Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மைக்கேல் சர்வீட்டஸ் தன்னந்தனியாகச் சத்தியத்தைத் தேடி . . .

மைக்கேல் சர்வீட்டஸ் தன்னந்தனியாகச் சத்தியத்தைத் தேடி . . .

மைக்கேல் சர்வீட்டஸ் தன்னந்தனியாகச் சத்தியத்தைத் தேடி . . .

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அக்டோபர் 27, 1553-⁠ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் மைக்கேல் சர்வீட்டஸ் என்பவர் கழுமரத்தில் உயிரோடு எரிக்கப்பட்டார். ஜான் கால்வினின் ஆலோசகரான கீயோம் ஃபாரெல் என்பவர் இத்தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றினார். இக்கொடுமை நிகழ்ந்தபோது சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோரை கீயோம் இவ்வாறு எச்சரித்தார்: “சர்வீட்டஸ் ரொம்ப புத்திசாலி. தான் சத்தியத்தையே போதித்ததாய் உள்ளப்பூர்வமாக நம்பினார். ஆனால், அவர் பிசாசின் பிடியில் சிக்கிவிட்டார். . . . இந்த நிலைமை உங்களுக்கும் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள், ஜாக்கிரதை!” சர்வீட்டஸுக்கு ஏன் இந்தக் கோர முடிவு?

மைக்கேல் சர்வீட்டஸ் 1511-⁠ம் ஆண்டு ஸ்பெயினில் உள்ள பீல்யான்வேபா டி சீகெனா என்ற கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே படிப்பில் அவர் கெட்டிக்காரராக விளங்கினார். அவரைக் குறித்து வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “பதினான்கு வயதிற்குள்ளாகவே கிரேக்கு, லத்தீன், எபிரெயு ஆகிய மொழிகளை அவர் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்ல, தத்துவம், கணிதம், இறையியல் ஆகியவையும்கூட அவருக்கு அத்துப்படி.”

ஸ்பானிய அரசர் ஐந்தாம் சார்ல்ஸின் அந்தரங்க மத ஆலோசகரான ஹ்வான் டி கின்டானா என்பவர் தனக்கு உதவியாக சர்வீட்டஸை சேர்த்துக்கொண்டார். அப்போது சர்வீட்டஸ் ஒரு டீனேஜர். கின்டானாவோடு பயணித்தபோது ஸ்பெயினில் நிலவிய மதப் பிரிவினைகளை அவர் கண்கூடாகப் பார்த்தார். அந்நாட்டிலிருந்து முஸ்லிம்களையும், யூதர்களையும் அதிகாரிகள் நாடுகடத்தினர் அல்லது கத்தோலிக்க மதத்திற்கு மாறச்சொல்லி கட்டாயப்படுத்தினர். a

சர்வீட்டஸ் பதினாறு வயதில் பிரான்சில் உள்ள டௌலூஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கச் சென்றார். அங்கே முதன்முறையாக ஒரு முழு பைபிளைப் பார்த்தார். பைபிளைப் படிப்பதற்குப் பலத்த தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், அதை ரகசியமாகப் படித்தார். முதன்முறை வாசித்து முடித்தவுடனேயே, அதை “இன்னும் ஆயிரம் முறை” படிக்கப்போவதாகச் சபதமெடுத்தார். அவர் ஒருவேளை கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிளைப் படித்திருந்திருக்கலாம். அதனால் பைபிளின் மூல மொழிகளிலிருந்த (எபிரெயு மற்றும் கிரேக்கு) வசனங்களையும், அவற்றின் லத்தீன் மொழிபெயர்ப்பையும் அவரால் வாசிக்க முடிந்தது. b பைபிளைப் பற்றிய அறிவும், ஸ்பெயினில் அவர் கண்ட மதகுருமார்களின் ஒழுக்கச் சீர்குலைவும், கத்தோலிக்க மதத்தின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்தன.

