Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறந்தவர்களுக்கு நீங்கள் உதவ முடியுமா?

இறந்தவர்களுக்கு நீங்கள் உதவ முடியுமா?

பைபிளின் கருத்து

இறந்தவர்களுக்கு நீங்கள் உதவ முடியுமா?

“ஆரம்ப காலத்திலிருந்தே சர்ச் . . . [இறந்தவர்களுக்காக] பரிந்துபேசும் சுருக்கமான ஜெபங்களை ஏறெடுக்கிறது . . . இவ்வாறு அவர்கள் சுத்திகரிக்கப்படுவதால், கடவுளின் பேரின்ப தரிசனத்தைக் காணலாம்.” ​—⁠“கேட்டகிஸம் ஆஃப் த கேத்தலிக் சர்ச்.”

எல்லா இனத்தவரும் பொதுவாக இறந்தவர்களின் நிலை குறித்துக் கவலைப்படுகிறார்கள். அவ்வாறே, உங்கள் அன்புக்குரியவர் இறந்தபோது ஒருவேளை நீங்களும் தாங்க முடியாத துக்கத்தில் தவித்திருக்கலாம்; பேரிழப்பை உணர்ந்திருக்கலாம். இறந்தவர்கள் இன்னமும் எங்காவது உயிரோடு இருக்கிறார்களா, அவர்கள் கஷ்டப்படுகிறார்களா, சாந்தி அடைந்திருக்கிறார்களா, அவர்களுக்கு ஏதாவது விதத்தில் நீங்கள் உதவ முடியுமா என்றெல்லாம் யோசித்திருக்கலாம்.

இறந்தவர்களுக்கு தாங்கள் உதவ முடியுமென பக்தியுள்ள அநேகர் நம்புகிறார்கள். உதாரணத்திற்கு, இந்துக்களை எடுத்துக்கொண்டால், தங்கள் அன்புக்குரியவரின் சடலத்தை கங்கை நதிக்கரையில் தகனம் செய்து, சாம்பலை அதன் தண்ணீரில் தூவிவிடும்போது, இறந்த அந்த நபரின் ஆன்மா நித்திய பேரின்பத்தை நிச்சயம் அடையும் என அவர்கள் நம்புகிறார்கள். கிழக்கத்திய நாடுகளில் உள்ள புத்த மதத்தவரை எடுத்துக்கொண்டால், காகிதத்தால் செய்யப்பட்ட கார்கள், வீடுகள், உடைகள், பணம் போன்றவற்றை எரிக்கும்போது, இறந்தவர்கள் மறு உலகத்தில் அவற்றை உபயோகிக்க முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆப்பிரிக்காவில், இறந்தவருக்குப் பயன்படுமென்ற எண்ணத்தில் கல்லறையில் மதுபானங்களை ஊற்றுகிறார்கள்.

கத்தோலிக்க மதம் என்ன போதிக்கிறது? ஒருவர், வேண்டுமென்றே ஏதாவது மோசமான பாவத்தை செய்துவிட்டு, மனந்திரும்பாமல் இறந்துவிட்டால், கடவுளுடைய தயவைப் பெற முடியாதபடி அவர் தன்னை விலக்கிக்கொண்டிருக்கிறார் என்று போதிக்கிறது. இந்த நிலை “‘நரகம்’ என்று அழைக்கப்படுகிறது.” மறுபட்சத்தில், கடவுளுடைய தயவைப் பெற்றிருக்கும் நபர் பரலோகத்தில், அவரோடு “உன்னதமான, நித்திய பேரின்பத்தை” அனுபவிப்பாரென எதிர்பார்க்கலாம்; அதுவும் முற்றும் முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்ட பிறகு அதை அனுபவிப்பாரென எதிர்பார்க்கலாம் என்றும் போதிக்கிறது. இப்படிச் சுத்திகரிக்கப்படுவதற்கு அவர் உத்தரிக்கும் ஸ்தலத்தில் கொஞ்ச நாட்கள் இருந்து, தான் செய்த மன்னிக்கப்படக் கூடிய பாவங்களுக்காக, “சுத்திகரிக்கும் நெருப்பில்” தண்டனையைச் சகிக்க வேண்டியிருக்கலாம். ஒருவர் உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கும்போது, அவர் சார்பில் ஏறெடுக்கப்படுகிற பரிந்துபேசும் சுருக்கமான ஜெபங்களிலிருந்தும், அவருக்காக நடத்தப்படும் பூசைகளிலிருந்தும் உதவி பெறலாம்; இந்த ஜெபங்கள் சர்ச்சின் மூலம் ஏறெடுக்கப்படுகின்றன. இத்தகைய பூசைகளுக்காக, இறந்துபோனவரின் நண்பர்களோ, உறவினர்களோ பொதுவாக கட்டணம் செலுத்துகிறார்கள்.

உங்கள் அன்புக்குரியவர் அனுபவிப்பதாகக் கருதும் எந்த வேதனையையும் தணிப்பதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நீங்கள் ஆசைப்படுவது இயல்புதான். நம்மால் அவர்களுக்கு உதவ முடியுமென்றால் அதை எப்படிச் செய்யலாம் என்பதை கடவுள் தெளிவாக விளக்கியிருக்க மாட்டாரா? இறந்தவர்களுக்கு உதவுவதைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது என பார்க்கலாம்.

