இரத்தமேற்றும் சிகிச்சையின் எதிர்காலம்?
இரத்தமேற்றும் சிகிச்சையின் எதிர்காலம்?
“இரத்தமேற்றும் சிகிச்சையை வெப்பமண்டல மழைக்காட்டிற்குள் பயணிப்பதற்கு ஒப்பிடலாம். பாதை பழக்கப்பட்டதாக இருக்கலாம். எந்தத் தடங்கலும் இல்லாததுபோல் தெரியலாம். ஆனாலும், ஒவ்வொரு அடியையும் படுஜாக்கிரதையாக எடுத்துவைக்காவிட்டால், திடீர் திடீரென முளைக்கும் ஆபத்துகளில் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.”—இயன் எம். ஃபிராங்க்லின், இரத்தமேற்றும் சிகிச்சைப் பேராசிரியர்.
உலக முழுவதையும் உலுக்கியெடுத்த எய்ட்ஸ் கொள்ளைநோய் இரத்தமேற்றுதல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை 1980-களில் மக்களுக்கு உணர்த்தியது. அதன்பிறகு இரத்தமேற்றுதலில் ‘மறைந்திருக்கும் ஆபத்துகளை’ நீக்கவும் மும்முரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆபத்துகள் ஒழிந்தபாடில்லை. “ஒருவருக்கு ஏற்றப்படும் இரத்தம் பாதுகாப்பானதாக இருப்பதற்கான வாய்ப்பு . . . நாட்டிற்கு நாடு பெருமளவு வேறுபடுகிறது” என்று ஜூன் 2005-ல் உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டது. இந்த வேறுபாட்டிற்கு காரணம் என்ன?
இரத்தத்தையும் அதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளையும் சேமித்துவைப்பதிலும், பரிசோதனை செய்வதிலும், வேறு இடங்களுக்கு அனுப்பி வைப்பதிலும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க அநேக நாடுகளில் தேசியளவிலான திட்டங்கள் என்று எதுவும் இல்லை. சில சமயங்களில் இரத்தம் பாதுகாப்பற்ற முறையில் சேமிக்கப்படுகிறது. எப்படியெனில், சரிவரப் பராமரிக்கப்படாத ஃபிரிட்ஜ்களிலும், ஐஸ் பெட்டிகளிலும் வைக்கப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாததன் காரணமாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலோ ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலோ வாழும் ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட இரத்தத்தினால் நோயாளிகளுக்கு படுமோசமான பாதிப்புகள் ஏற்படலாம்.
பாதுகாப்பான இரத்தம்—ஓர் எட்டாக்கனி
தாங்கள் சேமித்து வைத்திருக்கிற இரத்தம் முன்பைவிட இப்போது அதிக பாதுகாப்பானதாக இருப்பதாக சில நாடுகள் சொல்லிக்கொள்கின்றன. இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று இரத்த ஏஜென்ஸிகள் ஒன்றாகச் சேர்ந்து தயாரித்த ‘தகவல் அறிக்கையின்’ முதல் பக்கத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது: “எச்சரிக்கை: முழு இரத்தமும் அதன் கூறுகளும் மனித இரத்தத்திலிருந்து எடுக்கப்படுவதால் அவற்றில் வைரஸ் போன்ற நோய்க் கிருமிகள் இருக்க வாய்ப்பிருக்கிறது . . . இரத்த தானம் செய்பவர்களை கவனமாகத்
தேர்ந்தெடுத்து அவர்கள் தானம் செய்யும் இரத்தத்தை தற்போதுள்ள அனைத்து முறைகளிலும் பரிசோதித்த பிறகும் இந்த ஆபத்தைத் தவிர்க்க முடிவதில்லை.”அதனால்தான் செஞ்சிலுவை, செம்பிறை சங்கங்களின் சர்வதேச சம்மேளனத்தின் உயர் அதிகாரியான பீட்டர் காரலன் இவ்வாறு கூறினார்: “உடலில் ஏற்றப்படுவது மாசுபடாத இரத்தம் என்பதற்கு ஒருபோதும் முழு உத்தரவாதம் அளிக்க முடியாது . . . இரத்தம் ஏற்றப்படுகையில் புதுப்புது தொற்றுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை முறைகள் அப்போதைக்கு இருப்பதில்லை.”
