Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்துப் பேசுவது?

படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்துப் பேசுவது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்துப் பேசுவது?

“வகுப்பறையில் பரிணாமத்தைப் பற்றிய பாடம் நடத்தப்பட்டது, அது என்னுடைய நம்பிக்கைக்கு முற்றிலும் முரணாக இருந்தது. பரிணாமம் ஒரு விஞ்ஞான உண்மை என்பதாக அவர்கள் சொன்னார்கள். அதைக்கேட்டு ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டேன்.”​—⁠ரையன், 18.

“அப்பொழுது எனக்கு 12 வயது, என் டீச்சர் ஒரு தீவிர பரிணாமவாதியாக இருந்தார். அவருடைய காரில் டார்வின் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தார் என்றால் பாருங்களேன்! அதனால் படைப்பில் எனக்குள்ள நம்பிக்கையைப்பற்றிப் பேச ரொம்பவே தயக்கமாக இருந்தது.”​—⁠டைலர், 19.

“நம்முடைய அடுத்த பாடம் பரிணாமத்தைப் பற்றியது என்று சமூக அறிவியல் டீச்சர் சொன்னபோது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. சர்ச்சைக்குரிய இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நான் எதை நம்புகிறேன் என்பதை வகுப்பறையில் சொல்லியே தீரவேண்டும் என்பதை அறிந்திருந்தேன்.” ​—⁠ராகெல், 14.

பரிணாமத்தைப் பற்றிய பாடம் வகுப்பில் நடத்தப்படும்போது ரையன், டைலர், ராகெல் போல நீங்களும் டென்ஷனாகலாம். கடவுளே ‘சகலத்தையும் சிருஷ்டித்தார்’ என்பதை நீங்கள் நம்புகிறீர்கள். (வெளிப்படுத்துதல் 4:11) இயற்கை புத்திக்கூர்மையாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவதற்கு உங்களைச் சுற்றிலும் ஏராளமான அத்தாட்சிகள் இருப்பதையும் கவனிக்கிறீர்கள். ஆனால், பாடப்புத்தகங்களோ பரிணாமத்தின் மூலமாக நாம் வந்தோம் என சொல்கின்றன. உங்கள் ஆசிரியரும் அதுதான் சரி என்கிறார். ‘எல்லாம் தெரிந்த ஆட்களோடு’ விவாதிப்பதற்கு நான் யார்? கடவுளைப்பற்றி . . . பேச ஆரம்பித்தால் கூடப்படிக்கும் பிள்ளைகள் என்ன சொல்வார்கள்? என்றெல்லாம் யோசிக்கிறீர்களா?

இக்கேள்விகளை நினைத்தாலே உங்களுக்கு பயமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! நிறைய ஆட்கள் படைப்பை நம்புகிறார்கள். உண்மையை சொல்லப்போனால், நிறைய விஞ்ஞானிகளே பரிணாமத்தை ஏற்றுக்கொள்வதில்லை. அதேபோல, அநேக ஆசிரியர்களும் பரிணாமத்தை நம்புவதில்லை. ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு ஐந்து மாணவர்களில் நான்குபேர் பாடப்புத்தகங்கள் சொல்வதுபற்றி கவலைப்படாமல் படைப்பாளர் இருப்பதை நம்புகிறார்களே!

இருந்தாலும், ‘படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்து பேசுவது?’ என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் பயந்து நடுங்குகிறவர்களாக இருந்தாலும் தைரியமாயிருங்கள், உங்களால் நம்பிக்கையோடு பேச முடியும். என்றாலும், அதற்கு முன் நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டியது அவசியம்.

உங்கள் நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

நீங்கள் கிறிஸ்தவப் பெற்றோரால் வளர்க்கப்படுகிறவரா? அப்படியானால், அப்பா, அம்மா படைப்பை பற்றி உங்களுக்கு சொல்லிக்கொடுத்திருப்பதால் மட்டுமே நீங்கள் அதை நம்பிக்கொண்டிருக்கலாம். நீங்கள் இப்பொழுது வளர்ந்து வருகிறீர்கள். ஆகவே, உங்களுடைய நம்பிக்கைகளுக்கு உறுதியான ஆதாரத்தைக்கொண்டு “பகுத்தறியும் திறனோடு” கடவுளை வணங்க விரும்புகிறீர்கள். (ரோமர் 12:1, NW) ‘எல்லாவற்றையும் சோதித்துப்பார்க்கும்படி’ முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களை பவுல் ஊக்கப்படுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 5:21) படைப்பில் உங்களுக்கிருக்கும் நம்பிக்கையை நீங்கள் எவ்வாறு சோதித்துப்பார்க்கலாம்?

