கலிலேயப் படகு பழங்காலப் பொக்கிஷம்
கலிலேயப் படகு பழங்காலப் பொக்கிஷம்
இஸ்ரேலிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
இயேசுவின் ஊழியத்தோடு சம்பந்தப்பட்ட மறக்க முடியாத சில சம்பவங்கள் கலிலேயாக் கடலில் நடைபெற்றன. இங்குதான் கடவுளுடைய சொந்த மகன் தண்ணீர்மீது நடந்து சென்றார், கடும் புயல்காற்றை அடக்கினார். இந்தக் கரையில்தான் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் உணவளித்தார், நோயாளிகளைக் குணப்படுத்தினார்.
பூர்வ கப்பர்நகூம் பட்டணத்திற்கு அருகே கலிலேயாக் கடல் தரையில் புதைந்திருந்த ஓர் அதிசயம் 1986-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இயேசுவின் ஊழிய காலத்தின்போது இந்தக் கலிலேயாக் கடலில் பயணித்த ஒரு படகே அந்த அதிசயம். அது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
வறட்சியால் வெளிவந்த அதிசயம்
பல வருடங்களாக சரிவரப் பெய்யாத மழையும், 1985-ல் சுட்டுப் பொசுக்கிய வெயிலும் கலிலேயாக் கடலை மிக மோசமாகப் பாதித்திருந்தன. இந்த நன்னீர் ஏரியிலிருந்து விவசாயத்திற்காகவும் தண்ணீர் எடுக்கப்பட்டது. அதனால், சேறும் சகதியுமான தரை வெளியே தெரியுமளவுக்கு இந்த ஏரியின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துவிட்டது. இந்த ஏரிக்கு அருகே இருந்த யூத சமுதாய நல குடியிருப்பில் அண்ணன் தம்பி இருவர் வசித்து வந்தார்கள். அவர்கள் இதைப் பொன்னான வாய்ப்பாகக் கருதி ஏரியில் புதைந்திருக்கும் பொக்கிஷங்களைத் தேடும் ஆராய்ச்சியில் இறங்கினார்கள். சேறும் சகதியுமாக இருந்த தரையில் அவர்கள் நடந்து சென்றபோது வெண்கல நாணயங்கள் சிலவற்றையும் பழங்கால ஆணிகள் சிலவற்றையும் கண்டெடுத்தார்கள். அப்போது தரையில் நீள்வட்ட வடிவில் ஓர் அச்சையும் கவனித்தார்கள். பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு படகின் அச்சே அது. ஆம், அவர்கள் கண்டுபிடித்தது உண்மையிலேயே ஒரு பொக்கிஷம்!
2,000 வயதுள்ள ஒரு படகை கலிலேயாக் கடலில் கண்டுபிடிக்க முடியுமென்று புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. ஏனெனில், பொதுவாக மரக்கட்டைகளைப் பூச்சிகள் இத்தனை ஆண்டுகளுக்கு விட்டுவைக்காது என்று நினைத்தார்கள். ஆனால், கார்பன் டேட்டிங் கணிப்பிலிருந்தும் அங்கு கிடைத்த நாணயங்களிலிருந்தும், இந்தப் படகு பொ.ச.மு. முதல் நூற்றாண்டு அல்லது பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரிய வந்திருக்கிறது. படகின் உடற்பகுதி மிக பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே! அது எப்படி?
எந்தச் சலனமுமின்றி அமைதியாக இருந்த இடத்தில் இந்தப் படகு விடப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் அதன் அடிப்பகுதி முழுவதும் சேற்றுக்குள் புதைந்துவிட்டது. காலப்போக்கில் இந்தச் சேறு கெட்டியாகிவிட்டது. வரலாற்றுப் பொக்கிஷமான இந்தப் படகு சுமார் 20 நூற்றாண்டுகளுக்கு சேற்றுக்குள் புதைந்த நிலையிலேயே பத்திரமாக இருந்திருக்கிறது!
படகு கண்டுபிடிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியபோது, இதற்கு ‘ஜீஸஸ் போட்’ என்று பட்டப்பெயர் வைக்கப்பட்டது. இயேசுவோ அவரது சீஷர்களோ இந்தப் படகைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று யாரும் அடித்துக்கூறவில்லை. இருந்தாலும், சுவிசேஷப் பதிவுகளில் குறிப்பிடப்படும் படகுகளுக்கும் இந்தப் படகிற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைப் பார்க்கும்போதும் அதன் வயதைப் பார்க்கும்போதும், சரித்திர ஆசிரியர்களும் சரி பைபிள் அறிஞர்களும் சரி, அதில் ஆராய்ச்சி நடத்துவதற்குத் தூண்டப்படுகிறார்கள்.