ஆட்டம் கண்ட அவரது நம்பிக்கையை அடியோடு தகர்த்துப்போட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஐந்தாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவே அது. அந்நிகழ்ச்சியின்போது ஸ்பானிய அரசனை புனித ரோம பேரரசின் சக்கரவர்த்தியாக போப் ஏழாம் கிளமெண்ட் முடிசூட்டினார். போப் கம்பீரமாகப் பல்லக்கில் அமர்ந்து கொண்டு, தன்னுடைய பாதத்தை முத்தமிட்ட அரசரை வாழ்த்தினார். சர்வீட்டஸ் அதைப் பின்னர் இவ்வாறு விவரித்தார்: “போப்பை இளவரசர்கள் தோள்மீது சுமந்து வந்தபோது அவர் பகட்டாக அமர்ந்திருந்ததையும், மக்களின் வாழ்த்து மழையில் நனைந்ததையும் நேரில் பார்த்தேன்.” இந்தப் பகட்டும், படாடோபமும் சுவிசேஷத்திலுள்ள எளிமைக்கு நேர்மாறாக இருந்ததை சர்வீட்டஸ் கவனித்தார்.

ஆன்மீக சத்தியத்தைத் தேடி . . .

கின்டானாவின் கீழ் வேலை செய்துவந்த சர்வீட்டஸ் தக்க சமயம் பார்த்து அவரிடமிருந்து விலகிக்கொண்டார். தன்னந்தனியாகச் சத்தியத்தைத் தேட ஆரம்பித்தார். கிறிஸ்து, இறையியல் வல்லுனர்களுக்காகவோ, தத்துவஞானிகளுக்காகவோ போதிக்கவில்லை என்றும், தம்முடைய போதனைகளைக் கற்று கடைப்பிடிக்கும் சாமானியருக்காகத்தான் போதித்தார் என்றும் அவர் நம்பினார். எனவே, பைபிளை அதன் மூல மொழிகளில் படித்து ஆராய அவர் முடிவெடுத்தார். பைபிள் சத்தியத்திற்கு முரண்படும் எந்தப் போதகத்தையும் ஒதுக்கித்தள்ளத் தீர்மானித்தார். அதனால்தானோ என்னவோ, சர்வீட்டஸின் புத்தகங்களில் “சத்தியம்,” “உண்மை” போன்ற வார்த்தைகள் அதிகம் காணப்படுகின்றன.

சரித்திரத்தையும், பைபிளையும் சர்வீட்டஸ் ஆராய்ந்தபோது, பொது சகாப்தத்தின் முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் கறைபடுத்தப்பட்டது என்பதைத் தெரிந்துகொண்டார். கான்ஸ்டன்டைனும் அவரது வழிவந்தவர்களும் கிறிஸ்தவத்திற்குள் பொய் போதனைகளைப் புகுத்தியதையும், இதனால் திரித்துவம் அதன் முக்கிய போதகமாக ஆனதையும் அவர் புரிந்துகொண்டார். தன்னுடைய 20-வது வயதில் திரித்துவத்தின் தவறுகள் பேரில் என்ற லத்தீன் புத்தகத்தை வெளியிட்டார். கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையில் குற்றவாளியாக அவரை நிறுத்தியது இந்தப் புத்தகம்தான்.

சர்வீட்டஸ் பொதுவாக விஷயங்களைத் தெளிவாய்ப் புரிந்துகொண்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “திரித்துவத்தைப் பற்றி பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. . . . கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு ஒரேவழி கிறிஸ்துதான், மேட்டிமையான நம் தத்துவ போதனைகள் அல்ல.” c அதோடு, பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல, மாறாக அது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி என்றும் தெரிந்துகொண்டார்.

சர்வீட்டஸுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தார்கள். உதாரணமாக, புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதியான செபஸ்டியான் ஃப்ராங்க் இவ்வாறு எழுதினார்: “ஸ்பானியனான சர்வீட்டஸ் வெளியிட்ட துண்டுப்பிரதியில், கடவுள் என்பவர் ஒரு தனிநபர் என்று வாதிடுகிறார். ஆனால், ஒரு கடவுளில் மூன்று நபர்கள் இருப்பதாக கத்தோலிக்க சர்ச் சொல்கிறது. என்னைக் கேட்டால், அந்த ஸ்பானியன் சொல்வதுதான் சரி என்பேன்.” இப்படி ஆதரவு குரல்கள் ஒலித்தபோதிலும், ரோமன் கத்தோலிக்க சர்ச்சும், புராட்டஸ்டன்ட் சர்ச்சும் அவரை மன்னிக்கவே இல்லை. காரணம்? சர்ச்சின் மைய போதகத்திற்கு எதிராக அல்லவா அவர் போர்க்கொடி தூக்கினார்!