ஒருவேளை, ஒரு புது தொற்றுக் கிருமி தோன்றினால், அதுவும், இரத்தத்தில் இருப்பதே ரொம்ப நாள் தெரியாமலிருந்து, இரத்தமேற்றுதல் மூலமாக உடனடியாக கடத்தப்படுகிற எய்ட்ஸ் போன்ற தொற்றுக் கிருமி தோன்றினால்? அது கவலை தரும் விஷயம் என்பதாக ஐ.மா. தேசிய சுகாதார நிறுவனங்களைச் சேர்ந்த ஹார்வே. ஜி. க்லைன் என்ற மருத்துவர் கூறினார். அவர் மேலும் கூறினதாவது: “இரத்தக் கூறுகளை சேமித்துவைப்பவர்கள் இரத்தமேற்றுதலால் ஏற்படும் கொள்ளைநோய்களைத் தடுக்க முடியாது. முதன்முதலில் எய்ட்ஸ் நோய் வந்தபோது எப்படி அவர்களால் தடுக்க முடியாமல் போனதோ அப்படித்தான் இவற்றையும் அவர்களால் தடுக்க முடியாது.” இதை செக் குடியரசிலுள்ள ப்ராக்கில் ஏப்ரல் 2005-ல் நடந்த மருத்துவ கருத்தரங்கில் கூறினார்.
இரத்தமேற்றுதல்—தவறுகளும் பிரதி விளைவுகளும்
இரத்தமேற்றுதலால் என்ன பேராபத்துகள் வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள நோயாளிகளைத் தாக்குகின்றன? இரத்தத்தைக் கையாளுவதில் ஏற்படும் தவறுகளும், தடுப்பாற்றல் சம்பந்தப்பட்ட பிரதி விளைவுகளுமே பேராபத்துகளாக இருக்கின்றன. 2001-ல் கனடாவில் நடத்தப்பட்ட ஆய்வைக் குறித்து குளோப் அண்ட் மெயில் செய்தித்தாள் அறிக்கை செய்தது; அதன்படி, ஆயிரக்கணக்கான இரத்தமேற்றுதல்களில் ஏற்பட்ட தவறுகள் நோயாளிகளை மரணத்தின் வாசலுக்கே அழைத்துச் சென்றன. இதற்குக் காரணம்: “பரிசோதிக்கப்பட வேண்டியவரின் இரத்தத்தை எடுப்பதற்குப் பதில் வேறொருவருடையதை எடுத்துப் பரிசோதிப்பது, எடுக்கப்பட்ட இரத்தத்திற்கு தவறான லேபிளை ஒட்டுவது, இரத்தம் தேவைப்படும் நபருக்குப் பதிலாக இன்னொருவருக்காக இரத்தத்தைக் கேட்டு வாங்கிவிடுவது.” இதுபோன்ற தவறுகளுக்கு 1995-லிருந்து 2001-க்குள் அமெரிக்காவில் 441 பேர் பலியானார்கள்.
இரத்தமேற்றிக்கொள்பவர்கள், மாற்று உறுப்பு சிகிச்சையை ஏற்றுக்கொள்பவர்கள் படுகிற அதே ஆபத்துகளை எதிர்ப்படுகிறார்கள். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அந்நிய திசுக்களை பெரும்பாலும் நிராகரித்துவிடுகிறது. சில சந்தர்ப்பங்களில் இரத்தமேற்றுதலால் நோய் எதிர்ப்பு சக்தி செயலிழந்தும் போகலாம். இதனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொற்றும் நோய்களை எதிர்ப்பதற்கு நோயாளியின் உடலில் எதிர்ப்புச் சக்தியில்லாமல் போய்விடுகிறது. அதுமட்டுமல்ல முன்பு செயலற்ற நிலையில் இருந்த நோய்க் கிருமிகள் இரத்தமேற்றுதலுக்குப் பிறகு செயல்பட ஆரம்பித்துவிடுகின்றன. அதனால்தான், ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பேராசிரியர் இயன் எம். ஃபிராங்க்லின், “நோயாளிகளுக்கு இரத்தமேற்றுவதற்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை யோசியுங்கள்” என்று எல்லா மருத்துவர்களுக்கும் சிபாரிசு செய்கிறார்.
