Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சென்றெட்ட வேண்டிய நற்செய்தி

சென்றெட்ட வேண்டிய நற்செய்தி

சென்றெட்ட வேண்டிய நற்செய்தி

தந்திமுறை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் தொலைத்தொடர்பு பெரும்பாலும் ஆமைவேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது; அப்படித் தொடர்பு கொள்வது கடினமானதாகவும் இருந்தது. அது போக்குவரத்து வசதிகளையும் நாட்டின் நில அமைப்பையும் சார்ந்திருந்தது. தென் அமெரிக்காவில் பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த இன்கா மக்கள் இவ்விஷயத்தில் சந்தித்த சவால்களைக் கொஞ்சம் பார்ப்போமா?

பதினைந்தாம் நூற்றாண்டின் கடைசியிலும் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கொடிகட்டிப்பறந்த இன்கா பேரரசு, தற்போதைய அர்ஜென்டினா, ஈக்வடார், கொலம்பியா, சிலி, பொலிவியா மற்றும் பெருவை உள்ளடக்கியிருந்தது. பெருவில்தான் அப்பேரரசின் பூர்வ தலைநகரான குஸ்கோ இருந்தது. உயர்ந்த மலைத்தொடர்களும், அடர்ந்த காடுகளும், நீண்ட தூரமும் போக்குவரத்தை மிகவும் சிக்கலாக்கின. அதுமட்டுமின்றி, சுமை சுமப்பதற்கு லாமாக்களைத் தவிர வேறெந்த விலங்குகளோ, பயணிப்பதற்கு சக்கர வாகனங்களோ இருக்கவில்லை. அவர்கள் பேசிய மொழிக்கு எழுத்து வடிவமும் இருக்கவில்லை. அப்படியானால், பல்வகை நிலப்பரப்புகளுடன் பரந்து விரிந்து கிடந்த இந்த சாம்ராஜ்யத்தின் மக்கள் ஒருவருக்கொருவர் எப்படித் தொடர்பு கொண்டார்கள்?

இன்கா மக்கள் கச்வா மொழியை தங்கள் சாம்ராஜ்யத்தின் பொது மொழியாக்கினர். அவர்கள் சலிப்படையாமல் நிறைய சாலைகளை அமைத்தனர். அவர்களுடைய ராஜ பாதை, அதாவது முக்கிய நெடுஞ்சாலை ஆண்டிஸ் மலைப்பகுதி வழியாக 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக நீண்டு சென்றது. அதற்கு இணையான மற்றொரு சாலை பசிபிக் கடற்கரை ஓரமாக சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம்வரை சென்றது. இவ்விரண்டையும் பக்கவாட்டில் செல்லும் சாலைகள் இணைத்தன. உயரமான கணவாய்களில் கற்கள் பதிக்கப்பட்ட படிக்கட்டுகளுடன்கூடிய சாலைகளை இன்கா மக்கள் அமைத்தனர். சதுப்பு நிலங்களில் மிதவைப் பாலங்கள் கட்டினர். ஆபத்தான மலை ஆறுகளைக் கடக்க தொங்கு பாலங்கள் அமைத்தனர். 45 மீட்டர் நீளமுள்ள ஒரு தொங்கு பாலத்தின் கம்பிவடங்கள் மனித உடலளவுக்கு தடிமனாக இருந்தன. 1880-⁠ம் ஆண்டு வரையாக 500 ஆண்டுகளுக்கு அது பயன்படுத்தப்பட்டு வந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இன்கா மக்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்வதற்காக சாஸ்கீ என்றழைக்கப்பட்ட ஓட்டக்காரர்களைப் பயன்படுத்தினர். பிரதான சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இவர்கள் நிறுத்தப்பட்டனர். ஒரு ஓட்டக்காரர் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் வரை ஓடுவார். அங்கிருந்து அடுத்தவர் ஓடுவார். இப்படியாக குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு ஆளை மாற்றியவாறே பகல் நேரத்தில் 160 கிலோமீட்டருக்கும் மேலாக அவர்கள் ஓடினார்கள். பெரும்பாலான செய்திகள் வாய்வழியாகவே சொல்லப்பட்டன, என்றாலும், அரசாங்க விஷயங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் கீயூபு என்ற அருமையான கருவியைக் கொண்டு சொல்லப்பட்டன. கீயூபு என்பது பதிவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள உதவும் சிக்கலான கருவி. இது பெரிய கயிறையும் பலவண்ண நூல்களையும் உடையது. வண்ண நூல்களில் உள்ள முடிச்சுகள் ஒன்று, பத்து, நூறு ஆகிய ஸ்தானங்களை அடையாளப்படுத்தின. ஸ்பானியர்கள் இன்காக்களை வீழ்த்திய பிறகு கீயூபு முறை புழக்கத்திலிருந்து மறைந்துபோனது, அதன் குறியீட்டு முறையும் மறக்கப்பட்டுப்போனது.

‘மலைகளின் மேல் எவ்வளவு அழகான பாதங்கள்’

இன்று ஓர் அதிமுக்கியமான செய்தி கச்வா மொழி பேசும் லட்சக்கணக்கானோருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அது என்ன? அது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி. அந்த உலகளாவிய அரசாங்கத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் யாவருக்கும் அது சமாதானத்தைப் பொழியப் போகிறது. (தானியேல் 2:44; மத்தேயு 24:14) ஒருகாலத்தில் இன்காக்கள் ஆண்ட இடங்களில் இன்றும் போக்குவரத்து கடினமாகவே உள்ளது. இன்னமும் கச்வா மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. இருப்பினும், கச்வா மொழி பேசக் கற்றுக்கொண்ட பல யெகோவாவின் சாட்சிகள் அதன் நவீன கிளைமொழிகளில் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களையும் ஆடியோக்களையும் படு குஷியாக அளித்து வருகிறார்கள்.

ஏசாயாவின் பின்வரும் வார்த்தைகளை இந்த சுவிசேஷகர்களின் வேலை நமக்கு நினைப்பூட்டுகிறது: ‘சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவிக்கும் . . . சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன’!​—ஏசாயா 52:7.