Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மீனே நஞ்சானால்

மீனே நஞ்சானால்

மீனே நஞ்சானால்

பிஜியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அதைச் சாப்பிடுவதா வேண்டாமா என ஆரெபான்டோ குழம்பிப் போயிருந்தார். அதைச் சாப்பிட்டால் ஆபத்து என்பதை அவர் அறிந்திருந்தார்; இருந்தாலும் அவருக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்தச் சுட்ட மீனின் மணம் வேறு மூக்கைத் துளைத்தது. கடைசியில் அவருடைய பசிதான் ஜெயித்தது. ஆனால் சீக்கிரத்திலேயே அவருக்குக் குமட்டலும், அடிவயிற்றில் வலியும் ஆரம்பமானது, அதைத் தொடர்ந்து வாந்தியும் பேதியும் ஏற்பட்டது; ஏன்தான் அதைச் சாப்பிட்டோமோவென அவர் தன்னையே நொந்துகொண்டார்.

சிறிய பசிபிக் தீவிலிருந்த ஆஸ்பத்திரிக்கு ஆரெபான்டோவை அவருடைய நண்பர்கள் எடுத்துக்கொண்டு விரைந்தார்கள், அப்போது அவர் அரைமயக்கத்திலிருந்தார், அவருக்கு நீரிழப்பும் ஏற்பட்டிருந்தது; அதோடு நெஞ்சு வலியும் இருந்தது, இரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்குக் குறைந்திருந்தது, நாடித் துடிப்பும் குறைந்திருந்தது. அடுத்த சில நாட்களுக்கு தலைவலி, மயக்கம், களைப்பு அவரை வாட்டியெடுத்தன; போதாக்குறைக்கு, அவருடைய கால்களும் மரத்துப் போயிருந்தன, சிறுநீர் கழிக்கையில் வலி ஏற்பட்டது, உணர்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருந்தது, அதாவது குளிர்ச்சியானது சூடாகவும், சூடானது குளிர்ச்சியாகவும் அவருக்கு இருந்தன. எட்டு நாட்களுக்குப் பிறகு அவருடைய நாடித் துடிப்பு சீரான நிலைக்கு வந்தது, ஆனால் மரத்துப்போன நிலையும் களைப்பும் வாரக்கணக்கில் நீடித்தன.

வெப்பமண்டலப் பிரதேசங்களிலுள்ள பவளப் பாறை பகுதிகளில் சாப்பிடுவதற்கு ஏற்ற மீன்கள் உள்ளன; இவை இயற்கையான, வீரியமிக்க நச்சுகளால் சிலசமயங்களில் பெருமளவு மாசுபடுகின்றன. இத்தகைய மீனை சாப்பிட்டதால்தான் ஆரெபான்டோ மோசமாகப் பாதிக்கப்பட்டார். இந்த நோய், சிகுவாடிரா மீன் நஞ்சு (CFP) என அழைக்கப்படுகிறது; இந்தியப் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் சேர்ந்த வெப்பமண்டல, மிதவெப்பமண்டலப் பிரதேசங்களிலும், கரீபியனிலும் இந்நோய் ஏற்படுகிறது. இப்பகுதிகளில் வாழ்வோரின் முக்கிய உணவே அங்கு பிடிக்கப்படும் மீன்கள்தான்.

CFP என்பது ஒரு புதிய நோய் அல்ல. ஆரம்பத்தில், ஐரோப்பிய கடல் ஆய்வுப் பயணிகள்கூட இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது இறந்திருக்கிறார்கள். அதேபோல் இன்று விடுமுறையை உல்லாசமாய் கழிக்க வரும் ஆட்களில் பலரும் இதனால் பலவீனமடையும் அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, பல தீவுநாடுகளிலுள்ள மீன்பிடி துறையும் சுற்றுலா துறையும் இந்நோயால் பெருமளவு நலிந்துபோயிருக்கின்றன. அதோடு, இத்தகைய மீன்கள் உயிரோடும், பதப்படுத்தப்பட்டும் சர்வதேச சந்தையில் விற்கப்படுவதால் வெப்பமண்டலப் பிரதேசங்களைத் தவிர பிற இடங்களிலும் CFP காணப்படுகிறது; ஆனால் இந்த இடங்களில் இந்நோய் தொற்றியிருப்பது எளிதில் கண்டுபிடிக்கப்படுவதில்லை. a

எதனால் இந்த மீன்கள் நச்சுத்தன்மை அடைகின்றன? இத்தகைய நச்சுத்தன்மைமிக்க மீன்களை அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? பல பத்தாண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.

