Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஃபோட்டோகிராஃபி பிறந்த கதை

ஃபோட்டோகிராஃபி பிறந்த கதை

ஃபோட்டோகிராஃபி பிறந்த கதை

ஸ்வீடனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஃபோட்டோகிராஃபி பற்றி இப்படியாக ஒரு கதை இருக்கிறது: ஜாம்பாட்டிஸ்டா டெல்லா பார்ட்டா என்ற இத்தாலிய இயற்பியலாளரின் (1535?-1615) வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் பயந்துபோனார்களாம். அவர்களுக்கு எதிரே இருந்த சுவரில் குட்டி குட்டி மனித உருவங்கள் தலைகீழாக நடமாடிக்கொண்டிருந்ததுபோல் தெரிந்ததாம். அதைப் பார்த்து பதறிப்போய் ஓரே ஓட்டமாக வெளியே ஓடி​னார்​களாம். டெல்லா பார்ட்டா மாயமந்திரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டாராம்!

கேமரா அப்ஸ்கியுராவை தன் விருந்தினருக்கு அறிமுகப்படுத்தி வேடிக்கை காட்டியதற்காக டெல்லாவுக்கு கிடைத்த பரிசு இதுதான். லத்தீன் மொழியில் கேமரா அப்ஸ்கியுரா என்றால் “இருட்டு அறை” என்று அர்த்தம். இந்தக் கேமரா ஒரு சாதாரண விதியின் அடிப்படையில் இயங்குகிறது, என்றாலும், நம் கண்களைக் கவர்ந்திழுக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கிறது. இது எப்படி இயங்குகிறது என்பதைப் பார்ப்போமா?

ஓர் இருட்டு பெட்டிக்குள்ளோ அறைக்குள்ளோ ஒரு சிறு துவாரத்தின் வழியாக ஒளி பாயும்போது வெளியேயுள்ள காட்சி எதிரே உள்ளே சுவரில் தலைகீழாகத் தெரியும். டெல்லா பார்ட்டாவின் விருந்தினர் சுவரில் பார்த்ததுகூட அறைக்கு வெளியே நடித்துக்கொண்டிருந்த நடிகர்களின் தலைகீழ் உருவங்களைத்தான். இன்றைய கேமராவின் முன்னோடியே இந்த கேமரா அப்ஸ்கியுரா. இன்று சொந்தமாக கேமரா வைத்திருக்கும் கோடிக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம், அல்லது எல்லா இடங்களிலும் கிடைக்கிற மலிவான டிஸ்போஸபிள் கேமராவையாவது நீங்கள் பயன்படுத்தியிருக்கலாம்.

டெல்லா பார்ட்டாவுடைய காலத்தில் இருந்த கேமரா அப்ஸ்கியுரா ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. அதற்கும் முன்பே அரிஸ்டாட்டில் (பொ.ச.மு. 384-322) கேமரா இயங்கும் விதியைக் கண்டுபிடித்துவிட்டார். அதன் அடிப்படையில்தான் இன்றைய கேமரா இயங்குகிறது. 10-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரேபிய கல்விமான் அல்ஹாஸென், கேமரா அப்ஸ்கியுரா இயங்கும் விதியை தனது புத்தகத்தில் விவரித்திருந்தார். 15-⁠ம் நூற்றாண்டின் ஓவியரான லியோனார்டோ டாவின்சியும்கூட தன் புத்தகங்களில் அதைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். 16-⁠ம் நூற்றாண்டில் லென்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கேமராவில் கிடைத்த காட்சிகள் இன்னும் துல்லியமாக இருந்தன. ஒரு காட்சியிலுள்ள உருவங்களின் தூரத்தையும் அளவையும் லென்ஸின் உதவியால் துல்லியமாக தெரிந்துகொள்ள முடிந்ததால் அநேக ஓவியர்கள் லென்ஸைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், இந்தக் காட்சிகளை நிரந்தரமாக பதிவு செய்வதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் 19-⁠ம் நூற்றாண்டுக்குப் பிறகே அதில் வெற்றி கிடைத்தது.

