தேவையில் இருப்போருக்கு நான் எப்படி உதவ முடியும்?
இளைஞர் கேட்கின்றனர் . . .
தேவையில் இருப்போருக்கு நான் எப்படி உதவ முடியும்?
“ஸ்கூல் படிப்பு முடித்ததும் நான் எலெக்ட்ரீஷன் ஆக விரும்புகிறேன். அப்போதுதான் நிறைய ராஜ்ய மன்றங்கள் கட்டுவதற்கு உதவ முடியும்.”—ட்ரிஸ்டன், 14 வயது.
“புதிய பிரிண்டிங் பிரஸ்ஸுக்காக 20 டாலரை நன்கொடையாகக் கொடுக்கிறேன். இது என்னுடைய பாக்கெட் மணி, ஆனாலும் அதை உங்களுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறேன்.”—அபி, 9 வயது.
இந்தக் காலத்து இளைஞர்களை தன்னலம்பிடித்தவர்கள் என கண்ணை மூடிக்கொண்டு முத்திரை சிலர் குத்திவிடுகிறார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட இளைஞர்களைப் போன்ற பலர் தாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் காட்டுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலிருக்கும் இளம் பிள்ளைகள் பலர் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் பணத்தையும் மற்றவர்களுக்குச் சேவை செய்ய பயன்படுத்துகிறார்கள். (சங்கீதம் 110:3) அதற்கு இன்னும் சில எடுத்துக்காட்டுகளை இப்போது நாம் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜீராவுக்கு ஏழு வயது. இவனுடைய பாட்டி இறந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தாத்தாவிடமிருந்து 50 ஆஸ்திரேலிய டாலரைப் பரிசாகப் பெற்றான். ஜீரா அந்தப் பணத்தை என்ன செய்தான் தெரியுமா? சபை கூட்டத்திற்குப் போனவுடன் அதை அப்படியே அங்குள்ள நன்கொடை பெட்டியில் போட்டுவிட்டான். ஏன்? அவன் தன்னுடைய அம்மாவிடம் இப்படிச் சொன்னான்: “விளையாட எங்கிட்ட நிறைய பொம்மை இருக்குது, ஆனா எனக்கு ஒரேயொரு பாட்டிம்மாதானே இருந்தாங்க. பாட்டிம்மா இப்போ உயிரோடு இருந்தா இந்தப் பணத்தை நன்கொடை பெட்டியில் போடத்தான் சொல்லியிருப்பாங்கன்னு எனக்குத் தெரியும். ஏன்னா யெகோவாமேல் அவங்க அவ்வளவு அன்பு வைச்சிருந்தாங்க.”
அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து வயது ஹேனாவுக்கு குதிரை என்றால் உயிர். அதனால், குதிரை பொம்மை வாங்க ஆசைப்பட்டாள். அதன் விலை 75 டாலர். பணத்தை சேர்த்து வைக்க அவள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அம்மா அப்பா அவளுக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்கள். அதை அவள் உண்டியலில் சேர்த்து வைப்பாள். சீக்கிரத்திலேயே, குதிரை பொம்மை வாங்குவதற்குத் தேவையான பணத்தைவிட அதிக பணத்தை அவள் சேர்த்திருந்தாள்.
ஏறக்குறைய அந்தச் சமயத்தில்தான் வளைகுடா பகுதியை கேட்ரீனா சூறாவளி தாக்கியது. அதில் பாதிக்கப்பட்டவர்களை நினைத்தபோது அவளுக்கு வருத்தமாக எபிரெயர் 13:16.
இருந்தது; அதனால், சேர்த்து வைத்த எல்லா பணத்தையும் நன்கொடையாகக் கொடுக்கத் தீர்மானித்தாள். அவளிடம் 100 டாலருக்கும் அதிகமான பணம் இருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அவள் இவ்வாறு எழுதினாள்: “எனக்கு யெகோவாவை ரொம்ப பிடிக்கும். மற்றவர்களுக்கு உதவிசெய்ய ஆசைப்படுகிறேன். அதனால், இந்தப் பணத்தை அனுப்புகிறேன்.” இப்படித் தாராளமாகக் கொடுப்பதை யெகோவா பார்க்கிறாரா? “நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது.—அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு சிறுமியின் பெயர் டிஃப்பனி. 2004-ல் ப்ளோரிடா என்ற இடத்தை இரண்டு சூறாவளிகள் தாக்கியபோது, அவள் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமையகத்திற்கு இவ்வாறு எழுதினாள்: “நானும் என்னுடைய தம்பி திமோத்தியும் சேர்ந்து 110 டாலரை நன்கொடையாக அனுப்புகிறோம். எங்களுடைய வீட்டுக்கு அதிக சேதம் ஏற்படவில்லை, ஆனால் மற்ற வீடுகள் எல்லாம் அதிகமாக சேதமடைந்திருப்பதைப் பார்த்தோம். அதற்கு உதவ விரும்பியதால் நாங்கள் பணம் சேர்க்க ஆரம்பித்தோம். ஒரு வீட்டில் வால்பேப்பரை எல்லாம் அப்புறப்படுத்திக் கொடுத்ததற்காக திமோத்திக்கு 10 டாலர் கிடைத்தது. என்னாலும் 100 டாலர் சேர்க்க முடிந்தது.” டிஃப்பனிக்கு 13 வயது, அவளுடைய தம்பி திமோத்திக்கோ 7 வயதுதான்! நம்முடைய தேவைகளைவிட மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நமக்கு என்ன நன்மை? “எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” என நீதிமொழிகள் 11:25 குறிப்பிடுகிறது.
