Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன?

வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன?

இளைஞர் கேட்கின்றனர் . . .

வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன?

“முன்னாடியெல்லாம் எதிர்காலத்த பத்தி கவலையே பட்டதில்ல, ஆனா என் படிப்பு முடியப்போற சமயத்திலதான் நான் ஒரு புது உலகத்தில காலெடுத்து வைக்கப்போறேன்னு உணர்ந்தேன். இதுக்குமேல நானே வேலைக்கு போய் என் செலவுகளெல்லாம் பாத்துக்கனும்னு புரிஞ்சிக்கிட்டேன்.”​—⁠அலெக்ஸ், 17.

பெரியவர்களான பிறகு வாழ்க்கையில் என்னவாக ஆகவேண்டும் என்பதைக் குறித்து சிறுவயதில் பகல் கனவு கண்டிருக்கிறீர்களா? அந்தக் கனவுகளைக் குறித்து இப்போது என்ன நினைக்கிறீர்கள்? பெரியவர்களான பிறகு எப்படி சொந்தக்காலில் நிற்பது என்று குழம்புகிறீர்களா? நீங்கள் மட்டுமல்ல பல இளைஞர்கள் இப்படிக் குழம்புகிறார்கள். “எதிர்காலத்தைக் குறித்து திட்டமிடுவதே அநேக இளைஞர்கள் எதிர்ப்படும் பெரிய சவால்களில் ஒன்று” என்கிறது எதிர்காலத்தைக் குறித்து தீர்மானிக்க உங்கள் பிள்ளைகளுக்கு பயிற்சி என்ற ஆங்கில புத்தகம்.

இப்போதைக்கு எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கொஞ்சமும் கவலைப்படாமல் இருக்கலாம். ஜாலியாக இருப்பதுதான் முக்கியம் என்று நினைக்கலாம். அதில் தவறொன்றுமில்லை. ஏனென்றால், “உன் இளமையிலே சந்தோஷப்படு” என்று பைபிளே சொல்கிறது. (பிரசங்கி 11:9) இருந்தாலும் வாழ்க்கையில் உங்கள் இலட்சியத்தைக் குறித்து யோசிப்பதற்கு இதுவே சரியான நேரம். “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்,” அதாவது தன் நடையைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறான் என்கிறது நீதிமொழிகள் 14:15. நீங்கள் எவ்வாறு உங்கள் நடையைக் குறித்து சிந்தித்துப் பார்க்கலாம்?

“எங்கே போகிறீர்கள் என்பதை அறிந்திருங்கள்”

வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலுள்ள இடத்திற்குப் பயணிக்க திட்டமிடுகிறீர்களென வைத்துக்கொள்ளுங்கள். முதலில் என்ன செய்வீர்கள்? சரியாகப் போய்ச்சேருவதற்கு எது நல்ல வழி என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு சாலை வரைபடத்தை பார்ப்பீர்கள். எதிர்காலத்தைத் திட்டமிடும்போதும் அதுபோலவே செய்யுங்கள். இன்று யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகம் ஒன்றில் சேவை செய்துவருகிற மைக்கல் என்ற ஓர் இளைஞர், “தேர்ந்தெடுப்பதற்கு நிறைய பாதைகள் இருக்கின்றன” என்கிறார். ஆனால், இத்தனை அநேகப் பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? “உங்களுடைய இலட்சியத்தைப் பொறுத்தே அது இருக்கிறது” என்கிறார் மைக்கல்.

நீங்கள் அடைய விரும்பும் இலட்சியத்தை, போய்ச் சேர வேண்டிய இடமென வைத்துக்கொள்ளுங்கள். திட்டமிடாமல் ஏதோவொரு பாதையில் சென்றால் அந்த இலட்சியத்தை அடைய முடியாது. ஒரு வரைபடத்தை எடுத்துப் பார்த்து, போக வேண்டிய வழியை திட்டமிடுவதுபோல் உங்கள் இலட்சியத்தை அடைய எது சரியான பாதை என்பதைத் தீர்மானிப்பது நல்லது. இப்படிச் செய்கையில் நீதிமொழிகள் 4:26 தரும் ஆலோசனையின்படி நடப்பீர்கள்: “உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்.” கன்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன் இந்த வசனத்தை இப்படியாக மொழிபெயர்க்கிறது: “எங்கே போகிறீர்கள் என்பதை அறிந்திருங்கள்.”

வரப்போகும் வருடங்களில் நீங்கள் பல முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும். வழிபாடு, வேலை, திருமணம், குடும்பம் போன்ற விஷயங்களிலும் மற்ற முக்கிய விஷயங்களிலும் தீர்மானம் எடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதை அறிந்திருந்தால் சரியான தீர்மானங்களை எடுப்பது சுலபம். உங்கள் வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும்போதும் ஒரு முக்கியமான காரியத்தை மறந்துவிடக் கூடாது. அது என்ன?

