Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படைப்பாளர் இருப்பதை நாங்கள் ஏன் நம்புகிறோம்

படைப்பாளர் இருப்பதை நாங்கள் ஏன் நம்புகிறோம்

படைப்பாளர் இருப்பதை நாங்கள் ஏன் நம்புகிறோம்

புத்திக்கூர்மைக்கு அத்தாட்சியான வடிவமைப்புகள் இயற்கையில் காணப்படுவதை வெவ்வேறு விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் பலரும் கவனித்திருக்கிறார்கள். பூமியிலுள்ள உயிர்களின் சிக்கலான வடிவமைப்பு தற்செயலாக உருவாகிவிட்டதாய் நம்புவது நியாயமற்றதென அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை அநேக விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் நம்புகிறார்கள்.

அவர்களில் சிலர் யெகோவாவின் சாட்சிகளாய் ஆகியிருக்கிறார்கள். பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுளே இந்தப் பிரபஞ்சத்தை வடிவமைத்து உருவாக்கியவர் என்பதை அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் ஏன் அந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்? இதை அறிய, அவர்களில் சிலரை விழித்தெழு! பேட்டி கண்டது. அவர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இதோ: a

“உயிர்களில் புத்திக்கு எட்டாத சிக்கலான வடிவமைப்புகள்”

வால்ஃப்-பக்காஹார்ட் லான்னிக்

பின்னணிக் குறிப்பு: தாவரங்களின் மரபியலில் திடீர்மாற்றம் நிகழ்வது சம்பந்தப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சியில் கடந்த 28 வருடங்களாக ஈடுபட்டிருக்கிறேன். அதில் 21 வருடங்களை ஜெர்மனியின் கோலாங் நகரிலுள்ள மாக்ஸ் ப்லாங்க் தாவர இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் செலவிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராகவும் சேவை செய்து வந்திருக்கிறேன்.

மரபியல் துறையில் செயல்முறையாக ஆராய்ச்சி செய்ததிலிருந்தும், உடலியல், வடிவ அமைப்பியல் போன்ற உயிரியல் பாடங்களில் நான் கற்ற விஷயங்களிலிருந்தும், உயிர்களில் புத்திக்கு எட்டாத சிக்கலான வடிவமைப்புகள் ஏராளமாக இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். மிகச் சிறிய உயிரினங்களும் புத்திக்கூர்மையாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற என் நம்பிக்கையை இந்த ஆராய்ச்சிகள் வலுப்படுத்தியிருக்கின்றன.

உயிர்களின் சிக்கலான வடிவமைப்பை விஞ்ஞானிகள் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள். ஆனால், வியப்பூட்டும் இத்தகைய உண்மைகளை பரிணாமக் கோட்பாட்டிற்குச் சாதகமாகவே எடுத்துக்கொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், படைப்பு பற்றிய பைபிளின் கருத்துக்கு எதிராக எழுப்பப்படும் விவாதங்களை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பார்க்கையில் அவை வெற்றிபெறுவதில்லை. இப்படிப்பட்ட விவாதங்களின் பேரில் பல பத்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்திருக்கிறேன். பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் விதிகள் மிகத் துல்லியமாக இயற்றப்பட்டிருப்பதைச் சிந்தித்த பிறகும், உயிருள்ள பொருள்களை மிகக் கவனமாக ஆராய்ச்சி செய்த பிறகும், படைப்பாளர் ஒருவர் இருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை.

‘காரணம் இல்லாமல் காரியம் இல்லை’

பைரன் லியான் மிடோஸ்

பின்னணிக் குறிப்பு: அமெரிக்காவில் வசிக்கும் நான், ஐ.மா. தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிறுவனத்தில் லேசர் இயற்பியல் துறையில் வேலை செய்கிறேன். பூகோள சீதோஷணம், வானிலை, மற்ற கிரக நிகழ்வுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் திறனை முன்னேற்றுவிக்கும் தொழில்நுட்ப மேம்பாட்டில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். வர்ஜீனியா பகுதியிலுள்ள கில்மார்னக் டவுனில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் மூப்பராக இருக்கிறேன்.