ஆப்பிரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுவதை அமெரிக்காவில் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் 4 முதல் 15 வயதுள்ள சிறுவர் சிறுமியர் சிலர் கேள்விப்பட்டார்கள். அதற்குத் தங்களால் முடிந்த ஏதாவது உதவிசெய்ய வேண்டுமென அவர்கள் தீர்மானித்தார்கள். “நாங்கள் பிஸ்கட்டுகளையும் தின்பண்டங்களையும் வீட்டிலேயே செய்து விற்றோம். இப்படியாக நாங்கள் 106.54 டாலர் சம்பாதித்தோம்.
இவற்றை வாங்க வருவோரிடம், இதில் கிடைக்கும் பணத்தை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிக் கொடுக்கப் போவதாகச் சொன்னோம்; அங்கு பைபிளைக் கற்றுக்கொள்ள மக்கள் கூடிவரும் இடங்களைக் கட்ட இது பயன்படுத்தப்படும் என்றும் சொன்னோம். அதனால் நிறைய பேர் சந்தோஷமாக வாங்கினார்கள். இவற்றை விற்பதற்கு ஒன்பது மணிநேரம் ஆனது, ஆனால் எங்களுடைய முயற்சி வீண்போகவில்லை. யெகோவாவுக்காக நாங்கள் பாடுபட்டது வீண் போகுமா, என்ன!”நீங்களும் உதவலாம்
மேலே குறிப்பிடப்பட்ட சிறுவர் சிறுமியர் எல்லாருமே இயேசு சொன்னது உண்மை என்பதை அறிந்திருக்கிறார்கள். “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்,” அதாவது சந்தோஷம், என்று அவர் சொன்னார். (அப்போஸ்தலர் 20:35) கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை நீங்களும் ருசிக்க முடியும். எந்தெந்த வழிகளில் நீங்கள் கொடுக்கலாம்?
சக விசுவாசிகள் தேவையிலிருப்பதைப் பற்றிய அறிக்கைகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? உதாரணமாக, இயற்கை பேரழிவுகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுடைய வீட்டையோ உடைமைகளையோ இழந்தால், அல்லது அன்பான ஒருவரைப் பறிகொடுத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். கிறிஸ்தவர்கள் ‘தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்க’ வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (பிலிப்பியர் 2:4) ஒருவேளை, இயற்கை பேரழிவு எங்கோ தொலைதூரத்தில் ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும்கூட, நீங்கள் கொடுக்கும் நன்கொடையை அங்குள்ளவர்களுக்கு நிவாரண உதவி அளிக்க யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்துவார்கள். a
வேறு வழிகளிலும் தேவையிலிருப்போருக்கு நீங்கள் உதவலாம். உதாரணமாக, நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தால், உங்களுடைய ராஜ்ய மன்றத்திற்கு வந்திருப்போரைக் கொஞ்சம் பாருங்களேன். வயதானவர்களோ உதவி தேவைப்படும் வேறு யாராவதோ இருக்கிறார்களா? அவர்களுக்கு வீட்டு வேலைகளில் நீங்கள் ஒத்தாசைசெய்ய முடியுமா? ரோமர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:10) யாரேனும் தேவையில் இருப்பதை அறிந்தால், வலியப்போய் உதவுங்கள். மற்றவர்கள் கீழ்த்தரமாக நினைக்கும் வேலையாக இருந்தாலும்கூட செய்யுங்கள். மற்றவர்களுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் சேவை செய்வதைப் போன்றது என்பதை நினைவில் வையுங்கள். ஏனென்றால், “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” என பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 19:17.
