Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குழந்தைக்குமா மஸாஜ்?

குழந்தைக்குமா மஸாஜ்?

குழந்தைக்குமா மஸாஜ்?

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

நைஜீரியாவில் இருக்கும் அனிதா என்ற ஓர் இளம்தாய் தன் குட்டிப் பாப்பாவை குளிப்பாட்டுகிறாள், பிறகு கவனமாக மஸாஜ் செய்கிறாள். அப்புறமென்ன, தாய்க்கும் சேய்க்கும் ஒரே சந்தோஷம்தான்! “குழந்தைகளை பராமரிப்பதில் மஸாஜ் செய்வதும் அடங்கும். இது நைஜீரிய தாய்மார்களுடைய பரம்பரை பழக்கம். சின்ன வயதில் எனக்கும் என் தம்பிகளுக்கும் என் அம்மா மஸாஜ் செய்து விடுவார். குழந்தைகளுடைய தசைகளை வலுவூட்டுவதற்கு மஸாஜ் ஒரு பிரமாதமான வழி; அது குழந்தைகளை ரிலாக்ஸாக உணரவைக்கிறது. என்னுடைய குழந்தைக்கு மஸாஜ் செய்யும்போது பாட்டு பாடுவேன், அவளோடு பேசுவேன். அவளும் பதிலுக்கு ஏதோ பேசுவது போல் ஆ . .  ஊ என்று குரல் கொடுப்பாள், புன்னகை செய்வாள், அது ரொம்ப சுகமான அனுபவம்தான்” என்று அனிதா கூறுகிறாள்.

குழந்தைகளுக்கு மஸாஜ் செய்வது பல நாடுகளில் சகஜமாக இருக்கிறது, இப்போது சில மேற்கத்திய நாடுகளில் அது பிரபலமாகிக்கொண்டு வருகிறது. ஸ்பெயின் நாட்டிலுள்ள, குழந்தைகள் மஸாஜுக்கான அமைப்பு சொல்கிறபடி, மஸாஜ் என்பது, குழந்தையோடு உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் தொடர்பு கொள்ள பெற்றோர்களுக்கு உதவும் மென்மையான, கனிவான மற்றும் இதமான ஓர் உத்தி. குழந்தையின் பாதம், கால்கள் அதேபோல முதுகு, மார்பு, வயிறு, கைகள், முகம் ஆகிய பகுதிகளில் இதமாக, அதே சமயத்தில் அழுத்தமாக நீவி விடுவதை இது உட்படுத்துகிறது.

மஸாஜ் செய்வதால் குழந்தைக்கு என்ன நன்மை? அன்பையும் பாசத்தையும் அது உணர்கிறதே, அதுதான் மிகப் பெரிய நன்மை. பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டினால் மட்டும் போதாது, பெற்றோரின் அன்பும் அவசியம். குழந்தைகளின் தொடுவுணர்வு ஆரம்பத்திலேயே வளர்ந்துவிடுவதால், அப்பா அம்மா இதமாக மஸாஜ் செய்யும்போது அவர்களுடைய அன்பை அந்தக் குழந்தைக்கு புரியவைக்க முடிகிறது. இதனால் ஒரு குழந்தையிடம் உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நிறைய விஷயங்களை தெரிவிக்க முடிகிறது. இப்படி மஸாஜ் செய்வதன் மூலமாக, பிறந்த கணம் முதற்கொண்டே குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் ஒரு பலமான பாசப்பிணைப்பு உருவாகிறது.

அதுதவிர, குழந்தை ரிலாக்ஸாக இருந்தால்தான் தொந்தரவு இல்லாமல் ரொம்ப நேரம் நிம்மதியாகத் தூங்கும். மஸாஜ் அதற்கு உதவுகிறது. மேலும், தசைகள் வலுப்பெறவும் இரத்த ஓட்டம், ஜீரணம், சுவாசம் ஆகியவற்றை சீராக்குவதற்கும் உதவுகிறது. குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது என்று சிலர் கருதுகின்றனர். அதுமட்டுமல்ல, குழந்தைகளின் கேட்கும், பார்க்கும் மற்றும் தொடும் உணர்வுகள் தூண்டிவிடப்படுவதால், கற்றுக்கொள்ளும் திறனும், ஞாபகசக்தியும் அதிகரிக்கலாம்.

சில மருத்துவமனைகள் குழந்தை மஸாஜின் முக்கியத்துவம் பற்றி ஆய்வு செய்திருக்கின்றன. உதாரணமாக, குறைமாதக் குழந்தைகளை ஆய்வு செய்தபோது பின்வரும் உண்மைக் கண்டுபிடிக்கப்பட்டது: மஸாஜ் செய்யப்பட்ட குழந்தைகள், மஸாஜ் செய்யப்படாத குழந்தைகளைவிட ஏழு நாட்கள் முன்னதாகவே மருத்துவமனையை விட்டுச் சென்றார்கள். அதோடு, அவர்களைவிட இந்தக் குழந்தைகளின் எடையில் கிட்டத்தட்ட 47 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டது.

ஆக, சுகமான மஸாஜிலிருந்து பயனடைவது பெரியவர்கள் மட்டுமல்ல என்பது தெளிவாகிறது அல்லவா! குழந்தைகளுக்கு மஸாஜ் என்பது வெறுமென அவர்களுடைய உடலை ரிலாக்ஸாக உணர வைப்பதற்கு மட்டுமல்ல. மலர்ந்த முகத்தோடு, உங்கள் கனிவான கரங்களும் மென்மையான விரல்களும் காட்டுகிற அன்பையும் உணர வைக்கிறது.