உலகின் முதல் ஃபோட்டோகிராஃபர்

பிரெஞ்சு இயற்பியல் அறிஞரான ஷோசெஃப் நிசெஃபர் நியெப்ஸ் 1816-லேயே நிரந்தர ஃபோட்டோக்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். ஒருசமயம், அவர் கல்லச்சு முறையில் (lithography) ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது ஒளியை அதிகமாக கிரகித்துக்கொள்ளும் ஒரு பொருளைக் கண்டுபிடித்தார், அப்போதுதான் அவருடைய ஆராய்ச்சி முதல் மைல்கல்லை எட்டியது. அவர் கண்டுபிடித்த அந்தப் பொருள் யூதேயாவின் களிப்பொருளே (bitumen of Judaea). 1820-களின் மத்திபத்தில், இந்தக் களிப்பொருளை, வெள்ளி மற்றும் காரீயத்தின் கலவையால் செய்யப்பட்ட ஒரு தகட்டில் பூசி அதை கேமரா அப்ஸ்கியுராவுக்குள் வைத்தார். இந்தக் கேமராவை தன் எஸ்டேட் வீட்டிலுள்ள ஒரு ஜன்னலுக்கு முன்பாக நிற்க வைத்து, எட்டு மணிநேரம் அதன்மீது சூரிய ஒளி படும்படி செய்தார். அதன் விளைவாக, கட்டடம், மரம், களஞ்சியம் ஆகியவை மங்கலாக தெரிந்த ஒரு ஃபோட்டோவை பெற்றார். இன்று ஒழுங்காக ஃபோட்டோ எடுக்க தெரியாத ஃபோட்டோகிராஃபர்கள்கூட இதைவிட தெளிவான ஒரு ஃபோட்டோவை எடுப்பார்கள். ஆனால் நியெப்ஸ் அதைப் பார்த்து சந்தோஷப்பட்டதற்கு காரணம் இருந்தது. அவர் எடுத்த அந்த ஃபோட்டோவே முதன்முதல் எடுக்கப்பட்ட நிரந்தர ஃபோட்டோவாக இருந்திருக்கலாம்!

இந்த முறையில் இன்னும் முன்னேற்றம் செய்வதற்காக நியெப்ஸ் 1829-⁠ல் லூயி டகெர் என்ற துடிப்புமிக்க தொழிலதிபருடன் கூட்டு சேர்ந்துகொண்டார். ஆனால் 1833-⁠ல் நியெப்ஸ் இறந்துவிட்டார், என்றாலும், பின்வந்த வருடங்களில் டகெர் சில முக்கிய முன்னேற்றங்களைச் செய்தார். வெள்ளி ஐயோடைடு பூசப்பட்ட செம்பு தகடுகளை கேமரா அப்ஸ்கியுராவில் பயன்படுத்தினார். இந்த வெள்ளி ஐயோடைடு, களிப்பொருளைவிட அதிகமாக ஒளியை கிரகிக்கும் தன்மை உடையது. ஒருமுறை, செம்பு தகட்டில் படம் பிடித்தபின் எதேச்சையாக அதன்மீது மெர்குரி புகை பட்டபோது, முழுமையாக டெவலப் செய்யப்படாத படம் தெளிவாக தெரிந்ததை டகெர் கண்டுபிடித்தார். இதனால் தகட்டை நீண்ட நேரம் சூரிய ஒளியில் வைக்க வேண்டிய வேலை குறைந்தது. அதோடு, செம்புத் தகட்டை உப்பு கரைசலில் கழுவினபோது எத்தனை நாட்கள் ஆனாலும் படம் மங்காமல் இருந்ததையும் அவர் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு பிறகு ஃபோட்டோகிராஃபி உலகத்தையே கலக்கிவிட்டது.