கடவுளைப்பற்றி பவுல் என்ன எழுதினார் என்பதை முதலில் கவனியுங்கள்: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.” (ரோமர் 1:20) இந்த வார்த்தைகளை மனதில் வைத்துக்கொண்டு, மனித உடல், பூமி, பரந்துவிரிந்த பிரபஞ்சம், ஆழ்கடல் ஆகியவற்றை உன்னிப்பாய் கவனியுங்கள். ஆர்வமூட்டும் பூச்சிகள், வசீகரிக்கும் தாவரங்கள், வியப்பூட்டும் விலங்குகள் என உங்கள் மனதை கொள்ளையடிக்கும் இயற்கையின் அற்புதங்களை ஆராயுங்கள். பிறகு, உங்களுடைய “பகுத்தறியும் திறனைப்” பயன்படுத்தி பின்வரும் கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள், ‘படைப்பாளர் இருக்கிறார் என்று என்னை நம்பவைப்பது எது?’

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க சாம் என்ற 14 வயது பையன் மனித உடலை உதாரணமாக காட்டுகிறான். அவனுடைய கருத்து இதோ: “அது நுணுக்கமானது, சிக்கலானது, அதிலிருக்கும் எல்லா பாகங்களும் மிகவும் அருமையாய் ஒன்றுசேர்ந்து வேலை செய்கின்றன. மனித உடல் பரிணாமத்தால் வந்திருக்கவே முடியாது!” இதை 16 வயது ஹாலி ஒப்புக்கொள்கிறாள். அவள், இப்படி சொன்னாள்: “எனக்கு சர்க்கரை வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, உடல் எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. உதாரணமாக, வயிற்றின் பின்பகுதியில் பதுங்கியிருக்கும் சின்னஞ்சிறு உறுப்பான கணையத்தைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். இரத்தத்தையும் மற்ற உறுப்புகளையும் தொடர்ந்து செயல்பட வைப்பதற்காக இது செய்யும் வேலையைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டேன்.”

மற்ற இளைஞர்களோ இந்தக் கேள்வியை வித்தியாசமான கோணத்தில் பார்க்கிறார்கள். உதாரணமாக, 19 வயது ஜாரட் இப்படிச் சொல்கிறான்: “கடவுளை வணங்கும் திறனோடும், தேவையோடும் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். அதோடு, அழகை ரசிக்கும் திறனும், கற்றுக்கொள்ளும் ஆர்வமும், நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு மாபெரும் அத்தாட்சியாக இருக்கின்றன. நாம் உயிர்வாழ இவையெல்லாம் தேவையில்லை என பரிணாமம் நம்மை நம்ப வைக்க முயலுகிறது. வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழவேண்டும் என்று விரும்புகிற ஒருவரால் நாம் இங்கு வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற விளக்கம்தான் எனக்கு அர்த்தமுள்ளதாக இருக்கிறது.” ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட டைலர் இதேபோன்ற முடிவுக்குத்தான் வந்தான். “உயிர் இந்தப் பூமியில் தொடர்வதற்காக தாவரங்கள் செய்யும் வேலைகளையும் திணறவைக்கும் அவற்றின் சிக்கலான அமைப்பையும் சிந்தித்துப்பார்த்தது படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்று என்னை நம்பவைத்தது.”

