Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கார் கடத்தல் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள வழி

கார் கடத்தல் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள வழி

கார் கடத்தல் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள வழி

தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கார் கடத்தல், கராச்சியிலிருந்து லிஸ்பன்வரை, நைரோபியிலிருந்து ரியோ டி ஜெனிரோவரை உலகிலுள்ள நகரங்களில் பூதாகரமாய் வெடித்துவரும் பிரச்சினையாக இருக்கிறது. அமெரிக்காவில், 1993-⁠க்கும் 2002-⁠க்கும் இடையில் ஆண்டுதோறும் சுமார் 38,000 கார் கடத்தல்கள் நடந்திருப்பதாக ஐ.மா. நீதியியல் புள்ளிவிவரத்துறை கூறுகிறது.

அமெரிக்காவின் மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள்தான் தென் ஆப்பிரிக்காவில் வசிக்கிறார்கள்; ஆனால், இங்குதான் அதிக வீதத்தில் கார் கடத்தல் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும் 14,000-⁠க்கும் அதிகமான கார் கடத்தல்கள் இங்கே நடக்கின்றன. இது சம்பந்தமாக சில அனுபவங்களை இப்போது கவனிக்கலாம். மற்ற குற்றங்களைவிட கார் கடத்தல் ஏன் அநேகரை குலைநடுங்க வைக்கிறது என்பதை அதன்பின் உங்களால் புரிந்துகொள்ள முடியும். தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமான ஜோஹெனஸ்பர்க்கில் வாழும் சிலருடைய அனுபவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படிப்பதன்மூலம், காரில் கடத்தப்பட்டால் நீங்கள் என்ன செய்யலாம், அப்படிக் கடத்தப்படுவதை எப்படி தடுக்கலாம் என்பதையெல்லாம் தெரிந்துகொள்வீர்கள்.

நிஜ சம்பவங்கள்

“நானும் என்னுடைய தோழி சூசனும் ஒரு வருடமாக சேர்ந்து ஊழியம் செய்துவருகிறோம். ஒரு புதன்கிழமை அன்று, நாங்கள் பைபிள் படிப்பு நடத்தும் ஒருவருடைய வீட்டிற்கு காரில் சென்றோம். ஒரு குடியிருப்புப் பகுதியை ஒட்டியிருக்கும் சாலையோரமாக இருந்த மரத்தடியில் டீ குடிப்பதற்காக காரை நிறுத்தினோம். பின்னாலிருந்த கூடையை எடுப்பதற்காக சூசன் காரைவிட்டு இறங்கினாள். டீ ‘கப்’பை எடுத்து என்னிடம் கொடுத்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பேர் அங்கே வந்தார்கள். சட்டென்று ஒருவன் சூசனுடைய கழுத்தில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான். அரண்டுபோய், நான் காரைவிட்டு இறங்க முயன்றேன். ஆனால், மற்றொருவன் என்னை திரும்ப உள்ளே தள்ளிவிட்டான். எங்களை அந்த ஆட்கள் கடத்திச் சென்றுகொண்டிருந்தார்கள். ஒருவன் காரை ஓட்டிக்கொண்டிருக்க, மற்றவன் அவனுக்கு உதவியாக இருந்தான். அவர்கள் எங்களை கற்பழித்து விடுவார்கள் அல்லது கொன்றுவிடுவார்கள் என்றே நினைத்தேன்.”​—⁠அனீகா, ஓர் இளம் மனைவி.

