Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீர்ப்பறவைகள் உலகம் சுற்றுவதில் வல்லவர்கள்

நீர்ப்பறவைகள் உலகம் சுற்றுவதில் வல்லவர்கள்

நீர்ப்பறவைகள் உலகம் சுற்றுவதில் வல்லவர்கள்

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சூரியன் தூங்காத ஆர்க்டிக் பனிப்பிரதேசத்தில் கோடைகாலத்தின் இரண்டு மாதங்களை செலவிடுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். குளிர்காலம் நெருங்குகையில் தென் அமெரிக்காவுக்கோ ஆஸ்திரேலியாவுக்கோ தென் ஆப்பிரிக்காவுக்கோ செல்கிறீர்கள். பின்னர், அந்த வருடத்தின் எஞ்சிய காலங்களில், ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள கடற்கரைகளில் உங்களுக்குப் பிடித்தமான உணவைத் தேடிச் செல்கிறீர்கள். உலகிலுள்ள அநேக நீர்ப்பறவைகளின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

நீர்ப்பறவைகள் ஆழமில்லாத நீர்நிலைகளில் உணவைக் கண்டுபிடித்து வாழ்க்கையை ஓட்டுகின்றன. a வட அரைக்கோளத்தின் குளிர்காலத்தில் இந்த நீர்ப்பறவைகள் சேறுநிறைந்த கழிமுகப்பகுதிகள், கடற்கரைகள், பாறைகள் நிறைந்த கரையோரங்கள் போன்ற இடங்களில் திரளாக கூடுகின்றன. இங்குதான் ஆள்நடமாட்டம் அதிகம் இருப்பதில்லை. ஆனால், கோடைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்குப் படையெடுக்கும்போது பெரும்பாலான நீர்ப்பறவைகள் ஆர்க்டிக் மற்றும் அதனருகே இருக்கும் குளிர் பிரதேசங்களுக்கு இடம்பெயர்கின்றன. அந்த இடங்களில் கோடைக்காலம் கொஞ்ச நாட்கள்தான் நீடிக்கும்; அங்கே அவற்றிற்குத் தனிமையும் குஞ்சுகளை வளர்க்க எக்கச்சக்கமான உணவும் கிடைக்கிறது.

நீர்ப்பறவைகள் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் இல்லை என்பதென்னவோ உண்மைதான். ஆனாலும், அவை வானில் சிறகு விரிக்கும் அழகும், சிறகுகளிலுள்ள வித்தியாசமான கோடுகளும் எண்ணற்றோரின் உள்ளங்களை கொள்ளை கொள்கின்றன. “அவை [நீர்ப்பறவைகள்] தங்களுடைய இறக்கைகளின் நுனிகளால் தண்ணீரை முத்தமிட்டவாரே தாழ்வாகவும் பறக்க முடியும்; 6 கிலோமீட்டர் அல்லது அதற்கும் அதிகமான உயரத்திலும் பறக்க முடியும். உண்மையில், அவை வான்வெளியில் வித்தைகள் புரியும் வித்தகர்கள்தான்” என்பதாக நீர்ப்பறவைகள்​—⁠அழகான கடற்கரைவாசிகள் என்ற ஆங்கில புத்தகம் வர்ணிக்கிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

நீர்ப்பறவைகள் பெரும்பாலும் இரை ஏராளமாய் கிடைக்கும் இடத்தில் திரள் திரளாய்க் கூடுகின்றன. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சூத்திரத்தை அவை அறிந்திருக்கிறது போலும். கொன்று தின்னும் பறவைகளான பொரி வல்லூறு போன்றவை தனியாய் இருக்கும் பறவைகளையே பதம் பார்க்கின்றன. பலமுள்ள கூட்டத்தை தாக்க அவை பெரும்பாலும் துணிவதில்லை. இந்த வேடர்கள் தங்களைக் கபளீகரம் செய்யும் முன்பே, ஆயிரக்கணக்கான நீர்ப்பறவைகளின் விழிப்புள்ள கண்கள் இவற்றைப் பெரும்பாலும் கண்டுபிடித்துவிடுகின்றன. இந்தப் பாதுகாப்பிலிருந்து பயனடைய, அநேக நீர்ப்பறவை இனங்கள் ஒன்றுசேர்ந்து கும்பல் கும்பலாக கூடுகின்றன.

