பரிணாமக் கோட்பாடு உண்மையா?
பரிணாமக் கோட்பாடு உண்மையா?
“சூரியன் வெப்பத்தைத் தருவது எப்படி நிஜமோ அதேபோல் பரிணாமத்தின் மூலமாக உயிர் தோன்றியதும் நிஜம்” என்று அடித்துச் சொல்கிறார் பேராசிரியர் ரிச்சர்டு டாகன்ஸ், இவர் பிரபல பரிணாம விஞ்ஞானி. ஆம், சூரியன் வெப்பத்தைத் தருகிறது என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன, நாமும் கண்ணாரக் காண்கிறோம். அவ்வாறே பரிணாமக் கோட்பாடும் உண்மையென ஆராய்ச்சிகளோ, நேரடி அத்தாட்சிகளோ நிரூபித்திருக்கின்றனவா?
இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண்பதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம். கால ஓட்டத்தில் உயிரினங்களின் சந்ததிகளில் சிறிதளவு மாற்றம் நிகழலாம் என்பதாக அநேக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதை “அடுத்தடுத்து நிகழும் சிறு சிறு மாற்றங்களால் உருவாகும் சந்ததி” என்று சார்ல்ஸ் டார்வின் அழைத்தார். இப்படிப்பட்ட மாற்றங்கள் நேரடியாகவும் தெரிகின்றன, ஆராய்ச்சிகளும் நிரூபிக்கின்றன. தாவரங்களையோ விலங்குகளையோ இனவிருத்தி செய்பவர்களும்கூட இந்த மாற்றத்தை திறமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். a இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்வது உண்மையென நாம் ஏற்றுக்கொள்ளலாம். விஞ்ஞானிகளோ இதனை “மைக்ரோ எவல்யூஷன்,” அதாவது சிறிய பரிணாமம் என்கிறார்கள். இந்தப் பெயரிலிருந்தே அநேக விஞ்ஞானிகளின் நம்பிக்கையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, இந்தச் சிறிய மாற்றங்கள்தான் “மேக்ரோ எவல்யூஷன்” என்ற பெரிய மாற்றங்கள் நடந்திருப்பதற்கு அத்தாட்சி என அவர்கள் நம்புகிறார்கள். “மேக்ரோ எவல்யூஷன்” நடந்திருப்பதற்கு நேரடிச் சான்றே இல்லை.
காணக்கூடிய அத்தகைய மாற்றங்களுக்கும் ஒருபடி மேல் சென்றுவிட்டார் டார்வின். அவர் எழுதிய உயிரினத் தோற்றம் என்ற பிரசித்திபெற்ற ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக உருவாகவில்லை, உயிரினங்களின் ஒரு சிறு தொகுதியிலிருந்துதான் மற்ற எல்லா உயிரினங்களும் தோன்றின.” காலங்கள் செல்லச் செல்ல சாதாரண உயிரின வகைகள் என்று அழைக்கப்படுகிற, முதன்முதல் தோன்றிய இந்தச் “சிறு உயிரினத் தொகுதியில் சிறுசிறு மாற்றங்கள் நிகழ்ந்ததால்” கோடிக்கணக்கான வித்தியாசமான உயிரினங்கள் பூமியில் தோன்றின என்பதாக டார்வின் கூறினார். இந்தச் சிறிய மாற்றங்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மீன்கள் ஊர்வனவாகவும், மனிதக் குரங்குகள் மனிதர்களாகவும் மாறுவதற்குத் தேவையான பெரிய மாற்றங்களை நிகழ்த்தின என்கிறார்கள் பரிணாமவாதிகள். இப்படி நடந்ததாகச் சொல்லப்படுகிற பெரிய மாற்றங்களை “மேக்ரோ எவல்யூஷன்” என்று அழைக்கிறார்கள். அநேகருக்கு இது அறிவுப்பூர்வமானதாகத் தோன்றுகிறது. ‘இனங்களுக்குள்ளேயே சிறிய மாற்றங்கள் நிகழ்வது சாத்தியம் என்றால், காலப்போக்கில் பரிணாமத்தின் வாயிலாக ஏன் பெரிய மாற்றங்களும் நிகழக்கூடாது?’ என்று அவர்கள் கேட்கிறார்கள். b
மேக்ரோ எவல்யூஷன், மூன்று முக்கிய ஊகங்களின் பேரில் சார்ந்திருக்கிறது:
1. திடீர் மாற்றங்கள்: புதிய இனங்களை உருவாக்குவதற்குத் தேவையான மூலப் பொருள்களைத் தருகின்றன. c
2. இயற்கைத் தெரிவு: புதிய இனங்கள் உருவாக வழிசெய்கிறது.
