Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரிட்டனின் “மறக்கப்பட்ட மாமேதை”

பிரிட்டனின் “மறக்கப்பட்ட மாமேதை”

பிரிட்டனின் “மறக்கப்பட்ட மாமேதை”

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ராபர்ட் ஹூக், “எக்காலத்திலும் வாழ்ந்தவருள் பலவற்றைப் படைத்த புதுமைப் புலி” என்று தன் காலத்தவரால் அழைக்கப்பட்டார்; இன்று இங்கிலாந்தின் லியனார்டோ டா வின்சியென புகழப்படுகிறார். a இவர் 1635-⁠ல் பிறந்தார்; 1662-⁠ல் ராயல் சொஸைட்டி ஆஃப் லண்டன் என்ற அமைப்பில் அறிவியல் ஆராய்ச்சிகளின் காப்பாளராக நியமிக்கப்பட்டார். 1677-⁠ல் ராயல் சொஸைட்டியின் செயலராகப் பொறுப்பேற்றார். 1703-⁠ல் காலமானார். இவர் அறிவியலில் பல சாதனைகள் படைத்த போதிலும், இவருடைய சடலம் வட லண்டனில் எங்கேயோ ஒரு மூலையில் ஏதோவொரு கல்லறையில் இருக்கிறது.

இந்த ‘மறக்கப்பட்ட மாமேதையின்’ மறைந்துபோன புகழை மறுபடியும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர விஞ்ஞானிகளும் வரலாற்று ஆசிரியர்களும் சமீப வருடங்களில் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரான ஸ்டீவன் இன்வூட் என்ற வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், ஹூக்கை மறக்கப்பட்ட மாமேதை என்று அழைத்தார். 2003-⁠ல் ஹூக்கின் 300-⁠வது ஆண்டு நினைவஞ்சலியைக் கொண்டாடுவதற்காக லண்டனிலுள்ள கிரீன்விச் ராயல் ஆய்வுக்கூடம், அவருடைய சிறப்பான கண்டுபிடிப்புகள் சிலவற்றைக் காட்சிக்கு வைத்தது. யார் இந்த ராபர்ட் ஹூக், ஏன் இத்தனை ஆண்டுகளாக இவர் மறக்கப்பட்டிருந்தார்?

ஹூக்கின் ஆஸ்திகள்

ஹூக் ஒரு கல்விமான் மட்டுமல்ல, கண்டுபிடிப்பில் கலைஞரும்கூட. அவருடைய அநேகப் படைப்புகளில் சில இதோ: இன்றைய மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்படும் யூனிவர்சல் ஜாயின்ட்; கேமராவின் அபெர்ச்சர் அளவை அதிகரிக்கவோ குறைக்கவோ உதவும் ஐரிஸ் டயாஃப்ரம்; கை கடிகாரங்களில் இருக்கும் பேலன்ஸ் வீலின் ஸ்பிரிங் கண்ட்ரோல். மேலும், ஹூக் விதியைக் கண்டுபிடித்ததும் இவர்தான்; ஸ்பிரிங்கின் நீள் தன்மையை விவரிப்பதற்கு இந்தச் சமன்பாடு இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்ல, பிரிட்டனின் இயற்பியலாளரும் வேதியியலாளருமான ராபர்ட் பாயில்ஸ் என்பவருக்காக காற்றடிக்கும் பம்ப்பையும் உருவாக்கித் தந்தார்.

ஹூக்கின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று அவர் வடிவமைத்த கூட்டு நுண்ணோக்கி (compound microscope) ஆகும். இந்த வடிவமைப்பின் அடிப்படையில் லண்டனைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் காக் என்பவர் அதனை பிறகு உருவாக்கினார். இவர் கருவிகளை உருவாக்குவதில் புகழ்பெற்றவர். ஹூக் இந்த நுண்ணோக்கி வழியாக ஒரு தக்கையை (cork) ஹூக் பார்த்தபோது அதில் தேன்கூட்டில் இருப்பதுபோல் சிறுசிறு அறைகளைக் கண்டார். அவற்றிற்கு “செல்” என்று புதிதாகப் பெயர் சூட்டினார். “செல்” என்ற இதே வார்த்தை உயிருள்ள ஒன்றினுடைய கட்டமைப்பின் அடிப்படை கூறைக் குறிப்பிட பின்னர் பயன்படுத்தப்பட்டது.