பைபிளைக் கருத்தூன்றிப் படிக்க ஆரம்பித்தபின் சர்ச்சின் மற்ற கோட்பாடுகளையும் அவர் ஒதுக்கி தள்ளினார். சிலை வழிபாடு பைபிள் போதகமல்ல என்பதையும் புரிந்துகொண்டார். திரித்துவத்தின் தவறுகள் பேரில் புத்தகத்தை வெளியிட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, கத்தோலிக்கரையும், புராட்டஸ்டன்டினரையும் குறித்து அவர் இவ்வாறு சொன்னார்: “இந்த இரு வகுப்பார் சொல்வதையும் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை, நிராகரிக்கவும் முடியவில்லை. ஏனென்றால் இவர்களிடம் சத்தியம் கொஞ்சமும், தவறுகள் கொஞ்சமும் கலந்திருப்பது போலவே தெரிகிறது. ஆனால் தங்களுடைய தவறுகளைப் பார்க்காமல், மற்றவர்களுடைய தவறுகளை மட்டுமே இவர்கள் எல்லாரும் பார்க்கிறார்கள்.” ஆக, சத்தியத்தைத் தேடுவதில் சர்வீட்டஸ் தன்னந்தனியாய் இருந்தார். d

சர்வீட்டஸ் சத்தியத்தைத் தேடுவதில் உண்மையாக உழைத்தபோதிலும், சில விஷயங்களை அவர் தவறாகத்தான் புரிந்துகொண்டிருந்தார். உதாரணமாக, அர்மகெதோனும், கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியும் தன்னுடைய வாழ்நாள் காலத்திலேயே வந்துவிடும் என்று அவர் கணித்தார்.

விஞ்ஞான உண்மைகளைத் தேடி . . .

சர்வீட்டஸ் தன்னுடைய எதிரிகளின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காகத் தப்பியோடினார்; தன்னுடைய பெயரை வீயாநாவானுஸ் என்று மாற்றிக்கொண்டு பாரிஸில் தங்கிவிட்டார். அங்கே கலையிலும் மருத்துவத்திலும் பட்டம் பெற்றார். அறிவியலில் இருந்த ஈடுபாடு காரணமாக மனித உடலை அறுத்து, அதன் செயல்பாடுகளை ஆராய்ந்தார். அதன் விளைவாக நுரையீரல் இரத்த ஓட்டத்தை அவர் புரிந்துகொண்டார்; இதை விவரித்த முதல் ஐரோப்பியர் சர்வீட்டஸ்தான் எனலாம். கிறிஸ்தவத்தைச் சீரமைத்தல் என்ற லத்தீன் புத்தகத்தில் இதைப் பற்றி எழுதினார். இதற்கு 75 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இரத்த ஓட்டத்தை வில்லியம் ஹார்வி என்பவர் முழுமையாக விளக்கினார்.

சர்வீட்டஸ் புவியியல் துறையையும் விட்டுவைக்கவில்லை. தாலமி என்பவர் எழுதிய புவியியல் என்ற புத்தகத்தின் மறுபதிப்பைத் தயாரித்து வெளியிட்டார். அது அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால், ஒப்பீடு புவியியல், மனித கலாச்சாரத்தை ஆராயும் இனக்கூறியல் ஆகிய துறைகளின் தந்தை எனச் சிலர் அவரை அழைக்கிறார்கள். அப்புத்தகத்தில், பாலஸ்தீனாவை அதிகம் பயிரிடப்படாத தரிசு நிலம் என்று வர்ணித்திருந்தார்; பின்னர் ஜெனிவாவில் நடந்த விசாரணையில் இதற்காகவும் குற்றம்சாட்டப்பட்டார். பாலஸ்தீனாவில் பாலும் தேனும் ஓடிய மோசேயின் காலத்தைப் பற்றி தான் விவரிக்கவில்லை, ஆனால் அதன் தற்போதைய நிலையை மட்டுமே விவரித்ததாக தன் தரப்பில் அவர் வாதாடினார்.