3. புதைபடிவ பதிவு: தாவரங்களிலும் விலங்குகளிலும் மேக்ரோ எவல்யூஷன் நிகழ்ந்ததை நிரூபிக்கிறது.
மேக்ரோ எவல்யூஷன் உண்மை என நம்புவதற்கு வலுவான ஆதாரம் இருக்கிறதா, என்ன?
திடீர் மாற்றம் புதிய இனங்களை உருவாக்குமா?
ஒரு தாவரத்தைப் பற்றிய அல்லது விலங்கைப் பற்றிய பல விவரங்கள் அவற்றின் மரபியல் தொகுப்பில் அடங்கியுள்ளன. இந்த மரபியல் தொகுப்பு, ஒவ்வொரு செல்லின் நியூக்ளியஸிலும் இருக்கிறது. d மரபியல் தொகுப்பில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களால் தாவர மற்றும் விலங்குகளின் சந்ததிகளில் வேறுபாடுகள் தோன்றலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். நோபல் பரிசு பெற்றவரும் திடீர் மாற்ற மரபியல் ஆராய்ச்சியை ஆரம்பித்து வைத்தவருமான ஹர்மன் ஜே. மல்லர் என்பவர் 1946-ல் இவ்வாறு கூறினார்: “பல அரிய, சிறிய மாற்றங்களையெல்லாம் ஒன்றிணைத்து, புதிய தாவர, விலங்கினங்களைச் செயற்கையாக மனிதர்களால் உருவாக்க முடிகிறது. இதேபோன்ற மாற்றங்கள்தான், இயற்கைத் தெரிவின் உதவியோடு, பரிணாமம் நடைபெறுவதற்கே காரணமாக இருக்கின்றன.”
திடீர் மாற்றத்தின் மூலம் தாவரத்திலோ விலங்கிலோ புதிய இனத்தை மாத்திரமல்ல புதிய குடும்பத்தையே உருவாக்க முடியும் என்பதுதான் மேக்ரோ எவல்யூஷனின் கொள்கை. இந்த ஆணித்தரமான விவாதத்தை நிரூபிப்பதற்கு ஆதாரம் ஏதாவது உள்ளதா? மரபியல் துறையில் 100 வருடங்களாக நடத்தப்பட்டிருக்கும் ஆராய்ச்சிகள் என்ன காட்டுகின்றன என்பதைப் பார்ப்போம்.
இயற்கைத் தெரிவினால் திடீர் மாற்றங்கள் மூலம் புதிய இனத் தாவரங்கள் உருவாக முடியுமென்றால், மனிதர்களே திடீர் மாற்றங்களைத் தெரிவு செய்து மேம்பட்ட, புதிய இனத் தாவரங்களை நிச்சயம் உருவாக்க முடியும் என்ற கருத்தை 1930-களின் இறுதியில் விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் வரவேற்றார்கள். “பல உயிரியலாளர்களும், முக்கியமாக மரபியலாளர்களும் இனத்தைப் பெருக்குபவர்களும் சந்தோஷத்தில் மிதந்தார்கள்” என்று வால்ஃப்-பக்காஹார்ட் லான்னிக் என்ற விஞ்ஞானி விழித்தெழு!-விற்கு அளித்த பேட்டியின்போது கூறினார். இவர் ஜெர்மனியிலுள்ள மாக்ஸ் ப்லாங்க் என்ற தாவர இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிகிறார். அவர்கள் அந்தளவு சந்தோஷப்பட்டதற்கு என்ன காரணம்? தாவரங்களின் மரபியலில் நிகழும் திடீர் மாற்றங்களைப் பற்றி சுமார் 28 வருடங்களாக ஆய்வு நடத்திய பின்னர் லான்னிக் இவ்வாறு சொன்னார்: “தாவரங்களையும் விலங்குகளையும் இனவிருத்தி செய்வதற்குப் பயன்படுத்தி வந்த பாரம்பரிய முறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். சாதகமான திடீர் மாற்றங்களைத் தாங்களாகவே தேர்ந்தெடுத்து தூண்டிவிடுவதன் மூலம் புதிய, மேம்பட்ட தாவரங்களையும் விலங்குகளையும் உருவாக்க முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள்.” e