“அன்று காலை 7 மணிக்கு, காரில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். பொதுவாக, வேலை தேடிக்கொண்டிருப்போர் நிற்கும் ஒரு சாலை சந்திப்பில் காரை நிறுத்தினேன். வருவோர் போவோர் யாரையும் நான் கவனிக்கவே இல்லை. திடீரென, திறந்திருந்த ஜன்னல் வழியாக ஒருவன் என் கழுத்துக்கு நேராக துப்பாக்கியை வைத்து, ‘வெளியே வந்துவிடு, இல்லையென்றால் சுட்டுவிடுவேன்’ என்று உறுமினான். அந்த சமயம் பார்த்து ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் தலைக்குமேல் பறந்தது. போலீஸ்தான் வந்துவிட்டது என்று அந்தக் கடத்தல்காரன் நினைத்துவிட்டான். சட்டென என் கழுத்தில் சுட்டுவிட்டு ஓடிவிட்டான். அதில் என் தண்டுவடம் பிளந்தது. என் கழுத்துக்கு கீழே உடல் முழுவதும் செயலிழந்தது. இப்போது கை, கால்களை என்னால் அசைக்க முடியாது, அவற்றில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.”​—⁠பரீ, ஒரு டீனேஜ் பையனுக்கு அப்பா.

“நானும் என் மனைவி லின்சியும் மதிய உணவருந்த வெளியே போவதற்குக் கிளம்பிக்கொண்டிருந்தோம். என்னுடைய மனைவிக்காக காரில் காத்திருந்தேன். காரின் கதவுகளைப் பூட்டியிருந்தேன்; உஷ்ணமாக இருந்ததால் ஜன்னல்களை மட்டும் லேசாக திறந்து வைத்திருந்தேன். நான் ஓட்டுநர் இருக்கையில் உட்கார்ந்திருந்தேன். தெரு முனையில் திரும்பி இரண்டு பேர் அந்த வழியாக ரொம்ப சாதாரணமாக வந்துகொண்டிருந்ததை கவனித்தேன். காரிலிருந்து சுமார் எட்டடி தூரத்தில் வந்தவுடன், ஒருவன் காருக்கு இடது பக்கமாகவும் மற்றொருவன் வலது பக்கமாகவும் பிரிந்தார்கள். திடீரென, அவர்கள் இரண்டு பக்கமும் வந்து கார் கதவுகளருகே துப்பாக்கியால் என்னை குறிபார்த்தபடியே, கத்தி கட்டளையிட்டனர். அவர்கள் சொன்னபடியே காரை ‘ஸ்டார்ட்’ செய்தேன்; அதன்பிறகு, ‘பின் இருக்கையில் போய் உட்கார்’ என்று கத்தினார்கள். ஒருவன் காரை ஓட்டினான். மற்றவனோ, தலையை கீழே போட்டுக்கொண்டு இருக்குமாறு என்னைக் கட்டாயப்படுத்தினான். ‘நான் உன்னை கொல்லப்போகிறேன்’ என்று அவன் மிரட்டினான். ‘நான் ஒரு யெகோவாவின் சாட்சி’ என்று கூறினேன். ஆனால் அவன் என்னை கொல்வது பற்றியே பேசிக்கொண்டிருந்தான். காரும் நானும் காணாமல் போனதைப் பார்த்து என் அன்பான மனைவி எப்படி அதிர்ச்சியடைந்திருப்பாள் என்பதை நினைத்து, நான் ஜெபம் செய்துகொண்டு இருந்தேன்.”​—⁠அலன், பயணக் கண்காணியும் அப்பாவும்.

காரில் கடத்தப்படுவது எவ்வளவு விரைவாக திடுதிப்பென்று நடக்கலாம் என்பதை இந்த அனுபவங்கள் காட்டுகின்றன. பொதுவாக கடத்தல்காரர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது. பல இடங்களில், குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள சாலையில் காரை நிறுத்திக் காத்திருப்பதோ ஓய்வெடுப்பதோ இப்போதெல்லாம் பாதுகாப்பானதல்ல. சாலைசந்திப்புகள், சாலையிலிருந்து வீட்டுக்குச் செல்லும் பாதைகள் ஆகியவையும் ஆபத்தானவையே.

கடத்தப்பட்ட பிறகு . . .

