Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பல்லாயிரமாண்டு வாழ முடியுமா?

பல்லாயிரமாண்டு வாழ முடியுமா?

பல்லாயிரமாண்டு வாழ முடியுமா?

“இவர்களின் மேனி இளைஞனதைப்போல் ஆகட்டும்; இவர்கள் இளமையின் நாள்களுக்குத்திரும்பட்டும்.”​—⁠யோபு 33:⁠25, பொது மொழிபெயர்ப்பு.

பொதுவாக ஒரு நாய் 10, 20 வருடங்கள்வரை உயிர்வாழும். அதற்குள், குட்டி போடுவது, பூனைகளைத் துரத்துவது, எலும்புகளைக் குழிதோண்டிப் புதைப்பது, எஜமானரைக் காவல் காப்பது என செய்ய வேண்டியதையெல்லாம் செய்துவிடும். மனிதனோ 70, 80 வருடங்கள் வாழலாம். என்றாலும், கடலளவு திறனிருந்துகூட அவனால் கடுகளவே சாதிக்க முடிகிறது. உதாரணமாக, அவனுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்திருக்கலாம், ஆனால் ஓரிரு விளையாட்டுகளில்தான் தேர்ச்சி பெற்றிருப்பான். அவனுக்கு இசையில் ஈடுபாடு இருந்திருக்கலாம், ஆனால் ஓரிரு இசைக் கருவிகளைத்தான் பயின்றிருப்பான். வேறு மொழியினரிடம் அவர்களுடைய பாஷையிலேயே பேச விரும்பியிருக்கலாம், ஆனால் இரண்டு, மூன்று பாஷைகளை மட்டுமே சரளமாகக் கற்றிருப்பான். அவன் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தால், எத்தனையோ காரியங்களை அனுபவித்து மகிழ்ந்திருக்கலாம்: இன்னுமநேக மக்களைச் சந்தித்திருக்கலாம், புதிது புதிதாக நிறைய கண்டுபிடித்திருக்கலாம், எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளிடம் அன்னியோன்னியமாகி இருக்கலாம்.

‘கடவுள், எத்தனை எத்தனையோ காரியங்களை அனுபவிக்கும் திறனை மட்டும் நமக்குக் கொடுத்துவிட்டு, அதையெல்லாம் முழுசாக அனுபவிக்க ஆயுசைக் கொடுக்காமல் போய்விட்டாரே, இது நியாயமா?’ என நீங்கள் கேட்கலாம். உண்மைதான், மனிதன் படைக்கப்பட்ட விதத்திற்கும் அவனுடைய குறுகிய ஆயுட்காலத்திற்கும் பொருத்தமே இல்லாததுபோல் தெரிகிறது. அதோடு, ‘நீதி, இரக்கம் போன்ற விசேஷ குணங்களை மனிதனுக்குக் கடவுள் கொடுத்துவிட்டு, கூடவே கெட்ட குணங்களையும் கொடுத்திருப்பது ஏன்?’ என்றுகூட நீங்கள் கேட்கலாம்.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: அழகான ஒரு காரில் அசிங்கமான ஒடுக்கைப் பார்க்கிறீர்கள். காரின் வடிவமே அதுதான் என்றா நினைப்பீர்கள்? இல்லவே இல்லை! ‘இந்த கார் ஆரம்பத்தில் அப்படி இருந்திருக்கவே இருந்திருக்காது, பக்காவாக இருந்திருக்கும், யாரோ ஒருவர் அதை நாசப்படுத்திவிட்டார்’ என்றுதான் நினைப்பீர்கள். இப்போது, அற்புதமான மனித வாழ்வைப் பற்றி சிந்திக்கலாம். இதுவும் அந்த கார் மாதிரிதான், ஆரம்பத்தில் ஒரு குறையும் இருந்திருக்காது. நம் குறுகிய ஆயுளும் கெட்ட புத்தியும், அசிங்கமான ஒடுக்குகளைப் போல் இருக்கின்றன. யாரோ ஒருவர்தான் மனித வாழ்வை நாசப்படுத்தியிருக்க வேண்டும். அந்தக் குற்றவாளி யார்? பைபிள் அவனை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