நீர்ப்பறவைகள் கூட்டமாகப் பறக்க ஆரம்பிப்பதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. நூற்றுக்கணக்கான ஏன், ஆயிரக்கணக்கான பறவைகள் கட்டிமுடித்தச் சரமாய் ஒட்டிக்கொண்டு வளைந்தும் நெளிந்தும், மேலும் கீழுமாய் செல்கின்றன. இதைப் பார்க்கையில் பின்னாலிருந்து யாராவது இவற்றை இயக்குகிறார்களா என்ற சந்தேகமே நமக்கு வந்துவிடுகிறது. “அந்த ஆயிரக்கணக்கான பறவைகள் இணைந்து உச்சக்கட்ட வேகத்தில் பறக்கும்போதே திடீர் திடீரென திசையை மாற்றுகின்றன. அத்தனை பறவைகளும் துல்லியமாய் ஒருங்கிணைந்து செயல்படுவதே ஓர் அற்புதம்தான்” என்று புகழாரம் சூட்டுவது உலகப் பறவைகள் கையேடு என்ற ஆங்கிலப் புத்தகம். டன்லின் பறவைகளின் கூட்டத்தை ‘அதிவேக கேமராக்களைக்’ கொண்டு பறவையியலாளர்கள் படம் பிடித்தனர். அந்தப் படங்களை ஆராய்ந்தபோது, ஒரு பறவைதான் முதலாவது பறக்கும் திசையை மாற்றுகிறது. சட்டென மற்ற பறவைகளும் அதோடு சேர்ந்து கொள்கின்றன என்பதைக் கண்டறிந்தனர்.

உலகம் சுற்றும் பறவைகள்

சில நீர்ப்பறவைகள் உண்மையில் உலகையே சுற்றுகின்றன. உதாரணமாக ரெட்நாட்ஸ், வெள்ளை உள்ளான் போன்றவை இனவிருத்திக்காக மற்ற எந்தப் பறவைகளைக் காட்டிலும் வடக்கே நெடுந்தூரம் பயணிக்கின்றன. பூமியில் எங்கெல்லாம் கடற்கரை இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்ப்பறவைகளைப் பார்க்க முடியும்; அவற்றின் ஓராண்டு பயணத்தில் கிட்டத்தட்ட 32,000 கிலோமீட்டர் தூரத்தை அவை கடக்கலாம்.

அவ்வாறு பயணிக்கையில் சில சமயம் பெருங்கடலைக் கடக்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஆனால், அவற்றால் நீந்தவோ, தண்ணீரின் மேல் ஓய்வெடுக்கவோ முடியாது. அதனால், அவை எக்கச்சக்கமான எரிபொருளை சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு ஜம்போ ஜெட் விமானம் பறக்க ஆரம்பிக்கையில் அதன் மொத்த எடையில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் எரிபொருள் நிரம்பியிருக்கும். ஒப்பிடுகையில், அதைவிட அதிகமான எரிபொருள் இந்தப் பறவைகளுக்குத் தேவைப்படுகிறது. இவ்வளவு எரிபொருளை அவை எவ்வாறு பெறுகின்றன?

பதிலை டேவிட் ஆட்டென்பரோ என்பவர் பறவைகளின் வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகத்தில் விளக்குகிறார்: “அவை [எரிபொருளைக்] கொழுப்பு வடிவில் சேர்த்து வைக்கின்றன; அலைகள் தழுவிச் செல்லும் ஆழமில்லாக் கரையோரங்களில் இருக்கும் உணவை அகோரப்பசியுடன் சாப்பிடுகின்றன, அதனால் கோடை காலத்தில் ஒருசில வாரங்களிலேயே அவற்றின் எடை ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. என்றாலும் சேமித்து வைக்கப்படும் கொழுப்பின் எடை நாம் நினைப்பதைக் காட்டிலும் அதிகம். ஏனென்றால், கூடுதலாக கொழுப்பை சேர்த்துவைப்பதற்காக மூளை, குடல்கள் போன்ற உள்ளுறுப்புகள் சுருங்கிக்கொள்கின்றன. இவ்வாறு, அதிகமான கொழுப்பு சேர்ந்தாலும் அந்தப் பறவைகளின் எடை தேவையில்லாமல் அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.”

பசிபிக் பொன்னிற உப்புக்கொத்தி பிரமிப்பூட்டும் பயணியாக இருக்கிறது, இது அலாஸ்காவிலிருந்து ஹவாய் தீவுகளுக்கு இடம்பெயர்கிறது. எங்கும் நிற்காமல் தொடர்ந்து 4,500 கிலோமீட்டர் பறக்கும் அதன் சக்தியே ஓர் அற்புதம்தான். அதிலும், கடல் நடுவே அமைந்திருக்கும் ஹவாய் தீவைக் கண்டுபிடிக்கும் அதன் சாமர்த்தியம் பறவைகளின் பயணத்தில் அற்புதத்திலும் அற்புதம். கண்காணிக்கப்பட்ட ஒரு பொன்னிற உப்புக்கொத்தி இந்தப் பயணத்தை நான்கு நாட்களுக்குள்ளாகவே முடித்துவிட்டது. வயதான ஒரு பறவை இந்தச் சுற்றுப்பயணத்தை 20 முறைக்கும் மேல் முடித்திருக்கிறது என்றால் பாருங்களேன்!