“உன் சிருஷ்டிகரை நினை”

உண்மையிலேயே நீங்கள் சந்தோஷமாக இருக்க விரும்பினால் ஞானியாகிய சாலொமோன் ராஜாவின் வார்த்தைகளை மனதில் கொள்ள வேண்டும்: “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை.” (பிரசங்கி 12:1) ஆக, கடவுளுக்கு பிரியமான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதே உங்கள் விருப்பமாக இருக்க வேண்டும்.

அது ஏன் முக்கியம்? வெளிப்படுத்துதல் 4:11-⁠ல் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” இந்த வசனத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைவரும் தங்கள் படைப்பாளருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கக் காரணம் இருக்கிறது. உங்களுக்கு “ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும்” கொடுத்த இந்தப் படைப்பாளருக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா? (அப்போஸ்தலர் 17:25) யெகோவா தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கிற எல்லாவற்றிற்கும் நன்றிக்கடனாக எதையாவது ஒன்றை திருப்பி செய்தே ஆகவேண்டும் என்று நீங்கள் தூண்டப்படவில்லையா?

யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலுள்ள அநேக இளைஞர்கள் தங்களுடைய இளம் வயதிலேயே தங்கள் சிருஷ்டிகரை நினைப்பதால் முழுநேர ஊழியத்தில் ஈடுபட தீர்மானித்திருக்கிறார்கள். சொல்லப்போனால், முழுநேர ஊழியம் என்பது ஒரு மதிப்புவாய்ந்த இலட்சியம், அது அளவிலா ஆசிர்வாதங்களை அள்ளித்தரும். (மல்கியா 3:10) ஆனால், அதற்கு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். உதாரணத்திற்கு, இவ்வாறாக உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘முழுநேர ஊழியத்தில் இறங்கிவிட்டால் நானே என் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கு என்னிடம் என்ன திறமைகளும் தகுதிகளும் உள்ளன?’

இப்போது 27 வயதான கெலி என்ற பெண் சிறு வயதிலேயே தன் எதிர்காலத்தைக் குறித்து திட்டமிட தொடங்கினாள். முழுநேர ஊழியராக ஆக வேண்டும் என்று அவள் தீர்மானமாக இருந்தாள். டீனேஜ் பருவத்தை கடக்கும் தறுவாயில் இருந்தபோது வேலை சம்பந்தமாக “தன் பாதையைக் குறித்து தீர்மானிக்க” தொடங்கினாள். “என் ஊழியத்தில் எனக்கு கைகொடுக்கும் ஒரு வேலையை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது” என்கிறாள் அவள்.

மேல்நிலை வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது பள்ளியில் நடத்தப்பட்ட ஒரு பயிற்சி திட்டத்தில் கலந்துகொண்டு பல் மருத்துவ உதவியாளராக கெலி தேர்ச்சி பெற்றாள். அது சம்பந்தமாக தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றாள். ஆனால், அந்த வெற்றி அவளுடைய தீர்மானத்தில் குறுக்கிடவில்லை. “என்னுடைய ஆசையெல்லாம் முழுநேர ஊழியத்தில் ஈடுபட வேண்டும் என்பதுதான். மற்ற எல்லாமே அதற்கு பிறகுதான்” என்கிறாள் கெலி. இன்றும்கூட அவள் முழுநேர ஊழியத்தை சந்தோஷமாக செய்துவருகிறாள். “இதைவிட சிறந்த தீர்மானத்தை எடுத்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்” என்று அவள் சொல்கிறாள்.

உதவி கேளுங்கள்

பழக்கப்படாத ஓர் இடத்தில் பிரயாணம் செய்கிறீர்கள் என்றால், உங்களிடம் சாலை வரைபடம் இருந்தாலும்கூட, எங்கேயாவது நிறுத்தி யாரிடமாவது வழி கேட்பீர்கள். உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடும்போதும் அவ்வாறே செய்யுங்கள். மற்றவர்களுடைய கருத்துகளைக் கேட்டறியுங்கள். “ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்” என்று நீதிமொழிகள் 20:18 சொல்கிறது. யாரிடம் உதவி கேட்பது? அப்பா அம்மாவிடம் கேட்பது ஒரு சிறந்த வழி. கடவுளுடைய வழிநடத்துதலை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றுகிற முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களிடமும் ஆலோசனை கேட்கலாம். “உங்கள் சபையிலோ அக்கம்பக்கத்து சபைகளிலோ நல்ல உதாரணமாக திகழும் பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நாம் யோசித்துப் பார்க்காத சில விஷயங்களை அவர்கள் நம் கவனத்திற்கு கொண்டுவருவார்கள்” என்கிறார் ரோபர்டோ.