ஆரம்பத்தில் ஒரு குறையும் இல்லாமல் என்றென்றும் வாழும் விதத்தில்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்றால், பிற்பாடு முழு மனிதகுலத்தின் வாழ்வையே நாசமாக்கியது யார்? முதல் மனிதனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. வேறு யாராக இருந்திருந்தாலும், தன் சந்ததியாரின் வாழ்வை மட்டும்தான் நாசப்படுத்த முடிந்திருக்கும். இன்றோ முழு மனிதகுலத்தின் வாழ்வே நாசமாகியிருக்கிறது; ஆகவே, கடவுளுடைய புத்தகமாகிய பைபிள் இவ்வாறு சொல்வது உண்மையிலும் உண்மையாக இருக்கிறது: “ஒரே மனுஷனாலே [முதல் மனிதனாகிய ஆதாமினாலே] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது . . . எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) ஆக, அற்புதமான மனித வாழ்வை நாசப்படுத்திய அந்தக் குற்றவாளி ஆதாமே. இப்போது, மனித வாழ்வின் ஆரம்பத்தைச் சற்று அலசிப் பார்க்கலாம்.

ஆரம்பத்தில் மனித வாழ்வு

மரணம் “உலகத்திலே பிரவேசித்தது” என பைபிள் குறிப்பிடுவதிலிருந்து என்ன புரிகிறது? ஆரம்பத்தில் மரணம் இல்லை, அது இடையில்தான் வந்தது என்பது புரிகிறது. கடவுளுக்கு விரோதமாக முதல் மனிதன் கலகம் செய்ததால்தான் மனிதர்களுக்கு முதுமையும் மரணமும் வந்தன. ஆனால் மிருகங்களின் விஷயமே வேறு; அவை என்றென்றும் வாழும் விதத்தில் படைக்கப்படவில்லை.​—ஆதியாகமம் 3:21; 4:4; 9:3, 4.

மனிதர்கள், மிருகங்களிலிருந்து வித்தியாசமாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். நம்மைவிட தேவதூதர்கள் உயர்ந்தவர்களாக இருப்பது போலவே, மிருகங்களைவிட நாம் உயர்ந்தவர்களாக இருக்கிறோம். (எபிரெயர் 2:7) மிருகங்கள் அல்ல, மனிதர்களே “தேவசாயலாக” படைக்கப்பட்டிருக்கிறார்கள். (ஆதியாகமம் 1:27) அதனால்தான் ஆதாமை, ‘தேவனுடைய மகன்’ என பைபிள் குறிப்பிடுகிறது. (லூக்கா 3:38, NW) ஆகவே, மிருகங்களைப் போல் வயதாகி செத்துப் போவதற்காக மனிதன் படைக்கப்படவில்லை என நம்புவதற்கு வலுவான காரணம் இருக்கிறது. கடவுளுக்குச் சாவே இல்லை, அவருடைய பிள்ளைகளையும் சாகும்படி அவர் படைக்கவில்லை.​—ஆபகூக் 1:12, NW; ரோமர் 8:20, 21.

ஆரம்பகால தலைமுறையினரைப் பற்றிய சரித்திரப் பதிவுகள், மனிதர் வடிவமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி கூடுதல் விவரங்களை அளிக்கின்றன. அக்காலத்து ஆட்கள், நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்த பிறகுதான் முதுமையடைய ஆரம்பித்தார்கள். ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்தார். சில தலைமுறைகளுக்குப் பின் வந்த நோவாவின் மகன் சேம் 600 வருடங்கள்தான் வாழ்ந்தார்; நோவாவின் பேரனான அர்பக்சாத் 438 வருடங்களே வாழ்ந்தார். a (ஆதியாகமம் 5:5; 11:10-13) பிற்பாடு, ஆபிரகாம் 175 வருடங்கள் மட்டும் வாழ்ந்தார். (ஆதியாகமம் 25:7) காலம் ஆகஆக, பாவத்தின் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வந்தன; ஆம், பரிபூரணமாய் படைக்கப்பட்ட முதல் மனிதனுக்குப் பின் அடுத்தடுத்து வந்த தலைமுறையினரின் ஆயுட்காலம் குறுகிக்கொண்டே போனது. ஆனால் அந்த முதல் மனிதன் என்றென்றும் வாழ்வதற்காகவே படைக்கப்பட்டான். அப்படியென்றால், ‘மனிதர்கள் பூமியில் என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டுமென இப்போதும் கடவுள் விரும்புகிறாரா?’ என நாம் கேட்பது இயல்புதான்.

