Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது முக்கியமா?

நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது முக்கியமா?

நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது முக்கியமா?

வாழ்க்கைக்கு நோக்கம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை பரிணாமம் உண்மையாக இருந்தால் சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில் சொல்லப்பட்டிருந்த பின்வரும் கூற்று நிஜமாகிவிடும்: “வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை. இதைத்தான் பரிணாமம் நமக்குக் கற்பிக்கிறது.”

அந்தக் கூற்றைக் குறித்துச் சற்று சிந்திக்கலாம். வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லையென்றால், ஏதோ உயிரோடிருக்கும்வரை நல்லதைச் செய்துவிட்டு, உங்கள் மரபியல் பண்புகளை உங்கள் சந்ததிக்குக் கடத்திவிட்டு கடைசியில் இறப்பதே வாழ்க்கை என ஆகிவிடலாம். அப்படி இறந்த பின்னர் ஒன்றுமே இல்லாமல் போய்விடலாம். அப்படியென்றால், வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும் பகுத்தறியவும் தியானிக்கவும் வல்ல மூளை தற்செயலாக உருவாகிவிட்டதா?

அதுமட்டுமல்ல, பரிணாமத்தை நம்புகிற அநேகர் கடவுள் இல்லை என்கிறார்கள், அல்லது கடவுள் இருந்தாலும் மனித விவகாரங்களில் அவர் தலையிடுவதில்லை என்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அரசியல்வாதிகள், கல்விமான்கள், மதத்தலைவர்கள் ஆகியோரின் கைகளில்தான் நம் எதிர்காலம் இருக்கும். இத்தனை வருடங்களாக இவர்களால் குழப்பமும், சண்டைசச்சரவுகளும், ஊழலுமே ஏற்பட்டிருக்கின்றன. கடவுள் தலையிடப்போவதில்லை என்பது உண்மையானால், இந்நிலைமைகள் தொடர்கதையாவது உறுதி. ஒருவேளை, பரிணாமம் உண்மையாக இருந்தால், “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்ற அர்த்தமற்ற நம்பிக்கையில் வாழ்வது சரியாகவே தோன்றும்.​—1 கொரிந்தியர் 15:31.

மேற்குறிப்பிடப்பட்ட கருத்துகளையோ, அவற்றுக்கு அடிப்படையாக இருக்கிற பரிணாமக் கோட்பாட்டையோ, யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை நீங்கள் தாராளமாக நம்பலாம். பைபிள் சொல்வதையே அவர்கள் உண்மையென ஏற்றுக்கொள்கிறார்கள். (யோவான் 17:17) எனவே, நாம் உருவான விதத்தைப் பற்றி பின்வருமாறு பைபிள் சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்: “ஜீவஊற்று உம்மிடத்தில் [கடவுளிடத்தில்] இருக்கிறது.” (சங்கீதம் 36:9) அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை.

நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கவே இருக்கிறது. நம் படைப்பாளர், தம்முடைய விருப்பத்திற்கு இசைய வாழ விரும்புகிற அனைவருக்கும் ஒரு நல்ல நோக்கத்தை வைத்திருக்கிறார். (பிரசங்கி 12:13) அந்த நோக்கம், குழப்பங்களோ, சண்டைகளோ, ஊழல்களோ இல்லாத ஏன், சாவுகூட இல்லாத ஒரு வாழ்வை உட்படுத்துகிறது. (ஏசாயா 2:4; 25:6-8) கடவுளுடைய விருப்பத்தை அறிந்துகொண்டு அதன்படி நடப்பதே வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரும், வேறு எதுவும் வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தரமுடியாது என்பதற்கு உலக முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் சான்றளிக்கிறார்கள்!​—யோவான் 17:3.

நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பது மிக மிக முக்கியம். ஏனென்றால், அது உங்களது இன்றைய மகிழ்ச்சியான வாழ்க்கையை மாத்திரமல்ல, எதிர்கால வாழ்க்கையையும் தீர்மானிக்கும். ஆனால் தெரிவு உங்கள் கையில். நாம் இயற்கையில் காண்பவை அனைத்தும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு அத்தாட்சிகள் ஏராளமாக உள்ளன. இத்தகைய வடிவமைப்புகளுக்கு விளக்கம் அளிக்க முடியாத ஒரு கோட்பாட்டை நீங்கள் நம்புவீர்களா? அல்லது, பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் புத்திக்கூர்மையுள்ள ஒரு வடிவமைப்பாளருடைய, அதாவது, ‘சகலத்தையும் சிருஷ்டித்த’ யெகோவா தேவனுடைய கைவண்ணம் என்று பைபிள் சொல்வதை நம்புவீர்களா?​—⁠வெளிப்படுத்துதல் 4:11.