நிபுணர்களின் கருத்துகள்
இதுபோன்ற அநேக விஷயங்களை அறிந்த பிறகு உடல்நல பராமரிப்பாளர்கள் இரத்தமேற்றும் சிகிச்சையில் இன்னும் அதிக கவனமாக ஈடுபடுகிறார்கள். டெய்லீஸ் நோட்ஸ் ஆன் பிளட் என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒரு மனிதனின் உடலிலிருந்து எடுத்து இன்னொரு மனிதனின் உடலில் ஏற்றப்படுகிற இரத்தம் மிகவும் ஆபத்தான மருந்தாகும். பொதுவாக, மருந்துகளை பயன்படுத்த அனுமதிப்பதற்கு முன் அவற்றைச் சோதித்துப்பார்க்க சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இரத்தத்தையும் அதேபோல சோதித்துப்பார்த்தால், அது தடை செய்யப்படுவது நிச்சயம் என்பதாக சில மருத்துவர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள்.”
இருதய அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கு இரத்தக் கூறுகளை ஏற்றுவது பற்றி 2004-ன் இறுதியில் பேராசிரியர் புரூஸ் ஸ்பீஸ் இவ்வாறு சொன்னார்: “இரத்தமேற்றுவதால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி சீக்கிரம் குணமாகிவிடுவார் என்று சில மருத்துவ கட்டுரைகள் மட்டுமே கூறுகின்றன. பலத்த காயங்கள் ஏற்பட்டால் ஒழிய மற்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் இரத்தமேற்றுவது நன்மை அளிப்பதில்லை, தீமையே விளைவிக்கிறது.” சொல்லப்போனால், “நிமோனியா, தொற்றுகள், மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் தாக்கப்படும் வாய்ப்பு” அதிகரிப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
நாம் எதிர்பார்ப்பது போல் இரத்தமேற்றுதல் சம்பந்தமாக எல்லா இடங்களிலும் ஒரே விதமான விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. கேப்ரியல் பேடராஸா என்ற மருத்துவர் சமீபத்தில் தன்னுடைய சக பணியாளர்களிடம் இரத்தமேற்றுதல் குறித்து இவ்விதமாகச் சொன்னார்: “இரத்தமேற்றுதலுக்கு திட்டவட்டமான விதிமுறைகள் எதுவும் இல்லாததால் உலக முழுவதும் ஒரே விதமாக இரத்தம் ஏற்றப்படுவது . . . கஷ்டம்.” அதனால்தான் எடின்பர்க் மற்றும் ஸ்காட்லாந்து இரத்தமேற்றுதல் நிறுவன மேலாளரான பிரையன் மெக்லிலன்ட், “இரத்தமேற்றுதலும் மாற்று உறுப்பு மருத்துவ சிகிச்சையாக இருப்பதால் அதை சர்வசாதாரணமாகக் கருதக்கூடாது” என்று மருத்துவர்களிடம்
கூறினார். “இந்நோயாளியின் இடத்தில் நானோ என் பிள்ளையோ இருந்தால் இரத்தமேற்ற அனுமதிப்பேனா?” என்று யோசித்துப் பார்க்கும்படி மருத்துவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார்.சொல்லப்போனால், இரத்தவியல் வல்லுநர் ஒருவர் விழித்தெழு!-விடம் சொன்னதையே உடல்நல பராமரிப்பாளர்களில் அநேகரும் சொல்கிறார்கள்: “இரத்தமேற்றும் சிகிச்சையில் வல்லுநர்களான நாங்கள், எங்களுக்கு இரத்தமேற்றிக்கொள்வதையும் விரும்புவதில்லை, மற்றவர்களுக்கு இரத்தமேற்றுவதையும் விரும்புவதில்லை.” மருத்துவத் துறையின் வல்லுநர்கள் சிலரே இப்படி உணரும்போது நோயாளிகள் எப்படி உணர வேண்டும்?
