Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மணவாழ்வு —சூறாவளியைத் தாக்குப்பிடிக்குமா?

மணவாழ்வு —சூறாவளியைத் தாக்குப்பிடிக்குமா?

மணவாழ்வு—⁠சூறாவளியைத் தாக்குப்பிடிக்குமா?

“தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”​—⁠மத்தேயு 19:6.

சமீபத்தில் உலகின் பல இடங்களைச் சின்னாபின்னமாக்கிய பயங்கர சூறாவளிகள் எண்ணற்ற கட்டடங்களின் தரத்தையும் உறுதியையும் பதம் பார்த்தன. உறுதியாகத் தோன்றிய வீடுகளின் அஸ்திவாரங்கள் ஆட்டம் கண்டன, அவற்றின் கட்டமைப்புகள் தகர்ந்து தரைமட்டமாயின.

எனினும் இன்னொரு விதமான சூறாவளி, காலங்காலமாக இருந்துவரும் திருமண ஏற்பாட்டின் அஸ்திவாரத்தையும் கட்டமைப்பையும் பலமாகத் தாக்குகிறது. “நல்லதுக்கோ கெட்டதுக்கோ தெரியவில்லை, தனிநபர்கள் மத்தியிலும் சரி, சமுதாயத்திலும் சரி, மணவாழ்க்கைக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பு மறைந்துவிட்டிருக்கிறது” என்கிறார் குடும்ப சரித்திராசிரியரான ஸ்டேஃபானி கூன்ட்ஸ் என்பவர்.

இத்தகைய போக்கால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை உங்களால் பார்க்க முடிகிறதா? சமுதாயத்தில் மணவாழ்க்கைக்குக் கொடுக்கப்படும் மதிப்பு குறைந்து வருகிறதென நீங்கள் நினைக்கிறீர்களா? ஆம் என்றால், அதற்குக் காரணமென்ன? மணவாழ்க்கையைப் பலப்படுத்த அல்லது கட்டிக்காக்க முடியும் என்பதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? முதலாவதாக, மணவாழ்க்கைக்கு அச்சுறுத்தலாய் இருப்பது எது என்பதைப் பார்க்கலாம்.

தாக்குதலுக்குள்ளாகும் திருமணம்

மணவாழ்வில் பிரச்சினைகள் இன்று நேற்று அல்ல, மனித சரித்திரம் ஆரம்பமான காலத்திலிருந்தே உள்ளன. நம் முதல் பெற்றோரிடத்தில் தலைதூக்கிய குணங்களும் மனப்பான்மைகளுமே இன்று மணவாழ்வில் நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்குக் காரணம். ஆதாம் ஏவாள் தங்கள் தன்னல ஆசைகளுக்கு அடிபணிந்தபோது பாவம் எனும் படுகுழியில் விழுந்தார்கள், இப்படித்தான் ‘பாவம் உலகத்திலே பிரவேசித்தது.’ (ரோமர் 5:12) ஆதாம் ஏவாள் பாவம் செய்த பிறகு, ‘[மனிதனின்] இருதயத்து நினைவுகளின் [அதாவது, சிந்தனைகளின்] தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாகிவிட்டது’ என்று பைபிளின் சரித்திர பதிவு காட்டுகிறது.​—ஆதியாகமம் 6:5.

இன்றும் நிலைமை மாறவில்லை. தன்னல ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமென்ற வெறி, மணவாழ்வைச் சீர்குலைக்கும் சிந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது. புதிய ஒழுக்கநெறிகளுக்கு அடிமையாகிவிட்ட இன்றைய உலகம் திருமணத்தை நடைமுறைக்கு ஒத்துவராத பழம்பாணியாகக் கருதுகிறது. விவாகரத்திற்கு எதிரான சட்டங்கள் தளர்த்தப்பட்டிருப்பதால் இன்று அது கேவலமாகக் கருதப்படுவதில்லை.

கைமேல் பலன்களை எதிர்பார்க்கிற, ஆசைகளை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிற பொறுமையற்ற ஆட்கள் விவாகரத்தின் பின்விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் யோசித்துப் பார்ப்பதில்லை. விவாகரத்து செய்துவிட்டால் சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற பொய்யை உண்மையென நம்பும் இவர்கள், விவாகரத்தை சந்தோஷ உலகிற்கு செல்வதற்கான “பாஸ்போர்ட்” என நினைக்கிறார்கள்.

