Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ “கிரகத்தில் ஆழ்கடலே மிகப் பெரிய குடியிருப்பு இடமாக உள்ளது. மிகக் கடுமையான சூழலையுடைய வாழிடங்களில் இதுவும் ஒன்று . . . இருந்தாலும், திரும்பும் இடமெல்லாம் அங்கே உயிரினங்களை காணமுடிகிறது, சில சமயங்களில் அவற்றின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறது.”​—⁠நியூ சயன்டிஸ்ட், பிரிட்டன்.

◼ சமீபத்திய ஒரு வழக்கில், அ.ஐ.மா., பென்சில்வேனியா, ஹரஸ்பர்க்கில் உள்ள கூட்டமைப்பு நீதிமன்றத்தின் நீதிபதி, “பரிணாமத்திற்குப் பதிலாக [படைப்பைப்] பற்றி அரசாங்க பள்ளியின் அறிவியல் வகுப்பில் சொல்லிக்கொடுப்பது அரசியலமைப்பிற்கு முரணானது” என்று தீர்ப்பளித்துள்ளார்.​—⁠நியு யார்க் டைம்ஸ், அ.ஐ.மா.

◼ “51 சதவீத அமெரிக்கர்கள் பரிணாமத்தை நம்புவதில்லை” என்று 2005-⁠ல் எடுக்கப்பட்ட ஒரு செய்திக் கணக்கெடுப்பு கூறுகிறது.​—⁠நியு யார்க் டைம்ஸ், அ.ஐ.மா.

◼ ஹரீயட் என்ற காலாபகஸ் ராட்சஸ ஆமை ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனிலுள்ள உயிரியல் பூங்காவில் இருக்கிறது; இதன் வயது 175, எடை 150 கிலோ. “உலகில் உயிர்வாழும் விலங்குகளில் இதுவே வயது முதிர்ந்தது.”​—⁠ஆஸ்திரேலியன் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்.

◼ சில மக்காச்சோள ரகங்கள் மேற்கத்திய வேர்ப்புழுக்களிடமிருந்து எப்படித் தங்களைப் பாதுகாத்துக்கொள்கின்றன என்பதை சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவை ஒருவித வாசனையை நிலத்தில் வெளியிடுகின்றன. இது சின்னஞ்சிறு நூலிழைப்புழுக்களை கவருகிறது. இந்த நூலிழைப்புழுக்கள் வேர்ப்புழுக்களின் முட்டைப்புழுக்களை கொன்றுவிடுகின்றன.​—⁠டை வெல்ட், ஜெர்மனி.

கேமராவில் சிக்கிய ராட்சஸ சிப்பிமீன்

ஜப்பானின் தென்பகுதியிலுள்ள போனன் தீவுகளுக்கு அருகே உயிருள்ள ராட்சஸ சிப்பிமீன் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறையாக புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் சிறிய சிப்பி மீனையும் இறால் சதையையும் வைத்து தூண்டில் போட்டார்கள். அதோடு கேமராக்களையும் சேர்த்து கீழிறக்கினார்கள். சுமார் 900 மீட்டர் ஆழத்தில் காணப்பட்ட அந்த ராட்சஸ சிப்பிமீன் சுமார் 8 மீட்டர் நீளம் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

“டைனோசர்கள் புல்லைத் தின்றன”

“டைனோசர்கள் புல்லைத் தின்றன” எனக் கண்டுபிடித்தபோது “விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர்” என அஸோஸியேடட் ப்ரெஸ் அறிக்கை கூறுகிறது. சாரபாட் இனத்துடைய சாணத்தின் புதைபடிவம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்தபோதுதான் மேற்குறிப்பிடப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. விஞ்ஞானிகள் வியந்ததற்கு காரணம் என்ன? “டைனோசர்கள் மறைந்து நீண்டகாலத்திற்கு பிறகுதான் புற்கள் உருவானதாக” அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள் என அந்த அறிக்கை விளக்குகிறது. மேலுமாக, அவற்றிற்கு “சொரசொரப்பான புற்களை அரைத்துக் கூழாக்கத் தேவையான விசேஷ பற்கள் இருக்கவில்லை” என்றும் நம்பிக்கொண்டிருந்தார்கள். “டைனோசர்கள் புற்களைத் தின்றன என்பதை பெரும்பாலான மக்கள் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள்” என்று புதைபடிவ தாவரவியல் வல்லுநரும் அந்தக் கண்டுபிடிப்புக் குழுவின் தலைவியுமான கேரலைன் ஸ்ட்ராயம்பெர்க் சொல்கிறார்.