இந்தப் படகின் நீளம் 8.2 மீட்டர், அகலம் 2.3 மீட்டர். இந்தப் படகைக் கட்டியவர் இதன் உடற்பகுதியை முதலில் கட்டியிருக்கிறார். அதாவது, முதலில் சட்டங்களை அமைத்து அவற்றில் பலகைகளைப் பொருத்துவதற்குப் பதிலாக, நீளமான மரப்பலகைகளை நேரடியாக அடிக்கட்டையுடன் இருபக்கங்களிலும் பொருத்தி உடற்பகுதியை முதலில் அமைத்திருக்கிறார். இந்த முறையிலேயே மத்தியதரைக் கடலில் பயணிக்கும் படகுகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தக் கலிலேயப் படகை ஏரியில் பயணிப்பதற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்திருப்பதுபோல் தெரிகிறது.
நான்கு திசைகளிலும் விரிக்க முடிந்த பாய்மர வசதியும் இந்தப் படகில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. இதிலுள்ள நான்கு துடுப்புகளைப் பார்க்கும்போது இதற்கு குறைந்தபட்சம் ஐந்து பேர் தேவைப்பட்டிருப்பார்கள் என்பது தெரிய வருகிறது. அதாவது, துடுப்புகள் வலிப்பதற்கு நான்கு பேரும் படகை இயக்குவதற்கு ஒருவரும் என மொத்தம் ஐந்து பேர் தேவைப்பட்டிருப்பார்கள். ஆனால், இந்தப் படகில் எட்டுப் பேருக்கும் அதிகமானவர்கள் பயணிப்பதற்குப் போதிய வசதி இருந்திருக்கிறது. படகில் மீன்பிடிக்கச் சென்ற ஏழு சீஷர்கள் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைப் பார்த்ததாகச் சொல்லப்படுகிற பதிவை வாசிக்கையில் அவர்கள் இதுபோன்ற ஒரு படகைதான் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்துபார்க்க முடிகிறது.—யோவான் 21:2-8.
மாற்கு 4:38) படகு நிலை தடுமாறாதிருக்க பயன்படுத்தப்படும் கனமான மணல் மூட்டையையே இயேசு “தலையணை”யாக பயன்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. a
இந்தக் கலிலேயப் படகின் பின்புறத்தில் பெரிய பெரிய மீன்பிடி வலைகளை வைப்பதற்காக ஒரு தளம் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அயர்ந்திருக்கும் மீனவர் ஓய்வெடுப்பதற்காக இந்தத் தளத்தில் ஒரு சிறிய பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் கடும் புயல்காற்று வீசியபோது “கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார்” என்று இயேசுவைக் குறித்து பைபிள் சொல்கையில், அவர் இந்தத் தளத்திலேயே ஓய்வெடுத்திருப்பதாகத் தெரிகிறது. (கலிலேயாக் கடல் மீனவர்கள்
நீங்கள் முதல் நூற்றாண்டில் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இதுபோன்ற ஒரு படகில் பயணம் செய்கிறீர்கள். சில மீனவர்கள், சிறுசிறு படகுகளிலிருந்து வலை வீசுகிறார்கள். மற்றவர்கள் அதிக ஆழமில்லாத பகுதியில் நடந்துசென்றே வலை வீசுகிறார்கள். திறமை வாய்ந்த அந்த மீனவர்கள் ஒரே கையினால் வட்ட வடிவிலான வலைகளை லாவகமாக வீசுகிறார்கள். அந்த வலைகளின் விட்டம் ஆறிலிருந்து எட்டு மீட்டர்வரை இருக்கும். அவற்றில் கனமான எடைக்கற்களும் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவர்கள் வீசுகிற வலைகள் நீர்ப்பரப்பில் விரிந்து மெதுமெதுவாக நீருக்கடியில் செல்கின்றன. அந்த வலையில் மீன்கள் மாட்டிக்கொள்கின்றன. அவற்றைக் கரைக்குக் கொண்டுவர மீனவர்கள் கரையை நோக்கி வலையை இழுக்கிறார்கள்; அல்லது நீரில் குதித்து வலையின் எல்லா எடைக்கற்களையும் சேர்த்துப் பிடித்து உள்ளே இருக்கும் மீன்களோடு வலைகளைப் படகில் வைக்கிறார்கள். ஒருவேளை பைபிளில் குறிப்பிடப்படுகிற சீமோனும் அந்திரேயாவும் இவ்வாறே “வலைபோட்டுக்” கொண்டிருந்திருக்கலாம்.—மாற்கு 1:16.