இன்னும் சிலரோ மணவாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்ப்படும்போது உதவிக்காக மனநல மருத்துவர்களிடமோ மணவாழ்வு ஆலோசகர்களிடமோ செல்கிறார்கள் அல்லது அவர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்கிறார்கள். வருத்தகரமாக, தங்களை மணவாழ்வு வல்லுநர்கள் என சொல்லிக்கொள்பவர்கள், திருமண பந்தத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக அதைச் சிதைப்பதிலேயே வல்லவர்களாக இருக்கிறார்கள். “மக்கள் உயர்வாக மதிக்கிற மணவாழ்வு, சரித்திரத்திலேயே முதன்முறையாக இந்தளவு பயங்கரமாகத் தாக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்தத் தாக்குதல் திருமண உறவை அறுப்பதில் வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்பதாக மணவாழ்வை ஆதரித்து என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. “சில சமயங்களில் மணவாழ்வு நேரடி தாக்குதலையும் சந்திக்கிறது. யார் அதைத் தாக்குகிறார்கள்? மணவாழ்வு வல்லுநர்கள் என தங்களைச் சொல்லிக்கொள்பவர்களே; இவர்கள், வாழ்நாள் முழுவதும் மணத் துணைக்கு உண்மையாக இருப்பது நடைமுறையானதல்ல, அது சித்திரவதை என்று நினைக்கிறார்கள். இவர்களுடைய சொந்த கருத்துகளின் அடிப்படையிலும் திருமணம் தாக்கப்படுகிறது.”

மாற்றம் கண்ட மனநிலை

மணவாழ்வையும் அதன் நோக்கத்தையும் பற்றிய கருத்துகள்கூட இப்போது மாறிவிட்டன. இன்று மக்கள் தங்கள் மணத் துணைக்கு உண்மையாகவும் உதவியாகவும் இருப்பதை முக்கியமானதாய் கருதுவதில்லை. மாறாக, தங்கள் ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள்; பெரும்பாலும் தங்கள் மணத் துணைக்குத் தீங்கு விளைவித்து இந்த ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். மணவாழ்வில் காணப்படும் இந்தச் சுயநலம் “1960-⁠களில் முளைத்து, 1970-⁠களில் செழித்தோங்கியது” என்பதாக திருமணம் மற்றும் குடும்ப பத்திரிகை (ஆங்கிலம்) கூறுகிறது. பொதுவாக மணவாழ்வில், நேசமும் பாசமும், அன்னியோன்னியமும், உண்மைத்தன்மையும், பிள்ளைச் செல்வங்களும், பரஸ்பர திருப்தியும் எதிர்பார்க்கப்பட்டன. திருமணத்திற்கான இத்தகைய பாரம்பரிய காரணங்கள் இன்று முக்கியத்துவம் இழந்துவிட்டிருக்கின்றன.

பல நாடுகளில், சமீப கால முன்னேற்றங்கள் மணவாழ்க்கையிலும் அநேக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒன்று: கணவன் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும், மனைவி வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. மனைவிகளும் வேலைக்குப் போக ஆரம்பித்திருப்பதால் இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்கள் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. இரண்டு: திருமணம் செய்யாமலேயே பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்று நினைக்கும் கருத்திற்கு அதிக ஆதரவு இருக்கிறது, இதனால் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் எண்ணிக்கை எகிறி இருக்கிறது. மூன்று: திருமணம் செய்துகொள்வதற்குப் பதிலாகச் சேர்ந்து வாழும் பழக்கம் பெருகியிருக்கிறது. (“மணவாழ்க்கையைப் போல் அந்தளவு நிரந்தரமல்ல” என்ற பெட்டியைக் காண்க.) நான்கு: ஒரே பாலினத்தவர் திருமணங்களுக்கும், அதனை சட்டப்பூர்வமாக்க எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நவீன போக்குகள் மணவாழ்க்கை பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மாற்றியிருக்கின்றனவா?

