Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திரவங்களிலேயே மதிப்புமிக்கது—எது?

திரவங்களிலேயே மதிப்புமிக்கது—எது?

திரவங்களிலேயே மதிப்புமிக்கது​—⁠எது?

“போக்குவரத்திற்கு பெட்ரோல் அவசியமெனில் உடல் நலத்திற்கு இரத்தம் அவசியம்.” ​—⁠ஆர்தர் காப்லன், பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் உயிர்-ஒழுக்கவியல் (Bioethics) மையத்தின் நிர்வாகி.

பெட்ரோல்​—⁠திரவங்களிலேயே இதுதான் மதிப்புமிக்கதா? ராக்கெட் வேகத்தில் உயரும் பெட்ரோல் விலையைப் பார்க்கையில் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், அதைவிட மதிப்புமிக்க ஒரு திரவம் இருக்கிறது; சொல்லப்போனால், அதில் சில லிட்டர் நம் ஒவ்வொருவரின் உடலிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: எரிபொருளுக்கான மனிதர்களின் தேவையைப் பூர்த்திசெய்ய ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான பீப்பாய் எண்ணெய் பூமியிலிருந்து உறிஞ்சப்படுகிறது. அதேபோல், நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் நம்பிக்கையில் சுமார் 9 கோடி யூனிட்டுகள் இரத்தம் மனிதர்களிடமிருந்து உறிஞ்சப்படுகிறது. a இது, சுமார் 80 லட்சம் ஆட்களின் உடலில் ஓடும் இரத்தத்தின் கன அளவுக்குச் சமமானது என்பதைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள்.

என்றாலும், எரிபொருளுக்கு தட்டுப்பாடு இருப்பதுபோல, இரத்தத்திற்கும் தட்டுப்பாடு இருப்பதாகத் தெரிகிறது. உலகெங்கிலும் உள்ள மருத்துவ அமைப்புகள் இரத்தம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதைக் குறித்து எச்சரிக்கின்றன. (“தீவிர முயற்சிகள்” என்ற பெட்டியைக் காண்க.) இரத்தத்திற்கு ஏன் இவ்வளவு மதிப்பு?

ஒப்பற்ற உறுப்பு

இரத்தத்தின் சிக்கலான தன்மை அந்தளவு வியப்பூட்டுவதால் அது பெரும்பாலும் உடலின் ஓர் உறுப்புக்கு ஒப்பிடப்படுகிறது. “உடலிலுள்ள மிக அற்புதமான, தனித்தன்மையுள்ள உறுப்புகளில் இரத்தமும் ஒன்று” என்று டாக்டர் புரூஸ் லெனஸ் விழித்தெழு!-விடம் தெரிவித்தார். ஆம், அது ஈடிணையற்றதுதான்! “நம் உடலில் திரவ வடிவில் இருக்கும் ஒரே உறுப்பு இரத்தமே” என்று ஒரு பாடப்புத்தகம் இரத்தத்தை விவரிக்கிறது. அதே புத்தகம் இரத்தத்தை, “உயிருள்ள போக்குவரத்து அமைப்பு” என்றும் வர்ணிக்கிறது. அதன் அர்த்தம் என்ன?

“இரத்த ஓட்ட மண்டலம் ஒரு கால்வாய் அமைப்பு போல் செயல்படுகிறது; அதாவது, அத்தியாவசியமான பொருள்கள் அனைத்தையும் உடல் உறுப்புகளுக்குப் பட்டுவாடா செய்து, ஏகப்பட்ட கழிவுப்பொருள்களை எடுத்து வருகிறது” என்று என். லி ஆன்டர்ஸன் என்ற விஞ்ஞானி சொல்கிறார். 1,00,000 கிலோமீட்டர் நீளமான இந்த இரத்த ஓட்ட மண்டலத்தில் இரத்தம் பயணிக்கும்போது, சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய முக்கிய உறுப்புகள் உட்பட உடலிலுள்ள கிட்டத்தட்ட எல்லா திசுக்களையும் சந்தித்துவிடுகிறது. இந்த முக்கிய உறுப்புகள், இரத்தம் சம்பந்தப்பட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றன, இவற்றின் இயக்கமும் இரத்தத்தைச் சார்ந்தே இருக்கிறது.

