Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ‘மானைப்போல் குதிப்பேன்’

நான் ‘மானைப்போல் குதிப்பேன்’

நான் ‘மானைப்போல் குதிப்பேன்’

பிரான்சேஸ்கோ ஆபாடேமார்கோ சொன்னபடி

“கடவுள் ஏன் இதை அனுமதித்தார்? அதுவும் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?” இந்தக் கேள்விகளை நான் எத்தனை முறை கேட்டிருப்பேன்! என் கைகளையும் கால்களையும் பயன்படுத்த முடியாமல் சக்கர நாற்காலியில் வாழ்க்கையை ஓட்டவேண்டும் என்பதை நினைத்தபோதெல்லாம் நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது.

இத்தாலியைச் சேர்ந்த பாஸீலீகாடா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய நகரில், 1962-⁠ம் ஆண்டு பிறந்தேன். மலர ஆரம்பித்தவுடனேயே என் வாழ்க்கை கிட்டத்தட்ட வாடிவிட்டது. என்னைப் பிரசவிக்கையில் அம்மா ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டார். டாக்டர் எனக்கு ஊசி மூலமாய் மருந்துகளை ஏற்றினார்; அது மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. மூன்று நாட்களுக்குப் பிறகு, வலிப்பு நோய் என் பிஞ்சு உடலை உலுக்கியது. என்னுடைய கைகளும் கால்களும் பக்கவாதத்தால் செயலிழந்தன, குரல்வளை சவ்வும் சேதமடைந்தது.

நான் வளர்ந்தபோது, என்னுடைய ஊனத்தை நினைத்து விரக்தியடைந்தேன். நான் முன்கோபியானேன்; மற்றவர்கள் மேல் எரிந்து விழுந்தேன். இந்த உலகத்தில் நான் மட்டும் தன்னந்தனியாக இருப்பதுபோல் உணர்ந்தேன். என் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லையென நினைத்தேன். எனக்கு 25 வயது ஆனபோது, உணர்ச்சிரீதியில் நொறுங்கிப் போயிருந்தேன். நான் இந்தளவு கஷ்டப்பட கடவுள் ஏன் அனுமதித்தார் என்பது எனக்கு புதிராக இருந்தது. கடவுளே இல்லை என்ற முடிவுக்கு வருவதுதான் எனக்கு நியாயமாகப்பட்டது.

மனப்பான்மை மாறியது

அது 1987-⁠ம் ஆண்டின் பிற்பகுதி. அன்று காலையில், வீட்டிற்கு வெளியே சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். மிகவும் நன்றாக உடையணிந்த இரண்டு இளைஞர்கள் என்னை அணுகினர். அவர்கள் என் அண்ணனைப் பார்க்க வந்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன். அவர் வீட்டில் இல்லை என்பதை எப்படியோ கஷ்டப்பட்டு அவர்களிடம் சொல்லிவிட்டேன். “நாங்கள் உங்களோடு பேச விரும்புகிறோம்” என அவர்கள் சொன்னதும், எனக்கு ஒரே ஆச்சரியம். ஏனெனில், என்னோடு பேச ஒருவரும் விரும்பினதில்லை.

“நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?” என்ற கேள்வியோடு ஆரம்பித்தார்கள். “இந்த நிலைமையில், என்னால் எப்படி கடவுளை நம்பமுடியும்?” என வெடுக்கென்று பதிலளித்தேன். இப்படியே பேச்சு தொடர்ந்தது, அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதை அறிந்துகொண்டேன். உயிர்​—⁠எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? a என்ற புத்தகத்தை கொடுத்தார்கள். நானும் வேண்டாவெறுப்போடு அதைப் பெற்றுக்கொண்டேன். மறுபடியும் வந்து சந்திப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்றே நினைத்தேன்.

சொன்னபடியே அந்த சாட்சிகள் திரும்பவும் வந்தார்கள்; உரையாடலை மீண்டும் ஆரம்பித்தோம். அவர்கள் ஏசாயா 35:5, 6-⁠ல் உள்ள பைபிள் வசனங்களை வாசித்துக் காண்பித்தது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” கேட்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. ஆனால் என் நிஜவாழ்க்கை அப்படியில்லையே. என்னால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை, பிறகு எப்படி மானைப்போல குதிக்க முடியும்? என்றாலும், அவர்களோடு பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்டேன். ஆனால், அப்போது எனக்கிருந்த பிரச்சினைகளைத் தீர்க்க பைபிள் உதவும் என நான் நம்பவில்லை. என்னுடைய பலவீனங்கள் ஒருநாள் குணமாகும் என்பதெல்லாம் எனக்கு கற்பனையாகவே தோன்றியது.