மருத்துவம் மாறுமா?
‘இரத்தமேற்றும் சிகிச்சையில் இத்தனை அபாயங்கள் இருக்கிறதென்றால் ஏன் இரத்தமேற்றுதல் இவ்வளவு பரவலாக இருக்கிறது? இரத்தத்திற்கு மாற்று மருந்துகள் இருக்கும்போது ஏன் இரத்தமேற்ற வேண்டும்?’ என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம். இதற்கு ஒரு காரணம், அநேக மருத்துவர்கள் தங்களுடைய சிகிச்சை முறையை மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. அல்லது இரத்தமேற்றுதலுக்கு பதிலாக தற்போது அளிக்கப்படும் மாற்று சிகிச்சைகள் பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை. இரத்தமேற்றுதல் (ஆங்கிலம்) என்ற பத்திரிகையின் ஒரு கட்டுரை இவ்வாறு சொல்கிறது: “மருத்துவர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையிலும் பாரம்பரியப் பழக்கங்களின் அடிப்படையிலும் ‘நோயாளியைப் பரிசோதித்ததன்’ அடிப்படையிலுமே, இரத்தமேற்றுவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கிறார்கள்.”
அறுவை சிகிச்சை நிபுணரின் திறமையும் இதில் உட்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் லண்டனைச் சேர்ந்த டாக்டர் பெவர்லி ஹன்ட் என்பவர் இதைக் குறித்து இவ்வாறு எழுதுகிறார்: “இரத்த இழப்பின் அளவு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு இடையே வேறுபடுகிறது. அதனால் [இரத்தக் கசிவைத் தடுக்கும் முறைகள்] பற்றி மருத்துவர்களுக்கு சரியான பயிற்சி அளிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டப்படுகிறது.” இன்னும் சிலரோ, இரத்தத்திற்கான மாற்று மருந்துகளின் விலை அதிகம் என்கிறார்கள். ஆனால், அது தவறு என்று அறிக்கைகள் காட்டுகின்றன. மருத்துவ இயக்குநரான டாக்டர் மைக்கல் ரோஸ் சொன்னதை அநேக மருத்துவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்: “இரத்தமில்லா சிகிச்சையே நம்பர் ஒன் சிகிச்சையாகும்.” a
உங்களுக்குக் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் விரும்புவீர்கள்? அப்படியானால், இந்தப் பத்திரிகையை கொடுத்தவர்களுக்கும் உங்களுக்கும் இடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. இரத்தத்தைக் குறித்ததில் அவர்களுடைய சிறந்த நிலைநிற்கை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள தயவுசெய்து அடுத்த கட்டுரையையும் வாசியுங்கள்.