உலகத்திற்கு அறிமுகம்

டகெரின் கண்டுபிடிப்பான டகெரோடைப், அதாவது வெள்ளி ஐயோடைடு பூசப்பட்ட செம்பு தகடு, 1839-⁠ல் உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது உலகமே சந்தோஷத்தில் சிறகடித்தது. இதைக் குறித்து ஹெல்முட் கெர்ன்ஷைம் என்பவர் ஃபோட்டோகிராஃபியின் வரலாறு என்ற தனது ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு சொல்கிறார்: “டகெரோடைப்பைப்போல் வேறெந்தக் கண்டுபிடிப்பும் மக்கள் மனதை இந்தளவு கவரவில்லை, மின்னல் வேகத்தில் உலக மக்களின் மனதை ஈர்க்கவுமில்லை.” இந்த டகெரோடைப், விற்பனைக்கு வந்தபோது என்ன நடந்தது என்பதை ஒரு கண்கண்ட சாட்சி இப்படியாக விவரித்தார்: “ஒரு மணிநேரத்திற்குள், மூக்குக் கண்ணாடி விற்பனைச் செய்யும் எல்லா கடைகளிலும் வருங்கால டகெரோடைப் ஃபோட்டோகிராஃபர்களின் கூட்டம் அலைமோதியது, ஆனால், இவர்களுக்கு கொடுப்பதற்கோ போதுமான சாதனங்கள் இருக்கவில்லை; கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, பாரிஸ் நகரின் எல்லா சந்திகளிலும் சர்ச்சுகள் முன்பும் அரண்மனைகள் முன்பும் மூன்று கால் கருப்பு பெட்டிகள் நிற்பதைப் பார்க்க முடிந்தது. பாரிஸ் நகரின் இயற்பியலாளர்களும் வேதியியலாளர்களும் படித்த மேதைகளும் தகடுகளில் வெள்ளி முலாம் பூசினார்கள்; ஏன், பணக்கார மளிகை வியாபாரிகள்கூட இந்தப் புதிய கண்டுபிடிப்பின் சொந்தக்காரர்களாக ஆகும் சந்தோஷத்திற்காக தங்கள் பணத்தை பறிகொடுக்கத் தயாராக இருந்தார்கள். காசை ஐயோடினில் கரையவிட்டு மெர்குரி ஆவியாக பறக்கவிட்டார்கள்.” சீக்கிரத்திலேயே பாரிஸ் நகர பத்திரிகைகள் இந்தப் பாணிக்கு டகெரோடைப் பைத்தியம் என்று பெயர் சூட்டிவிட்டன.

தனிச்சிறப்புமிக்க இந்த டகெரோடைப்கள் ஜான் ஹெர்ஷெல் என்ற பிரிட்டன் நாட்டு விஞ்ஞானியை இவ்வாறு எழுதும்படி தூண்டியது: “அதை அற்புதம் என்று சொன்னால் மிகையாகாது.” சிலர் அதை ஒரு மாயாஜாலம் என்றும் சொன்னார்கள்.

எல்லாரும் இந்தப் புதிய கண்டுபிடிப்பைக் குறித்து சந்தோஷப்படவில்லை. ஃபோட்டோ எடுத்தால் “கண்பட்டுவிடும்” என்ற மூடநம்பிக்கையினால் நேபிள்ஸ் நகரத்து ராஜா ஃபோட்டோகிராஃபியை 1856-⁠ல் தடைசெய்தார். டகெரோடைப்பைப் பார்த்த பிரெஞ்சு ஓவியரான பால் டெலரோஷ், “இன்றோடு ஓவியம் செத்துவிட்டது!” என்று கவலையோடு சொன்னார். ஃபோட்டோகிராஃபி தங்கள் பிழைப்பில் மண் அள்ளிப்போட்டுவிடும் என்று நினைத்து ஓவியர்கள் ஆடிப்போய்விட்டார்கள். சில ஓவியர்கள் இப்படி பயந்ததற்கான காரணத்தை ஒரு கருத்துரையாளர் இவ்வாறு தெரிவித்தார்: “ஃபோட்டோகிராஃபி நிஜத்தை அச்சுபிசகாமல் பிரதிபலிப்பதால், அழகை குறித்த மனிதனின் கருத்தை அது கெடுத்துவிடலாம்.” அதோடு, ஃபோட்டோகிராஃபி உள்ளதை உள்ளவாறு படம் பிடித்ததாலும் ஓவியர்களுக்கே உரிய தனித்திறனை, அதாவது அழகையும், இளமையையும் கற்பனையில் வடிக்கும் திறனை அழித்துவிட்டதாலும் அது எதிர்க்கப்பட்டது.

டகெர் Vs டால்பட்

இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியலாளரான வில்லியம் ஹென்ரி ஃபாக்ஸ் டால்பட், தான்தான் ஃபோட்டோகிராஃபியைக் கண்டுபிடித்ததாக நினைத்துக்கொண்டிருந்தார். டகெரின் படைப்பு பற்றிய அறிவிப்பைக் கேள்விப்பட்டவுடன் அவருக்கு அதிர்ச்சி தாளவில்லை. டால்பட், வெள்ளி குளோரைடு பூசப்பட்ட பேப்பர்களை கேமரா அப்ஸ்கியுராவில் வைத்தார். கிடைத்த நெகடிவ்களில் ஒளி ஊடுருவுவதற்காக மெழுகு பூசினார். அதை வெள்ளி குளோரைடு பூசப்பட்ட மற்றொரு பேப்பரில் வைத்தார், அதன்மேல் சூரிய ஒளிபடவும் செய்தார். இப்படியாக தெளிவான ஒரு ஃபோட்டோவைப் பெற்றார்.