நான் பெரும்பாலும் இயற்பியல் கொள்கைகள் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்கிறேன். சில காரியங்கள் எப்படி நடைபெறுகின்றன, ஏன் நடைபெறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயலுகிறேன். இயற்கையில் நான் காணக்கூடிய ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னால் காரணம் இருக்கிறது என்பதை என் ஆராய்ச்சித் துறை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. இயற்கையில் உள்ள எல்லாவற்றுக்கும் காரணர் கடவுளே என்பதை ஏற்றுக்கொள்வது விஞ்ஞானப்பூர்வமாக சரியென்றே நம்புகிறேன். இயற்கை விதிகள் அந்தளவு நிலையாக இருப்பதால் அவற்றை ஒருவர் ஒழுங்கமைத்திருக்கிறார், படைத்திருக்கிறார் என்பதை நான் நம்பியே ஆகவேண்டும்.

இதுவே சரியான முடிவென்பது இத்தனை தெளிவாகத் தெரிகையில், விஞ்ஞானிகள் பலர் ஏன் பரிணாமக் கோட்பாட்டை நம்புகிறார்கள்? ஒருவேளை இந்தப் பரிணாமக் கோட்பாட்டாளர்கள் தங்களது ஆராய்ச்சியில் கிடைக்கிற தகவல்களை, ஏற்கெனவே எடுத்துவிட்ட ஆதாரமற்ற முடிவுகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாலா? விஞ்ஞானிகள் இப்படிச் செய்வது சகஜம்தான். ஆனால் அப்படிப்பட்ட தகவல்கள் என்னதான் நம்பத்தக்கவையாக இருந்தாலும் சரி, அவை உண்மை என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. உதாரணத்திற்கு, லேசர் இயற்பியலில் ஆராய்ச்சி செய்யும் ஒருவர், ஒலி அலைகளைப் போலவே ஒளியும் அலை வடிவில் இருப்பதாக அடித்துக் கூறலாம்; ஒளி பொதுவாக அலையைப் போலவே இயங்குவதால் அவர் அவ்வாறு கூறலாம். என்றாலும், அவருடைய முடிவு திருத்தமானதாக இருக்காது. ஏனென்றால், ஃபோட்டான்கள் எனப்படும் துணுக்குகளாகவும் ஒளி இயங்குவதாக அத்தாட்சி காட்டுகிறது. அவ்வாறே, பரிணாமக் கோட்பாட்டை உண்மையென வலியுறுத்துபவர்கள் அரைகுறை அத்தாட்சியின் பேரிலேயே முடிவெடுக்கிறார்கள்; அதுமட்டுமின்றி அத்தாட்சிகள்மீது தங்களுடைய ஆதாரமற்ற முடிவுகள் செல்வாக்கு செலுத்த இடம்கொடுத்துவிடுகிறார்கள்.

பரிணாமக் கோட்பாட்டு “வல்லுநர்கள்” மத்தியிலேயே கருத்துவேறுபாடுகள் நிலவுகையில் மக்கள் இவ்வளவு சுலபமாக அந்தக் கோட்பாட்டை நம்பிவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணமாக, வல்லுநர்களில் சிலர் 2-ஐயும் 2-ஐயும் கூட்டினால் 4 வரும் என்று சொல்ல, வேறு சில வல்லுநர்களோ, 3 அல்லது ஒருவேளை 6 என்று சொல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். இப்படி ஆளாளுக்கொரு பதிலைச் சொன்னால் அடிப்படைக் கணிதம் நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

“எதுவும் தானாக வந்துவிடாது”

