Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த ஆவி ஓர் ஆளா?

பரிசுத்த ஆவி ஓர் ஆளா?

பைபிளின் கருத்து

பரிசுத்த ஆவி ஓர் ஆளா?

கடவுளுடைய பரிசுத்த ஆவி என்பது என்ன? “தேவ ஆவியானவர்,” அதாவது பரிசுத்த ஆவி “ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்” என பைபிளின் தொடக்க வார்த்தைகள் சொல்கின்றன. (ஆதியாகமம் 1:2) இயேசுவின் முழுக்காட்டுதல் பற்றிய பதிவில், கடவுள் ‘வானத்தில்’ இருப்பதாகவும் பரிசுத்த ஆவி இயேசுமீது “புறாவைப்போல இறங்கி” வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (மத்தேயு 3:16, 17) அதுமட்டுமல்ல, இந்தப் பரிசுத்த ஆவியை ‘தேற்றரவாளன்’ என்றும் இயேசு குறிப்பிட்டார்.​—யோவான் 14:16.

பைபிளின் இந்த வசனங்களும் மற்ற வசனங்களும் சிலரை இப்படியாக நினைக்க வைத்திருக்கிறது: கடவுள், இயேசு, தேவதூதர்கள் ஆகியோரைப்போல பரிசுத்த ஆவியும் ஒரு தனி ஆவி ஆள் என்று நினைக்க வைத்திருக்கிறது. சொல்லப்போனால், நூற்றுக்கணக்கான வருடங்களாக, கிறிஸ்தவமண்டலத்தின் முக்கியமான சில மதப்பிரிவுகள், பரிசுத்த ஆவி ஓர் ஆள் என்றே போதித்து வந்திருக்கின்றன. இந்தக் கருத்து நீண்ட காலமாகவே இருந்துவந்தாலும் சர்சுக்குச் செல்லும் அநேகர் இந்த விஷயத்தில் குழம்பிப்போயிருக்கிறார்கள். இன்னும் சிலரோ தங்கள் மதத் தலைவர்களின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதே இல்லை. உதாரணத்திற்கு சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் பங்கேற்றவர்களில் 61 சதவீதத்தினர் கடவுளுடைய ஆவி “உயிருள்ள ஒன்றல்ல, ஆனால் கடவுளுடைய பிரசன்னத்திற்கும் அவருடைய வல்லமைக்கும் ஓர் அடையாளம்” என்று நம்புவதாக தெரிவித்திருக்கிறார்கள். அப்படியென்றால் பைபிள் இதைக் குறித்து என்ன சொல்கிறது?

பைபிள் என்ன சொல்கிறது

நேர்மை மனதுடன் பைபிளைப் படிக்கும் ஒருவர் பரிசுத்த ஆவி ஓர் ஆள் என்ற சர்ச்சின் கருத்துக்கும் பைபிளின் கருத்துக்கும் இடையே வித்தியாசம் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுவார். பின்வரும் பைபிள் சம்பவங்களைக் கவனியுங்கள்:

1. இயேசுவின் தாயாகிய மரியாள் தன் உறவினரான எலிசபெத்தை சந்திக்க சென்றபோது எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தை துள்ளியது, மேலும் ‘எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாள்’ என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 1:41) ஒரு ஆள் எப்படி இன்னொரு ஆளால் ‘நிரப்பப்பட’ முடியும்?

2. முழுக்காட்டுபவரான யோவான் தனக்கு பின் வரப்போகும் இயேசுவைக் குறித்து தன் சீஷர்களிடம் இப்படியாகச் சொன்னார்: ‘நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் [முழுக்காட்டுதல்] கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் [முழுக்காட்டுதல்] கொடுப்பார்.’ (மத்தேயு 3:11) பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு முழுக்காட்டுதல் கொடுப்பார் என்று யோவான் சொல்லியிருப்பதால் அதனை நிச்சயம் ஓர் ஆளாக அவர் குறிப்பிட்டிருக்க மாட்டார் என்பது தெரிகிறது.

3. இயேசு ‘பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறார்’ என்று ரோம நூற்றுக்கு அதிபதியான ஒருவரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் அப்போஸ்தலன் பேதுரு கூறினார். (அப்போஸ்தலர் 10:38) அவர் சொல்லி கொஞ்ச நேரத்திற்குள் அந்த நூற்றுக்கு அதிபதியின் வீட்டார்மீது “பரிசுத்த ஆவி இறங்கியது.” அதோடு, பைபிள் பதிவு இப்படியாகச் சொல்கிறது: “பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக் குறித்து” அநேகர் பிரமித்தார்கள். (அப்போஸ்தலர் 10:44-46; NW) இங்கேயும், பரிசுத்த ஆவியை குறிப்பிடுவதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பதங்கள் அது ஓர் ஆள் என்ற கருத்தை ஆதரிப்பதில்லை.

