Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யார் சொல்வதை நம்ப வேண்டும்?

யார் சொல்வதை நம்ப வேண்டும்?

யார் சொல்வதை நம்ப வேண்டும்?

“எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.”​—⁠எபிரெயர் 3:4.

பைபிளின் இந்தக் கருத்து நியாயமானதுதான் என நீங்கள் நினைக்கிறீர்களா? இது எழுதப்பட்டு கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இக்காலப்பகுதியில் மனிதர் விஞ்ஞானத் துறையில் விறுவிறுவென முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, இயற்கையில் தெரிகிற வடிவமைப்பை வைத்து, இதையெல்லாம் வடிவமைத்துப் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என இன்னும் யாராவது நம்பிக்கொண்டிருக்கிறார்களா?

விஞ்ஞானத்தில் வளர்ச்சி கண்டிருக்கும் நாடுகளில் வாழும் அநேகரும்கூட கடவுள் ஒருவர் இருக்கிறாரென நம்புவதாக கூறுகிறார்கள். இது குறித்து நியூஸ்வீக் பத்திரிகை 2005-⁠ம் ஆண்டில் ஒரு சுற்றாய்வு நடத்தியது. அதன்படி, ஐக்கிய மாகாணங்களில் 80 சதவீதத்தினர், “இந்தப் பிரபஞ்சத்தை கடவுள்தான் படைத்தார் என்பதை நம்புகிறார்கள்” என்று தெரியவருகிறது. படிக்காதவர்கள்தான் இப்படி நம்புகிறார்களா? விஞ்ஞானிகள் யாராவது கடவுளை நம்புகிறார்களா? இது சம்பந்தமாக நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகை 1997-⁠ல் ஒரு சுற்றாய்வு நடத்தியது. இதில் கலந்துகொண்ட உயிரியலாளர்கள், இயற்பியலாளர்கள், கணிதவியலாளர்கள் ஆகியோரில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் கடவுள் இருப்பதை தாங்கள் நம்புவதாக தெரிவித்தார்கள். அதுமட்டுமா, அவர் தங்கள் ஜெபங்களைக் கேட்டு, அதற்குப் பதிலளிப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

என்றாலும், மற்ற விஞ்ஞானிகள் இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான டாக்டர் ஹர்பர்ட் ஏ. ஹாப்ட்மன், சமீபத்தில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் இது சம்பந்தமாக ஒரு கருத்தைத் தெரிவித்தார்; அதாவது, இயற்கைக்கு அப்பாற்பட்டதை நம்புவது, அதிலும் முக்கியமாக கடவுளை நம்புவது உண்மையான அறிவியலுக்கு முரணானது என தெரிவித்தார். “இந்த நம்பிக்கை மனிதகுலத்திற்கு கேடு விளைவிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படும் வடிவமைப்பைப் பார்க்கையில் நிச்சயம் ஒரு வடிவமைப்பாளர் இருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடவுளை நம்பும் விஞ்ஞானிகள்கூட இந்த உண்மையைக் கற்பிக்கத் தயங்குகிறார்கள். ஏன்? ஸ்மித்சோனியன் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த புதைபடிவ உயிரியல் வல்லுநரான டக்லஸ் எச். எர்வின் இதற்கான காரணம் ஒன்றைத் தெரிவிக்கிறார்: “அற்புதங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது, இது அறிவியலின் நியதிகளில் ஒன்று.”

நீங்கள் எதைச் சிந்திப்பது, எதை நம்புவது என்பதை மற்றவர்கள் தீர்மானிக்க விரும்புகிறீர்களா? அல்லது அத்தாட்சிகளை ஆராய்ந்து பார்த்து நீங்களாகவே ஒரு முடிவுக்கு வர விரும்புகிறீர்களா? சமீப கால அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி பின்வரும் பக்கங்களில் வாசிக்கும்போது படைப்பாளர் ஒருவர் இருப்பதை நம்புவது அறிவுப்பூர்வமானதுதானா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

அத்தாட்சிகளை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்

[பக்கம் 3-ன் பெட்டி]

யெகோவாவின் சாட்சிகள் படைப்புவாதிகளா?

பைபிளில் உள்ள ஆதியாகமம் என்ற புத்தகம் படைப்பு பற்றிச் சொல்கிறது. அந்தப் பதிவு உண்மை என்றே யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். அதற்காக, யெகோவாவின் சாட்சிகளை படைப்புவாதிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது. ஏன்? முதலாவதாக, சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பிரபஞ்சமும், பூமியும் அதிலுள்ள எல்லா உயிரினங்களும் ஆறே நாட்களில்​—⁠ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என்ற கணக்கில்​—⁠படைக்கப்பட்டதாக அநேக படைப்புவாதிகள் நம்புகிறார்கள். ஆனால், பைபிள் இப்படிக் கற்பிப்பதில்லை. a இரண்டாவதாக, பைபிள் கற்பிக்காத அநேக கோட்பாடுகளை படைப்புவாதிகள் நம்புகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளோ கடவுளுடைய வார்த்தை கற்பிப்பதை மட்டுமே நம்புகிறார்கள்.

அதுமட்டுமின்றி, சில நாடுகளில் “படைப்புவாதி” என்ற வார்த்தை அரசியலில் மும்முரமாக ஈடுபடும் அடிப்படைவாத அமைப்பினரைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. தங்களுடைய மத நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு சட்டங்களையும் போதனைகளையும் வகுத்து அவற்றைப் பின்பற்றும்படி அரசியல்வாதிகள், நீதிபதிகள், கல்வியாளர்கள் ஆகியோரை வற்புறுத்த இவர்கள் முயலுகிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகளோ அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை. சட்டங்களை வகுக்கவும், அமல்படுத்தவும் அரசாங்கங்களுக்கு இருக்கும் உரிமையை அவர்கள் மதிக்கிறார்கள். (ரோமர் 13:1-7) அதேசமயத்தில், கிறிஸ்தவர்கள் “உலகத்தின் பாகமானவர்கள் அல்ல” என்று இயேசு குறிப்பிட்டதையும் அவர்கள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள். (யோவான் 17:14-16, NW) கடவுள் அளித்திருக்கும் நெறிமுறைகளின்படி வாழ்வதால் வரும் நன்மைகளைப் பற்றிக் கற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு உதவுகிறார்கள்; இதற்காக அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுகிறார்கள். அடிப்படைவாதிகளோ, பைபிள் நெறிமுறைகளைப் பின்பற்றும்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்துகிற பொதுச் சட்டங்களை இயற்ற முயலுகிறார்கள்; அவர்களை யெகோவாவின் சாட்சிகள் ஆதரிப்பதில்லை. இவ்விதமாக கிறிஸ்தவ நடுநிலை தவறாமல் நடந்துகொள்கிறார்கள்.​யோவான் 18:⁠36.

[அடிக்குறிப்பு]

a தயவுசெய்து, இந்த இதழில் பக்கம் 18-⁠ல் உள்ள “பைபிளின் கருத்து: அறிவியலும் ஆதியாகமமும் முரண்படுகின்றனவா?” என்ற கட்டுரையைக் காண்க.