முதுமையிலிருந்து விடுதலை

கீழ்ப்படியாத ஆட்கள் சாக வேண்டும் என யெகோவா தேவன் சொல்லியிருந்தார்; ஆகையால், ஆதாமின் சந்ததியினருக்கு எதிர்கால நம்பிக்கையே இல்லாததுபோல் தோன்றியது. (ஆதியாகமம் 2:17) என்றாலும், சாவுக்குக் கொண்டுசெல்லும் முதுமையிலிருந்து அவர்களை ஒருவர் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையை கடவுளுடைய புத்தகமாகிய பைபிள் அளித்தது. அதில் இவ்வாறு வாசிக்கிறோம்: “குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்; ஏனெனில், இவர்களுக்கான மீட்டுத் தொகை [அல்லது, மீட்கும்பொருள்] என்னிடமுள்ளது; இவர்களின் மேனி இளைஞனதைப் போல் ஆகட்டும்; இவர்கள் இளமையின் நாள்களுக்குத் திரும்பட்டும்.” (யோபு 33:24, 25, பொ.மொ.; ஏசாயா 53:4, 12) எப்பேர்ப்பட்ட அருமையான நம்பிக்கை! ஒருவர் நமக்காக மீட்கும்பொருளைச் செலுத்தி, முதுமையிலிருந்து நம்மை விடுவிப்பாரென பைபிள் குறிப்பிட்டது.

இந்த மீட்கும்பொருளை யாரால் செலுத்த முடிந்தது? அதுவும் பணத்தைவிட அதிக மதிப்புமிக்க ஒன்றை செலுத்த வேண்டியிருந்ததே! அபூரண மனிதர்களைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும் முடியாதே.’ (சங்கீதம் 49:7-9) ஆனால் கடவுளுடைய குமாரனான இயேசு கிறிஸ்துவின் விஷயமே வேறு. அவர் ஆதாமின் பாவத்தைச் சுதந்தரிக்காததால் பரிபூரணராக இருந்தார். ஆகவே பணத்தைவிட அதிக மதிப்புமிக்க தம்முடைய பரிபூரண உயிரை மீட்கும்பொருளாக அவரால் கொடுக்க முடிந்தது. அதனால்தான், ‘அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்ததாக’ அவர் சொன்னார். இன்னொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறும் குறிப்பிட்டார்: ‘அவர்கள் வாழ்வைப் பெறுவதற்கு, அதுவும் நிறைவாகப் பெறுவதற்கு வந்துள்ளேன்.’​—மத்தேயு 20:28; யோவான் 10:10, பொ.மொ.

என்றென்றும் வாழும் நம்பிக்கையைப் பற்றியே இயேசு முக்கியமாகப் பிரசங்கித்தார். அவரது சீஷராகிய பேதுரு ஒருமுறை அவரிடம் இவ்வாறு சொன்னார்: “நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.” (யோவான் 6:68) பைபிள் குறிப்பிடும் நித்திய ஜீவன், அதாவது முடிவில்லாத வாழ்வு, எதை அர்த்தப்படுத்துகிறது?

முடிவில்லாத வாழ்வு

இயேசுவின் அப்போஸ்தலர்களுக்கு, பரலோகத்தில் அவருடைய உடன் அரசர்களாக என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பு இருந்தது. (லூக்கா 22:29; யோவான் 14:3) ஆனாலும், பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றியே இயேசு அடிக்கடி பேசினார். (மத்தேயு 5:5; 6:10; லூக்கா 23:43) அவர் செய்த அற்புதங்களும், நித்திய ஜீவனைப் பற்றி அவர் கற்பித்த விஷயங்களும், ஏசாயா தீர்க்கதரிசி மூலம் வெகு காலத்திற்கு முன்பே கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை உறுதிசெய்தன. அவற்றில் ஒரு வாக்குறுதி இது: ‘அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்துவிடுவார்.’ (ஏசாயா 25:8) ஆக, கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகில் இளமைப் பருவம் சிட்டாய்ப் பறந்துவிடாது, முதுமைப் பருவத்தின் சுவடே தெரியாது.