அமெரிக்க, ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வெவ்வேறு இன தாவரங்களையும் விலங்குகளையும் சீக்கிரமாய் உருவாக்குவதற்காக ஏராளமான நிதி உதவியுடன் ஆராய்ச்சிகளில் இறங்கினார்கள். அவர்களுடைய தீவிரமான ஆராய்ச்சி 40-க்கும் அதிகமான வருடங்களுக்கு நீடித்தது. ஆராய்ச்சியின் முடிவுகள் என்ன? ஆராய்ச்சியாளர், பேட்டர் வான் ஸெங்புஷ் கூறுவதாவது: “எக்கச்சக்கமாக பணம் செலவழித்தும், கதிர்வீச்சுக்கு உட்படுத்துவதன் மூலமாக திறம்பட்ட இனங்களை உருவாக்குவதற்கு செய்யப்பட்ட முயற்சி பெரும் தோல்வியைத் தழுவியது.” லான்னிக் இவ்வாறு கூறினார்: “1980-க்குள் உலகமுழுவதிலுமுள்ள விஞ்ஞானிகளின் நம்பிக்கைகளும் சந்தோஷங்களும் பறிபோயின. மேற்கத்திய நாடுகளில் இயங்கிவந்த திடீர் மாற்ற இனவிருத்தி ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. திடீர் மாற்றத்திற்கு உள்ளான கிட்டத்தட்ட எல்லா இனங்களுமே இயற்கையான இனங்களைவிட பலவீனமாக இருந்தன அல்லது இறந்துவிட்டன.” f
திடீர் மாற்றங்கள் சம்பந்தமாக நடத்தப்பட்ட 100 வருட
ஆராய்ச்சியிலிருந்து, அதிலும் முக்கியமாக திடீர் மாற்ற இனவிருத்தி சம்பந்தமாக நடத்தப்பட்ட 70 ஆண்டு ஆராய்ச்சியிலிருந்து, திடீர் மாற்றம் மூலம் புதிய இனங்களை உருவாக்க முடியுமா முடியாதா என்பது பற்றி விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்த பிறகு லான்னிக் இந்த முடிவுக்கு வந்தார்: “திடீர் மாற்றத்தின் மூலம் ஓர் உயிரினத்தின் [தாவரமோ விலங்கோ] ஒரிஜினல் இனத்தை மற்றொரு புதிய இனமாக மாற்றவே முடியாது.” 20-வது நூற்றாண்டில் நடத்தப்பட்ட திடீர் மாற்றம் சம்பந்தப்பட்ட எல்லா ஆராய்ச்சிகளின் முடிவுகளுடனும், சாத்தியக்கூறு தொடர்பான விதிகளுடனும் லான்னிக் கண்டறிந்த முடிவு ஒத்துப்போகிறது. ஆக, “ரிகரன்ட் வேரியேஷன் விதிப்படி, மரபியல் ரீதியில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட இனங்களுக்கு உள்ள வரைமுறைகளை திடீர் மாற்றங்கள் மூலமாக மீறவோ, நீக்கவோ முடியாது.”மேலே சொல்லப்பட்டுள்ளவற்றின் முக்கியத்துவத்தை இப்போது ஆராயலாம். பயிற்சி பெற்ற திறமையான விஞ்ஞானிகளாகிய அறிவுஜீவிகளால், திடீர் மாற்றங்களைச் செயற்கையாகத் தூண்டிவிடுவதன் மூலமோ சாதகமான திடீர் மாற்றங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமோ புதிய இனங்களை உருவாக்க முடியவில்லையென்றால், அறிவுஜீவியின் தலையீடு எதுவும் இல்லாமல் தானாகவே புதியதோர் இனம் உருவாக முடியுமா, என்ன? திடீர் மாற்றங்களால் ஒரிஜினல் இனத்தை புதியதோர் இனமாக உருவாக்க முடியாது என்பதாகவே ஆராய்ச்சிகள் காட்டுகையில் மேக்ரோ எவல்யூஷன் எப்படி நிகழ்ந்திருக்கும்?
இயற்கைத் தெரிவு புதிய இனத்தை உருவாக்குமா?