ஆரம்பத்தில் டால்பட் ஃபோட்டோகிராஃபி அவ்வளவு பிரபலமடையவில்லை, தரமும் குறைவாக இருந்தது. இருந்தாலும் அவருடைய டெக்னிக்கைப் பயன்படுத்தி பிற்காலத்தில் நல்ல கேமரா வெளிவந்தது. அவருடைய இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தியதால் ஒரேவொரு நெகடிவ் வைத்தே நிறைய பிரின்ட் எடுக்க முடிந்தது. அதோடு, பேப்பர் ஃபோட்டோவிற்கு விலையும் கம்மிதான், மெல்லியதான டகெரோடைப்புகளைவிட இந்த பேப்பர்களை பயன்படுத்துவதும் வசதியாக இருந்தது. நவீன ஃபோட்டோகிராஃபி இன்றும் டால்பட் டெக்னிக்கையே பயன்படுத்துகிறது. ஆனால் டகெரோடைப் ஃபோட்டோகிராஃபியோ ஆரம்பத்தில் பிரபலமாக இருந்தாலும் இன்று அது மண்ணில் புதைந்துவிட்டது.

ஃபோட்டோகிராஃபியின் தந்தை என்ற பட்டத்திற்காக போட்டி போட்டவர்கள் நியெப்ஸ், டகெர், டால்பட் ஆகியோர் மட்டுமல்லர். 1839-⁠ல் டகெரின் கண்டுபிடிப்பு பற்றிய அறிவிப்பைப் பின்தொடர்ந்து வடக்கே நார்வேயிலிருந்து தெற்கே பிரேசில்வரை கிட்டத்தட்ட 24 பேர் ஃபோட்டோகிராஃபியின் தந்தை என்ற பட்டத்தைப் பெற அலைமோதினார்கள்.

ஃபோட்டோகிராஃபி ஏற்படுத்திய திடீர் மாற்றங்கள்

வறுமையையும் துன்பத்தையும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு ஃபோட்டோ சிறந்த சாதனமாக இருக்கும் என்று சமூக சீர்த்திருத்தவாதிகள், ஃபோட்டோ கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் கருதினார்கள். அவர்களில் ஒருவர்தான் ஜேகப் ஆகஸ்ட் ரிஸ் என்பவர். 1880-⁠ல் அவர் நியு யார்க் நகரின் சேரிகளை இரவில் படம் பிடித்தார், ஃபிளாஷ் லைட்டுக்காக கடாயில் மெக்னீசியம் பவுடரை எரித்தார், இது மிகவும் ஆபத்தான முறை. அதனால் அவர் ஆராய்ச்சி செய்த வீடு இரண்டு முறை தீப்பிடித்துவிட்டது, ஒருமுறை அவருடைய துணியிலும் தீப்பற்றிவிட்டது. அவர் எடுத்த படங்களைப் பார்த்ததால்தான் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் தான் பொறுப்பேற்றபோது பல சமூக சீர்த்திருத்தங்களைச் செய்தார் என்பதாக சொல்லப்படுகிறது. வில்லியம் ஹென்றி ஜாக்ஸன் படம்பிடித்த இயற்கைக் காட்சிகளே, 1872-⁠ல் எல்லோஸ்டோனை தேசிய பூங்காவாக உருவாக்குவதற்கு அமெரிக்க அரசாங்கத்தைத் தூண்டியது. அதுதான் உலகின் முதல் தேசிய பூங்கா.

எல்லாருக்கும் கிடைக்கிறது

1880-⁠களின் பிற்பகுதியில் ஃபோட்டோகிராஃபியின் விலையினாலும் சிக்கலான தன்மையினாலும், ஃபோட்டோகிராஃபராவதற்கு விரும்பியவர்கள் அதில் இறங்காமலேயே இருந்தார்கள். ஆனால் 1888-⁠ல் ஜார்ஜ் ஈஸ்ட்மான் கண்டுபிடித்த கோடாக் கேமரா அந்தப் பிரச்சினையை நீக்கிவிட்டது; அது எடுத்துச் செல்வதற்கு வசதியாகவும் ஃபிலிம் ரோலைக் கொண்டதாகவும் இருந்தது.