இறந்தவர்களின் நிலை

ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கையே, அதாவது ஒருவர் இறந்தபிறகு அவருடைய உடலின் ஒரு பாகம் மட்டும் தொடர்ந்து உயிர்வாழ்கிறதென்ற நம்பிக்கையே மேற்குறிப்பிடப்பட்ட இந்த எல்லா பழக்கங்களுக்கும் காரணமாகும். அப்படித்தான் பைபிள் கற்பிக்கிறதா? அது இவ்வாறு சொல்கிறது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 6, 10) பாதாளம் என்பது மனிதர்களின் பிரேதக்குழியைக் குறிக்கிறது.

மரிக்கும்போது மனிதனின் நிலை என்னவாகிறது என்பதைக் குறித்து கடவுளுடைய ஏவுதலால் சங்கீதக்காரன் இவ்வாறு எழுதுகிறார்: “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.”​—சங்கீதம் 146:4.

பைபிளின் கூற்றுகள் அதிகாரப்பூர்வமானவை, நியாயமானவை. பின்வரும் கேள்விகளைக் குறித்து உங்கள் கருத்து என்ன? பிறப்பிலேயே பெற்ற பாவத்தன்மைக்காக தன் பிள்ளைகளை ஓர் அன்பான தகப்பன் கஷ்டப்படுத்துவாரா? (ஆதியாகமம் 8:21) நிச்சயமாக மாட்டார். அப்படியென்றால் அதுபோன்ற காரியத்தை நம் அன்பான பரலோகத் தகப்பன் எப்படிச் செய்வார்? பூர்வ இஸ்ரவேலர் புறமத சடங்குமுறையைப் பின்பற்றத் தொடங்கி, தங்கள் பிள்ளைகளைப் பொய்க் கடவுட்களுக்கு அக்கினியில் பலி செலுத்தியபோது அத்தகைய அருவருப்பான பழக்கத்தை யெகோவா கண்டித்தார்; ‘அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை’ என சொன்னார்.​—எரேமியா 7:31.

மனிதனுடைய பாவத்தின் விளைவு மரணமே தவிர, மரணத்திற்குப் பின் வாதனையை அனுபவிப்பது அல்ல. “பாவத்தின் சம்பளம் மரணம்” என பைபிள் சொல்கிறது; ‘மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறான்’ என்றும் அது சொல்கிறது.​—ரோமர் 5:12; 6:7, 23.

இறந்தவர்கள் துன்பப்படுவதில்லை. மாறாக, அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப்போல் எந்த உணர்வுமின்றி இருக்கிறார்கள்; அவர்கள் இன்பமான நிலையிலும் இல்லை, உணர்வுள்ள வேறு எந்த நிலையிலும் இல்லை. எனவே, இறந்தவர்களுக்கு உதவ மனிதர்கள் எடுக்கும் எந்த முயற்சியும் பைபிள் போதனைகளுக்கு முரணானது என்பதில் சந்தேகமே இல்லை.

இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

எனினும், உங்கள் அன்புக்குரியவர்கள் யாராவது இறந்திருந்தால், அவர்கள் நித்திய காலத்திற்கும் உணர்வற்ற நிலையிலேயே இருப்பார்கள் என்பதை அது அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

தம் அருமை நண்பரான லாசருவை மீண்டும் உயிரோடு கொண்டுவருவதற்கு முன்பாக, ‘நித்திரையடைந்திருக்கிற அவரை தாம் எழுப்பப் போவதாக’ இயேசு சொன்னார். (யோவான் 11:11) மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு . . . புறப்படுவார்கள்’ என விளக்கினார். (யோவான் 5:28, 29) உயிர்த்தெழுப்பப்படுபவர்கள் தங்களுடைய முந்தைய பாவங்களிலிருந்து ஏற்கெனவே விடுதலை பெற்றிருப்பார்கள்; எனவே, உயிரோடு இருந்த காலத்தில் செய்த தவறுகளுக்காகத் துன்பப்பட வேண்டிய அவசியம் இருக்காது. பரிபூரண நிலைமைகளில் சந்தோஷமாக வாழ்வதற்கான வழியைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு இருக்கும். எப்பேர்ப்பட்ட அருமையான நம்பிக்கை!

அத்தகைய நம்பிக்கை உங்கள் மனதைக் கவருகிறதா? அப்படியென்றால் இந்த வாக்குறுதிகள் எந்தளவு நம்பகமானவை என்பதை ஆராய்ந்து பார்க்கத் தயங்காதீர்கள். உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷமாய் முன்வருவார்கள்.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ இறந்தவர்கள் உணர்வுடன் இருக்கிறார்களா?​—⁠சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5, 6, 10.

◼ இறந்தவர்கள் எரிநரகத்தில் துன்பப்பட கடவுள் அனுமதிப்பாரா?​—⁠எரேமியா 7:⁠31.

◼ இறந்தவர்களுக்கு எதிர்கால நம்பிக்கை இருக்கிறதா?​—⁠யோவான் 5:28, 29.