அந்தப் புதிய உலகில் விசுவாசமுள்ள மனிதர்கள் பரிபூரண நிலையை அடைவார்கள்; அப்போது முதுமையிலிருந்து விடுதலை பெறுவார்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் அழிவிலிருந்து விடுதலை பெறும், . . . தேவனுடைய பிள்ளைகளுக்குரிய விடுதலையையும், மகிமையையும் பெறும்.’ (ரோமர் 8:21, ஈஸி டு ரீட் வர்ஷன்) சற்று கற்பனை செய்து பாருங்கள்! மக்களின் அறிவு பெருகுவதற்கும் அனுபவம் கூடுவதற்கும் எல்லையே இருக்காது. காலங்கள் உருண்டோடுமே தவிர அவர்களது இளமைத் துடிப்பு அவர்களைவிட்டு நீங்கவே நீங்காது. அப்படிப்பட்ட காலத்தில் நீங்கள் வாழ்வீர்களா?

நீங்கள் எவ்வளவு காலம் வாழ்வீர்கள்?

கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாளில் சொற்பப் பேரே தப்பிப்பிழைப்பார்கள் என இயேசு சொன்னார். (மத்தேயு 24:21, 22) அவர் இவ்வாறும் குறிப்பிட்டார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”​—மத்தேயு 7:13, 14.

நீங்களும் தப்பிப்பிழைத்து என்றென்றும் வாழ விரும்பினால் கடவுளுடைய தயவைப் பெற வேண்டும். அதற்கு முதலாவதாக, கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ‘ஒன்றான மெய்த் தேவனை அறிவதே நித்திய ஜீவன்’ என இயேசு சொன்னார். (யோவான் 17:3) உண்மைதான், கடவுளைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்; ஆனால் எப்பேர்ப்பட்ட முயற்சியும் தகும். உதாரணமாக, முயற்சி எடுத்து சம்பாதித்தால்தானே தினமும் உணவு கிடைக்கும். இயேசு என்ன சொன்னாரென கவனியுங்கள்: ‘அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, நித்திய ஜீவன் தரும் அழியாத உணவுக்காகவே [கடவுளைப் பற்றிய அறிவுக்காகவே] உழையுங்கள்.’ (யோவான் 6:27, பொ.மொ.) அப்படியானால், முடிவில்லாத வாழ்வைப் பெற நீங்கள் எடுக்கும் எவ்வித முயற்சியும் தகுந்தது, அல்லவா?​—மத்தேயு 16:⁠26.

இயேசு இவ்வாறு கூறினார்: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) ஆக, நீங்கள் பல்லாயிரமாண்டு வாழ்வீர்களா? அது, கடவுளுடைய அன்புக்கு நீங்கள் எப்படிப் பிரதிபலிப்பீர்கள் என்பதைப் பொருத்ததே.

[அடிக்குறிப்பு]

a இந்த பைபிள் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் வருடங்கள் உண்மையில் மாதங்களே என சிலர் வாதாடுகிறார்கள். இருந்தாலும், அர்பக்சாத்துக்கு 35 வயதாக இருந்தபோது சாலா என்ற மகன் பிறந்ததாக அப்பதிவு சொல்கிறது. இது 35 மாதங்களைக் குறித்தால், அவர் மூன்று வயதுக்கு முன்பாகவே அப்பாவாகிவிட்டாரென அர்த்தமாகும்​—⁠இது எங்காவது நடக்குமா? அதுமட்டுமல்ல, ஆதியாகம புத்தகத்தின் முதல் சில அதிகாரங்கள், சூரிய சுழற்சியின் அடிப்படையிலான வருடங்களையும் சந்திர சுழற்சியின் அடிப்படையிலான மாதங்களையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன.​—⁠ஆதியாகமம் 1:14-16; 7:⁠11.

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

80 வருடங்கள் வாழ்ந்திருப்பவர்கூட, கடலளவு திறனிருந்தும் கடுகளவே சாதித்திருக்கிறார்

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

மிருகங்களைவிட மனிதன் உயர்ந்தவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான்

[பக்கம் 7-ன் படம்]

ஒடுக்கோடுதான் இந்த கார் தயாரிக்கப்பட்டதா?

[பக்கம் 89-ன் படம்]

மனிதர்கள் ‘இளமையின் நாள்களுக்குத் திரும்புவார்கள்’ என கடவுளுடைய புத்தகம் சொல்கிறது