சிறிது காலத்திற்குப் பிறகு, அந்த சாட்சிகள் உள்ளூர் ராஜ்யமன்றத்தில் நடக்கும் ஒரு கூட்டத்திற்கு வரும்படி என்னை அழைத்தார்கள். என்ன பைபிள் பேச்சு கொடுக்கப்பட்டது என்பதை மறந்துவிட்டேன். ஆனால் அந்த சாட்சிகள் காட்டிய நட்பையும் அன்பையும் மறக்கவே முடியாது. பரிதாப உணர்ச்சியால் என்னை மூழ்கடிப்பதற்குப் பதிலாக, உண்மையாக வரவேற்றதை என்னால் உணர முடிந்தது. ராஜ்ய மன்றத்தில் இருந்தது என் வீட்டில் இருப்பது போல் சந்தோஷத்தை அளித்தது; இனி தவறாமல் அங்கே போகவேண்டுமென்று அன்றே முடிவெடுத்தேன். அதன்படியே, தவறாமல் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன்.

தடையைத் தாண்டுதல்

பைபிளைப் படித்தது எனக்குள் ஆச்சரியமான மாற்றங்களை ஏற்படுத்தியது. பட்டமரத்தில் பாலூறியது போல அது இருந்தது. மரத்துப்போயிருந்த என் மனதில் மறுபடியும் மகிழ்ச்சி பூத்தது. உள்ளத்தில் புது உற்சாகம் ஊற்றெடுத்தது. நான் ஏற்றுக்கொண்ட இந்த அருமையான நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லவேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது. (மத்தேயு 24:14) என்றாலும், எப்படி நான் பிரசங்கிக்க முடியும்? அதற்கு ஒரு வழிகாட்டுமாறு யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபம் செய்தேன்.

செப்டம்பர், 1991-⁠ல் ஒரு பயனியர் (முழுநேர ஊழியர்) அந்தச் சபைக்கு நியமிக்கப்பட்டார். ஒரு நாள் அவருடைய வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, பிரசங்கிப்பதில் எனக்கிருந்த ஆர்வத்தை அவரிடம் தெரிவித்தேன். என்னால் சரியாகப் பேச முடியாதிருந்ததால், டைப்ரைட்டரைக் கொண்டு கடிதம் எழுதுவதைப் பற்றிப் யோசித்தோம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கைகள் தடையாக இருந்தன. அதனால், அந்த பயனியரின் உதவியோடு, பல வழிகளில் முயன்றேன். ஒரு பென்சிலை பற்களில் கவ்விக்கொண்டு டைப் அடிக்க முயன்றேன். அடுத்ததாக, குச்சியுடன்கூடிய ஹெல்மெட்டைப் பயன்படுத்தி, தலையை அசைத்து எழுத்துக்களை அடிக்க முயற்சி செய்தேன். எதுவும் ஒத்துவரவில்லை.

பிறகு, நாங்கள் இந்தப் பிரச்சினையைக் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் பயனியர் நகைச்சுவையாக “உங்களுக்கு மிகவும் நேர்த்தியான மூக்கு இருக்கிறது” என்றார். உடனே என்னுடைய மூக்கால் எழுத்துக்களை டைப் அடிக்க முயன்றேன். இந்த முயற்சி கைகூடியது. ஒருவழியாக, என்னால் எழுத முடிந்தது. என் மூக்கைக் கொண்டு எழுத்துப் பிழைகளை எப்படி சரிசெய்திருப்பேன் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்! கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது ரொம்ப எளிது என்பதை விரைவில் புரிந்துகொண்டோம். ஆனால் பணத்திற்கு எங்கே போவது? சரியான சமயத்திற்காகக் காத்திருந்தேன்; பிறகு என்னுடைய பெற்றோரிடம் பேசினேன். அவர்கள் கைகொடுத்ததால், சீக்கிரத்திலேயே, கடிதங்களை கம்ப்யூட்டரைக் கொண்டு எழுத ஆரம்பித்தேன்.