[அடிக்குறிப்பு]
a பக்கம் 8-ல் “இரத்தத்திற்கான மாற்று மருந்துகள்” என்ற பெட்டியைக் காண்க.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“நோயாளிகளுக்கு இரத்தமேற்றுவதற்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை யோசியுங்கள்.” —பேராசிரியர் இயன் எம். ஃபிராங்க்லின்
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
“இந்நோயாளியின் இடத்தில் நானோ என் பிள்ளையோ இருந்தால் இரத்தமேற்ற அனுமதிப்பேனா?”—பிரையன் மெக்லிலன்ட்
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
உயிரைக் குடிக்கும் ‘ட்ராலி’
இரத்தமேற்றுதலால் நுரையீரலில் ஏற்படும் கடுஞ்சேதத்தை ‘ட்ராலி’ (TRALI [Transfusion-related acute lung injury]) என்கிறார்கள். இது 1990-களின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இரத்தமேற்றிய பிறகு நோய்த் தடுப்பாற்றலில் நிகழ்கிற மாற்றமே (பிரதிவிளைவே) இந்த ‘ட்ராலி’ வருவதற்குக் காரணம். இது மனிதனின் உயிரைக் குடிக்குமளவு பயங்கரமானது. ஒவ்வொரு வருடமும் இந்த ‘ட்ராலி’ நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்குவதாகச் சொல்லப்பட்டாலும் அதைவிடப் பல மடங்கு அதிகமானோர் ‘ட்ராலி’-யால் இறப்பதாக வல்லுநர்கள் சந்தேகிக்கிறார்கள். இதன் அறிகுறிகளை உடல்நல பராமரிப்பாளர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே இதற்குக் காரணம். இது எப்படி ஏற்படுகிறது என்று தெரியாவிட்டாலும் நியூ சைன்டிஸ்ட் பத்திரிகை சொல்கிறபடி பார்த்தால், “பல குரூப் இரத்தத்தை ஏற்றிக்கொள்பவர்களுக்கு இது ஏற்படுகிறது. உதாரணத்திற்கு . . . பலமுறை இரத்தமேற்றிக்கொண்ட ஆட்களுக்கு இது ஏற்படுகிறது.” அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இரத்தமேற்றுவது சம்பந்தமாக ஏற்படும் மரணங்களுக்கு ‘ட்ராலி’-யும் ஒரு முக்கிய காரணம் என்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது. இத்தனை நாளாக எச்ஐவி போன்ற பிரபலமான நோய்த்தொற்றுகள்தான் “இரத்த வங்கிகளுக்குப் பெரும் தொல்லைகளாக இருந்தன, ஆனால் இப்போது ‘ட்ராலி’ அந்த இடத்தைப் பிடித்துவிட்டது.”
[பக்கம் 8, 9-ன் பெட்டி/படம்]
இரத்தத்தின் முக்கிய பகுதிகள்
பொதுவாக முழு இரத்தமே தானம் செய்யப்படுகிறது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் அதிலுள்ள பிளாஸ்மா மட்டுமே தானம் செய்யப்படுகிறது. சில நாடுகளில் நோயாளிகளுக்கு முழு இரத்தம் அளிக்கப்படுகிறது. என்றாலும் பொதுவாக அது பரிசோதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுவதற்கு முன்பு அதன் முக்கிய பகுதிகள் (primary components) பிரித்தெடுக்கப்படுகின்றன. அதன் நான்கு முக்கிய பகுதிகள் என்னென்ன? அவற்றின் வேலை என்ன? முழு இரத்தத்தில் அவை ஒவ்வொன்றின் அளவென்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
பிளாஸ்மா முழு இரத்தத்தின் மொத்த கன அளவில் 52 முதல் 62 சதவிகிதம்வரை இது உள்ளது. வெளிர் மஞ்சள் நிறத் திரவமான இந்த பிளாஸ்மாவில் இரத்த அணுக்களும், புரதங்களும் மற்ற பொருள்களும் மிதந்தவாறு பயணிக்கின்றன.
பிளாஸ்மாவில் 91.5 சதவிகிதம் தண்ணீரே. பிளாஸ்மாவை தனித்தனிக் கூறுகளாகப் பிரித்தெடுக்கும்போது 7 சதவிகிதம் புரதங்களே (சுமார் 4 சதவிகிதம் ஆல்ப்யுமின்கள், சுமார் 3 சதவிகிதம் குளோபூலின்கள், 1 சதவிகிதத்திற்கும் குறைவாக ஃபைபிரினோஜென்) உள்ளன. மீதியுள்ள 1.5 சதவிகிதம் சத்துப்பொருள்களும், ஹார்மோன்களும், சுவாச வாயுக்களும், மின் அயனிகளும், வைட்டமின்களும், நைட்ரஜன் கழிவுகளும் உள்ளன.