கயவனைக் கண்டுபிடித்தல்

டைனோஃபிலாஜிலேட் என்று அழைக்கப்படும் ஒரு நுண்ணுயிரிதான், பொதுவாக CFP நோயை ஏற்படுத்தும் நச்சுக்குக் காரணமென சொல்லப்படுகிறது. b இந்த நுண்ணுயிரிகள், மடிந்துபோன பவளப் பாறைகளில் ‘குடியிருக்கின்றன,’ அங்குள்ள கடற்பாசிகளோடு ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன. கடற்பாசிகளைச் சின்னஞ்சிறிய மீன்கள் சாப்பிடுகையில், இந்த நுண்ணுயிரிகள் வெளிவிடுகிற சிகுவாடாக்ஸின் என்றழைக்கப்படும் நச்சையும் விழுங்கிவிடுகின்றன. இந்தச் சின்னஞ்சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் விருந்தாக்கிக் கொள்கின்றன; இப்பெரிய மீன்களை அதைவிடப் பெரிய மீன்கள் கபளீகரம் செய்கின்றன; இவ்வாறு இந்த நச்சுகள் உணவுச் சங்கிலியில் கடத்தப்படுகையில் அவற்றின் அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் அந்த மீன்களோ, இந்நச்சுகளால் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டதாகவே தெரிவதில்லை.

மனிதன் அறிந்தவற்றிலேயே சிகுவாடாக்ஸின்தான் உயிரைக் குடிக்குமளவுக்கு மிக ஆபத்தான உயிரியல் பொருளாகும். நல்ல வேளையாக, “CFP நோய் வருவதற்கு வெகு சில மீன் வகைகளே காரணமாயிருப்பதாக” ஆஸ்திரேலியாவின் அரசு நாளேடு ஒன்று குறிப்பிடுகிறது. மீன்களின் தோற்றத்தையோ மணத்தையோ சுவையையோ சிகுவாடாக்ஸின் பாதிப்பதில்லை; சமைக்கும்போதும், கருவாடாக்கும்போதும், உப்பிட்டு வைக்கும்போதும், சுட்டு சாப்பிடும்போதும், மசாலாவில் ஊறவைக்கும்போதும் அந்த நச்சு நீங்கிவிடுவதில்லை. ஆரெபான்டோவின் விஷயத்தில், அவர் அந்த மீனை சாப்பிடும் வரைக்கும் அதில் நச்சு இருப்பது அவருக்குத் தெரியாதிருந்தது; அவருடைய வயிற்றிலும், இருதய இரத்தக் குழாய்களிலும், நரம்புகளிலும் மோசமான அறிகுறிகள் தென்பட்டபோதுதான் விஷயமே தெரிய வந்தது.

நோயைக் கண்டுபிடிப்பதும் சிகிச்சை அளிப்பதும்

ஒருவருக்கு CFP நோய் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க தற்சமயம் ஆய்வுக்கூட பரிசோதனை ஏதுமில்லை. பல்வேறு நோய் அறிகுறிகளின் அடிப்படையில்தான் இது கண்டுபிடிக்கப்படுகிறது. பொதுவாக மீனைச் சாப்பிட்ட சில மணிநேரத்தில் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன; அதோடு சாப்பிட்ட மீனில் மிச்சமிருந்தால் அதைச் சோதித்து பார்த்து நச்சு இருப்பதை உறுதிசெய்யலாம். (எதிர்ப்பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.) CFP நோய் வந்திருப்பதாக நீங்கள் நினைத்தால் மருத்துவரை அணுகுவது மிக நல்லது. நஞ்சை முறிக்கும் மாற்று மருந்து எதுவும் இல்லாவிட்டாலும் அந்த அறிகுறிகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும்போது பொதுவாக ஒருசில நாட்களில் உடல்நிலை தேறிவிடலாம். ஆனாலும் அது உடலைப் பலவீனப்படுத்திவிடலாம். ஆகையால், ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது நிலைமை மோசமாகாமல் இருக்க உதவும்.

