயேசு சொன்னதுபோல சாந்தகுணமுள்ளவர்கள் ‘பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.’ அத்தகைய உலகில் வாழ்வது எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்!​—சங்கீதம் 37:10, 11; நீதிமொழிகள் 2:20-22.

ஆம், “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்று இயேசு சொன்ன வார்த்தைகள் இந்தக் காலத்திற்கும் ஒத்துவரும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மன அமைதி, நல்ல உறவுகள், எதிர்கால நம்பிக்கை ஆகிய அனைத்து ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். ஆம், ‘எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்க’ நாம் கடுமையாக முயற்சி செய்தால் இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.​—ரோமர் 12:18.

[பக்கம் 28-ன் படங்கள்]

“என் உடல்நிலைகூட தேறியது.”​—⁠ஜிம்

[பக்கம் 29-ன் படங்கள்]

“இப்போது எனக்கு நல்ல நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.”​—⁠ஆன்டி