கொஞ்ச தூரத்தில் மீனவர்கள் பேசிக்கொண்டே கனமான ஒரு பெரிய வீச்சு வலையைப் பின்னுவதை நீங்கள் கவனிக்கலாம். இந்த வலை சுமார் 300 மீட்டர் நீளமாக இருக்கலாம். இதன் நடுப்பகுதியிலுள்ள குழிவோ சுமார் 8 மீட்டர் ஆழமாக இருக்கலாம். கரைக்கு இழுத்து வருவதற்கு வசதியாக இதன் இரு முனைகளிலும் கயிறுகள் உள்ளன. முதலாவதாக, மீன்பிடிப்பதற்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு பாதிப்பேர் கயிற்றின் ஒரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டு கரையில் நிற்கிறார்கள். மீதிப்பேர் கயிற்றின் இன்னொரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டு படகில் ஏறுகிறார்கள். படகு கரையிலிருந்து உள்ளே போகப் போக வலை முழுவதுமாக விரிகிறது. பிறகு அரைவட்ட வடிவில் படகைத் திருப்பி கரைநோக்கி வருகிறார்கள். அந்தக் கயிற்றைப் பிடித்தவாறே படகை விட்டு இறங்குகிறார்கள். இப்போது கயிற்றின் முனைகளைப் பிடித்திருக்கும் இருசாராரும் நெருங்கி வந்து மீன்கள் நிறைந்துள்ள கனமான வலையை ஒன்றுசேர்ந்து இழுக்கிறார்கள்.—மத்தேயு 13:47, 48.
இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு மீனவர் தூண்டில் போட்டு தனியாக மீன்பிடிப்பதைப் பார்க்கிறீர்கள். ஆலய வரி கட்டுவதற்காக இந்தக் கடலில்தான் தூண்டில் போடும்படி பேதுருவிடம் இயேசு ஒருமுறை சொல்லியிருந்தார். அப்போது பேதுரு ஒரு மீனைப் பிடித்தார். ஆலய வரி கட்டுவதற்குத் தேவையான வெள்ளிப் பணத்தை அதன் வாயில் பார்த்தபோது பேதுரு எந்தளவு ஆச்சரியப்பட்டிருப்பார் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?—மத்தேயு 17:27.
அந்தி சாயும் நேரத்தில் ஏரியெங்கும் அமைதி பரவியிருக்கிறது. திடீரென்று அமைதியைக் குலைக்கும் விதத்தில் மீனவர்கள் தடதடவென்று கால்களால் தட்டி படகில் சத்தம் எழுப்புகிறார்கள். துடுப்புகளையும் படபடவென்று வேகமாக அடித்து தண்ணீரில் சத்தமுண்டாக்குகிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இந்தச் சத்தத்தைக் கேட்கும் மீன்கள் பயந்துபோய் அவர்கள் வைத்திருக்கும் ஒருவகை நீளமான வலையில் வந்து சிக்கிக்கொள்வதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். இருட்டில் தெரியாத இந்த வலை, மீன்களை எளிதில் சிக்கவைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வலைகள் இரவு முழுதும் திரும்பத்திரும்ப ஏரியில் போடப்படுகின்றன. மறுநாள் காலையில் கழுவி காயவைக்கப்படுகின்றன. ‘லூக்கா 5:1-7-ல் அற்புதமான விதத்தில் மீன் பிடிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறதே, அந்த மீன்களும் இதுபோன்ற நீளமான வலையில்தான் பிடிக்கப்பட்டிருக்குமோ?’ என்று நீங்கள் நினைக்கக்கூடும்.
மீட்புப் பணி
சரி, நம்முடைய காலத்திற்கு வரலாம். கண்டுபிடிக்கப்பட்ட அந்தப் படகிற்கு என்ன ஆனது? அது உடையாமல் இருந்தபோதிலும் நனைந்து போன அட்டை போல் சொதசொதவென்று ஆகிவிட்டிருந்தது. அதை சேற்றிலிருந்து அப்படியே அலக்காக தூக்குவது சரியென்று படவில்லை. இத்தனை வருடங்கள் தாக்குப்பிடித்திருந்த அந்தப் படகு, மீட்புப் பணியின்போது உடைந்துபோய்விட்டால்? ஏரியின் நீர்மட்டம் மறுபடியும் அதிகரிக்க வாய்ப்பிருந்ததால் அந்த இடத்தில் ஓர் அணை எழுப்பப்பட்டது. படகிற்குக் கீழே சுரங்கம் அமைத்து அதன் வழியாக ஃபைபர் கிளாஸ் சட்டங்கள் செருகப்பட்டன. படகைத் தாங்கும் ஆதாரமாக அவை இருந்தன. பிறகு படகிலிருந்த சேறு படுஜாக்கிரதையுடன் நீக்கப்பட்டது. படகின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பாலியூரித்தேன் ஃபோம் ‘ஸ்ப்ரே’ செய்யப்பட்டது. பார்ப்பதற்கு அந்தப் படகு ஏதோ ஒரு கூட்டுக்குள் இருப்பதுபோல் தெரிந்தது.