அறிகுறிகள் எந்தளவுக்கு அதிகமாகத் தென்படும் என்பது பற்பல காரணங்களால் நபருக்கு நபர் வேறுபடுகின்றன. அக்காரணங்களில் சில, அந்த மீன் எந்தளவு நச்சுமிக்கது, ஒருவர் எவ்வளவு மீனைச் சாப்பிட்டிருக்கிறார், மீனின் எந்தப் பாகங்களைச் சாப்பிட்டிருக்கிறார், அவருடைய உடலில் ஏற்கெனவே எந்தளவு சிகுவாடாக்ஸின் இருக்கிறது, அந்த மீன் எந்தப் பகுதியில் பிடிக்கப்பட்டது (பிரதேசத்திற்குப் பிரதேசம் நச்சுகளின் அளவு சற்று வேறுபடுவதாகத் தெரிகிறது) ஆகியவை. பொதுவாக ஒரு நோய் தாக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தியை உடல் வளர்த்துக்கொள்கிறது; ஆனால், இந்த நச்சு தாக்கும்போது உடல் பலவீனமடையவே செய்கிறது, இப்படித் திரும்பத் திரும்பத் தாக்கும்போது நிலைமை இன்னும் மோசமடைகிறது! மது அருந்துவதால் இந்த அறிகுறிகள் இன்னும் மோசமாக்குகின்றன. பரவலாகக் காணப்படும் இந்நோயைப் பற்றி விவரிக்கும் ஒரு பிரசுரம், ஒருவர் இந்நோயினால் மீண்டும் கஷ்டப்படாதிருக்க மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மீன் சாப்பிடாதிருக்க வேண்டுமென சொல்கிறது.

இந்நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள், வாரக்கணக்கில், மாதக்கணக்கில், சில சமயங்களில் வருடக்கணக்கில்கூட இதனால் அவதிப்படலாம்; அப்போது, களைப்பை ஏற்படுத்தும் நோய்க்கு ஒத்த அறிகுறிகள் இவர்களிடம் தென்படுகின்றன. இரத்த அழுத்தமும் அளவும் குறைவதால் சோர்ந்துபோவது, சுவாசிக்க முடியாமல் போவது, மாரடைப்பு, நீரிழப்பு போன்ற காரணங்களால் சிலசமயங்களில் இறந்துபோகிறவர்களும் உண்டு. எனினும் இப்படி இறப்பவர்கள், பொதுவாக மீனில் அதிகளவு நச்சு காணப்படும் தலையையோ உள்ளுறுப்புகளையோ சாப்பிட்டவர்களாய் இருக்கிறார்கள்.

புரியாப் புதிரோடு போராட்டம்

பவளப் பாறை பகுதிகளில் குடியிருக்கும் கிட்டத்தட்ட எல்லா மீன்களிலும், இவற்றை உணவாக்கிக்கொள்ளும் பிற மீன்களிலும் சிகுவாடாக்ஸின் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதில் புரியாப் புதிரும் உள்ளது. பவளப் பாறைப் பகுதியிலுள்ள இம்மீன்கள் அதிகளவு நச்சுமிக்கவையாய் இருக்கலாம், ஆனால் அதற்கு அருகே பிடிக்கப்படும் இதே வகை மீன்கள் நச்சற்றவையாய் இருக்கலாம். உலகின் ஒரு பகுதியில் எந்த வகை மீன் பெரும்பாலும் CFP வருவதற்குக் காரணமானதென கருதப்படுகிறதோ அதுவே உலகின் மறுபகுதியில் சாப்பிடுவதற்கு உகந்ததாகக் கருதப்படலாம். டைனோஃபிலாஜிலேட் நுண்ணுயிரிகள் அவ்வப்போது மட்டுமே நச்சுகளை வெளிவிடுவதால் எப்போது மீன்கள் நச்சுமிக்கவையாய் ஆகின்றன என்பதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