நம் உடலிலுள்ள செல்களுக்கு ஆக்ஸிஜன், சத்துப்பொருள்கள், நோய் எதிர்ப்பு பொருள்கள் போன்ற அநேக “அத்தியாவசியப் பொருள்களை” இரத்தம் எடுத்துச்செல்கிறது. அதுமட்டுமல்ல, நச்சுத்தன்மையுள்ள கார்பன் டை-ஆக்ஸைடு, செத்துப்போன, சேதமடைந்த செல்களின் உட்பொருள்கள், பிற கழிவுப் பொருள்கள் என எல்லா “குப்பைக்கூளங்களையும்” இரத்தம் நீக்கிவிடுகிறது. இவ்வாறு, கழிவுப்பொருள்களை நீக்குகிற வேலையையும் இரத்தம் செய்வதால், உடலைவிட்டு வெளியே எடுக்கப்பட்ட இரத்தத்தைக் கையாளுவது ஏன் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவருக்கு இரத்தம் ஏற்றப்படுவதற்கு முன்பு அதிலுள்ள எல்லா “கழிவுப்பொருள்களும்” கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுவிட்டதாக யாரும் உத்தரவாதம் அளிக்கமுடியாது.

நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பணிகளை இரத்தம் செய்கிறது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதனால்தான் இரத்த இழப்பு ஏற்படுகையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இரத்தமேற்றுகிறார்கள். மற்றவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு இரத்தம் பயன்படுவதால்தான் அது மதிப்புமிக்கதாய் கருதப்படுவதாக அநேக மருத்துவர்கள் சொல்லலாம். என்றாலும், மருத்துவத் துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. ஒரு மெளன புரட்சியே நடந்துகொண்டிருக்கிறது எனலாம். அநேக மருத்துவர்களும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் முன்புபோல் இப்போதெல்லாம் எடுத்த எடுப்பில் இரத்தம் ஏற்றுவதில்லை. ஏன்?

[அடிக்குறிப்பு]

a ஒரு யூனிட் என்பது, 450 மில்லிலிட்டர் (1 பின்ட்) இரத்தமாகும்.

[பக்கம் 4-ன் பெட்டி/படம்]

தீவிர முயற்சிகள்

உலகமுழுவதிலும் ஒவ்வொரு வருடமும் கூடுதலாக 20 கோடி யூனிட்டுகள் இரத்தம் தேவைப்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். உலக ஜனத்தொகையில் 82 சதவிகிதத்தினர் வளர்ந்துவரும் நாடுகளில்தான் வாழ்கிறார்கள்; என்றாலும், உலக முழுவதும் தானமாகப் பெறப்படும் இரத்தத்தில் 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே அந்த நாடுகளிலிருந்து கிடைக்கிறது. எனவே, அந்த நாடுகளில் பல மருத்துவமனைகள் இரத்தமில்லாமலேயே மக்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றன. ‘இரத்தம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதன் காரணமாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட சிகிச்சைகள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது தள்ளிப்போடப்படுகின்றன’ என்று கென்யா நாட்டின் த நேஷன் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது.

வசதிபடைத்த நாடுகளில்கூட இரத்தத்திற்குத் தட்டுப்பாடு உள்ளது. மக்கள் நீண்டநாள் வாழ்வதாலும் மருத்துவ முறைகள் முன்னேறியிருப்பதாலும் அறுவை சிகிச்சைகள் அதிகரித்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, இரத்த தானம் செய்ய முன்வரும் அநேகருடைய இரத்தம் ஏற்கப்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் நெறிகெட்ட வாழ்க்கையில் ஈடுபடுவதாலும், நோய்கள் பரவி வருகிற பல இடங்களுக்குப் பயணிப்பதாலும் அவர்களுடைய இரத்தத்தின் மூலம் நோய் தொற்ற வாய்ப்பு இருக்கிறது.

இரத்த வங்கிகள் இரத்த தானம் பெற தீவிர முயற்சிகள் எடுப்பதாகத் தெரிகிறது. பொதுவாக, அதிக ஆபத்தை ஏற்படுத்தாத வாழ்க்கைப்பாணியுடைய இளைஞர்களிடமிருந்தும் சிலசமயங்களில் இரத்தம் பெறப்படுகிறது. உதாரணத்திற்கு, ஜிம்பாப்வேயில் பள்ளி மாணவர்களிடமிருந்தே 70 சதவிகித இரத்தம் பெறப்படுகிறது. இங்குள்ள இரத்த வங்கிகள் அதிக மணிநேரம் திறந்துவைக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில் இரத்த தானம் செய்யும் நபர்கள் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக இரத்த வங்கிகள் அவர்களுக்குப் பணத்தையோ வேறு சலுகைகளையோ அளிப்பதற்கும்கூட அரசாங்கங்கள் அனுமதி வழங்கியிருக்கின்றன. செக் குடியரசில் இரத்த தானம் செய்பவர்களுக்கு கைமாறாக பியர் கொடுக்கப்படும் என்று பிரச்சாரமே செய்யப்பட்டது! சமீபத்தில் இந்தியாவின் ஒரு பகுதியில் இரத்தத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இரத்த தானம் செய்வோரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் வீடு வீடாகச் சென்றார்கள்.