யூனிவர்சல் ட்ரீடிஸ் ஆன் சிரப்ஸ் என்ற புத்தகத்தை சர்வீட்டஸ் எழுதினார். இப்புத்தகத்தில், ஒரு வகை மருந்தைப் பற்றி புதிய, சமநிலையான கருத்தை வெளியிட்டார். இதில் மருத்துவத்தைப் பற்றிய ஆழமான கருத்துகள் இருந்தன. இது மருந்தியல் துறையிலும் வைட்டமின் பயன்பாட்டு துறையிலும் அவரை முன்னோடியாக ஆக்கியது. இத்தனை அநேக துறைகளில் முத்திரை பதித்த சர்வீட்டஸுக்கு ஒரு சரித்திராசிரியர் இவ்வாறு புகழாரம் சூட்டினார்: “அறிவு வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர். மனித சரித்திரம் கண்ட மாமேதைகளில் ஒருவர்.”

வெல்ல முடியாத விரோதி

சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு எப்போதுமே விரோதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். (லூக்கா 21:15) இதற்கு சர்வீட்டஸும் விதிவிலக்கல்ல. இவருடைய எதிரிகளில் ஜான் கால்வினும் ஒருவர். இவர் ஜெனிவாவில் புராட்டஸ்டன்டினரின் கெடுபிடியான ஆட்சி முறையை ஸ்தாபித்தார். இவரைக் குறித்து வில் டூரன்ட் என்ற சரித்திராசிரியர் இவ்வாறு சொன்னார்: “அவருடைய [கால்வினுடைய] சர்வாதிகாரம், சட்டத்தையோ சக்தியையோ சார்ந்திருக்கவில்லை. மாறாக, அவரது ஆதிக்க மனப்பான்மையையும், விட்டுக்கொடுக்காத குணத்தையும் சார்ந்தே இருந்தது. மத நம்பிக்கைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களுக்குக் கொடுக்க அவர் மறுத்தார். இவ்விஷயத்தில், கால்வினும் போப் மாதிரிதான் செயல்பட்டார்.”

சர்வீட்டஸும் கால்வினும் இளைஞர்களாயிருந்த காலத்தில் பாரிஸில் சந்தித்திருக்கலாம். ஆரம்பத்திலிருந்தே ஒருவருக்கொருவர் ஏனோ பிடிக்கவில்லை. கால்வின் காலப்போக்கில், சர்வீட்டஸின் பரம எதிரியாக ஆனார். மத சீர்திருத்த இயக்கத்தின் தலைவராக அவர் இருந்தபோதிலும், சர்வீட்டஸை கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைக்குழு முன் நிறுத்தினார். பிரான்சில் சர்வீட்டஸின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அங்கிருந்து அவர் எப்படியோ கஷ்டப்பட்டு தப்பியோடினார். ஆனால், பிரான்சின் எல்லைப் பகுதியிலிருந்த ஜெனிவாவில் அவர் பிடிபட்டு, கைதானார். காரணம், அங்கே கால்வினின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது.

சிறையில் அடைக்கப்பட்ட சர்வீட்டஸை கால்வின் கொடூரமாக நடத்தினார். என்றாலும், பைபிளிலிருந்து கால்வின் போதுமான ஆதாரங்களைக் காட்டினால் தன்னுடைய கருத்துகளை மாற்றிக்கொள்ள தயார் என்று விசாரணையின்போது சர்வீட்டஸ் கூறினார். ஆனால் கால்வினால் பதில் சொல்ல முடியவில்லை. இந்த விசாரணையின் முடிவில், சர்வீட்டஸ் கழுமரத்தில் எரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பானது. கத்தோலிக்கர் அவரது கொடும்பாவியை எரித்தனர், புராட்டஸ்டன்டினரோ ஒருபடி மேலே போய் அவரையே எரித்தனர். மதக் கொள்கைகளை எதிர்த்த எவருமே இப்படி இருதரப்பினருடைய வெறுப்புக்கும் ஆளானதில்லை என சில சரித்திராசிரியர்கள் சொல்கிறார்கள்.

மத சுதந்திரத்தின் முன்னோடி

கால்வின் தன்னுடைய எதிரியைத் தீர்த்துக்கட்டினார். ஆனால், அது அவருக்கே பாதகமாக முடிந்தது. எப்படியென்றால், இத்தீர்ப்பை வழங்கியதன் மூலம் எது சரி, எது தவறென மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் தகுதியை அவர் இழந்துபோனார். சர்வீட்டஸ் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டது, ஐரோப்பா முழுவதிலும் இருந்த சிந்திக்கும் மக்களை கொதித்தெழ வைத்தது. மத நம்பிக்கைகளைக் காரணம்காட்டி யாரையும் கொல்லக்கூடாது என்று வலியுறுத்தி வந்த சமூகப் போராளிகள் இச்சம்பவத்தை ஆயுதமாகக் கையில் எடுத்தார்கள். மத சுதந்திரத்திற்காக முன்னொருபோதும் இல்லாதளவு முழு மூச்சோடு போராடத் தீர்மானித்தார்கள்.