மற்றொரு மிகச் சிறந்த விதத்திலும் மற்றவர்களுக்கு உதவலாம். அதாவது, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலிருந்து நீங்கள் அறிந்துகொண்டதை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) பைபிள் சத்தியத்தின் உயிர்காக்கும் செய்தியை இன்று மக்கள் அறிந்துகொள்வது மிக மிக அவசியம். ஆகவே, மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் வேலையில் தொடர்ந்து பக்திவைராக்கியத்துடன் ஈடுபடுங்கள்; ‘உங்களுடைய பிரயாசம் விருதாவாயிராது’ என்ற திடநம்பிக்கையுடன் ஈடுபடுங்கள்.—1 கொரிந்தியர் 15:58.
www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்
சிந்திப்பதற்கு
◼ உதவி தேவைப்படுகிற யாராவது உங்கள் நினைவுக்கு வருகிறார்களா?
◼ நீங்கள் எப்படி உதவி செய்யலாம்?
[அடிக்குறிப்பு]
a குறிப்பிட்ட ஒரு நிவாரணப் பணிக்காக அளிக்கப்படும் நன்கொடைகள் மனமார ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. என்றாலும், யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்காக அவற்றை அளிப்பது நல்லது. ஏனெனில், தேவை ஏற்படும்போது உலகளாவிய வேலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்தே பணம் எடுக்கப்படுகிறது.
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
“நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—எபிரெயர் 13:16
[பக்கம் 24, 25-ன் பெட்டி/படம்]
ஏன் கொடுத்துப் பழக வேண்டும்?
“என்னுடைய அப்பா அம்மா, யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் சேவை செய்வதற்காக நேரத்தையும் சக்தியையும் செலவழித்ததைப் பார்த்ததுதான், அதேபோல் சேவை செய்ய என்னைத் தூண்டியது. ‘யெகோவாவுக்கென்று நீ சின்னதாக ஏதாவது செய்தாலும் அதை அவர் மறக்கவே மாட்டார். யெகோவா நித்தியகாலமாய் வாழ்வதால் நாம் செய்கிற சேவையை அவர் மறப்பதே இல்லை. ஆனால், உனக்காக மட்டும் வாழ்வது வீண். அப்படி வாழ்ந்தால், நீ இறந்துபோகும்போது உனக்காக செய்துகொண்ட காரியங்களும் அதோடு மறக்கப்பட்டுவிடும்’ என்று என் அப்பா சொன்னார்.”—ஜப்பானைச் சேர்ந்த 24 வயது கென்டாரோ.
“உண்மையைச் சொன்னால், சனிக்கிழமை மத்தியானத்தில் வயசானவர்களைப் போய் பார்த்து, அவர்களுக்கு வீட்டு வேலைகளைச் செய்துகொடுப்பது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் ஃபிரெண்ட்ஸோடே சேர்ந்து ஜாலியாக இருக்கத்தான் பிடிக்கும். ஆனால், ஒருசமயம் வயசானவர்களோட இருந்து அவர்களுக்கு வேலை செய்துகொடுத்தப்போது ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அந்தச் சமயத்தில், அவர்களும் என்னை மாதிரி மனுஷர்தான், அவர்களும் வாலிப வயதைக் கடந்து வந்தவர்கள்தான் என்பதைப் புரிந்துகொண்டேன். இது அவர்களுக்கு உதவிசெய்ய என்னை தூண்டியது.”—இங்கிலாந்தைச் சேர்ந்த 27 வயது ஜான்.
“சின்ன வயதிலே நான் ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வேன், இன்னும் நிறைய வேலைகளையும் செய்வேன். சபையிலிருந்த மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் சந்தோஷமாய் செய்துகொடுத்தேன். யாருக்காவது நீங்கள் உதவிசெய்தால், அதில் கிடைக்கிற சந்தோஷத்தை நீங்கள் உணர முடியும். உதாரணமாக, வயசான ஒரு சகோதரியின் வீட்டில் வால்பேப்பர் ஒட்டுவதற்காக நானும் இன்னும் சிலரும் போனோம். அந்தச் சகோதரியின் சந்தோஷத்தைப் பார்க்கணுமே! மற்றவர்களை சந்தோஷப்படுத்தும்போது நமக்கும்கூட சந்தோஷம் கிடைக்கிறது.”—பிரான்சைச் சேர்ந்த 23 வயது எர்மன்.
[பக்கம் 24-ன் படம்]
பேரழிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அநேக பிள்ளைகள் நன்கொடை அளிக்கிறார்கள்