சூசன், அனீகாவுடைய அனுபவம் சுபமாக முடிந்தது. கடத்தல்காரர்கள் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது, அந்த இரண்டு பெண்களும் தாங்கள் பைபிள் படிப்பு நடத்துவதைப் பற்றி அவர்களுக்கு விளக்கினர். இது அவர்களுடைய மனசாட்சியை உறுத்தியிருக்கும்போல் தெரிகிறது. அனீகா இவ்வாறு விளக்குகிறார்: கடத்தல்காரர்கள் “தங்கள் செய்கைக்காக மன்னிப்புக் கேட்டனர். இந்தக் காலத்தில் வாழ்க்கையை ஓட்ட கஷ்டமாக இருப்பதால் வேறு வழியில்லாமல் திருடவும் கடத்தவும் செய்ததாக அவர்கள் சொன்னார்கள். கடவுள் ஏன் துன்பத்தையும் வறுமையையும் அனுமதித்திருக்கிறார் என்பதை அவர்களுக்கு விளக்கினோம்.” பைபிளின் செய்தி அந்த இரண்டு கடத்தல்காரர்களின் இருதயங்களைத் தொட்டது. எடுத்திருந்த பணத்தையும் கைக்கடிகாரத்தையும் திருப்பிக்கொடுக்க முடிவு செய்தனர். சூசனுக்கும் அனீகாவுக்கும் எந்தவித கெடுதலும் செய்யப்போவதில்லை என்று உறுதியளித்தனர். “இனிமேல் இப்படி கடத்தப்படாதிருக்க என்ன செய்யவேண்டும் என்று அவர்களில் ஒருவன் ஆலோசனை கொடுக்க ஆரம்பித்தான்” என்று சொல்கிறார் சூசன். அனீகா மேலும் கூறுகிறார்: “இனிமேல் டீ குடிக்க காரை சாலையோரமாக நிறுத்தவே மாட்டோம் என்று எங்களிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டார்கள்.” சொன்னபடியே, கடத்தல்காரர்கள் காரை நிறுத்தி, இறங்கி, சந்தோஷமாக சில பைபிள் பிரசுரங்களை பெற்றுக்கொண்டு சூசனையும் அனீகாவையும் பாதுகாப்பாக அனுப்பிவிட்டனர்.

பயணக் கண்காணியான அலன் விஷயம் என்னவானது? கடத்தல்காரர்கள் ஒதுக்குப்புறமான இடத்துக்குச் சென்ற பிறகு கீழே இறங்கும்படி அவரை அதட்டினர். விலைமதிப்புள்ள உடமைகளை இழந்தாலும் உடல்ரீதியாக எந்தக் கேடும் இல்லாமல் தப்பித்ததற்காக அவர் சந்தோஷப்பட்டார். அலன் நினைவுபடுத்திச் சொல்கிறார்: “அதிக பாதிப்பு இல்லாமல் வந்தேன் என்று நினைக்கிறேன், ஏனெனில், நான் அவர்களோடு ஒத்துழைத்தேன், மல்லுக்கு நிற்கவில்லை, பதற்றப்படவுமில்லை. சொல்லப்போனால், நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். சாத்தானுடைய பொல்லாத உலகின் கடைசி நாட்களின் விளிம்பில் வாழ்வதால் எல்லா நேரத்திலுமே கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன்.” அடுத்தநாள் அலனும் லின்சியும் தாங்கள் விஜயம் செய்த சபையைச் சேர்ந்தவர்களோடு திரும்பவும் அதே பகுதிக்கு பிரசங்கிக்க சென்றனர். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் ஜெபம் செய்தோம், நாள்முழுவதும் சுற்றுமுற்றும் கவனமாக பார்த்துக்கொண்டே இருந்தோம். அது சுலபமாக இல்லை, ஆனால் யெகோவா ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை’ எங்களுக்குத் தந்தார்.”​—2 கொரிந்தியர் 4:1, 7, NW.