ஃபோட்டோ எடுத்து முடித்த பிறகு கஸ்டமர் அந்த கேமிராவை அப்படியே ஃபாக்டரிக்கு அனுப்பிவைப்பார். அங்கு ஃபிலிம்கள் கழுவப்பட்டு கேமராவில் புதிய ஃபிலிம் ரோல் போடப்பட்டன, பிறகு கேமராவும், கழுவியெடுக்கப்பட்ட படங்களும் கஸ்டமருக்கு அனுப்பிவைக்கப்பட்டன, இவையெல்லாமே குறைந்த செலவில் செய்துதரப்பட்டன. அப்படியென்றால் கோடாக் கம்பெனியின் தாரகமந்திரம் சொல்வது மிகையல்ல: “பட்டனை அழுத்துங்கள், மற்றதை எங்கள் கையில் விட்டுவிடுங்கள்.”

இப்போது யார் வேண்டுமானாலும் ஃபோட்டோ எடுக்கலாம். இன்று வருடத்திற்கு கோடிக்கணக்கான ஃபோட்டோக்கள் எடுக்கப்படுகின்றன, இதிலிருந்தே போஃடோகிராஃபியின் புகழ் புலப்படுகிறது. இன்று, டிஜிட்டல் கேமரா அதன் புகழுக்கு புகழ் சேர்க்க வந்துவிட்டது. இது, காட்சியை மெகாபிக்ஸெல்ஸில் அதாவது, மிக துல்லியமாக எடுக்கிறது. இதில் இருக்கும் மிகச் சிறிய மெமரி ஸ்டிக்கில் நூற்றுக்கணக்கான ஃபோட்டோக்களை பதிவு செய்து வைக்க முடியும். உங்கள் வீட்டில் கம்ப்யூட்டரும் ஒரு பிரிண்டரும் இருந்தால் தரமான ஃபோட்டோக்களை பிரிண்ட்போட முடியும். ஃபோட்டோகிராஃபி நிறையவே முன்னேறியிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

[பக்கம் 20-ன் படம்]

சுமார் 1845​—⁠டகெரோடைப்பில், பாரிஸ் நகரின் ஒரு பரந்த காட்சி

[பக்கம் 20-ன் படம்]

சுமார் 1826​—⁠முதல் ஃபோட்டோவாக கருதப்படுவதன் காப்பி

[பக்கம் 20-ன் படம்]

கேமரா அப்ஸ்கியுராவின் ஒரு வரைபடம்; இதைத் தான் அநேக ஓவியர்கள் பயன்படுத்தினார்கள்

[பக்கம் 21-ன் படம்]

நியெப்ஸ்

[பக்கம் 23-ன் படங்கள்]

1844​—⁠லூயி டகெர் கண்டுபிடித்த டகெரோடைப்பும் அவருடைய கேமராவும்

[பக்கம் 23-ன் படங்கள்]

சுமார் 1845​—வில்லியம் டால்பட்டின் ஸ்டூடியோவும் கேமராக்களும்

[பக்கம் 23-ன் படங்கள்]

1890-⁠ல் கோடாக் நம்பர் 2 கேமராவுடன் ஜார்ஜ் ஈஸ்ட்மானின் ஃபோட்டோவும், பிலிம் சுற்றப்பட்ட சுருளுடன் அவரது நம்பர் 1 கேமராவும்

[பக்கம் 23-ன் படம்]

எல்லோஸ்டோன் தேசிய பூங்காவாக மாறுவதற்கு முன் டபிள்யு. எச். ஜாக்ஸன் எடுத்த ஓர் இயற்கைக் காட்சி, 1871

[பக்கம் 23-ன் படம்]

மெகா-பிக்ஸெல்ஸுடன் படங்களை பதிவுசெய்யும் நவீன டிஜிட்டல் கேமராக்கள்

[பக்கம் 20-ன் படங்களுக்கான நன்றி]

பாரிஸ் நகரின் பரந்த காட்சி: Photo by Bernard Hoffman/Time Life Pictures/Getty Images; நியெப்ஸின் ஃபோட்டோகிராஃப்: Photo by Joseph Niepce/Getty Images; கேமரா அப்ஸ்கியுரா: Culver Pictures

[பக்கம் 22-ன் படங்களுக்கான நன்றி]

பக்கம் 23: டால்பட்டின் ஸ்டூடியோ: Photo by William Henry Fox Talbot & Nicholaas Henneman/Getty Images; டால்பட்டின் கேமரா: Photo by Spencer Arnold/Getty Images; கோடாக் ஃபோட்டோ, கோடாக் கேமரா, டகெர் கேமரா: Courtesy George Eastman House; எல்லோஸ்டோன்: Library of Congress, Prints & Photographs Division, LC-USZ62-​52482