கென்னத் லாய்டு டானாக்கா

பின்னணிக் குறிப்பு: நான் நில இயல் துறையில் ஆராய்ச்சி செய்துவருகிறேன். தற்சமயம் அரிஜோனா மாகாணத்தைச் சேர்ந்த ஃப்ளாக்ஸ்டாஃப் நகரிலுள்ள ஐ.மா. நில இயல் சர்வே நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக விண்கோள நில இயலிலும், நில இயல் சம்பந்தப்பட்ட பிற துறைகளிலும் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். நான் எழுதிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும், செவ்வாய்க் கிரகத்தின் நில வரைபடங்களும் அங்கீகாரம் பெற்ற விஞ்ஞானப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பைபிளை வாசிக்க மற்றவர்களை ஊக்கப்படுத்துவதற்கு, யெகோவாவின் சாட்சியாகிய நான் ஒவ்வொரு மாதமும் சுமார் 70 மணிநேரம் செலவிடுகிறேன்.

நான் படித்துவந்த காலத்தில் பரிணாமக் கோட்பாடு உண்மையென சொல்லித்தரப்பட்டது. ஆனால், இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்குத் தேவைப்பட்டிருக்கும் பேரளவான ஆற்றல், சக்திவாய்ந்த ஒரு படைப்பாளரிடமிருந்து வராமல் தானாக வந்திருக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதுவும் தானாக வந்துவிடாது. படைப்பாளர் இருக்கிறார் என்பதற்கான வலுவான ஆதாரத்தை பைபிளிலேயே கண்டிருக்கிறேன். நில இயல் சம்பந்தப்பட்ட ஏராளமான விஞ்ஞான உண்மைகளை பைபிளில் காணமுடிகிறது. அவற்றில் சில, பூமி உருண்டையாக இருக்கிறது, ‘அந்தரத்தில் தொங்குகிறது,’ என்பவையே. (யோபு 26:7; ஏசாயா 40:22) மனிதர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே இந்த உண்மைகள் பைபிளில் எழுதப்பட்டுவிட்டன.

நாம் படைக்கப்பட்டிருக்கும் விதத்தைக் குறித்து யோசித்துப் பாருங்கள். புலனறிவு, நம்மைப் பற்றிய விழிப்புணர்வு, அறிவுத் திறன், பேச்சுத்தொடர்பு கொள்ளும் திறன், உணர்ச்சிகள் ஆகியவை நமக்கு உள்ளன. குறிப்பாக, நம்மால் அன்பை உணர முடியும், அதற்கு நன்றியுணர்வைக் காட்ட முடியும், மற்றவர்களிடம் அன்பு காட்டவும் முடியும். மனிதர்களிடம் அற்புதமான இந்தக் குணங்கள் எப்படி வந்தன என்பதை பரிணாமக் கோட்பாட்டால் விளக்க முடியாது.

‘பரிணாமக் கோட்பாட்டை ஆதரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தகவல்கள் எந்தளவு உண்மையானவை, நம்பகமானவை?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இது சம்பந்தமாக நில இயல் ஆராய்ச்சிகளில் கிடைத்த தகவல்கள் முற்றுப் பெறாதவையாகவும் சிக்கல் வாய்ந்தவையாகவும் குழப்பம் தருபவையாகவும் உள்ளன. பரிணாமம் எப்படி நடந்திருக்கலாம் என்பதை விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி ஆய்வுக்கூடங்களில் செய்துகாட்ட பரிணாமக் கோட்பாட்டாளர்கள் முயன்றபோது தோல்வியையே தழுவினார்கள். தகவல்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தாலும், அவர்களுடைய கண்டுபிடிப்புகளுக்கு சுயநல நோக்கத்துடனேயே விளக்கம் அளிக்கிறார்கள். இப்படித் தகவல்கள் அரைகுறையாக இருக்கும்போதோ முரண்பாடாக இருக்கும்போதோ விஞ்ஞானிகள் தங்கள் சொந்த கருத்துகளை நுழைத்துவிடுகிறார்கள். விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் அவர்களுடைய தொழிலும் சுயமதிப்பு சம்பந்தப்பட்ட அவர்களுடைய கண்ணோட்டமுமே முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஒரு விஞ்ஞானியாகவும் பைபிள் மாணாக்கனாகவும், நான் தெள்ளத்தெளிவான விளக்கத்தைப் பெறுவதற்காக, நிரூபிக்கப்பட்டிருக்கிற நிஜங்களுடனும் ஆராய்ச்சிகளின் முடிவுகளுடனும் முரண்படாத, கலப்படமற்ற உண்மை எதுவென்று தேடி வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புவதே நியாயமாகத் தோன்றுகிறது.

