Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதல் பாவம் என்ன?

முதல் பாவம் என்ன?

பைபிளின் கருத்து

முதல் பாவம் என்ன?

இந்தக் கேள்விக்கான பதில் மிக முக்கியமானது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், ஆதாம் ஏவாள் கடவுளுக்கு கீழ்ப்படியத் தவறியதால் முழு மனித சமுதாயமும் பாதிக்கப்பட்டிருக்கிறது, அதில் நாமும் உட்பட்டிருக்கிறோம். இதைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) ஒரு மரத்தின் பழத்தைப் பறித்து சாப்பிட்டதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?

ஆதாம் ஏவாளைக் கடவுள் படைத்து ஓர் அழகிய தோட்டத்தில் குடிவைத்தார். அந்தத் தோட்டத்தில் காய்கறி செடிகளும் பழம் தரும் மரங்களும் ஏராளமாக இருந்தன. அங்கிருந்த ஒரே ஒரு மரம் மட்டுமே அவர்களுக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. அந்த மரம் எது? ‘நன்மைதீமை அறியத்தக்க மரமே’ அது. ஆதாம் ஏவாளுக்கு சுயமாக தெரிவுசெய்யும் சுதந்திரம் இருந்ததால் கடவுளுக்கு கீழ்ப்படிவதா வேண்டாமா என்பதை அவர்களாகவே தீர்மானிக்க முடிந்தது. என்றாலும், ஆதாமை கடவுள் இவ்வாறு எச்சரித்திருந்தார்: “[நன்மைதீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை] நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.”​—ஆதியாகமம் 1:29; 2:17.

நியாயமான தடையே

இதற்குக் கீழ்ப்படிவது ஒரு பெரிய கஷ்டமே இல்லை. ஏனென்றால் மற்ற எல்லா மரங்களின் பழத்தையும் அவர்கள் சாப்பிடலாம். (ஆதியாகமம் 2:16) அதுமட்டுமல்ல, அவர்களுக்கு ஏதோ ஒரு கெட்ட சிந்தை இருந்ததாலோ அவர்களை தாழ்வாக நடத்த வேண்டும் என்பதாலோ கடவுள் அந்தத் தடையை விதிக்கவில்லை. ஒருவேளை மிருகப்புணர்ச்சி, கொலை போன்ற கீழ்த்தரமான செயல்களுக்கு கடவுள் தடைவிதித்திருந்தால், பரிபூரண மனிதர்களுக்குக்கூட சில கெட்ட சிந்தைகள் இருந்ததென்று சிலர் வாதாடியிருக்கலாம். ஆனால் சாப்பிடுவதோ இயல்பான காரியமாக இருந்தது.

தடைசெய்யப்பட்ட பழம், உடலுறவை அர்த்தப்படுத்துகிறதென சிலர் நினைக்கிறார்களே, இது உண்மையா? இதற்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை. சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம், கடவுள் இந்தத் தடையை விதித்தபோது ஆதாமிற்கு துணை இருக்கவில்லை. கொஞ்ச காலத்திற்கு அவன் தனியாகவே இருந்திருக்கிறான் என்பது தெரிகிறது. (ஆதியாகமம் 2:23) இரண்டாவது விஷயம், ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்று ஆதாம் ஏவாளிடம் கடவுள் சொல்லியிருந்தார். (ஆதியாகமம் 1:28) கடவுளே தம்முடைய சட்டத்தை மீறும்படி சொல்லிவிட்டு பிறகு மீறினதற்காக மரண தண்டனை அளிப்பாரா? நிச்சயம் அப்படிச் செய்யமாட்டார்! (1 யோவான் 4:8) மூன்றாவது விஷயம், ஏவாள் முதலில் அந்தப் பழத்தை சாப்பிட்ட பிறகே தன் கணவன் ஆதாமிற்கு கொடுத்தாள். (ஆதியாகமம் 3:6) எனவே, நிச்சயமாக அந்தப் பழம் உடலுறவை அர்த்தப்படுத்தியிருக்க முடியாது.

தார்மீக சுதந்தரத்தைத் துடுக்குடன் தட்டிப்பறித்தார்கள்

‘நன்மை தீமை அறியத்தக்க மரம்’ நிஜமான ஒரு மரம். தாம் படைத்த மனிதர்களுக்கு நல்லது கெட்டதைத் தீர்மானிப்பதற்கு கடவுளுக்கு இருக்கும் உரிமையை அந்த மரம் அர்த்தப்படுத்தியது. ஏனென்றால், அவரே அவர்களுடைய படைப்பாளர், அரசரும்கூட. எனவே மனிதன் அந்தப் பழத்தைச் சாப்பிட்டபோது கடவுளுக்கு உரியதை பறித்துக்கொண்டான். இது வெறும் திருட்டு அல்ல. நல்லது கெட்டதை சுயமாக தீர்மானிக்கும் உரிமையை அதாவது, தார்மீக சுதந்திரத்தைத் தட்டிப்பறிக்க வேண்டுமென்ற துடுக்கான முயற்சியும்கூட. அந்தப் பழத்தை சாப்பிட்டால் அவளும் அவளுடைய கணவனும் ‘சாகவே மாட்டார்கள்’ என்று ஏவாளிடம் பொய் சொன்ன பிறகு பிசாசு என்ன சொன்னான் என்பதைக் கவனியுங்கள்: “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.”​—ஆதியாகமம் 3:4, 5.