டார்வின் வகுத்த இயற்கைத் தெரிவு என்ற கோட்பாட்டின்படி, இயற்கைச் சூழலோடு மிக நன்கு ஒத்துப்போகும் உயிரினங்கள் தப்பிப்பிழைக்கும், ஆனால், இயற்கைச் சூழலோடு ஒத்துப்போகாத உயிரினங்கள் காலப்போக்கில் மடிந்துவிடும். நவீன பரிணாமவாதிகளின்படி, உயிரினங்கள் பரவி தனித்தனியாகப் பிரிந்துவிடும்போது இயற்கைத் தெரிவு நிகழ்கிறது. புதிய சூழலுக்குப் பொருத்தமான திடீர் மாற்றத்தை இந்த உயிரினங்கள் தெரிவு செய்கின்றன. இதன் விளைவாக, பிரிந்துபோன இந்த இனங்கள் காலப்போக்கில் முற்றிலும் புதிய இனங்களாக உருவெடுத்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
மேலே பார்த்தபடி, திடீர் மாற்றங்களால் முற்றிலும் புதிய ஒரு தாவர இனத்தையோ விலங்கினத்தையோ உருவாக்க முடியாது என்பதை ஆராய்ச்சிகள் தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன. இருந்தாலும், இயற்கைத் தெரிவு அதற்குச் சாதகமான திடீர் மாற்றங்களைப் பயன்படுத்தி புதிய இனத்தை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் எந்த ஆதாரத்தை வைத்துச் சொல்கிறார்கள்? 1999-ல் ஐ.மா. தேசிய விஞ்ஞான கல்வி அமைப்பு (NAS) வெளியிட்ட ஒரு பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “ஸ்பீஸியேஷனுக்கு [புதிய இனங்கள் பரிணமித்ததற்கு] ஒரு சிறந்த உதாரணம், காலாபகஸ் தீவில் டார்வின் இருந்தபோது அவர் ஆராய்ச்சி செய்யப் பயன்படுத்திய 13 வித்தியாசமான இனங்களைச் சேர்ந்த ஃபின்ச் குருவிகள்; இந்தக் குருவி டார்வின் ஃபின்ச் என தற்போது அழைக்கப்படுகிறது.”
1970-களில் பீட்டர் கிராண்ட், ரோஸ்மேரி கிராண்ட் ஆகியோரின் தலைமையிலான ஓர் ஆராய்ச்சிக் குழுவினர் இந்த ஃபின்ச் குருவிகளை ஆராய்ந்தார்கள். சிறிய அலகைக் கொண்டிருந்த ஃபின்ச்சுகளைவிட சற்றுப் பெரிய அலகைக் கொண்டிருந்த ஃபின்ச்சுகள் ஒரு வருடம் முழுவதும் நிலவிய வறட்சியை எளிதில் தாக்குப்பிடித்ததாக அவர்கள் கண்டுபிடித்தார்கள். இந்தப் பறவையின் அலகினுடைய அளவையும் வடிவையும் வைத்தே இவற்றின் 13 வித்தியாசமான இனங்களை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டியிருந்ததால் அந்தக் கண்டுபிடிப்புகள் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. “பத்து வருடங்களுக்கு ஒரு முறை வறட்சி ஏற்பட்டால் 200 வருடங்களுக்கு ஒரு முறைதான் புதிய ஃபின்ச் இனம் உருவாகும் என்று கிராண்ட் தம்பதியினர் கணக்கிட்டுள்ளனர்” என்றும் அந்தப் பத்திரிகை கூறுகிறது.
என்றாலும், முக்கியமான அதேசமயம் ஏற்கமுடியாத சில உண்மைகளை அந்தப் பத்திரிகை சொல்லாமலே மறைத்துள்ளது. பின்வந்த வருடங்களில் சிறிய அலகை உடைய ஃபின்ச்சுகள் மீண்டும் அதிகரித்துவிட்டன. எனவே, பீட்டர் கிராண்ட்டும் லைல் கிப்ஸ் என்ற பட்டதாரியும் “இயற்கைத் தெரிவில் ஒரு திருப்பத்தைத் தாங்கள் கண்டிருப்பதாக” 1987-ல் நேச்சர் எனும் விஞ்ஞான பத்திரிகையில் எழுதியிருந்தார்கள். 1991-ல் கிராண்ட் இவ்விதமாக எழுதினார்: சீதோஷணத்துக்கு ஏற்றவாறு, “இயற்கைத் தெரிவுக்கு உட்பட்ட உயிரினங்களில்” “பெரிய அலகை உடையவை