எல்லாருக்கும் மேலாக யெகோவா தேவன் உங்களுக்கு உதவ விரும்புகிறார். அளவிலா சந்தோஷத்தைத் தரும் தீர்மானங்களை எடுப்பதிலும் உங்களுக்கு உதவ விரும்புகிறார். அதனால் உங்கள் எதிர்காலத்தைக் குறித்ததில் ‘அவருடைய சித்தம்’ என்ன என்பதைத் தெரிந்துகொள்ள உதவுமாறு அவரிடம் ஜெபியுங்கள். (எபேசியர் 5:17) முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கை வைத்தால் ‘அவர் உங்கள் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்’ என்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.​—நீதிமொழிகள் 3:5, 6.

www.watchtower.org/ypa என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்

சிந்திப்பதற்கு

◼ உங்களுக்கு என்னென்ன திறமைகளும் தகுதிகளும் இருக்கின்றன?

◼ எந்தெந்த விதங்களில் இந்தத் திறமைகளைப் பயன்படுத்தி நீங்கள் யெகோவாவைத் துதிக்க முடியும்?

◼ இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த விதமான முழுநேர சேவை உங்களுக்கு பிடித்திருக்கிறது?

[பக்கம் 23-ன் பெட்டி]

பலன் தராத பாதை

“ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்” என பைபிள் கூறுகிறது. செல்வத்தை நாடிச் செல்லும் பாதை தோல்விகள் நிறைந்தது. கடைசியில் அது நம்மை கடனிலும், கவலையிலும் தள்ளி ஆன்மீக ரீதியில் சீரழித்துவிடும்.​—⁠1 தீமோத்தேயு 6:9, 10.

[பக்கம் 24, 25-ன் பெட்டி/படங்கள்]

பயனியர் ஊழியம்

ஒரு பயனியர், நல்ல முன்மாதிரி வகிக்கும் முழுக்காட்டுதல் பெற்ற கிறிஸ்தவர் ஆவார்; கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 70 மணிநேரம் செலவிடுகிறார். பயனியர்கள் தாங்கள் பெறுகிற பயிற்சியினாலும் அனுபவத்தினாலும் பைபிளைத் திறமையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள்.

பெத்தேல் சேவை

பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்களில் சேவை செய்கிறார்கள். இவர்கள் பைபிள் பிரசுரங்களை தயாரிப்பதிலும் பிரசுரிப்பதிலும் அவற்றை மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பதிலும் ஈடுபடுகின்றனர். பெத்தேலில் செய்யப்படும் எல்லா வேலைகளுமே பரிசுத்த சேவை செய்ய கிடைக்கும் பாக்கியங்கள்.

தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை

ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகம் தேவைப்படும் இடங்களுக்கு சில பயனியர்கள் குடிமாறியிருக்கிறார்கள். மற்ற சிலர் வேற்று மொழியைக் கற்றுக்கொண்டு அம்மொழியை பயன்படுத்தும் சபைக்கோ வெளி நாட்டிற்கோ சென்று சேவை செய்கிறார்கள்.

சர்வதேச சேவை

சர்வதேச ஊழியர்கள் கிளை அலுவலகங்கள் மற்றும் ராஜ்ய மன்றங்களின் கட்டுமான பணியில் உதவியளிக்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள். இதுவும் பரிசுத்த சேவையின் ஓர் அம்சம்; இது சாலொமோனின் ஆலயத்தைக் கட்டியவர்களின் பணிக்கு ஒப்பானது.​—⁠1 இராஜாக்கள் 8:13-18.

ஊழிய பயிற்சிப் பள்ளி

எட்டு வாரத்திற்கு தீவிர பயிற்சி அளிக்கும் இந்தப் பள்ளி திருமணமாகாத மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பொதுப் பேச்சுக் கொடுப்பதிலும் பயிற்றுவிக்கிறது. இவர்களில் சிலர் தங்கள் சொந்த நாடுகளிலேயே சேவிக்கும்படி நியமிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் வெளிநாடுகளில் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மிஷனரி ஊழியம்

உடல் ஆரோக்கியமும் பலமும் உடைய தகுதி பெற்ற பயனியர்களுக்கு வெளி நாடுகளில் ஊழியம் செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆம், மிஷனரிகள் இன்பமும் திருப்தியும் நிறைந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்.

[பக்கம் 24-ன் பெட்டி/படம்]

வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன?

யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட இந்த டிவிடியில் அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் நடத்தப்பட்ட பேட்டிகள் இடம்பெறுகின்றன. கூடிய சீக்கிரத்தில் இது பல மொழிகளில் கிடைக்கும்.

[பக்கம் 23-ன் படம்]

“உங்கள் இலட்சியத்தைப் பொறுத்தே அது இருக்கிறது.”​—⁠மைக்கல், பெத்தேலில் சேவை செய்பவர்

[பக்கம் 24-ன் படம்]

“இதைவிட சிறந்த தீர்மானத்தை எடுத்​திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.”​—⁠கெலி, ஆறு வருடங்களாக பயனியர் ஊழியம் செய்து வருபவர்

[பக்கம் 25-ன் படம்]

“நல்ல உதாரணமாக திகழும் பெரியவர்களிடம் கேளுங்கள்.”​—⁠ரோபர்டோ, பெத்தேலில் சேவை செய்பவர்