நீங்கள் படைப்பைக் குறித்து கவனமாக யோசித்துப் பார்த்து, உங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருந்தால் இவ்விஷயத்தைப் பற்றி பேசுவது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆகவே, சாம், ஹாலி, ஜாரட், டைலர் ஆகியோரைப்போல கடவுளின் அதிசயமான கைவண்ணங்களைப்பற்றி ஆராய கொஞ்சம் நேரத்தை செலவிடுங்கள். பிறகு, அவை உங்களிடம் “சொல்வதை” கவனித்துக் “கேளுங்கள்.” கடவுள் இருக்கிறார் என்று மட்டுமல்ல, அவருடைய குணங்களும் “உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, . . . தெளிவாய்க் காணப்படும்” என்ற முடிவுக்கு அப்போஸ்தலன் பவுல் வந்தார். இந்த முடிவுக்கே நீங்களும் வருவீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. a

பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

கடவுளுடைய படைப்புகளை உன்னிப்பாக கவனிப்பது மட்டுமின்றி, பைபிள் இதைப்பற்றி உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதையும் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் படைப்பை பற்றி நீங்கள் தைரியமாக பேச முடியும். பைபிள் நேரடியாக சொல்லாத காரியங்களைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. சில உதாரணங்களை கவனிப்போம்.

இந்தப் பூமியும் சூரிய மண்டலமும் கோடிக்கணக்கான வருடங்களாக இருக்கின்றன என்று என்னுடைய அறிவியல் பாடப்புத்தகம் சொல்கிறது. பூமி, சூரிய மண்டலம் ஆகியவற்றின் வயதைப்பற்றி பைபிள் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், உண்மையில் முதலாம் படைப்பு “நாள்” ஆரம்பிப்பதற்கு முன்னால் கோடானகோடி வருடங்களாக இப்பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்ற கருத்து பைபிள் பதிவோடு ஒத்துப்போகிறது.​—ஆதியாகமம் 1:​1, 2.

வெறுமனே ஆறு நாட்களில் இந்தப் பூமி படைக்கப்பட்டிருக்க முடியாது என்று என்னுடைய ஆசிரியர் சொல்கிறார். வெறும் 24 மணிநேரம்கொண்ட ஆறு சிருஷ்டிப்பு “நாட்களில்” பூமி படைக்கப்பட்டதாக பைபிள் சொல்வதில்லை. கூடுதல் தகவலுக்கு, இந்தப் பத்திரிகையின் 18-20 பக்கங்களைப் பார்க்கவும்.

காலப்போக்கில் விலங்குகளும் மனிதர்களும் மாறியிருக்கிறார்கள் என்பதற்கு நிறைய உதாரணங்களை வகுப்பில் கலந்து பேசியிருக்கிறார்கள். ஜீவராசிகளை “அவ்வவற்றின் இனத்தின்படி” கடவுள் படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் [தொடக்க நூல்] 1:20, 21, பொது மொழிபெயர்ப்பு) உயிரற்ற பொருளிலிருந்து உயிர் தோன்றியது என்ற கருத்தை பைபிள் ஆதரிப்பதில்லை. கடவுள் ஒரேவொரு அணுவைப் படைத்துவிட்டு, அதிலிருந்து மற்ற உயிரினங்கள் பரிணமிக்கும்படி செய்தார் என்ற கருத்தையும் பைபிள் கற்பிப்பதில்லை. இருந்தாலும், ஒவ்வொரு “இனமும்” நிறைய ரகங்களை உண்டாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே, படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ‘இனத்திற்குள்ளும்’ மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்தை பைபிள் நிராகரிப்பதில்லை.

உங்களுடைய நம்பிக்கைகளில் உறுதியாயிருங்கள்!

நீங்கள் படைப்பை நம்புவதால் வெட்கப்பட வேண்டியதில்லை. புத்திக்கூர்மையுள்ள வடிவமைப்பாளரால் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நம்புவது முற்றிலும் நியாயமானது, அறிவியல்பூர்வமானது என்பதையே அத்தாட்சிகள் காட்டுகின்றன. உண்மையை சொல்லப்போனால், படைப்பு அல்ல, பரிணாமம்தான் அறிவுப்பூர்வமான ஆதாரம் இல்லாத கோட்பாடு, அற்புதமான விஷயங்களை எல்லாம் அற்புதம் செய்பவர் இல்லாமலே வந்துவிட்டன என்று நம்பும்படி மக்களுக்கு கற்பிக்கிறது. உண்மையில், இந்த விழித்தெழு! பத்திரிகையின் மற்ற கட்டுரைகளை படித்தபிறகு, இருக்கும் அத்தாட்சிகள் படைப்பையே ஆதரிக்கின்றன என்பதை நீங்கள் நம்புவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. உங்களுடைய பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தி இந்த விஷயத்தை கவனமாக ஆராய்ந்தபிறகு வகுப்பறையில் படைப்பைப்பற்றி தைரியமாக உங்களால் பேச முடியும்.