இதில் மோசமாக பாதிக்கப்பட்ட பரீ, கடந்த 11 வருடங்களாக சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடக்கிறார். பரீ இந்த அனுபவத்தால் மனக்கசப்படைந்துவிடாமல் நம்பிக்கையோடு இருப்பது பாராட்டுக்குரியது. நீதியுள்ள புதிய உலகத்தைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதியின் மீதுள்ள அவரது நம்பிக்கை ஆட்டம்காணவில்லை. (2 பேதுரு 3:13) அவர் தொடர்ந்து கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராகிறார், மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்க கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவை சேவிப்பது எப்பொழுதுமே சந்தோஷத்தைத் தருகிறது. சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. இருந்தாலும் யெகோவா எனக்காக செய்தவற்றை அடிக்கடி நினைத்துப்பார்க்கிறேன். இது சகித்துக்கொள்ள எனக்கு உதவுகிறது. விரைவில் இந்தப் பொல்லாத உலகம் முடிவுக்கு வரும். அப்போது நான் மறுபடியும் நடப்பேன். அந்த நாள் எவ்வளவு அருமையாக இருக்கும்!​—ஏசாயா 35:6; 2 தீமோத்தேயு 3:1-5.

தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் எடுத்திருக்கிற நடவடிக்கைகளால் அங்கு கார் கடத்தல் குறைந்திருக்கிறது. என்றாலும், கார் கடத்தல் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது, உலகின் மற்ற பகுதிகளில் அதிகரித்தும் வருகிறது. இதுபோன்ற குற்றங்களுக்கும் வன்முறைக்கும் கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே சமாதிகட்டும். உண்மை கிறிஸ்தவர்கள் அந்த ராஜ்யத்திற்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.​—சங்கீதம் 37:9-11; மத்தேயு 6:10.

[பக்கம் 14-ன் படக்குறிப்பு]

கார் கடத்தல்

[பக்கம் 14-ன் படக்குறிப்பு]

அபாயத்தைக் குறைக்க ஆலோசனைகள்

[பக்கம் 14-ன் படக்குறிப்பு]

◼கார் கடத்தல் நடந்த பகுதியில் நீங்கள் கார் ஓட்டுகிறீர்கள் என்றால், கதவுகளைப் பூட்டி ஜன்னல்களை மூடியே வையுங்கள்.

◼சாலை சந்திப்புகளில் நிறுத்துவதற்காக வேகத்தைக் குறைக்கும்போது, சாலையின் இருபுறங்களிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றிக்கொண்டிருக்கிறார்களா என்று கவனியுங்கள்.

◼உங்கள் காருக்கும், முன்னால் செல்லும் காருக்கும் போதுமான இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சுலபமாக இருக்கும்.

◼ஒரு கார் உங்களுடைய காரின் பின்புறத்தில் மோதிவிட்டால், சேதத்தை பார்வையிடுவதற்காக கீழே இறங்கும்முன் எச்சரிக்கையாக இருங்கள். அது சூழ்ச்சியாகக்கூட இருக்கலாம். கார் கடத்தல் அதிகமாக நடக்கும் பகுதியாக இருந்தால், அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு காரை ஓட்டிச்செல்வது பாதுகாப்பானதாக இருக்கலாம்.

◼வீட்டு வாசலருகே யாராவது முன்பின் தெரியாத ஆட்கள் சுற்றிக்கொண்டிருந்தால் ஜாக்கிரதை. அந்தமாதிரி சூழ்நிலையில் காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றுவிட்டு, பிற்பாடு வீடு திரும்புங்கள். அதுதான் பாதுகாப்பாக இருக்கும். இல்லையென்றால், பக்கத்திலுள்ள காவல் நிலையத்திற்கு ஓட்டிச்செல்லலாம்.

◼ஆபத்தான பகுதியிலோ ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியிலோ காரை நிறுத்திக் காத்திருக்க நேரிட்டால், உங்களுக்கு முன்னும்பின்னும் என்ன நடக்கிறது என்பதில் கவனமாயிருங்கள். ஆபத்தென்று நீங்கள் சந்தேகித்தால், காரை எடுத்துக்கொண்டு வேறொரு பகுதிக்கு சென்றுவிடுங்கள்.

[பக்கம் 14-ன் படக்குறிப்பு]

சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடந்தாலும் பரீ நம்பிக்கையோடு இருக்கிறார்