செழித்தோங்கின, அல்லது சிறிய அலகை உடையவை செழித்தோங்கின.” ஃபின்ச்சின் வித்தியாசமான இனங்களில் சில ஒன்றுக்குள் ஒன்று இணைசேர்ந்தன, இப்படி உருவாகிய இனங்கள் ஒரிஜினல் ஃபின்ச்சுகளைவிட நன்றாக இருந்தன. இயற்கையில் நடக்கும் மாற்றங்களையும் நன்றாகச் சமாளித்தன. இரு இனங்களை சேர்ந்த ஃபின்ச் குருவிகள் ஒன்றுக்குள் ஒன்று மறுபடியும் மறுபடியுமாக இணைசேர்ந்தால் 200 வருடங்களுக்குள் அந்த இரண்டு வித்தியாசமான “இனங்கள்” சேர்ந்து ஒரு புதிய இனமாக உருவாகிவிடும் என்ற முடிவுக்கு பீட்டர் கிராண்ட்டும் ரோஸ்மேரி கிராண்ட்டும் வந்தார்கள்.1966-ல் பரிணாம உயிரியல் அறிஞரான ஜார்ஜ் கிறிஸ்டஃபர் வில்லியம்ஸ் இவ்வாறு எழுதினார்: “முதன்முதலில் இயற்கைத் தெரிவுக் கோட்பாடு, பரிணாமம் உண்மை என்பதற்கு விளக்கம் அளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதைக் குறித்து வருந்துகிறேன். சொல்லப்போனால், அந்தக் கோட்பாடு முக்கியமாக சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் அவற்றை மாற்றியமைத்துக்கொள்வது சம்பந்தமாக விளக்கம் அளிப்பதற்கே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.” வில்லியம் சொல்வது சரியாக இருந்தால், இயற்கைச் சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள இயற்கைத் தெரிவு உதவலாம்; ஆனால், “புதியதோர் உயிரினத்தை அவை உருவாக்குவது இல்லை” என்று பரிணாமக் கோட்பாட்டாளரான ஜெஃப்ரி ஷுவார்ட்ஸ் 1999-ல் எழுதினார்.
ஆகவே, டார்வினின் ஃபின்ச்சுகள் வேறொரு “புதிய இனமாக” மாறிவிடவில்லை, மாறாக, அவை ஃபின்ச்சுகளாகவே இருக்கின்றன. அவை ஒன்றுக்குள் ஒன்று இணைசேருகின்றன என்ற உண்மை, பரிணாமவாதிகள் எதை இனம் என்று வரையறுக்கிறார்கள் என்பதையே சந்தேகிக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி, பெயர்பெற்ற விஞ்ஞான நிறுவனங்கள்கூட உண்மைகளை மறைப்பதை இந்தப் பறவைகளின் மூலம் செய்யப்பட்ட ஆராய்ச்சி வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
புதைபடிவ பதிவுகள் மேக்ரோ எவல்யூஷன் உண்மையென நிரூபிக்கிறதா?
மேக்ரோ எவல்யூஷன் உண்மை என நிரூபிப்பதற்கு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதைபடிவங்களே போதுமானது என NAS பத்திரிகை வாசகர்களை நினைக்க வைக்கிறது. அது சொல்வதாவது: “மீனிலிருந்து நில-நீர்வாழ் பிராணிகள் பரிணமித்திருப்பதற்கும், நில-நீர்வாழ் பிராணிகளிலிருந்து ஊரும் பிராணிகள் பரிணமித்திருப்பதற்கும், ஊரும் பிராணிகளிலிருந்து பாலூட்டிகள் பரிணமித்திருப்பதற்கும், அதோடு, வழிவழியாக வந்திருக்கும் உயிரினங்களுக்கும் இடையே நிறைய வகை உயிரினங்கள் இருந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன; ஆனால் ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு உயிரினமாக மாறியது எப்போது என்பதைத்தான் திட்டவட்டமாகச் சொல்ல முடிவதில்லை.”
இந்தக் கூற்று நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது, ஏன்? “ஒரு பரிணாமப் படத்திலுள்ள ஒவ்வொரு 1000 பரிணாம ஃப்ரேம்களிலும் 999 ஃப்ரேம்கள் கட்டிங் ரூமில் காணாமல் போய்விட்டால்” எப்படி இருக்குமோ, அப்படியே புதைபடிவ பதிவும் இருப்பதாக 2004-ல் நேஷனல் ஜியாக்ரஃபிக் பத்திரிகை குறிப்பிட்டது. 1000-ல் ஒன்று என்ற கணக்கில் மீந்திருக்கும் ஃப்ரேம்கள் மேக்ரோ எவல்யூஷன் நிகழ்ந்தது உண்மையென நிரூபிக்கின்றனவா? புதைபடிவ பதிவுகள் உண்மையில் என்ன காட்டுகின்றன? நெடுங்காலமாக “அநேக உயிரினங்களில் பரிணாம மாற்றங்கள் நிகழவில்லை” என்றே புதைபடிவ பதிவுகள் காட்டுவதாக தீவிர பரிணாமவாதியான நைல்ஸ் எல்ட்ரெட்ஜ் ஒத்துக்கொள்கிறார்.