ஆதாம் ஏவாள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டபோது கடவுளைப்போல் நல்லது கெட்டதை அறியும் திறனைப் பெறவில்லை. சொல்லப்போனால், ‘சர்ப்பம் என்னை வஞ்சித்தது’ என்றுதான் கடவுளிடம் ஏவாள் கூறினாள். (ஆதியாகமம் 3:13) என்றாலும், கடவுள் கொடுத்திருந்த கட்டளையை ஏவாள் அறிந்திருந்தாள். சர்ப்பத்தின் பின்னாலிருந்து பேசிய சாத்தானிடம்கூட ஏவாள் அதை எடுத்து சொல்லியிருந்தாளே! (வெளிப்படுத்துதல் 12:9) அதனால் ஏவாள் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனாள் என்றுதான் சொல்ல வேண்டும். (ஆதியாகமம் 3:1-3) ஆதாமோ வஞ்சிக்கப்படவில்லை. (1 தீமோத்தேயு 2:14) என்றாலும் தன்னைப் படைத்தவருக்கு உண்மையாக இருக்காமல் தன் மனைவி பேச்சை கேட்டு நடந்தான். இப்படியாக, சுயமாக தீர்மானிக்கும் உரிமையை ஏவாள் மட்டுமல்ல ஆதாமும் பறித்துக்கொண்டான்.​—ஆதியாகமம் 3:6, 17.

இப்படிச் செய்ததால் ஆதாமும் ஏவாளும் யெகோவாவோடு வைத்திருந்த உறவை சரிசெய்ய முடியாதளவுக்கு அறுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் பாவத்தையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். அந்தப் பாவம் அவர்களுடைய மரபணு அமைப்பில்கூட ஆழமாகப் பதிந்துவிட்டது. அதோடு, ஆதாமும் ஏவாளும் நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்தபோதிலும் மரத்திலிருந்து வெட்டிப்போட்ட ஒரு கிளையைப் போலவே ஆனார்கள்; அதாவது பாவம் செய்த அந்த ‘நாளிலே’ அவர்கள் சாக ஆரம்பித்துவிட்டார்கள். (ஆதியாகமம் 5:5) அதுமட்டுமல்ல வாழ்க்கையில் முதல்முறையாக நிம்மதி இழந்து தவித்தார்கள். தாங்கள் செய்த தவறு கடவுளுக்கு தெரிந்துவிட்டதை உணர்ந்து அவர் முன் வர பயந்து, ஒளிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 3:7, 8) மன உறுத்தலும் பயமும் அவமானமும் அவர்களை வாட்டியெடுத்தன. அவர்களுடைய மனசாட்சி அவர்களைப் பாடாய்படுத்தியது, குற்ற உணர்வு அவர்கள் மனதை குடைந்தெடுத்தது.

கடவுள் தாம் சொன்னதை நிறைவேற்றுவதற்காகவும் தமது பரிசுத்த தராதரங்களைக் கடைப்பிடிப்பதற்காகவும் ஆதாம் ஏவாளுக்கு நியாயமாகவே மரண தண்டனை விதித்து ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார். (ஆதியாகமம் 3:19, 23, 24) அதனால் பரதீஸ் பூமியையும் சந்தோஷத்தையும் நித்திய ஜீவனையும் மனிதன் இழந்தான்; பாவத்தையும் துன்பத்தையும் மரணத்தையும் சம்பாதித்துக்கொண்டான். மனிதகுலத்திற்கு எப்பேர்ப்பட்ட ஓர் இழப்பு! ஆதாம் ஏவாளுக்கு கடவுள் இந்தத் தண்டனையை விதித்தாலும் பாவத்தினால் விளைந்த எல்லா துன்பத்தையும் நீக்குவதற்கு உடனடியாக வாக்குறுதியும் அளித்தார், அதே சமயத்தில் தம்முடைய நீதியான தராதரங்களை மீறாமலும் நடந்துகொண்டார்.

பாவத்தின் கோரப் பிடியிலிருந்து ஆதாம் ஏவாளின் சந்ததியை விடுவிப்பதற்குக் கடவுள் விரும்பினார். இதை இயேசு கிறிஸ்து மூலமாக நிறைவேற்ற ஏற்பாடு செய்தார். (ஆதியாகமம் 3:15; மத்தேயு 20:28; கலாத்தியர் 3:16) இயேசுவின் மூலமாக கடவுள் பாவத்தையும் அதன் எல்லா பாதிப்புகளையும் சுவடு தெரியாமல் நீக்கிவிட்டு, அவருடைய ஆதி நோக்கத்தின்படியே இந்தப் பூமியை ஒரு பரதீஸாக மாற்றுவார்.​—லூக்கா 23:43; யோவான் 3:16.

நீங்கள் யோசித்ததுண்டா?

தடைசெய்யப்பட்ட அந்தப் பழம் உடலுறவை அர்த்தப்படுத்தவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?​—⁠ஆதியாகமம் 1:28.

தடைசெய்யப்பட்ட அந்தப் பழத்தை சாப்பிட்டது எதை அர்த்தப்படுத்தியது?​—⁠ஆதியாகமம் 3:4, 5.

பாவத்தின் விளைவுகளை நீக்குவற்கு கடவுள் என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்?​—⁠மத்தேயு 20:28.

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

தடைசெய்யப்பட்ட அந்தப் பழம் உடலுறவை அர்த்தப்படுத்தவில்லை

[பக்கம் 2829-ன் படம்]

கடவுளைப் போல் ஆவதற்கு, நல்லது கெட்டதைத் தானே தீர்மானிப்பதற்கு ஏவாள் ஆசைப்பட்டாள்