ஹூக் எழுதின புத்தகமான மைக்ரோகிராஃபியா (சிறு வரைபடங்கள்), இவருக்குத் தொடக்கத்திலேயே புகழைத் தேடித் தந்தது; இது 1665-⁠ல் வெளியிடப்பட்டது. நுண்ணோக்கி வழியாகப் பூச்சிகளைப் பார்த்து ஹூக் மிகத் துல்லியமாகவும் அழகாகவும் வரைந்த படங்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றன. இவர் வரைந்த படங்களிலேயே பெயர்போனது ஓர் உண்ணியின் படமே. சுமார் 30 சென்டிமீட்டர் நீளமும் 45 சென்டிமீட்டர் அகலமுமுள்ள இந்த வரைப்படத்தில் உண்ணியின் கொடுக்குகளும் கூர்முனைகளும் கவசம் போன்ற தோலும் தெளிவாகத் தெரிந்தன. இந்தச் சின்னஞ்சிறிய பூச்சிகள் மனித உடலில்தான் வாழ்கின்றன என்பதை வசதி படைத்த வாசகர்கள் வாசித்தபோது அதிர்ச்சி அடைந்தார்கள். பெண்கள் அந்தப் படத்தைப் பார்த்தபோது மயக்கம் போட்டு விழுந்தார்களாம்!

மனிதன் உருவாக்கிய ஓர் ஊசியின் கூர்முனையை, இயற்கையில் காணப்படும் கூர்முனைகளோடு ஒப்பிட்டு பார்த்த பிறகு ஹூக் இவ்வாறு எழுதினார்: “நுண்ணோக்கியில் பார்த்தால், நூற்றுக்கணக்கான கூர்முனைகள் (ஊசியைவிட) பல ஆயிரம் மடங்கு கூர்மையாக இருப்பது தெரியும்.” அதற்கு உதாரணமாகப் பூச்சிகளிலுள்ள மயிர்க்கால்கள், கொம்புகள், கொடுக்குகள்; இலைகளிலுள்ள முட்கள், காம்புகள், மெல்லிய முடிகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார். “இயற்கையின் இந்தக் கைவண்ணங்கள்” சர்வ வல்லமையுள்ள படைப்பாளருக்கே புகழ் சேர்ப்பதாக அவர் கருதினார். “உயிரினங்களின் வியக்கத்தக்க நுணுக்கங்களை முதன்முதலாக வெளிப்படுத்தியது” இந்த நுண்ணோக்கியே என்கிறது என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.

நுண்ணோக்கி வழியாகப் புதைபடிவங்களை முதன்முதல் ஆராய்ச்சி செய்தவர் ஹூக்தான். அவை ரொம்ப காலத்திற்கு முன்பு இறந்துபோன உயிரினங்களின் எச்சம் என்பதை நுண்ணோக்கியின் உதவியால் கண்டுபிடித்தார். மைக்ரோகிராஃபியா புத்தகத்தில் வியக்க வைக்கும் இன்னும் அநேக அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ளன. சொல்லப்போனால், ஹூக்கின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற நாட்குறிப்பு எழுதுபவரான (diarist) சாம்யெல் பீப்பிஸ் என்பவர் “நான் இதுவரை வாசித்திருக்கும் புத்தகங்களிலேயே இதுதான் அறிவுப்பூர்வமான புத்தகம்” என்று அதைப் புகழ்ந்தார். ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் அறிவியல் சரித்திராசிரியரான ஆலன் சாப்மேன் என்பவர், “இன்றைய உலகின் மீது ஆழ்ந்த, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று” என அதை புகழ்ந்து பேசினார்.