அதிகரித்துவரும் விவாகரத்துகள்

பல நாடுகளில் விவாகரத்து செய்வது சகஜமாகி வருவதால் மணவாழ்வு எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம். அமெரிக்காவில், விவாகரத்து செய்த தம்பதிகளின் எண்ணிக்கை, “1970-⁠லிருந்து 1996-⁠க்குள் நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது” என்று சமீபத்திய அறிக்கை ஒன்று காட்டுகிறது; இங்கு விவாகரத்து எனும் நாசகரமான சூறாவளி சராசரியாக ஐந்தில் ஒருவரைத் தாக்கியிருக்கிறது. பெரும்பாலும் யார் இப்படி விவாகரத்து செய்துகொள்கிறார்கள்? விவாகரத்து செய்துகொள்பவர்களில் சுமார் 60 சதவீதத்தினர் திருமணமாகி பத்து வருடங்களுக்குள் அப்படி செய்வதாகப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மற்ற நாடுகளிலும் விவாகரத்தின் எண்ணிக்கை அதிரவைக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. 2004-⁠ல் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் மொத்த விவாகரத்துகளின் எண்ணிக்கை 1,53,490-ஐ எட்டியது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் திருமணங்களில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை விவாகரத்தில் முடியலாமென எதிர்பார்க்கப்படுகிறது. கொரிய குடியரசில் ஒரேயொரு வருடத்திற்குள், அதாவது 2002-லிருந்து 2003-⁠க்குள், கூடுதலாக 21,800 விவாகரத்துகள் நடந்திருக்கின்றன; மொத்தமாக, 1,67,100 விவாகரத்துகள் நடந்திருக்கின்றன. ஜப்பானில், நான்கில் ஒரு திருமணம் விவாகரத்தில் முற்றுப்பெறுகிறது; சீக்கிரத்திலேயே ஐரோப்பாவின் விவாகரத்து எண்ணிக்கையை ஜப்பான் எட்டிவிடும். “ஒருகாலத்தில் மிகவும் மோசமான மணவாழ்வுகளே விவாகரத்தில் முடிவடைந்தன. இன்றோ அற்ப காரணங்களுக்காகவும் மக்கள் விவாகரத்து செய்கிறார்கள்” என்கிறார் குடும்பங்கள் பேரில் ஆய்வு நடத்தும் நிபுணர் ஒருவர். ஜப்பான் ரெட் க்ராஸ் யூனிவர்சிட்டியில் இவர் பணிபுரிகிறார்.

அநேக நாடுகளில் காலங்காலமாக இருந்து வரும் மத அமைப்புகளும் பாரம்பரியங்களுமே திருமணத்தை நீடூழி வாழ வைத்தன. என்றாலும், சமுதாயத்தில் பெருகிவரும் விவாகரத்து மோகத்தைத் தடுத்து நிறுத்தும் சக்தி இவற்றிற்கு இல்லை. உதாரணத்திற்கு, திருமணத்தைப் புனிதமாகக் கருதும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சை எடுத்துக்கொள்ளுங்கள். 1983-⁠ல் திருமண பந்தம் சம்பந்தமாக அது விதித்திருந்த சட்டங்களைத் தளர்த்தி கத்தோலிக்கர்கள் சுலபமாக விவாகரத்து செய்துகொள்ள வழிசெய்தது. எனவே, சர்ச்சில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதுமுதல் அதிகரித்திருக்கிறது.

ஒருகாலத்தில் திருமண உறவைக் கட்டிக்காத்த சட்டங்கள் இன்று வலுவிழந்துவருவது தெரிகிறது. ஆனால் அதற்கான அனைத்து காரணங்களும் தெளிவாகத் தெரிவதில்லை. சொல்லப்போனால், சமுதாய சீர்குலைவுகள் ஒரு பக்கமிருக்க, அதிகரித்துவரும் மண முறிவுகளுக்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அக்காரணம் அநேகருக்கு தெரியாமலேயே இருக்கிறது.

பிரச்சினைக்கு பின் இருப்பது யார்?

சுயநலமே உருவான பிசாசாகிய சாத்தான், மறைந்திருந்து உலகைப் படுமோசமாகத் தாக்குகிறான் என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. எதற்காகத் தாக்குகிறான்? அவன் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டிருப்பதே அதற்குக் காரணம். அதனால் அவன் கடும் கோபத்தில் கொதித்துப்போய் இருக்கிறான். முடிந்தளவு நிலைமையை மோசமாக்குவதில் அவன் குறியாக இருக்கிறான். அவனுடைய வெறித்தனமான கோபத்திற்கு இரையாகியிருப்பவற்றில் ஒன்றுதான் கடவுள் ஆரம்பித்து வைத்த திருமண ஏற்பாடு.​—வெளிப்படுத்துதல் 12:9, 12.