கனவு நனவானது

முதலில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கடிதங்கள் எழுதினேன். பிறகு, என்னுடைய நகரத்திலும் சுற்றியிருந்த நகரங்களிலும் இருப்போருக்கு கடிதங்கள் எழுதினேன். விரைவில், இத்தாலி முழுக்க உள்ள மக்களுடன் தொடர்பு கொண்டேன். என்னுடைய கடிதத்திற்குப் பதிலைப்பெற்ற ஒவ்வொரு முறையும் நான் அடைந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. 1991-⁠ம் ஆண்டு டிசம்பரில் நற்செய்தியை அறிவிக்கும் முழுக்காட்டப்படாத ஓர் ஊழியனாக அங்கீகரிக்கப்பட்டேன். யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் வாரந்தோறும் நடக்கும் தேவராஜ்ய ஊழியப்பள்ளியிலும் சேர்ந்தேன். பேச்சுக் கொடுப்பதற்கான நியமிப்பைப் பெற்றபோது, வீட்டில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி கவனமாக தயாரித்தேன். கூட்டத்தில், ஒரு நண்பர் மேடைக்குச் சென்று நான் தயாரித்ததை வாசிப்பார்.

யெகோவா எனக்கு காட்டியிருக்கிற அன்பிற்காக நான் எப்பொழுதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதற்காக, என் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற வேண்டும்; அது என்னுடைய ஆன்மீக முன்னேற்றத்தில் அடுத்த படியாக இருக்கும் என்பதை அறிந்திருந்தேன். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, என்னுடைய தீர்மானத்தைப் பற்றி என் பெற்றோரிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை, ஆனால் முழுக்காட்டுதல் பெறவேண்டும் என்ற என்னுடைய ஆசை பயத்தைவிட உறுதியாக இருந்தது. யெகோவா மற்றும் என்னுடைய சக சாட்சிகளின் ஆதரவுடன், 1992-⁠ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முழுக்காட்டுதல் பெற்றேன். என்னுடைய அண்ணனும் அண்ணியும் முழுக்காட்டுதலுக்கு வந்திருந்தார்கள்; அது எவ்வளவு மகிழ்ச்சியாய் இருந்தது!

எண்ணங்களில் மாற்றங்கள்

கடவுளுடைய வார்த்தையில் பொதிந்திருக்கும் நியமங்கள் படிப்படியாக எனக்குத் தெளிவானது. என்னிடமிருந்த கெட்ட குணங்களை மாற்றவேண்டியது அவசியம் என்பதைப் புரிந்துகொண்டேன். என் உடல்நிலை காரணமாக, நான் பிடிவாதக்காரனாகவும், சுயநலவாதியாகவும் ஆகிவிட்டிருந்ததை உணர்ந்தேன். அந்தக் கேடுவிளைவிக்கும் குணங்களிலிருந்து விடுபடப் போராடினேன். நான் இன்னும் மனத்தாழ்மையாக இருக்க வேண்டியிருந்தது. மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற விரக்தியை விரட்டவும் போராட வேண்டியிருந்தது.

என்னை நினைத்து பரிதாபப்படுவதை நிறுத்த முயன்றேன். ‘நான் ஒரு துர்பாக்கியசாலி’ என்று நினைப்பதை நிறுத்த முயற்சி செய்தேன். சில சூழ்நிலைகளின் நகைச்சுவையான விஷயங்களை ரசிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் நான் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுமி கதவைத் திறந்தாள். என்னுடன் வந்த சாட்சிகளில் ஒருவர் அவளிடம் அவளுடைய பெற்றோர் வீட்டில் இருக்கிறார்களா என்று கேட்டார். “அம்மா, இரண்டுபேர் ஒரு நோயாளியைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று அந்தச் சிறுமி சத்தமிட்டாள். என்னைப் பார்த்ததும், அந்த அம்மாவுக்கு தர்மசங்கடமாகிவிட்டது. என்ன சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. என் நண்பர்களில் ஒருவர், “உண்மையில், நாங்கள் இரண்டு பேரும்தான் நோயாளிகள்; இவர் ஆரோக்கியமானவர்” என்று சொன்னார். எல்லாருமே சிரித்துவிட்டோம், ஒரு நல்ல உரையாடல் ஆரம்பமானது.

இன்னும் அதிகமாய் சேவைசெய்ய ஆசை

முழுக்காட்டுதல் எடுத்தப் பிறகு, துணைப் பயனியராக ஒன்பது மாதங்கள் சேவை செய்தேன். ஒவ்வொரு மாதமும் 60 மணிநேரம் ஊழியத்தில் செலவிட்டேன். என்றாலும், இன்னும் அதிகமாகச் செய்ய விரும்பினேன். விரைவில், ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தேன், இன்னுமதிக நேரத்தை ஊழியத்திற்கு அர்ப்பணித்தேன். பயனியர் சேவையின் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், ஊழியத்தில் அநேகர் நான் அவர்களிடம் பணம் கேட்க வந்ததாக நினைத்துக்கொண்டார்கள். இது எனக்கும் என்னோடு வந்த சாட்சிகளுக்கும் சங்கடமாக இருந்தது.