தேனீக்கள் எப்படி பறக்கின்றன?

தேனீக்களால் பறக்க முடியாது என்று பொறியாளர்கள் நிரூபித்துவிட்டார்கள் என நகைச்சுவையாக சொன்னதுண்டு. குட்டையான சிறகுகளை மெதுமெதுவாக அடிக்கும் இந்த “கனமான” பூச்சிகளால் கண்டிப்பாக மேலே பறக்க இயலாது என்றே தோன்றியது. அப்படியிருந்தும், இவற்றால் எப்படிப் பறக்க முடிகிறது என்ற ரகசியத்தைக் கண்டுபிடிக்க, பொறியாளர்கள் “சிறகடித்தபடியே அந்தரத்தில் நிற்கும் தேனீக்களை படம்பிடித்தார்கள்; அதுவும், ஒரு வினாடிக்கு 6000 ப்ரேம்கள் என்ற கணக்கில் அவற்றைப் படம்பிடித்தார்கள்” என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை சொல்கிறது. தேனீக்களின் யுக்தி “அசாதாரணமானது” என்று வர்ணிக்கப்படுகிறது. “சிறகுகள் பின்னோக்கி 90 டிகிரி வில்வட்டத்தில் சுழன்று, பிறகு பழைய நிலைக்கு வருகிறது; இவ்வாறு வினாடிக்கு 230 முறை அடிக்கிறது. . . . புரொப்பலர் சுற்றுகையில் அதிலுள்ள பிளேடுகளும் தன்னைத்தானே சுற்றினால் எப்படி இருக்குமோ அதுபோன்றே இந்த தேனீக்களின் சிறகுகளும் சுற்றுகின்றன” என்று அந்த ஆராய்ச்சிக் குழுவிலுள்ள ஒருவர் விளக்குகிறார். இந்தக் கண்டுபிடிப்பு புரோப்பலர்களை மறுவடிவமைப்பு செய்யவும் அதிக திறமையான விமானங்களை வடிவமைக்கவும் பொறியாளர்களுக்கு உதவலாம்.

பாடும் சுண்டெலிகள்

“சுண்டெலிகளால் பாட முடியும், . . . இந்தச் சுண்டெலிகள் தங்களுடைய வருங்கால ஜோடிகளுக்காகப் பாடுகின்றன. அவற்றின் பாட்டு, கிட்டத்தட்ட பறவைகளுடைய பாட்டைப் போலவே சிக்கலானவையாக இருக்கின்றன” என்கிறது நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை. சுண்டெலிகளின் பாட்டுகள் மனிதர்களால் கேட்க முடியாதளவு அதிர்வெண்களைக் கொண்டிருக்கின்றன. அதனால் அவை பாடுவதை மனிதர்கள் இதுவரை கவனிக்காமல் இருந்திருக்கலாம். அ.ஐ.மா., மிஸ்செளரியிலுள்ள செ. லூயிஸில் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள் ஆண் சுண்டெலிகளின் ஒலிகளில் பாடலுக்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மனிதர்கள் மட்டுமின்றி திமிங்கலங்கள், சில வெளவால்கள் ஆகியவை பாட்டு பாடத் தெரிந்த மற்ற பாலூட்டிகள் ஆகும். இப்போது இந்த விசேஷ வரிசையில் எலிகளும் சேர்ந்திருக்கின்றன.