Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்வேதியியல் வல்லுநருடன் ஒரு சந்திப்பு

உயிர்வேதியியல் வல்லுநருடன் ஒரு சந்திப்பு

உயிர்வேதியியல் வல்லுநருடன் ஒரு சந்திப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த பென்ஸில்வேனியாவிலுள்ள லேஹி பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறை பேராசிரியராக மைக்கேல் ஜே. பீஹீ பணியாற்றி வருகிறார். டார்வினின் விளங்கா கோட்பாடு​—⁠பரிணாமத்திற்கு எதிராக உயிர்வேதியியல் விடுக்கும் சவால் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை இவர் 1996-⁠ல் வெளியிட்டார். விழித்தெழு! பத்திரிகையின் மே 8, 1997 வெளியீட்டில் “நாம் எப்படித் தோன்றினோம்?​—⁠தற்செயலாகவா வடிவமைக்கப்பட்டதாலா?” என்ற தொடர்கட்டுரைகளில் பீஹீயின் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது. டார்வினின் விளங்கா கோட்பாடு புத்தகம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்துவந்த பத்து ஆண்டுகளின்போது பீஹீயின் விவாதங்கள் தவறென நிரூபிப்பதற்காகப் பரிணாமத்தை ஆதரிக்கும் விஞ்ஞானிகள் போராடியிருக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்கரான பீஹீயின் மத நம்பிக்கைகள் காரணமாக அவரால் விஞ்ஞான ரீதியில் சரியாக முடிவெடுக்க முடியாமல் போய்விட்டது என்பதாக அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். வேறு சிலர் அவருடைய நியாய விவாதம் விஞ்ஞானப்பூர்வமற்றது எனக் கூறினார்கள். பேராசிரியர் பீஹீயின் கருத்துகள் இவ்வளவு சர்ச்சைகளை எழுப்பியிருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள விழித்தெழு! அவரைப் பேட்டி கண்டது.

விழித்தெழு!: உயிர்கள் புத்திக்கூர்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு அத்தாட்சி இருப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

பேராசிரியர் பீஹீ: சிக்கலான வேலைகளைச் செய்யும் நோக்கத்துடன் வெவ்வேறு பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கிற எதையாவது பார்க்கையில் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறோம். தினந்தோறும் நாம் பயன்படுத்துகிற எந்திரங்களாகிய புல் அறுக்கும் எந்திரம், கார், அதைவிட இன்னும் எளிய கருவிகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். எலிப்பொறியை ஓர் உதாரணமாகச் சொல்ல விரும்புகிறேன். அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என நீங்கள் உடனே சொல்லிவிடுவீர்கள். எதை வைத்து? எலியைப் பிடிக்கும் வேலையைச் செய்யும் விதத்திலேயே அதன் ஒவ்வொரு பாகமும் அமைக்கப்பட்டிருப்பதால் அப்படிச் சொல்வீர்கள்.

உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்காக அவற்றின் மிகச் சிறிய பாகங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை விளக்குமளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியிருக்கிறது. உயிரினங்களில் உள்ள மூலக்கூறுகளும்கூட சிக்கல்வாய்ந்த பலதரப்பட்ட வேலைகளைச் செய்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. உதாரணமாக, உயிருள்ள செல்களில் சிறுசிறு மூலக்கூறு “வண்டிகள்” இருக்கின்றன; அவை செல்லின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு பொருள்களை எடுத்துச் செல்கின்றன. மிகச் சிறிய மூலக்கூறு “கைகாட்டி மரங்களும்” இருக்கின்றன; இவை, “வண்டிகள்” எந்தத் திசையில் திரும்ப வேண்டுமென்று சிக்னல் தருகின்றன. சில செல்களில் “மோட்டார்” பொருத்தப்பட்டுள்ளது. இது திரவத்தின் வழியாக செல்களை உந்தித் தள்ளுகிறது. இதுபோன்ற மிகச் சிக்கலான அமைப்பைக் கொண்ட வேறெந்த கருவியை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டாலும் அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்குத்தானே எல்லாரும் வருவார்கள். இதுவே சரியான விளக்கமாக இருக்க முடியும், டார்வினின் பரிணாமக் கோட்பாடு உண்மையென்று அடித்துச் சொல்லப்பட்டாலும்கூட. ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கும் எந்தவொரு பொருளைப் பார்த்தாலும் அது நிச்சயம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கே நாம் எப்போதும் வருகிறோம். ஆகவே, இந்த மூலக்கூறு அமைப்புகளும் புத்திக்கூர்மையுள்ள ஒருவரால் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என நாம் நினைப்பது சரியே.

விழித்தெழு!: புத்திக்​கூர்மைக்கு அத்தாட்சியான வடிவமைப்பைப் பற்றிய உங்கள் முடிவுகளை உங்களுடைய சகாக்களில் பெரும்பாலோர் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?

பேராசிரியர் பீஹீ: விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் என் முடிவுகளை ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், இயற்கையிலுள்ள பொருள்கள் புத்திக்கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்து விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டது, அது, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது என அவர்கள் நினைக்கிறார்கள். இந்த முடிவு அநேகரது மனத்தை நெருடச் செய்திருக்கிறது. என்றாலும், அத்தாட்சிகள் காட்டுகிற முடிவையே விஞ்ஞானிகள் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை, இந்த முடிவுக்கு இத்தனை வலுவான அத்தாட்சிகள் இருந்தும், படைப்பாளர் இருப்பதை ஒத்துக்கொண்டால் தார்மீகக் கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் இதை நம்பாதிருப்பது சுத்தக் கோழைத்தனம்.