“செல்லில் தெளிவாகக் காணப்படும் வடிவமைப்பு”

பௌலா கின்ச்சாலோ

பின்னணிக் குறிப்பு: செல் மற்றும் மூலக்கூறு உயிரியல், நுண்ணுயிரியல் ஆகிய துறைகளில் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்துவந்திருக்கிறேன். தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜியா மாகாணத்திலுள்ள அட்லாண்டா நகரில் எமரி பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறேன். அதோடு, ரஷ்ய மொழி பேசும் ஏரியாவிலுள்ள மக்களுக்கு பைபிளைக் கற்பிக்கும் வாலண்டியராகவும் இருக்கிறேன்.

மூலக்கூறு உயிரியல் சம்பந்தமாக நான் படித்தபோது, செல்லைப் பற்றியும் அதன் பாகங்களைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கே நான்கு வருடங்களைச் செலவிட்டேன். டிஎன்ஏ, ஆர்என்ஏ, புரதங்கள், வளர்சிதை மாற்றப் பாதைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிக்கப் படிக்க, அவற்றின் சிக்கலான தன்மை, ஒழுங்கமைப்பு, துல்லியம் ஆகியவற்றைக் கண்டு மலைத்துப் போனேன். செல்லைப் பற்றி இதுவரை தெரிந்த தகவல்களே இப்படி மலைக்க வைக்கிறதே, தெரியாத தகவல்கள் இன்னும் எவ்வளவு இருக்கிறதோ என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். நான் கடவுளை நம்புவதற்கு ஒரு காரணம், செல்லில் தெளிவாகக் காணப்படும் வடிவமைப்பு ஆகும்.

பைபிளை நான் படித்ததிலிருந்து படைப்பாளரின் பெயர் யெகோவா என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர் புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பாளர் மட்டுமல்ல, என்மீது அக்கறை காட்டும் ஓர் அன்பான கரிசனையுள்ள தகப்பனும்கூட என்பதை உளமார நம்புகிறேன். வாழ்க்கையின் நோக்கத்தை பைபிள் விளக்குகிறது; அதோடு, சந்தோஷமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் தருகிறது.

பரிணாமக் கோட்பாட்டைப் பற்றி பள்ளியில் கற்றுக்கொள்ளும் பிள்ளைகள் எதை நம்புவது என்று தெரியாமல் திணறலாம். இது அவர்களுக்கு ஒரு குழப்பமான காலப்பகுதியாகவும் இருக்கலாம். அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், இது அவர்களுடைய விசுவாசத்திற்கு வந்த சோதனைதான். ஆனால் இந்தப் பரிட்சையில் அவர்கள் வெற்றிகாண முடியும். எப்படி? நம்மைச் சுற்றி இயற்கையில் காணப்படுகிற பொருட்களை ஆராய்வது ஒரு வழி. அத்துடன், படைப்பாளரைப் பற்றியும் அவருடைய பண்புகள் பற்றியும் அதிகமதிகமாகத் தெரிந்துகொள்வது இன்னொரு வழி. நான் இதையே செய்திருக்கிறேன். அதனால் படைப்பு பற்றி பைபிள் சொல்கிற தகவல்கள் அனைத்தும் துல்லியமானவை, மெய் விஞ்ஞானத்துடன் அவை முரண்படுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

“அற்புதமான எளிய விதிகள்”

என்ரிக் ஹெர்னான்டெஸ் லேமஸ்

பின்னணிக் குறிப்பு: யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் நான் முழு நேர ஊழியம் செய்துவருகிறேன். மெக்சிகோ தேசிய பல்கலைக்கழகத்தில், கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சியும் செய்கிறேன். இயற்கையில் நிகழும் புவிஈர்ப்பு சார்ந்த வெப்ப இயக்கவியல் சம்பந்தப்பட்ட விபத்திற்கு (gravothermal catastrophe), அதாவது, விண்மீன் விரிவடைவதற்கு (star growth), வெப்ப இயக்கவியலின் அடிப்படையில் விளக்கம் அளிக்கும் வேலையைத் தற்போது செய்துவருகிறேன். டிஎன்ஏ-யின் சிக்கலான அமைப்பு பற்றியும் ஆராய்ச்சி செய்திருக்கிறேன்.