இத்தாலிய கவிஞர் காமில்லோ ரேனாட்டோ தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு தெரிவித்தார்: “இந்தப் படுகொலையைச் செய்யும்படி கடவுளோ அவரது ஆவியோ தூண்டவில்லை. தம்மை ஏற்றுக்கொள்ளாதவர்களை கிறிஸ்து அப்படிக் கொடூரமாக நடத்தவில்லை.” பிரான்சை சேர்ந்த மனித பண்பாய்வாளரான செபாஸ்டியன் ஷடேயோன் பின்வருமாறு எழுதினார்: “ஒருவரைக் கொல்லுவது அந்நபரின் உயிரைத்தான் போக்குமே தவிர, எந்தக் கோட்பாட்டையும் காப்பாற்றாது.” சர்வீட்டஸும் இவ்வாறு சொல்லியிருந்தார்: “பைபிளைத் தவறாக விளக்கியதற்காக ஒருவரைக் கொல்லுவது படுமோசமான செயல். ஏனென்றால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள்கூட வழிவிலகி செல்வதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.”

மைக்கேல் சர்வீட்டஸ்​—⁠மாமேதை, மனிதாபிமானி, உயிர்த் தியாகி என்ற புத்தகம் சர்வீட்டஸின் மரணம் ஏற்படுத்திய அழியாச் சுவடுகளைப் பற்றி இவ்வாறு கூறுகிறது: “நான்காம் நூற்றாண்டிலிருந்து மக்களை ஆட்டிப்படைத்த கொள்கைகளுக்கும், மனப்பான்மைகளுக்கும் சர்வீட்டஸின் மரணம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. . . . சரித்திர கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, நவீன சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் மனசாட்சியின்படி நடப்பதற்கான உரிமையைப் பெற சர்வீட்டஸின் மரணம் வழிசெய்தது.”

1908-⁠ல் பிரான்சில் உள்ள ஆன்மாஸ் நகரில் சர்வீட்டஸுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இவர் மரணமடைந்த இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தள்ளி அது அமைக்கப்பட்டுள்ளது. நினைவுச்சின்னத்தில் பின்வரும் வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன: “மைக்கேல் சர்வீட்டஸ், . . . புவியியலாளர், மருத்துவர், உடலியல் நிபுணர், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்குப் பங்களித்தவர், நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் தன்னை அர்ப்பணித்தவர், தன்னுடைய மனசாட்சியையும், சிந்திக்கும் திறனையும் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்காதவர்; மொத்தத்தில், மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு வித்திட்டவர். . . . ஆணித்தரமான நம்பிக்கைகளை உடையவர். சத்தியத்திற்காக தன் உயிரையே கொடுத்தவர்.”

[அடிக்குறிப்புகள்]

a கத்தோலிக்க மதத்திற்கு மாற மறுத்த 1,20,000 யூதர்களை ஸ்பானிய அதிகாரிகள் நாடுகடத்தினர். மூர் எனப்படும் ஆயிரக்கணக்கான நாடோடி மக்களைக் கழுமரத்தில் எரித்தனர்.

b ஏப்ரல் 15, 2004 காவற்கோபுரத்தில் வெளிவந்த “கோம்ப்லூடென்சியான் பன்மொழி பைபிள்​—⁠மொழிபெயர்ப்புக்கு உதவும் சரித்திரப் புகழ்பெற்ற படைப்பு” என்ற கட்டுரையைக் காண்க.

c இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஒரு செய்தி என்ற லத்தீன் புத்தகத்தையும் சர்வீட்டஸ் எழுதினார். அதில் திரித்துவத்தைக் குழப்பமான கோட்பாடு என்று வர்ணித்தார். பைபிளில் திரித்துவத்தை ஆதரிக்கும் “ஒரு வார்த்தைகூட இல்லை” என்றும் குறிப்பிட்டார்.

d சிறைப்பட்டுக் கிடந்த சர்வீட்டஸ் தன்னுடைய கடைசி கடிதத்தை இவ்வாறு நிறைவு செய்தார்: “தன்னந்தனியாக இருந்தாலும் கிறிஸ்து நிச்சயம் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையுடன், மைக்கேல் சர்வீட்டஸ்.”