இன்றைய தினம்வரை உலக முழுவதிலுமுள்ள விஞ்ஞானிகள் 20 கோடி பெரிய பெரிய புதைபடிவங்களையும் கோடிக்கணக்கான சிறிய சிறிய புதைபடிவங்களையும் தோண்டியெடுத்து பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள். விலாவரியான இந்த நீண்ட பட்டியல்கள் காட்டுகிறபடி முக்கிய இனத்தைச் சேர்ந்த விலங்குகள் திடீரெனத் தோன்றி எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்துவிட்டன;
ஆனால், அநேக இனங்களோ திடீரென எப்படித் தோன்றினவோ அப்படியே மறைந்துவிட்டதை அநேக ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். புதைபடிவ பதிவுகளை ஆராய்ச்சி செய்த பிறகு உயிரியலாளரான ஜோனத்தான் வெல்ஸ் இவ்வாறு எழுதினார்: “இனம், பிரிவு, வகுப்பு, ஆகிய ஒவ்வொரு நிலையிலுமே, உயிரினங்கள் ஒரே மூதாதையிலிருந்து தோன்றின என்ற கருத்தும், சுற்றுச்சூழல் காரணமாக அவை ஒவ்வொன்றும் வெவ்வேறாக மாறிவிட்டன என்ற கருத்தும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. புதைபடிவ ஆராய்ச்சியிலிருந்தும் நுட்பமான மூலக்கூறுகளிலிருந்தும் பார்த்தால் அந்தக் கோட்பாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை.”பரிணாமம்—உண்மையா, கட்டுக்கதையா?
புகழ்பெற்ற பல பரிணாமவாதிகள் மேக்ரோ எவல்யூஷன் உண்மை என்பதாக ஏன் அடித்துக் கூறுகிறார்கள்? ரிச்சர்டு டாகன்ஸ் சொன்னவை தவறு என்று கூறிய பிறகு பிரபல பரிணாமவாதியான ரிச்சர்டு லவான்டன், பகுத்தறிவோடு ஒத்துப்போகாத விஞ்ஞானப்பூர்வ கூற்றுகளை ஏற்றுக்கொள்ள விஞ்ஞானிகளில் அநேகர் துளியும் தயங்குவதில்லை. காரணம், “நாங்கள் இயற்பொருள் வாதத்திற்கு (materialism) ஏற்கெனவே எங்களை அர்ப்பணித்திருக்கிறோம்” என்று எழுதினார். g புத்தியுள்ள ஒரு படைப்பாளர் இருக்கிறாரா என்பதைக் குறித்துச் சிந்திக்கக்கூட அநேக விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். லவான்டன் எழுதியபடி, “விஞ்ஞானத்தில் படைப்பாளருக்கு சிறிதும் இடம் கிடையாது.”
இந்த விஷயத்தைக் குறித்து சமூகவியலாளரான ராட்னி ஸ்டார் சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ஒரு விஞ்ஞான மனிதனாக இருக்க வேண்டுமென்றால் மதத்தை ஓரங்கட்டிவிட வேண்டும் என்ற கருத்து 200 வருடங்களாக பரப்பப்பட்டு வந்திருக்கிறது.” ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களில், “மதப் பற்றுள்ள மக்கள் [கடவுளைப் பற்றி] வாயே திறப்பதில்லை. [அப்படிப்பட்டவர்களை] கடவுள் நம்பிக்கையற்ற ஆட்கள் பாரபட்சமாக நடத்துகிறார்கள்” என்றும் அவர் கூறினார். ஸ்டார்க் சொல்கிறபடி பார்த்தால், “உயர்ந்த பதவியில் இருக்கும் [விஞ்ஞானிகள் மத்தியில்] மதப்பற்று இல்லாதவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.”