உயிர் மிகமிக சிக்கலான வடிவமைப்பைக் கொண்டிருப்பதால் அது தற்செயலாக வந்திருக்கவே முடியாது. உதாரணமாக டிஎன்ஏ மூலக்கூறில் உள்ள கணக்கிலடங்கா தகவல்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கணித அடிப்படையில், ஒரேவொரு குரோமோசோம் குருட்டாம்போக்கில் உருவாவதற்கான சாத்தியக்கூறு, ஒன்பது லட்சக் கோடியில் ஒன்றுக்கும் குறைவானதே; இவ்வாறு நடக்கவே முடியாது என்பதால் இதை அசாத்தியமானதாகவே கருதலாம். அறிவுத்திறனற்ற ஆற்றல்களால் ஒரேவொரு குரோமோசோமைக்கூட உருவாக்க முடியாது, அப்படியிருக்க, உயிருள்ள பொருள்களிலுள்ள வியக்கவைக்கும் சிக்கலான வடிவமைப்பு அனைத்தையும் உருவாக்க முடியுமென்று நம்புவது முட்டாள்தனம் என்றே நினைக்கிறேன்.

அதோடு, பருப்பொருளின் வெகு சிக்கல்வாய்ந்த செயல்கள் குறித்து நான் ஆராய்ச்சி செய்தபோது, மிகமிக நுண்ணிய பொருளும் சரி, விண்வெளியிலுள்ள இராட்சத விண்மீன்கூட்டங்களும் சரி, அவற்றின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிற அற்புதமான எளிய விதிகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன. என்னைப் பொறுத்தமட்டில் இந்த விதிகள் உன்னதமான ஒரு கணித மேதையின் கைவண்ணமாக மட்டுமே அல்லாமல் உன்னதமான ஓவியரின் கையெழுத்தாகவும் இருக்கிறது.

நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதைக் கேட்டு மக்கள் பெரும்பாலும் ஆச்சரியப்படுகிறார்கள். என்னால் எப்படி கடவுள்மீது நம்பிக்கை வைக்க முடிகிறது என்று சில சமயங்களில் கேட்டே விடுகிறார்கள். ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது; ஏனெனில் முக்கால்வாசி மதங்கள், அவற்றின் உறுப்பினர்கள் தங்களுக்குக் கற்பிக்கப்படும் விஷயங்களுக்கான நிரூபணத்தைக் கேட்கும்படியோ, தங்கள் நம்பிக்கைகளை பரிசோதித்துப் பார்க்கும்படியோ அவர்களை ஊக்குவிப்பதில்லை. என்றாலும், நம்முடைய ‘சிந்திக்கும் திறனை’ பயன்படுத்த பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (நீதிமொழிகள் 3:21, NW) இயற்கையில் காணப்படுபவை புத்திக்கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருப்பதற்கான எல்லா அத்தாட்சிகளும், பைபிள் அத்தாட்சியும் சேர்ந்து கடவுள் இருக்கிறார் என்பதை மட்டுமல்ல அவர் நம் ஜெபங்களைக் கேட்கிறார் என்பதையும் நம்ப வைக்கின்றன.

[அடிக்குறிப்பு]

a அந்த விஞ்ஞானிகளுடைய கருத்துகள், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் கருத்துகளாக இருக்குமென்று சொல்ல முடியாது.

[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]

பின்னணியில் செவ்வாய்க் கிரகம்: Courtesy USGS Astrogeology Research Program, http://astrogeology.usgs.gov