[பக்கம் 21-ன் பெட்டி/படங்கள்]

யெகோவா என்ற பெயரை சர்வீட்டஸ் பயன்படுத்தினார்

சர்வீட்டஸ் சத்தியத்தைத் தேடியதன் விளைவாக யெகோவா என்ற பெயரை அறிந்துகொண்டார்; அதைப் பயன்படுத்தவும் செய்தார். வில்லியம் டின்டேல் தன்னுடைய ஐந்தாகம மொழிபெயர்ப்பில் இந்தப் பெயரைப் பயன்படுத்தியிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு சர்வீட்டஸ் வெளியிட்ட திரித்துவத்தின் தவறுகள் பேரில் புத்தகத்தில் யெகோவா என்ற பெயரைத் தாராளமாகப் பயன்படுத்தி இருந்தார். அப்புத்தகத்தில் இவ்வாறு விளக்கம் அளித்திருந்தார்: “יהוה, மிகப் பரிசுத்தமான இந்தப் பெயருக்கு பின்வரும் விளக்கங்களைக் கொடுக்கலாம், . . . ‘ஆகும்படி செய்கிறவர்,’ ‘அனைத்தும் உருவாகக் காரணமானவர்,’ ‘படைப்பின் ஊற்றுமூலர்.’ மேலும், “யெகோவா என்ற பெயர் பிதாவுக்கு மட்டுமே பொருந்தும்” என்று குறிப்பிட்டார்.

சாண்டேஸ் பாக்னிநஸ் என்பவரின் புகழ்பெற்ற லத்தீன் பைபிள் மொழிபெயர்ப்பையும் (படம் கீழே) 1542-⁠ல் சர்வீட்டஸ் தொகுத்தார். அவருடைய விரிவான ஓரக்குறிப்புகளிலும் இந்தத் தெய்வீகப் பெயரைப் பயன்படுத்தினார். “கர்த்தர்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்த முக்கிய வசனங்களின்​—⁠சங்கீதம் 83:17 போன்ற முக்கிய வசனங்களின்​—⁠ஓரக்குறிப்பில் யெகோவா என்ற பெயரை அவர் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவத்தை சீரமைத்தல் என்ற தன்னுடைய கடைசி புத்தகத்தில் யெகோவா என்ற தெய்வீகப் பெயரைப் பற்றி சர்வீட்டஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “பூர்வ காலத்தில் வாழ்ந்த அநேகர் இப்பெயரை உச்சரித்தார்கள் என்பதில் . . . சந்தேகமே இல்லை.”

[படம்]

பிரான்சிலுள்ள ஆன்மாஸ் நகரில் சர்வீட்டஸின் நினைவுச்சின்னம்

[பக்கம் 18-ன் படம்]

ஸ்பெயினிலிருந்த முஸ்லிம்களுக்குக் கட்டாய முழுக்காட்டுதல் கொடுத்ததைச் சித்தரிக்கும் 15-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த செதுக்கோவியம்

[படத்திற்கான நன்றி]

Capilla Real, Granada

[பக்கம் 19-ன் படம்]

“திரித்துவத்தின் தவறுகள் பேரில்” புத்தகத்தின் முதல் பக்கம்

[படத்திற்கான நன்றி]

From the book De Trinitatis Erroribus, by Michael Servetus, 1531

[பக்கம் 20-ன் படம்]

நுரையீரல் இரத்த ஓட்டத்தை சர்வீட்டஸ் ஆராய்ந்தார்

[படத்திற்கான நன்றி]

Anatomie descriptive et physiologique, Paris, 1866-7, L. Guérin, Editor

[பக்கம் 20-ன் படம்]

சர்வீட்டஸ் எழுதிய “யூனிவர்சல் ட்ரீடிஸ் ஆன் சிரப்ஸ்” புத்தகம் மருந்தியல் துறையில் புதிய கருத்துகளை முன்வைத்தது

[பக்கம் 21-ன் படம்]

சர்வீட்டஸின் மோசமான எதிரி​—⁠ஜான் கால்வின்

[படத்திற்கான நன்றி]

Biblioteca Nacional, Madrid

[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]

Biblioteca Nacional, Madrid