இறுதியாக, அவற்றின் இனப்பெருக்க இடமான ஆர்க்டிக் பகுதிகளுக்கு வரும்போது, இந்த அஞ்சாநெஞ்சப் பயணிகளின் வாழ்க்கை அவசரகதியில் ஓடுகிறது. இரண்டு வாரங்களுக்குள் அவை தங்களுக்கு ஓர் இணையைக் கண்டுபிடித்தாக வேண்டும். தனக்கென ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, கூடு கட்டவேண்டும். அதைத் தொடர்ந்து, சுமார் மூன்று வாரங்களுக்கு முட்டைகளை அடைகாத்து, அடுத்த மூன்று வாரங்களில் குஞ்சுகளை வளர்க்க வேண்டியிருக்கும். ஜூலையின் இறுதியில், மீண்டும் அவை தெற்கு நோக்கி பயணிக்கின்றன.

இடப்பெயர்ச்சியில் இடர்பாடுகள்

நீர்ப்பறவைகளின் நீண்ட பயணங்களில் நிறைய இடர்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஒரு மிகப்பெரிய மிரட்டல், மனிதர்களிடமிருந்து வருகிறது. இயற்கையியலாளர் ஜான் ஜேம்ஸ் ஆடபனின் அறிக்கைப்படி, 19-⁠ம் நூற்றாண்டில் ஒரு வேட்டைக் கும்பல் ஒரேநாளில் 48,000 அமெரிக்கன் பொன்னிற உப்புக்கொத்தி பறவைகளைச் சுட்டுவீழ்த்தியது. இன்று, உலகத்தில் இந்த இனத்தின் மொத்த எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரித்திருக்கிறது, ஆனால், அன்று கொல்லப்பட்டவற்றின் எண்ணிக்கையோடு ஒப்பிட அது இன்னும் குறைவாகவே உள்ளது.

ஈரநிலங்கள் இல்லாமல் போவதுகூட நீர்ப்பறவைகளுக்கு மற்றொரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதுபோன்ற நிலங்கள் இல்லாமல் போகும்போது அதற்கேற்றபடி தங்கள் வாழிடங்களை இப்பறவைகளால் உடனே மாற்றிக்கொள்ள முடியாது. “நீர்ப்பறவைகள் அவற்றின் இனவிருத்தி, இடப்பெயர்ச்சி, குளிர்காலத்தில் தங்குமிடங்களைத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றை காலங்காலமாய் ஒரே இடங்களில் ஒரே மாதிரி செய்து வருகின்றன. ஆனால், மனிதர்களோ அவற்றின் வாழிடங்களை வெகு சுலபமாக மாற்றிவிடுகிறார்கள் அல்லது அழித்துவிடுகிறார்கள்” என்பதாக நீர்ப்பறவைகள்​—⁠உலக நீர்ப்பறவைகளை இனம் காண்பதற்கு ஒரு வழிகாட்டி என்ற ஆங்கில புத்தகம் அங்கலாய்க்கிறது. இலட்சக்கணக்கான நீர்ப்பறவைகள் உயிர்வாழ்வது இடப்பெயர்ச்சிப் பயணத்தின்போது இடையில் தங்கும் இந்த முக்கியமான சரணாலயங்களைப் பாதுகாப்பதையே சார்ந்துள்ளது.

ஒரு சிறந்த உதாரணமாக ஐக்கிய மாகாணங்களில் உள்ள நியூ ஜெர்ஸியின் தென்மேற்கு கரையோரத்தில் இருக்கும் டெலாவெர் விரிகுடாவைச் சொல்லலாம். அங்கே இளவேனிற்காலத்தில் ஒரு லட்சம் ரெட் நாட் பறவைகள், குதிரைலாட நண்டுகளின் எக்கச்சக்கமான முட்டைகளை தின்பதற்காகக் கூடும். “பறவைகளின் உலகிலேயே நீண்டதூர பிரயாணத்தை நிறுத்தாமல்” அப்போதுதான் முடித்திருப்பதால் அவை பயங்கரப் பசியோடு இருக்கும். இரண்டு வாரங்களில் தென்கிழக்கு பிரேசிலிலிருந்து இந்த இடம் வரை 8,000 கிலோமீட்டர் தூரம் பயணித்திருக்கின்றன, இக்காலப்பகுதியில் அவற்றின் உடல் எடை பாதியாய்க் கரைந்திருக்கும்.