விழித்தெழு!: இயற்கையில் உள்ளவை புத்திக்கூர்மையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது அறியாமைக்கு அடையாளம் என்பதாக விமர்சகர்கள் சொல்வதற்கு நீங்கள் எவ்வாறு பதில் அளிக்கிறீர்கள்?

பேராசிரியர் பீஹீ: இயற்கையில் காணப்படும் பொருள்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்ற முடிவுக்கு வருவது அறியாமைக்கு அடையாளம் அல்ல. அறியாதவற்றின் பேரில் அல்லாமல், அறிந்தவற்றின் பேரிலேயே நாம் அந்த முடிவுக்கு வருகிறோம். 150 வருடங்களுக்கு முன்பு டார்வின் உயிரினத் தோற்றம் என்ற தனது புத்தகத்தை வெளியிட்டபோது உயிர் இந்தளவு சிக்கல் வாய்ந்தது என்பது தெரிந்திருக்கவில்லை. செல், கடல் சேற்றிலிருந்து திடீரென்று உருவாகுமளவுக்கு சிக்கலின்றி இருப்பதாக விஞ்ஞானிகள் நினைத்தார்கள். ஆனால், அதற்குப் பின்னரே செல்கள் படுசிக்கல் வாய்ந்தவை என்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சொல்லப்போனால், 21-⁠ம் நூற்றாண்டின் எந்திர அமைப்புகளைவிட படுசிக்கல் வாய்ந்தவையாக இருப்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சிக்கலான அமைப்பு ஒரு நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கான அத்தாட்சியை அளிக்கிறது.

விழித்தெழு!: நீங்கள் குறிப்பிட்ட சிக்கலான மூலக்கூறு அமைப்பை, இயற்கைத் தெரிவின் மூலமாகப் பரிணாமம் உருவாக்கியிருக்கலாம் என்பதற்கு விஞ்ஞானப்பூர்வ அத்தாட்சி ஏதாவது இருக்கிறதா?

பேராசிரியர் பீஹீ: விஞ்ஞானப் புத்தகங்களில் தேடிப்பார்த்தால், சிக்கல்வாய்ந்த மிகச்சிறிய அத்தகைய மூலக்கூறுகள் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டின் மூலம் வந்ததை பரிசோதனை மூலமாகவோ விளக்கமான விஞ்ஞான மாதிரியின் மூலமாகவோ நிரூபிக்க எவருமே தீவிர முயற்சி எடுக்கவில்லை என்பது தெரியவரும். இத்தனைக்கும், என்னுடைய புத்தகத்தை நான் வெளியிட்டதை அடுத்துவந்த பத்து வருடங்களில், தேசிய விஞ்ஞான கல்வி அமைப்பு, அமெரிக்க அறிவியல் முன்னேற்ற சங்கம் போன்ற அநேக விஞ்ஞான நிறுவனங்கள், புத்திக்கூர்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கு உயிர் அத்தாட்சி அளிக்கிறது என்ற கருத்தை முறியடிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் உடனே செய்யும்படி அவற்றின் அங்கத்தினர்களைக் கேட்டுக்கொண்டன.

விழித்தெழு!: குறிப்பிட்ட தாவர மற்றும் விலங்குகளில் சில அம்சங்கள் நன்றாக வடிவமைக்கப்படவில்லை என்று வாதாடுபவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்ல விரும்புகிறீர்கள்?

பேராசிரியர் பீஹீ: உயிரினத்தில் குறிப்பிட்ட ஓர் அம்சம் இருப்பதற்கான காரணத்தை நாம் அறியாதிருக்கலாம்; அதற்காக, அந்த அம்சமே வீணானது என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, பயனற்றவையாகத் தோன்றும் எச்ச உறுப்புகள் மனித உடலிலும் மற்ற உயிரினங்களின் உடலிலும் காணப்படுவதால், அவை சரியாக வடிவமைக்கப்படவில்லை என ஒருகாலத்தில் நினைக்கப்பட்டது. உதாரணத்திற்கு, குடல்வாலும் நாவடிச்சதையும் (tonsils) அப்படிப்பட்ட உறுப்புகளாகவே ஒருகாலத்தில் கருதப்பட்டதால் அவை பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டன. ஆனால், அவை சரிவர வளர்ச்சியடையாத உறுப்புகள் அல்ல, மாறாக, நோய் எதிர்ப்பு அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் உறுப்புகள் என்ற உண்மை பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

உயிரினங்கள் வளர்ச்சியடைகையில் சில மாற்றங்கள் தற்செயலாக நிகழ்வது உண்மையே. என்னுடைய கார் நெளிந்திருப்பதாலோ, அதன் டயர் பஞ்சராகியிருப்பதாலோ, காரை அல்லது அதன் டயரை யாரும் வடிவமைக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா? அதேபோல், உயிரியலில் சில காரியங்கள் தற்செயலாக நிகழ்வதை வைத்து உயிர்களில் காணப்படும் சிக்கல்வாய்ந்த செல்கள் தானாகவே வந்துவிட்டன என்று சொல்லிவிடமுடியாது. அப்படிச் சொல்வது கொஞ்சம்கூட அறிவுப்பூர்வமானதல்ல.

[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]

“என்னைப் பொறுத்தவரை, இந்த முடிவுக்கு இத்தனை வலுவான அத்தாட்சிகள் இருந்தும், படைப்பாளர் இருப்பதை ஒத்துக்கொண்டால் தார்மீகக் கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்ற காரணத்தினால் இதை நம்பாதிருப்பது சுத்தக் கோழைத்தனம்”