அதோடு, சபையிலுள்ள நிறைய பேர் என்னுடைய பேச்சைப் புரிந்துகொள்ள கஷ்டப்பட்டார்கள், எனக்கு எப்படி சிறந்த விதத்தில் உதவிசெய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு யெகோவாவின் உதவியாலும் ஆன்மீக சகோதர சகோதரிகளின் தன்னலமற்ற ஒத்துழைப்பினாலும் என்னுடைய சூழ்நிலை முன்னேறியது. இப்போதெல்லாம், மக்கள் என்னை வெறுமனே சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருக்கும் நோயாளியாக மட்டும் பார்ப்பதில்லை. மாறாக, கடவுளுடைய நோக்கங்களை கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவ முயலும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாகவே என்னை பார்க்கிறார்கள்.

1994-⁠ம் ஆண்டு ஜூலையில் பயனியர்களுக்கான இரண்டு வார விசேஷ பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டேன். பிரசங்கிப்பதற்கும் சீஷராக்குவதற்கும் உதவும் பைபிள் நியமங்களை அங்கே கற்றுக்கொண்டோம். ஊழித்தில் நேரடியாகவும் பயிற்சி கொடுக்கப்பட்டது. இப்பள்ளியில் கலந்துகொள்ள நான் பல தடைகளை தாண்ட வேண்டியிருந்தது. உதாரணமாக, எங்கள் ஊரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் அந்தப் பள்ளி நடைபெற்றது. வீட்டுக்கு வெளியே சென்று இரவு தங்குவது என்பது எனக்கு முடியாத காரியம். அதனால், சாட்சிகள் ஒருவர் மாற்றி ஒருவராக காலையில் என்னை பள்ளிக்கு அழைத்துச்சென்று, மாலையில் வீட்டில் கொண்டுவந்துவிட்டார்கள். மதிய வேளையில் ஒருவர் என்னை இரண்டாவது மாடிக்கு தூக்கிச்செல்வார்; அங்கே எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்.

மிகப் பெரிய பொறுப்பு

2003-⁠ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சபை மூப்பராக நியமிக்கப்பட்டேன். அதனால், மற்றவர்களுக்காக கடுமையாய் உழைக்க வேண்டியிருந்தது. “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [“சந்தோஷம்,” NW]” என்று இயேசு சொன்னது எவ்வளவு உண்மை என்பதை இப்பொழுது என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. (அப்போஸ்தலர் 20:35) அருமையான மூப்பர் குழுவோடு சேர்ந்து சேவை செய்கிறேன். ஒரு மூப்பராக என்னுடைய பொறுப்பை சரிவர செய்ய அவர்கள் உதவுகிறார்கள். சபையிலுள்ள இளைஞர்கள் உட்பட எல்லாருமே என்னை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். அதோடு, அவர்கள் என்ன செய்தாலும் என்னையும் அதில் சேர்த்துக்கொள்கிறார்கள். யெகோவாவை சேவிப்பதற்கு ஏற்படும் தடைகளை எப்படி மேற்கொள்கிறேன் என அவர்கள் கவனிக்கிறார்கள். பலர் தங்களுடைய சொந்த பிரச்சினைகளை சமாளிக்க என்னிடம் உதவி கேட்கின்றனர்.

சந்தோஷத்திற்கு உடல்நிலை முக்கிய காரணமல்ல என்பதைக் கற்றுக்கொண்டேன். உண்மையில், யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதும், அவருடைய சித்தத்தை செய்வதும்தான் அதிமுக்கியம். சீக்கிரத்தில் இந்த சக்கர நாற்காலியிலிருந்து விடுதலையாகும் அதிசயமான நம்பிக்கையை அளித்ததற்காக அவருக்கு நன்றி சொல்கிறேன். ஆம், நான் ‘மானைப்போல் குதிப்பதற்கும்’ உண்மைக் கடவுளுக்கு நித்திய காலமாக சேவை செய்வதற்கும் ஆவலோடு காத்திருக்கிறேன்.​—ஏசாயா 35:5, 6.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]

இப்போதெல்லாம், மக்கள் என்னை வெறுமனே சக்கரநாற்காலியில் உட்கார்ந்திருக்கும் நோயாளியாக மட்டும் பார்ப்பதில்லை. மாறாக, கடவுளுடைய நோக்கங்களை கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவ முயலும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாகவே என்னை பார்க்கிறார்கள்

[பக்கம் 21-ன் படம்]

மூக்கால் டைப் அடித்து சபை கூட்டத்திற்கு தயாரிக்கிறேன்