மீண்டும் உருப்பெரும் லண்டன்

1666-⁠ல் லண்டனில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்துக்குப் பிறகு ஹூக் இந்நகரின் சர்வேயராக நியமிக்கப்பட்டார். தீக்கிரையான நகரத்தைத் திரும்ப உருவாக்குவதில் அவர் கிறிஸ்டஃபர் ரென் என்ற தன் நண்பருடன் சேர்ந்து வேலை செய்தார்; இந்த நண்பர் ஒரு விஞ்ஞானியாகவும், அரசரிடம் சர்வேயராகவும் பணிபுரிந்தார். ஹூக்கின் அநேக வடிவமைப்புகளில் ஒன்று, தீ விபத்தின் நினைவாகக் கட்டப்பட்ட 62 மீட்டர் உயரமுள்ள கற்தூண் ஆகும். இந்த நினைவுச் சின்னத்தைப் பயன்படுத்தி புவியீர்ப்பு பற்றிய கோட்பாடுகளை ஆராய ஹூக் திட்டமிட்டார். உலகத்திலேயே இந்தத் தூண்தான் பக்க ஆதாரம் எதுவுமில்லாமல் நிற்கும் மிக உயரமான தூணாகும்.

கிரீன்விச் ராயல் ஆய்வுக்கூடத்தைக் கட்டிய பெருமை ரென் என்பவரையே சாருமென சொல்லப்பட்டாலும் அதன் வடிவமைப்பில் ஹூக் முக்கிய பாகம் வகித்திருக்கிறார். பிரிட்டனின் முதல் அருங்காட்சியகமான மான்டகுயூ வீடும்கூட அவருடைய வடிவமைப்புதான்.

ஹூக் சிறந்த வானாராய்ச்சியாளராகத் திகழ்ந்தார். மறிப்புத் தொலைநோக்கியை (reflecting telescope) முதன்முதலில் உருவாக்கியவர் இவர்தான். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கணிதவியலாளரும் வானாராய்ச்சியாளருமான ஜேம்ஸ் கிரெகரி என்பவருடைய பெயரை தான் உருவாக்கிய தொலைநோக்கிக்குச் சூட்டினார். வியாழன் கிரகம் அதன் அச்சிலேயே சுற்றுகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார்; பிறகு செவ்வாய் கிரகத்தின் படங்களையும் வரைந்தார். 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் வரைந்த அந்தப் படங்கள் அந்தக் கிரகம் சுழலும் வேகத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்டன.

ஏன் மறக்கப்பட்டார்?

1687-⁠ல் இயற்கை தத்துவத்தின் கணித நியதிகள் என்ற புத்தகத்தை ஐசக் நியூட்டன் வெளியிட்டார். ஹூக் எழுதிய மைக்ரோகிராஃபியா வெளியிடப்பட்டு 22 வருடங்களுக்குப் பிறகு வெளியான இப்புத்தகத்தில் புவியீர்ப்பு விதியும் இயக்க விதிகளும் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் நியூட்டனுக்கு முன்பு ஹூக், “புவியீர்ப்பு விதியுடன் சம்பந்தப்பட்ட அநேக விதிகளை உருவாக்கினார்” என்கிறார் ஆலன் சாப்மேன். ஒளியின் இயல்பைக் குறித்து நியூட்டன் ஆராய்வதற்கு முன்பே ஹூக் அதில் சில ஆராய்ச்சிகளை நடத்தியிருந்தார்.

வருத்தகரமாக, ஒளியியல் பற்றியும் புவியீர்ப்பு பற்றியும் அவர்கள் இருவருக்கும் இடையே எழுந்த தர்க்கங்கள் அவர்களுடைய உறவில் விரிசலை ஏற்படுத்தின. இதனால், இயற்கை தத்துவத்தின் கணித நியதிகள் புத்தகத்தில் காணப்படும் ஹூக்கின் மேற்கோள்களை நீக்குமளவுக்கு நியூட்டன் சென்றுவிட்டார். ஹூக்கின் அறிவியல் சாதனைகளைப் பதிவுகளிலிருந்து நீக்கிவிடுவதற்கும் நியூட்டன் முயற்சி செய்ததாக ஒரு புத்தகம் சொல்கிறது. அதுமட்டுமல்ல, ராயல் சொஸைட்டியின் முதல்வராக நியூட்டன் ஆனவுடனே ஹூக் கையாலேயே உருவாக்கிய பல கருவிகளையும், எழுதிய கட்டுரைகளையும், இருந்த அவருடைய ஒரேவொரு உருவப்படத்தையும் அங்கிருந்து அகற்றிவிட்டார். இதனால் ஹூக் 200 ஆண்டுகளுக்கும் மேலாக மறக்கப்பட்ட மாமேதையாக இருந்தார்.

