Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

பிரேசில் நாட்டிலுள்ள 60 சதவீதக் குழந்தைகளுக்கு மூன்று வயதிற்குள்ளேயே பற்சிதைவு ஏற்படுகிறது. இரவு வேளையில் புட்டிப் பாலை, பெரும்பாலும் இனிப்பான பாலைக் குடித்த பின்பு, பல் தேய்க்காமல் தூங்குவது இதற்கு ஒரு காரணமாகும்.​—⁠ஃபோல்யா ஆன்லைன், பிரேசில்.

அமெரிக்காவில் தற்போது 25 சதவீத குழந்தைகள் சிசேரியன் முறையில் பிறக்கின்றன. 1980-⁠ம் வருடத்துடன் ஒப்பிட, நியு யார்க் நகரில் 5 மடங்கு குழந்தைகள் இப்படிப் பிறக்கின்றன. சௌகரியப்படும் சமயத்தில் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவது இதற்கு ஒரு காரணம்; ஆனால், தேவையில்லாமல் இப்படி சிசேரியன் செய்வதில் உட்பட்டுள்ள ஆபத்துகளோ “ஏராளம்.”​—⁠த நியு யார்க் டைம்ஸ், அமெரிக்கா.

கடந்த 100 ஆண்டுகளில், உலகெங்கும் வெப்பநிலை 0.6 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்திருக்கிறது. ஆனால், மெக்சிகோ நகரில் சராசரி வெப்பநிலை சுமார் 4 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது. காடுகளை அழிப்பதும், நகரங்களை உருவாக்குவதுமே இதற்குக் காரணமென நிபுணர்கள் சாடுகிறார்கள்.​—⁠எல் யுனிவர்சல், மெக்சிகோ.

அமெரிக்காவில், திருமணம் செய்துகொள்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏற்கெனவே ஒன்றாக சேர்ந்து வாழ்பவர்கள்தான். முறைப்படி திருமணம் செய்து வாழ்பவர்களோடு ஒப்பிட, இவர்கள் விவாகரத்து செய்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமிருக்கிறது.​—⁠சைக்காலஜி டுடே, அமெரிக்கா.

வேலை செய்யுமிடத்தில் எரிச்சலூட்டும் பழக்கங்கள்

“சக பணியாளர்களின் எரிச்சலூட்டும் பழக்கங்களை” வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் பட்டியலிட்டிருக்கிறது; அதில், “போனில் சத்தமாகப் பேசுவது, ஸ்பீக்கர் போன்களைப் பயன்படுத்துவது, எக்கச்சக்கமான வேலையென சதா புலம்புவது ஆகியவை முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றன.” வேறு பழக்கங்களும் அப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன: “சக பணியாளர்கள் மற்றவர்களுடன் ஒட்டாமல் ஒரு ‘குரூப்பாக’ இருப்பது, வேலைக்குத் தாமதமாக வருவது, தனக்குத்தானே பேசிக்கொள்வது, இருந்த இடத்திலிருந்தே பக்கத்து ‘கேபினில்’ உள்ளவர்களுடன் பேசுவது, சுத்தபத்தமாக இல்லாதிருப்பது, சத்தம்போட்டு சாப்பிடுவது.” இத்தகைய மோசமான பழக்கங்கள்கூட ஒருவர் திறம்பட வேலை செய்வதற்கு முட்டுக்கட்டையாய் இருக்கின்றன. எனினும், இந்த ஆய்வின்போது பதில் அளித்தவர்களில் பெரும்பாலோர், தங்களுக்கு எரிச்சலூட்டியவர்களிடம் அதற்காக மல்லுக்கட்டியதே இல்லையென சொன்னார்கள். “அதற்குக் காரணம் இருக்கிறது, அவர்களே ஒருவேளை அப்படி நடந்துகொள்ளலாம், இப்படியிருக்க மற்றவர்களை எப்படித் தட்டிக்கேட்க முடியும்” என்கிறது அந்தச் செய்தித்தாள்.

நகரங்கள் நெரிசலில்

“இரண்டு வருடங்களில் உலக ஜனத்தொகையில் பாதிக்குப் பாதிப்பேர் நகரங்களில் குடியிருப்பார்கள்” என CBC நியூஸ் குறிப்பிடுகிறது. உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் நகரவாசிகள் அதிகமாக இருக்கிறார்கள்; அங்கு சுமார் 10-⁠ல் 9 பேர் நகரங்களில் வசிக்கிறார்களென ஐக்கிய நாட்டு அறிக்கை ஒன்று சொல்கிறது. வெறும் 55 வருடங்களுக்கு முன்பு, நியு யார்க், டோக்கியோ ஆகிய இரு நகரங்களில்தான் ஜனத்தொகை ஒரு கோடியோ அதற்கும் அதிகமாகவோ இருந்தது. இன்றோ, 20 நகரங்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள்; அந்த வரிசையில் ஜகார்த்தா, மெக்சிகோ நகரம், மும்பை, சாவோ போலோ ஆகியவை இடம்பெறுகின்றன. ஐ.நா. பொதுச் செயலர் கோஃபீ அன்னன் இவ்வாறு சொல்கிறார்: “இப்படி மளமளவென ஜனத்தொகை பெருகினால், பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.”

மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுப்பது

மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுப்பது, தனி மனிதனின் மறுக்கப்பட முடியாத உரிமையென கொரிய குடியரசின் தேசிய மனித உரிமை குழு சொல்கிறது. இந்த உரிமையை மதிக்கும் விதமாக, படை சாராத வேறு பணிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென அந்தக் குழு சிபாரிசு செய்தது. மனசாட்சியின் நிமித்தம் இராணுவத்தில் சேராதிருப்பதற்கு தற்போதைய இராணுவ சட்டம் இடம் அளிப்பதில்லை; இதை ஆதரிக்கும் விதத்தில் கான்ஸ்ட்டிட்யூஷனல் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. இப்படியிருக்க, மனித உரிமைக் குழுவின் சிபாரிசு இந்தத் தீர்ப்புக்கு ‘எதிர்மாறாக’ இருப்பதாய் த கொரியன் டைம்ஸ் செய்தித்தாள் சொல்கிறது. நீதிமன்றங்கள் அல்ல, ஆனால் சட்ட மன்றமே இந்த உரிமையைச் சட்டப்பூர்வமாக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும், கொரிய குடியரசில் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் இளைஞர்களில் 500 முதல் 700 பேர் இராணுவத்தில் சேர மறுப்பதால் சிறைக்குச் செல்கிறார்கள். இந்தக் காரணத்திற்காக, கடந்த வருடங்களில் சுமார் 10,000 யெகோவாவின் சாட்சிகள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள்.