வெள்ளை அணுக்கள் (லியுகோசைட்கள்) இவை முழு இரத்தத்தில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கின்றன. இவை நோய் உண்டாக்கக்கூடிய அந்நிய பொருள்களை தாக்கி அழிக்கின்றன.
பிளேட்லெட்டுகள் (த்ரோம்போசைட்கள்) இவை முழு இரத்தத்தில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கின்றன. இவை இரத்தத்தை உறைய வைத்து அடிபட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிவதைத் தடுக்கின்றன.
சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்கள்) இவை முழு இரத்தத்தில் 38 முதல் 48 சதவிகிதம்வரை உள்ளன. இந்த அணுக்கள் ஆக்ஸிஜனைக் கொடுத்து கார்பன் டை-ஆக்ஸைடை வெளியேற்றுவதன் மூலம் திசுக்களுக்கு உயிரூட்டுகின்றன.
இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவை எவ்வாறு தனித்தனிக் கூறுகளாகப் பிரிக்க முடியுமோ அவ்வாறே இரத்தத்திலுள்ள மற்ற பகுதிகளையும் சிறுசிறு கூறுகளாகப் பிரிக்க முடியும். உதாரணமாக, சிவப்பு அணுவின் ஒரு கூறுதான் ஹீமோகுளோபின் எனப்படுவது.
[படம்]
பிளாஸ்மா
தண்ணீர் 91.5%
புரதங்கள் 7%
ஆல்ப்யுமின்கள்
குளோபூலின்கள்
ஃபைபிரினோஜென்
பிற பொருள்கள் 1.5%
சத்துப்பொருள்கள்
ஹார்மோன்கள்
சுவாச வாயுக்கள்
மின் அயனிகள்
வைட்டமின்கள்
நைட்ரஜன் கழிவுகள்
[படத்திற்கான நன்றி]
பக்கம் 9: வட்டங்களுக்குள் இரத்தத்தின் பகுதிகள்: This project has been funded in whole or in part with federal funds from the National Cancer Institute, National Institutes of Health, under contract N01-CO-12400. The content of this publication does not necessarily reflect the views or policies of the Department of Health and Human Services, nor does mention of trade names, commercial products, or organizations imply endorsement by the U.S. Government
[பக்கம் 8, 9-ன் பெட்டி/படம்]
இரத்தத்திற்கான மாற்று மருந்துகள்
யெகோவாவின் சாட்சிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்கள் கடந்த ஆறு வருடங்களாக இரத்தமில்லா மாற்று சிகிச்சை முறைகள்—எளிமையானவை, பாதுகாப்பானவை, பயனுள்ளவை (ஆங்கிலம்) என்ற வீடியோவை மருத்துவத் துறையிலுள்ள ஆயிரக்கணக்கானோருக்குக் கொடுத்திருக்கிறார்கள். b இந்த வீடியோ சுமார் 25 மொழிகளில் கிடைக்கிறது. இரத்தத்திற்குப் பதிலாகத் தற்போது பயன்படுத்தப்படும் சிறந்த மருந்துகளைப் பற்றி இந்த வீடியோவில் உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் தங்களது கருத்தைத் தெரிவிக்கிறார்கள். இதற்கு மக்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. உதாரணத்திற்கு, 2001-ன் பிற்பகுதியில் இந்த வீடியோ காட்சியைப் பார்த்த பிறகு பிரிட்டனிலுள்ள நேஷனல் பிளட் சர்வீஸ் (NBS) பிரிட்டனின் எல்லா இரத்த வங்கி மானேஜர்களுக்கும் இரத்தவியல் வல்லுநர்களுக்கும் இந்த வீடியோவையும் ஒரு கடிதத்தையும் அனுப்பிவைத்தது. “இரத்தமேற்றுதலை முடிந்தளவு தவிர்க்கும் சிகிச்சையே சிறந்த சிகிச்சையாக அநேகர் கருதுவதால்,” இந்த வீடியோவைப் பார்க்கும்படி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், “வீடியோவில் உள்ள முக்கிய செய்தி பாராட்டத்தக்கது என்றும் அதனை NBS ஆதரிக்கிறது” என்றும் அக்கடிதம் குறிப்பிட்டது.