இயற்கை பாதுகாப்பாளர்களின் முயற்சியால் இந்த நீர்ப்பறவைகளுக்குப் பிடித்தமான இடைத்தங்கும் சரணாலயங்கள் அழிந்துபோகாமல் காப்பாற்றப்படலாம். ஒருவேளை, உங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே அதுபோன்ற இடமொன்று இருக்கலாம். கடல் அலைகள் மீது வளைந்து நெளிந்து வளையம்போடும் நீர்ப்பறவைகளின் கூட்டத்தை நீங்கள் பார்த்தாலோ செவிக்கு இன்பமூட்டும் அவற்றின் குரலைக் கேட்டுவிட்டாலோ அப்புறம் அவை உங்கள் நினைவுகளைவிட்டு நீங்குவது கடினம்.

இயற்கையியலாளரான ஆர்தர் மோரிஸ் இவ்வாறு எழுதுகிறார்: “கருப்பு, சாம்பல், வெள்ளை போன்ற நிறங்கள் கலந்து பளிச்சிடும் சிறகுகளுடன், வளைந்து நெளிந்து ஒன்றாகப் பறக்கும் சேன்ட்பைப்பர் பறவைக் கூட்டங்களை வேடிக்கை பார்த்திருக்கிறோம். இதற்காகவே, நாங்கள் ஒவ்வொருவரும் வெறிச்சோடிக்கிடக்கும் கடற்கரையிலோ ஆழமற்ற நீர்நிலைகளிலோ எண்ணற்ற தடவைகள் நின்றிருக்கிறோம்; இவற்றை பார்க்கும் ஒவ்வொரு முறையும், நாங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவோம். நீர்ப்பறவைகளைக் கவனிக்கிற அனைவருடைய அனுபவமும் இதுவாகத்தான் இருக்கும்!”

[அடிக்குறிப்பு]

a நீர்ப்பறவைகள் விஞ்ஞானரீதியாக காரட்ரை (Charadrii) குடும்பத்தைச் சேர்ந்தவை; அதில் 200-⁠க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

[பக்கம் 18-ன் பெட்டி/படம்]

உலகம் சுற்றுவதில் வல்லவர்கள்

ரெட் நாட்டுகள் நீண்ட தூரம் பறப்பதில் முதல் பரிசைப் பெறுகின்றன. வழக்கமாக கனடாவின் வடகோடியில் இனப்பெருக்கம் செய்யும் இந்தப் பறவைகள் குளிர்​காலத்தை மேற்கு ஐரோப்பாவிலோ தென் அமெரிக்​காவின் தென்முனையிலோ கழிக்கின்றன (10,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணிக்கின்றன)

[படத்திற்கான நன்றி]

KK Hui

கிட்டத்தட்ட பத்து லட்சம் டன்லின்களைக் கொண்ட கூட்டத்தை நெதர்லாந்திலும் மாரிடேனியாவிலும் பார்க்க முடிந்திருக்கிறது

பட்டைவால் மூக்கான்கள் அவற்றின் இனப்பெருக்க இடமான சைபீரியாவிலிருந்து பிரிட்டிஷ் தீவுகளுக்கோ தென் ஆப்பிரிக்காவுக்கோ மத்திய கிழக்கிற்கோ ஆஸ்திரேலியாவுக்கோ நியுஜிலாந்திற்கோ பயணிக்கின்றன

வெள்ளை உள்ளான் உலகத்திலுள்ள பெரும்பாலான கடற்கரைகளில் இவற்றைக் காணமுடியும். அவற்றில் சில, வடதுருவத்திலிருந்து 950 கிலோமீட்டருக்குள் இனப்பெருக்கம் செய்யலாம்

[பக்கம் 1617-ன் படங்கள்]

நீர்ப்பறவைகளால் நீரின் மேல் ஓய்வெடுக்க முடியாததால் பரந்த கடலைக் கடக்க பேரளவான கொழுப்பு தேவைப்படுகிறது

[பக்கம் 1617-ன் படம்]

கூடிவாழ்வதில் பாதுகாப்பைப் பெறும் வெள்ளை உள்ளான்கள்

[பக்கம் 17-ன் படம்]

யுரேஷிய கிளிஞ்சல் கொத்தி

[பக்கம் 17-ன் படம்]

புள்ளியுள்ள பவளக்காலி பறவை சதுப்பு நிலங்களில் உணவு தேடுகிறது

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

Top and bottom panoramic photos: © Richard Crossley/VIREO