மேக்ரோ எவல்யூஷன் உண்மை என்று நீங்கள் நம்ப விரும்பினால், அறியொணாமைக் கொள்கைவாதிகள் அல்லது நாத்திகர்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளை விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவற்றுடன் கலக்க மாட்டார்கள் என்பதையும் நீங்கள் நம்ப வேண்டும். நூறு கோடிக்கணக்கான திடீர் மாற்றங்களைக் குறித்து கடந்த நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்திருக்கிறது. திடீர் மாற்றத்தால் எந்தவொரு குறிப்பிட்ட இனமும் முற்றிலும் புதிய இனமாக மாறிவிடவில்லை என்பதையே அந்த ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. உண்மை இப்படியிருக்க, திடீர் மாற்றங்களும், இயற்கைக் தெரிவும்தான் சிக்கலான உயிர் அமைப்புகள் அனைத்தையும் உருவாக்கின என்பதை நீங்கள் நம்பவேண்டும். தாவர மற்றும் விலங்குகளில் முக்கிய இனங்கள் திடீரென தோன்றின, அவை வேறு இனங்களாக மாறவில்லை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அவை அப்படியே இருந்தன என்பதைப் புதைபடிவ சான்றுகள் தெள்ளத்தெளிவாக காட்டுகிறபோதிலும் எல்லா உயிரினங்களும் ஒரேவொரு உயிரினத்திலிருந்து படிப்படியாகத் தோன்றியதாகவே நீங்கள் நம்ப வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கையாகத் தோன்றுகிறதா? அல்லது, கட்டுக்கதையாகத் தோன்றுகிறதா?
[அடிக்குறிப்புகள்]
a நாய் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் குறிப்பிட்ட சில நாய் இனங்களைத் தேர்ந்தெடுத்து இணைசேர வைக்கிறார்கள். இந்த நாய்களைவிட இவற்றின் சந்ததி குட்டையான கால்களுடனும் நீளமான ரோமத்துடனும் பிறப்பதற்காக இவ்வாறு செய்யலாம். ஆனால், ஜீன்களில் ஏற்படும் குறைபாடுகளாலேயே இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணத்திற்கு, குள்ள ஜாதி நாய்கள் அவ்வாறு இருப்பதற்குக் காரணம் அவற்றின் குறுத்தெலும்பு வளர்ச்சி குன்றியிருப்பதாலேயே.
b இந்தக் கட்டுரையில் “இனங்கள்” என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பைபிளின் ஆதியாகமப் புத்தகத்தில் இனம் என்ற வார்த்தைக்குப் பதிலாக அதைவிட விரிவான பதம், அதாவது, “ஜாதி” என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு புது இனம் பரிணமித்திருப்பதாய் பொதுவாக விஞ்ஞானிகள் சொல்லிக்கொள்கிற போதெல்லாம் அவை ஆதியாகமப் புத்தகம் சொல்கிற ‘ஜாதியில்’ ஏற்பட்டுள்ள ஒரு சிறிய மாற்றமாகவே இருக்கிறது.
c “உயிரினங்கள் எப்படி வகைப்படுத்தப்படுகின்றன” என்ற பெட்டியைக் காண்க.
d உயிரினத்தின் தோற்றத்தையும், செயல்பாட்டையும் தீர்மானிப்பதில் செல்லின் சைட்டோபிளாசமும், அதன் சவ்வுகளும் அதோடு மற்ற பாகங்களும்கூட பங்காற்றுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
e இந்தக் கட்டுரையில் லான்னிக் சொல்லியிருப்பது அவருடைய சொந்த கருத்துக்களே. மாக்ஸ் ப்லாங்க் தாவர இனப்பெருக்க ஆராய்ச்சி மையத்தின் கருத்தல்ல.
f திடீர் மாற்றங்கள் சம்பந்தமாக ஆராய்ச்சி நடத்தியதில் மாறுபட்ட வகைகள் குறைந்துகொண்டே வந்தன, ஒரிஜினல் வகைகளோ பெருகிக்கொண்டே வந்தன. இந்த நிகழ்விலிருந்து “ரிகரன்ட் வேரியேஷன் விதி”யை (Law of Recurrent Variation) லான்னிக் கண்டுபிடித்தார். அதுமட்டுமின்றி திடீர் மாற்றத்திற்கு உட்பட்ட தாவரங்களில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான தாவரங்கள் கூடுதலான ஆராய்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன, அவற்றிலும் ஒரு சதவிகிதத்திற்குக் குறைவான தாவரங்களே வணிகரீதியில் பயன்படுத்தப்படத் தகுந்தவையாகக் காணப்பட்டன. விலங்குகளில் செய்யப்பட்ட திடீர் மாற்றங்கள் அதைவிட மோசமாக இருந்தன. கடைசியில் அந்த முறை முற்றிலும் கைவிடப்பட்டது.
g இயற்பொருள் வாதம், என்பது, சடப்பொருள் மட்டுமே உண்மையானது; உயிர் உட்பட பிரபஞ்சத்திலுள்ள மற்ற எல்லாமே மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தியின் தலையீடு இல்லாமல் தோன்றியது என்ற கோட்பாடாகும்.