நச்சுத்தன்மையுள்ள மீன்களைக் கண்டுபிடிப்பதற்கு, அதிக செலவில்லாத, நம்பகமான பரிசோதனைகள் எதுவும் இல்லாதிருப்பதும்கூட இந்தப் பிரச்சினையை இன்னும் மோசமாக்குகிறது. CFP நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த அறிக்கைகளின் அடிப்படையில், எந்த மீன்களைச் சாப்பிடக் கூடாது, அவை எங்கே பிடிக்கப்படுகின்றன போன்ற தகவலை உடல்நல அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; இதுவே அவர்கள் தற்சமயம் செய்ய முடிந்த மிகச் சிறந்த உதவியாகும். அதிகளவு நச்சுள்ள மீன் வகைகளாகக் கருதப்படுகிறவற்றில், பராகுடா, குரூப்பர், கிங்ஃபிஷ், ரெட் பாஸ், ராக்ஃபிஷ், ஸ்நாப்பர், மொரே ஈல் போன்ற மீன் வகைகள் உள்ளன. முதிர்ந்த, பெரிய மீன்களைச் சாப்பிடுவதில் பொதுவாகவே ஆபத்து அதிகமிருக்கிறது. சாப்பிடுவதற்கு உகந்ததல்லாத மீனை விற்பது சில இடங்களில் சட்டவிரோதமானது. எனினும், பவளப் பாறை பகுதிகளிலுள்ள மீன்களைக் கபளீகரம் செய்யாத கடல் மீன்களும் மிதவெப்ப நீரோட்டத்திலுள்ள மீன்களும் பொதுவாகச் சாப்பிடுவதற்கு உகந்தவையாகும்.

CFP நோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவிதத்தில் மடிந்துபோன பவளங்களே இதற்குக் காரணமென சொல்லலாம்; ஏனெனில் அவை நச்சை வெளிவிடும் டைனோஃபிலாஜிலேட் நுண்ணுயிரிகள் பெருகுவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றன. அதோடு பவளப் பாறைகள் நோய்வாய்ப்படுவதும் மடிந்துபோவதும் பெருமளவு அதிகரித்து வருவதாக அறிக்கைகள் காட்டுகின்றன.

CFP நோயின் இயல்பை முன்னறிந்து கூற முடியாதபோதிலும் சில அடிப்படை நியதிகளைப் பின்பற்றுவதன் மூலம் அதனால் பாதிக்கப்படாதபடி உங்களை ஓரளவு பாதுகாத்துக்கொள்ளலாம். (மேலே உள்ள பெட்டியைக் காண்க.) இந்த அறிவுரைகளைப் பின்பற்றாததால் ஆரெபான்டோ கிட்டத்தட்ட சாவின் விளிம்பிற்கே சென்றுவிட்டார். உள்ளூர் ராக்ஃபிஷ்ஷை சாப்பிட்டால் CFP நோய் வர அதிக சாத்தியமிருப்பதை அறிந்திருந்தபோதிலும் அவர் அதன் தலையையும் சேர்த்து சாப்பிட்டார். முன்பு அந்த வகை மீன்களைச் சாப்பிட்டபோது அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே அதைச் சாப்பிட்டால் தனக்கு ஒன்றும் ஆகாதென அங்குள்ள பல தீவுவாசிகளைப் போலவே அவரும் அசட்டையாக இருந்துவிட்டார்.

இதையெல்லாம் பார்க்கும்போது, வெப்பமண்டலப் பிரதேசத்தில் விடுமுறையைக் கழிக்கச் செல்லுகையில், மீன் பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாதென நினைக்கிறீர்களா? அப்படி நினைக்க வேண்டாம். எச்சரிக்கைகளைக் கேட்டு நடவுங்கள், நல்ல மீனாகப் பார்த்து சாப்பிடுங்கள், இதுவே புத்திசாலித்தனம்.