அதைத்தான் முன்னாள் குறிப்பிடப்பட்ட ராகெலும் செய்தாள். அவள் இப்படிச் சொல்கிறாள்: “என் நம்பிக்கைகளைப்பற்றி பேசாமல் இருக்கக்கூடாது என்பதை உணர எனக்கு ஒருசில நாட்கள் ஆனது. உயிர் எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற புத்தகத்தை டீச்சருக்குக் கொடுத்தேன்; எதையெல்லாம் அவருக்குக் காட்ட வேண்டுமென நினைத்தேனோ அங்கெல்லாம் குறித்து வைத்திருந்தேன். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, அது பரிணாமத்தைப்பற்றி முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்ததாக அவர் கூறினார்; பரிணாமத்தைப்பற்றி இனி சொல்லிக் கொடுக்கும்போது அதிலுள்ள தகவல்களை கவனத்தில் கொள்ளப்போவதாகவும் சொன்னார்!”

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்

சிந்திப்பதற்கு

◼ படைப்பில் உங்களுக்கிருக்கும் நம்பிக்கையை பள்ளியில் சுலபமாக வெளிப்படுத்த என்னென்ன வழிகள் உள்ளன?

◼ எல்லாவற்றையும் படைத்தவருக்கு உங்கள் போற்றுதலை எவ்வாறு காட்டலாம்?​—⁠அப்போஸ்தலர் 17:26, 27.

[அடிக்குறிப்பு]

a உயிர் எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? மற்றும் உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் ஒருவர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) போன்ற புத்தகங்களில் உள்ள தகவல்களை மறுபார்வை செய்வதன்மூலம் அநேக இளைஞர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இவ்விரு புத்தகங்களும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.

[பக்கம் 27-ன் பெட்டி]

“அத்தாட்சிகள் ஏராளம்”

“படைப்பாளரை நம்பும்படி சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிற ஓர் இளைஞனுக்கு பரிணாமத்தை நம்பும்படி பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அந்த இளைஞனிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்?” இந்தக் கேள்வி நுண்ணுயிரியல் வல்லுநராக இருக்கும் யெகோவாவின் சாட்சி ஒருவரிடம் கேட்கப்பட்டது. அவருடைய பதில் இதோ: “கடவுள் இருக்கிறார் என்பதை உங்களுக்கு நீங்களே நிரூபித்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதுங்கள்​—⁠ஏதோ அப்பா, அம்மா சொல்லிக் கொடுத்தார்கள் என்பதற்காக படைப்பை நம்புவதைக் காட்டிலும் அத்தாட்சிகளை நீங்களே ஆராய்ந்து பார்த்து முடிவை எடுக்க வேண்டும். அதற்கான வாய்ப்பாக இச்சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். சில சமயங்களில் பரிணாமத்தை ‘நிரூபிக்கும்படி’ ஆசிரியர்களிடம் கேட்டபோது, அவர்களால் நிரூபிக்க முடியவில்லை; அந்தக் கோட்பாடு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதனாலேயே அதை நம்புகிறார்கள் என்று அப்போது புரிந்துகொள்கிறார்கள். படைப்பாளரை நம்பும் உங்களுக்கும் இது நடக்க வாய்ப்புண்டு. அதனால் கடவுள் உண்மையில் இருக்கிறார் என்று உங்களுக்கு நீங்களே நிரூபித்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அத்தாட்சிகள் ஏராளம். அவற்றைக் கண்டுபிடிப்பது கடினமல்ல.”

[பக்கம் 28-ன் பெட்டி/படங்கள்]

உங்களை நம்பச் செய்வது எது?

படைப்பாளர் இருக்கிறார் என்று உங்களை நம்பச் செய்யும் மூன்று விஷயங்களை கீழே பட்டியலிடுங்கள்:

1. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

2. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

3. ․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․