[அடிக்குறிப்பு]
b யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட இரத்தமில்லா மாற்று சிகிச்சை முறைகள்—செய்திப்படங்கள் என்ற டிவிடி-க்கு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரைத் தொடர்புகொள்ளுங்கள்.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
பிரித்தெடுத்தல் இரத்தத்தின் தனித்தனிக் கூறுகள் மூலம் சிகிச்சை அளித்தல்
விஞ்ஞான உலகிலும் தொழில்நுட்பத்திலும் ஏற்பட்டிருக்கும் அபாரமான முன்னேற்றத்தால், இரத்தத்திலுள்ள பகுதிகளைத் தனித்தனிக் கூறுகளாகப் பிரித்தெடுக்க முடிந்திருக்கிறது. இது பிரித்தெடுத்தல் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக: கடல் தண்ணீரிலுள்ள 96.5 சதவிகித நீரை நீக்கி மீதியுள்ள மெக்னீசியம், புரோமின், குறிப்பாக சாதாரண உப்பு போன்ற பொருள்களை பிரித்தெடுத்தல் முறை மூலமாக தனித்தனியாகப் பிரித்தெடுக்க முடியும். அதேபோல், பிளாஸ்மாவிலிருந்து ஆல்ப்யுமின், ஃபைபிரினோஜென், குளோபூலின் போன்ற புரதங்களையும் மற்ற கூறுகளையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்க முடியும். இரத்தத்தில் அரைவாசிக்கும் அதிகமாக உள்ள இந்த பிளாஸ்மாவில் 90 சதவிகிதத்திற்கும் மேல் இருப்பது நீரே ஆகும்.
சிகிச்சைக்காக பிளாஸ்மாவிலுள்ள கூறுகளை அதிகமாக எடுத்துக்கொள்ளும்படி உங்கள் மருத்துவர் சிபாரிசு செய்யலாம். உதாரணமாக, க்ரையோ ப்ரிஸிபிடேட் என்ற ஒரு பொருளை எடுத்துக்கொள்ளும்படி அவர் சிபாரிசு செய்யலாம். புரதம் நிறைந்த இந்தப் பொருள் பிளாஸ்மாவை உறையவைத்து பின்னர் உருகவைப்பதன் மூலம் பெறப்படுகிறது. கரையாத தன்மையுடைய இந்தப் பொருள் இரத்தத்தைத் திரள வைப்பதால் பொதுவாக இரத்தக் கசிவைத் தடுப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவு அல்லது பெருமளவு இரத்தக் கூறுகளை உடைய மருந்துப் பொருள்கள் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படலாம். c சில பிளாஸ்மா புரதங்கள் ஊசி மூலமாகவும் தொடர்ந்தாற்போல் ஏற்றப்படுகின்றன. தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்பட்ட உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவே அவ்வாறு செய்யப்படுகின்றன. மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இரத்தக் கூறுகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் பிளாஸ்மா புரதங்கள் உள்ளன.
“மனித இரத்தத்திலுள்ள ஆயிரக்கணக்கான புரதங்களில் நூற்றுக்கணக்கானவற்றை மாத்திரமே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்” என்று ஸைன்ஸ் நியூஸ் பத்திரிகை சொல்கிறது. இரத்தத்தைத் பற்றி அவர்களுடைய அறிவு அதிகரிக்க அதிகரிக்க இந்தப் புரதங்களிலிருந்து வேறு புதிய மருந்துகளையும் அவர்கள் தயாரிக்கலாம்.
[அடிக்குறிப்பு]
c மிருகங்களின் இரத்தத்திலிருந்து எடுக்கப்படும் கூறுகளும் சில மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.
[பக்கம் 6, 7-ன் படம்]
மருத்துவப் பணியாளர் சிலர் இரத்தத்தைக் கையாளுகையில் மிக எச்சரிக்கையாக இருக்கிறார்கள்