இந்தப் படகைப் பாதுகாப்பதற்காக சுமார் 300 மீட்டர் தொலைவில் இருந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அது அடுத்த பெரிய சவாலாக இருந்தது. ஸ்ப்ரே செய்யப்பட்ட பாலியூரித்தேன் ஃபோம் கெட்டியாக இருந்தாலும், ஒரு குலுங்கு குலுங்கினால் சுக்குநூறாக உடைந்துவிடுகிற நிலையிலேயே இந்தப் படகு இருந்தது. அதனால் மீட்புக் குழுவினர் ஓர் ஐடியா செய்தார்கள். அணையைத் திறந்துவிட்டு தண்ணீர் உள்ளே வரும்படி செய்தார்கள். இந்த ‘பாலியூரித்தேன்’ படகு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கலிலேயாக் கடலில் மிதந்தது.
14 வருடங்கள் நீடித்த அந்தப் பாதுகாப்புப் பணியின்போது படகை வைப்பதற்காக ஒரு சிமெண்ட் தொட்டி
கட்டப்பட்டது. ஆனால், தொட்டிநீர் முழுக்க கொசுக்களின் முட்டைப்புழுக்கள் இருந்ததால் படகைப் பழுதுபார்க்கும் ஆட்கள் தொட்டியில் இறங்கி வேலை செய்வது கடினமாக ஆகிவிட்டது. பாதுகாப்புக் குழுவினர் இதற்கும் ஓர் ஐடியா செய்தார்கள். அது மிகவும் பழைய ஐடியாதான், ஆனால் சூப்பர் ஐடியா! அவர்கள் ஏராளமான செ. பீட்டர் மீன்களை தொட்டியில் விட்டார்கள். அவை முட்டைப்புழுக்களைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தின.தண்ணீரில் ஊறிப்போயிருந்த படகைக் காயவைப்பதற்கான நேரம் வந்தது. அதை நேரடியாக வெயிலில் உலரவைத்தால் உடைந்துவிடும் என்பதால் நீரில் கரையும் தன்மையுள்ள செயற்கை மெழுகு அதில் பூசப்பட்டது. இதனால் படகின் வடிவம் மாறாமலேயே அதன் ஈரம் காய்ந்துவிட்டது.
பராமரிப்பு வேலை முடிவுற்றபோது அந்தச் சாதாரண படகின் உருவம் தெரிந்தது. அது 12 வகை மரங்களால் செய்யப்பட்டிருந்தது. ஒருவேளை அந்தக் காலத்தில் மரக்கட்டைகளைப் பெறுவதில் சிரமம் இருந்திருக்கலாம்; அல்லது அந்தப் படகின் சொந்தக்காரர் வசதி குறைந்தவராக இருந்திருக்கலாம். அந்தப் படகு பலமுறை பழுதுபார்க்கப்பட்ட பிறகு, கடைசியில் அம்போவென ஏரியில் விடப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.
இந்தக் கலிலேயப் படகுக்கும் இயேசுவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதிருக்கலாம். என்றாலும் அநேகருக்கு இது ஒரு பொக்கிஷமாகவே இருக்கிறது. ஏனென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததை சிந்தித்துப் பார்க்க இது வாய்ப்பளிக்கிறது. இயேசு ஊழியம் செய்த அந்த முக்கியமான காலத்தின்போது கலிலேயாக் கடல் அருகே வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைக் கற்பனை செய்யவும் இது உதவுகிறது.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட ஆகஸ்ட் 15, 2005 தேதியிட்ட காவற்கோபுர இதழில் 8-ம் பக்கத்திலுள்ள “கலிலேயாக் கடலில்” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 15-ன் படம்]
படகிலிருந்த சேற்றை பணியாட்கள் படுசிரமத்துடன் அகற்றினார்கள்
[பக்கம் 15-ன் படம்]
பாலியூரித்தேன் ஃபோமால் ஸ்ப்ரே செய்யப்பட்ட படகு
[பக்கம் 15-ன் படம்]
கிட்டத்தட்ட 2,000 வருடங்களுக்குப் பின்னர் படகு மீண்டும் கலிலேயாக் கடலில் மிதந்தது
[பக்கம் 15-ன் படம்]
முதல் நூற்றாண்டுப் படகு இவ்வாறு இருந்திருக்கலாம்
[பக்கம் 15-ன் படம்]
பாதுகாப்புப் பணி முடிவுற்ற நிலையில் கலிலேயப் படகு
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
மாதிரிப் படகும் கடலும் தவிர மற்ற எல்லாப் படங்களும்: Israel Antiquities Authority - The Yigal Allon Center, Ginosar