[அடிக்குறிப்புகள்]

a இந்த நோயை சரியாக அடையாளம் கண்டுகொள்ளாததாலும், இந்நோய் தாக்கியிருப்பதை அறிக்கை செய்யாததாலும் உலகெங்கும் எத்தனை பேர் CFP-⁠ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியாமல் போகிறது. வருடத்திற்கு சுமார் 50,000 பேர் உலகெங்கும் பாதிக்கப்படுவதாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கணக்கிடுகிறார்கள்.

b இந்த வகை டைனோஃபிலாஜிலேட்டின் அறிவியல் பெயர் காம்பியர்டிஸ்கஸ் டாக்ஸிக்கஸ் ஆகும்.

[பக்கம் 21-ன் பெட்டி/படம்]

பொதுவான அறிகுறிகள்

◼ பேதி, குமட்டல், வாந்தி, அடிவயிற்றில் கடுமையான வலி

◼ குளிர் நடுக்கம், வியர்த்துக் கொட்டுதல், தலைசுற்றல், தலைவலி, அரிப்பு

◼ வாயை சுற்றியுள்ள பகுதி, கைகள், பாதங்கள் ஆகியவை மரத்துப்போவது அல்லது அவற்றில் கூச்ச உணர்வு ஏற்படுவது

◼ உணர்வில் தலைகீழ் மாற்றம்​—⁠குளிர்ச்சியானது சூடாகவும், சூடானது குளிர்ச்சியாகவும் இருப்பது

◼ தசைகளிலும் மூட்டுகளிலும் வலி, சிறுநீர் கழிக்கையில் வலி

◼ மெதுவான நாடித் துடிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், களைப்பு

[பக்கம் 21-ன் பெட்டி/படம்]

முடிந்த மட்டும் ஆபத்தைத் தவிர்த்தல்

◼ எந்த மீன்களைச் சாப்பிடக் கூடாது, எப்பகுதிகளில் நச்சுமிக்க மீன்கள் உள்ளன ஆகியவற்றை உள்ளூர் மீன்வளத் துறையினரிடமோ, மீன்பிடி வல்லுநர்களிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

◼ சமீபத்தில் CFP நோய் தாக்கப்பட்டதாக அறிக்கை செய்யப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களைச் சாப்பிடாதீர்கள்.

◼ பவளப் பாறைப் பகுதியிலுள்ள முதிர்ந்த, பெரிய மீன்களைச் சாப்பிடாதீர்கள்.

◼ தலை, ஈரல் போன்றவற்றையும் பிற உள்ளுறுப்புகளையும் சாப்பிடாதீர்கள்.

◼ இவ்வகை மீன்களைப் பிடித்த உடனேயே குடலை முழுமையாக அப்புறப்படுத்துங்கள்.

[பக்கம் 2021-ன் படங்கள்]

பொதுவாக CFP-⁠க்குக் காரணமான மீன்கள்

(உள்ளூர் பெயர்கள் வேறுபடலாம்)

ஸ்நாப்பர்

குரூப்பர்

பராகுடா

ராக்ஃபிஷ்

கிங்ஃபிஷ்

மொரே ஈல்

[பக்கம் 20-ன் படம்]

நச்சுகளுக்குக் காரணமான டைனோஃபிலாஜிலேட்

[பக்கம் 20-ன் படங்களுக்கான நன்றி]

ஈல் மீன் தவிர எல்லாம்: Illustrated by Diane Rome Peebles - Provided by the Florida Fish and Wildlife Conservation Commission, Division of Marine Fisheries Management; ஈல்: Photo by John E. Randall; டைனோஃபிலாஜிலேட்: Image by D. Patterson and R. Andersen, provided courtesy of micro*scope (http://microscope.mbl.edu)

[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]

மீன் பின்னணி: Illustrated by Diane Rome Peebles - Provided by the Florida Fish and Wildlife Conservation Commission, Division of Marine Fisheries Management