1675, பிப்ரவரி 5 தேதியிட்டு ஹூக்குக்கு நியூட்டன் எழுதிய பிரபலமான கடிதத்தில், “உங்களைப் போன்ற பெரிய மனிதர்களின் சாதனைகள்தான் என் முன்னேற்றத்திற்குக் காரணம்” என குறிப்பிட்டிருந்தது நகைப்புக்குரிய விஷயம். கட்டடக்கலை வல்லுநராகவும், வானாராய்ச்சியாளராகவும், விஞ்ஞானியாகவும், கண்டுபிடிப்பாளராகவும், சர்வேயராகவும் இருந்த ராபர்ட் ஹூக், அவர் வாழ்ந்த காலத்தின் பெரிய மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை.

[அடிக்குறிப்பு]

a இத்தாலி நாட்டு ஓவியரும் சிற்பியும் பொறியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான டா வின்சி, 15-⁠ம் நூற்றாண்டின் இறுதியிலும் 16-⁠ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்.

[பக்கம் 26-ன் படங்கள்]

ஹூக் வரைந்த பனித்திவலைகளும் உறைபனி வடிவங்களும்

[பக்கம் 26-ன் படம்]

ஹூக் வடிவமைத்த நுண்ணோக்கி

[பக்கம் 27-ன் படம்]

தக்கையிலுள்ள துவாரங்களைக் குறிப்பதற்கு “செல்” என்ற புது வார்த்தையை ஹூக் உருவாக்கினார்

[பக்கம் 27-ன் படம்]

நுண்ணோக்கியில் ஹூக் பார்த்தவற்றின் படங்கள் அவருடைய புத்தகமான “மைக்ரோகிராஃபியா”வில் உள்ளன

[பக்கம் 27-ன் படங்கள்]

உண்ணியின் கிட்டத்தட்ட நிஜ அளவு

ஹூக் வரைந்த உண்ணியின் படத்தைப் பார்த்த பெண்கள் மயக்கம் போட்டு விழுந்தார்கள்

[பக்கம் 28-ன் படம்]

ஹூக் வடிவமைத்த அநேக கட்டடங்களில் ஒன்றான மான்டகுயூ வீடு

[பக்கம் 28-ன் படம்]

மீள்திறன் விதியை விளக்கும் ஹூக்கின் வரைபடம்

[பக்கம் 28-ன் படம்]

உலகிலேயே மிக உயரமான, பக்க ஆதாரமின்றி நிற்கும் கற்தூண்​—⁠லண்டனின் நினைவுச் சின்னம்

[பக்கம் 28-ன் படம்]

ராயல் ஆய்வுக்கூடம்

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

ஸ்பிரிங், நுண்ணோக்கி, பனித்திவலைகள்: Images courtesy of the Posner Memorial Collection, Carnegie Mellon University Libraries

[பக்கம் 27-ன் படத்திற்கான நன்றி]

Images courtesy of the Posner Memorial Collection, Carnegie Mellon University Libraries

[பக்கம் 28-ன் படங்களுக்கான நன்றி]

ஸ்பிரிங்க் வரைபடம்: Image courtesy of the Posner Memorial Collection, Carnegie Mellon University Libraries; லண்டனின் நினைவுச் சின்னம்: Matt Bridger/DHD Multimedia Gallery; ராயல் ஆய்வுக்கூடம்: © National Maritme Museum, London