கடவுளுடைய வார்த்தை, உயிரில்லாத பலவற்றை உருவகப்படுத்தி பேசுகிறது. அவற்றில் சில, ஞானம், விவேகம், பாவம், மரணம், மற்றும் கிருபை. (நீதிமொழிகள் 8:1-9:6; ரோமர் 5:14, 17, 21; 6:12) “ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் (அதாவது, நல்ல பலன்களால்) நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும்” என இயேசு தாமே கூறினார். (லூக்கா 7:35) உண்மையிலேயே, ஞானம் என்பது நிஜமான பிள்ளைகளுடைய ஓர் ஆள் அல்ல! அதுபோலவே பரிசுத்த ஆவியும்கூட சில இடங்களில் ஓர் ஆளாக உருவகப்படுத்தி பேசப்பட்டிருந்தாலும் அது ஓர் ஆள் அல்ல.

பரிசுத்த ஆவி என்பது என்ன?

கடவுளுடைய பரிசுத்த ஆவியை கடவுளுடைய செயல்படும் சக்தியாக பைபிள் அடையாளம் காட்டுகிறது. பைபிளின் எபிரெய மூலவாக்கியத்தின் ஒரு திருத்தமான மொழிபெயர்ப்பு “கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி” என்று கடவுளுடைய ஆவியை குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 1:2, NW) இதே கருத்துதான் பைபிள் முழுவதிலும் காணப்படுகிறது.​—மீகா 3:8; லூக்கா 1:35; அப்போஸ்தலர் 10:⁠38.

இன்று மக்கள் பொதுவாக நினைக்கிறபடி கடவுள் எப்போதும் எங்கும் எதிலும் இருப்பதில்லை. ஆனால், அவர் தம்முடைய “வாசஸ்தலமாகிய” பரலோகத்தில் இருக்கிறார். (1 இராஜாக்கள் 8:39; 2 நாளாகமம் 6:39) கடவுள் வாழ்கிற குறிப்பிட்ட இடத்தைப் பற்றியும் அவருடைய ‘சிங்காசனம்’ இருக்கும் இடத்தைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. (1 இராஜாக்கள் 22:19; ஏசாயா 6:1; தானியேல் 7:9; வெளிப்படுத்துதல் 4:1-3) என்றாலும், அவர் தமது ‘வாசஸ்தலத்தில்’ இருந்துகொண்டே தம்முடைய செயல் நடப்பிக்கும் சக்தியைப் பயன்படுத்தி பரலோகத்திலும் சரி பூமியிலும் சரி எந்தக் கடைக்கோடியிலும் தாம் நினைத்தவற்றை சாதிக்க முடியும்.​—சங்கீதம் 139:7.

1879-⁠ல் சார்ல்ஸ் எல். ஐவ்ஸ் என்பவர் கடவுள் தாம் இருக்கும் இடத்திலிருந்தே தம் வல்லமையை பயன்படுத்த முடியும் என்பதை மிக அழகாக விளக்கினார். அவர் இப்படியாக எழுதினார்: “உதாரணமாக நாம் இப்படியாகச் சொல்லலாம், ‘பூமியிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் சூரியன் பூமிக்கு ஒளியூட்டி, உஷ்ணத்தைத் தருகிறது.’ சூரியனே இறங்கி வந்து இதைச் செய்கிறதா, இல்லை. மாறாக, அதிலிருந்து வரும் ஒளிகதிர்கள் இந்த வேலையைச் செய்கின்றன.” அதுபோலவே, கடவுளும்கூட தம்முடைய செயல் நடப்பிக்கும் சக்தியைப் பயன்படுத்துவதற்கு அந்தந்த இடத்திற்குப் போக வேண்டிய அவசியமில்லை, எல்லா இடங்களுக்கும் செல்ல முடிந்த தமது ஆவியை அனுப்பினாலே போதும். பரிசுத்த ஆவி என்பது கடவுளுடைய வல்லமையான செயல் நடப்பிக்கும் சக்தி என்பதைப் புரிந்துகொள்வது கடவுள் தம் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையைத் தருகிறது.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ பரிசுத்த ஆவி ஓர் ஆள் என்று பைபிள் சொல்கிறதா?​—⁠அப்போஸ்தலர் 10:44-46.

◼ பரிசுத்த ஆவி என்பது என்ன?​—⁠ஆதியாகமம் 1:2.

◼ கடவுளுடைய பரிசுத்த ஆவி எவ்வளவு தூரம்வரை செல்ல முடியும்?​—⁠சங்கீதம் 139:7.