சாத்தான் பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நிலைமை எப்படியிருக்குமென்பதைக் குறித்து இயேசு இவ்வாறு கூறினார்: “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” (மத்தேயு 24:12) அப்போஸ்தலன் பவுலும் அதேவிதமாக எழுதினார்: “[மக்கள்] தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும் [குடும்பத்தில் அன்பில்லாதவர்களாயும்], இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” இருப்பார்கள். (2 தீமோத்தேயு 3:2-4) இந்தத் தகாத குணங்கள் நீண்ட காலமாகவே ஓரளவு இருந்து வந்திருக்கின்றன. ஆனால், சமீப காலங்களில் அவை என்றுமில்லாதளவு அதிகரித்திருப்பதை அநேகர் ஒத்துக்கொள்கின்றனர்.

மணவாழ்க்கையில் வீசும் சூறாவளியிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம்? சந்தோஷமான மணவாழ்விற்கு என்ன செய்யலாம்? அடுத்த கட்டுரையில் இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஆராயலாம்.

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

“வேண்டாத சாமான்களை உடனே தூக்கியெறியும் சமுதாயத்தில் மனித உறவுகளும் அப்படியே தூக்கியெறியப்படுகின்றன.” ​—⁠ஸான்ட்ரா டேவிஸ், குடும்ப சட்ட வல்லுநர்

[பக்கம் 4-ன் பெட்டி/படம்]

“மணவாழ்க்கையைப் போல் அந்தளவு நிரந்தரமல்ல”

திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லாமலேயே அநேக தம்பதிகள் சேர்ந்து வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட வாழ்க்கை “மணவாழ்க்கையைப் போல் அந்தளவு நிரந்தரமல்ல” என்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் ஓர் அறிக்கை கூறுகிறது. தாங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போக முடியுமா என்பதைத் தெரிந்துகொள்ளவே இவர்களில் சிலர் திருமணம் செய்துகொள்ளாமல் இப்படிச் சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் பொருத்தமான துணையைக் கண்டுபிடிப்பதற்கு இது உதவுமா? அல்லது சேர்ந்து வாழ்ந்த பிறகு செய்துகொள்ளும் திருமணம் வெற்றிபெறுமா? வெற்றிபெறாது என்கிறது திருமண மற்றும் குடும்ப பத்திரிகை. இந்தப் பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “இப்படித் திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்ந்தவர்களின் மணவாழ்க்கையில் திருப்தி குறைந்து . . . பிரச்சினைகள் எழுகின்றன, அதோடு, . . . திருமணம் விவாகரத்தில் முடிவதற்கு அதிக வாய்ப்புமிருக்கிறது.”

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

நீண்ட ஆயுசும் மணவாழ்வும்

இன்று மக்களின் வாழ்நாள் அதிகரித்திருப்பது சந்தோஷமான விஷயமாக இருந்தாலும் மணவாழ்க்கையில் இது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பு, மரணம் தம்பதிகளைப் பிரித்தது. ஆனால் இன்று மக்கள் நீண்ட நாட்கள் வாழ்வதால் விவாகரத்து அவர்களைப் பிரிக்கிறது. ஜப்பானில் நீண்ட காலமாகக் குடும்பம் நடத்திவரும் பெண்களை விசித்திரமான ஒரு வியாதி தாக்கியிருப்பதைக் கவனியுங்கள். த வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளின் நிபுணர்கள் இதற்கு “ஆர்.எச்.எஸ்.” (RHS) வியாதி அல்லது “ரிடயர்டு ஹஸ்பன்டு ஸின்ட்ரோம்” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 40 வருடங்களை மணவாழ்வில் கழித்த பெண்மணி தன் கணவர் ஓய்வு பெற்ற சமயத்தில் அவர் என்ன நினைத்தார் என்பதை இவ்வாறு சொல்கிறார்: “நான் அவரை விவாகரத்து செய்தாக வேண்டும். வேலையிலிருந்து வீடு திரும்பியதும் அவருக்காக எல்லாவற்றையும் செய்து தருவது எனக்கு ஒரு பெரிய தலைவலியாக இருந்தது. ஆனால் இனிமேல் 24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கப் போகிறார் என்றால் அதை என்னால் தாங்கவே முடியாது.”