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
“திடீர் மாற்றத்தின் மூலம் ஓர் உயிரினத்தின் [தாவரமோ விலங்கோ] ஒரிஜினல் இனத்தை மற்றொரு புதிய இனமாக மாற்றவே முடியாது”
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
ஓர் உயிரினம் மாறுபடும் சீதோஷணங்களுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொள்ளும் என்பதற்கு டார்வினின் ஃபின்ச் சிறந்த உதாரணம்
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
புதைபடிவ பதிவின்படி விலங்குகளின் எல்லா முக்கிய பிரிவுகளும் திடீரென தோன்றி அப்படியே வருடக்கணக்கில் மாறாமலேயே இருந்தன
[பக்கம் 14-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உயிரினங்கள் எப்படி வகைப்படுத்தப்படுகின்றன
குறிப்பிட்ட இனங்கள் முதல் பெரும்பிரிவுகள் வரை படிப்படியாகப் பல தொகுதிகளாக உயிரினங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. h உதாரணத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள மனிதர்களின் வகைப்பாடுகளையும் பழ ஈக்களின் வகைப்பாடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
மனிதர்கள் பழ ஈக்கள்
இனம் ஸேப்பியன்கள் மெலனோகாஸ்டர்
பொதுவினம் மனிதர்கள் ட்ரோசோஃபிலா
குடும்பம் மனிதப்போலி ட்ரோசோஃபைலிட்ஸ்
வரிசை முதல்நிலை உயிரிகள் டிப்டீரா
வகுப்பு பாலூட்டிகள் பூச்சிகள்
தொகுதி முதுகுத்தண்டு உடையவை கணுக்காலிகள்
பெரும்பிரிவு விலங்குகள் விலங்குகள்
[அடிக்குறிப்பு]
h குறிப்பு: தாவரங்களும் விலங்குகளும் “அந்த அந்த இனத்தின்படியே” சந்ததியைப் பிறப்பிக்கும் என்பதாக ஆதியாகமம் முதலாவது அதிகாரம் சொல்கிறது. (ஆதியாகமம் 1:12, 21, 24, 25, பொ.மொ.) இவ்வாறு பைபிளில் பயன்படுத்தப்படும் ‘இனம்’ என்பது, ஒரு விஞ்ஞானப் பதம் அல்ல; எனவே, ‘இனம்’ என்ற பைபிள் பதத்திற்கும் “இனம்” என்ற விஞ்ஞானப் பதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
[படத்திற்கான நன்றி]
ஜோனத்தான் வெல்ஸ் எழுதிய பரிணாமப் படங்கள்—விஞ்ஞானப்பூர்வமானதா கட்டுக்கதையா? பரிணாமத்தைப் பற்றி நாம் கற்பிக்கும் அநேக விஷயங்கள் தவறானவையாக இருப்பது ஏன்? (ஆங்கிலம்) என்ற புத்தகத்திலிருந்து இந்த அட்டவணை எடுக்கப்பட்டிருக்கிறது.
[பக்கம் 15-ன் படங்கள்]
திடீர் மாற்றத்திற்குள்ளான பழ ஈ (மேலே), அரைகுறையான நிலையில், ஆனால் இன்னும் பழ ஈதான்
[படத்திற்கான நன்றி]
© Dr. Jeremy Burgess/Photo Researchers, Inc.
[பக்கம் 15-ன் படங்கள்]
தாவரங்களில் திடீர் மாற்றத்தால் உருவான மாறுபட்ட வகைகள் குறைந்துகொண்டே வந்தன, ஒரிஜினல் வகைகளோ பெருகிக்கொண்டே வந்தன (திடீர் மாற்றத்திற்குள்ளான தாவரத்தின் பெரிய பூக்கள்)
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
From a Photograph by Mrs. J. M. Cameron/ U.S. National Archives photo
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
ஃபின்ச் தலைகள்: © Dr. Jeremy Burgess/ Photo Researchers, Inc.
[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]
டைனோசர்: © Pat Canova/Index Stock Imagery; புதைபடிவங்கள்: GOH CHAI HIN/AFP/Getty Images