Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாப்பிடுகிற விஷயத்தில் எனக்குப் பிரச்சினையா?

சாப்பிடுகிற விஷயத்தில் எனக்குப் பிரச்சினையா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

சாப்பிடுகிற விஷயத்தில் எனக்குப் பிரச்சினையா?

“சாப்பிட உட்கார்ந்ததும் சிலசமயங்களில் எனக்கு உதறலாக இருக்கும், கைகால் நடுங்க ஆரம்பித்துவிடும். குண்டாகிவிடுவேனோ என்ற பயம் வந்துவிடும். ‘எப்படியாவது இன்னும் இரண்டு கிலோவைக் குறைக்க வேண்டும்’ என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன்.” ​—⁠மெலிசா.*

*இந்தக் கட்டுரையில் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

“அழகாக இருக்க ஆசைப்படுகிறேன், குண்டாகிவிடுவேனோ என பயப்படுகிறேன். சாப்பிட்ட உடனேயே போய் எல்லாவற்றையும் நான் வாந்தியெடுத்துவிடுவது யாருக்கும் தெரியக் கூடாதென்று நினைக்கிறேன். ரொம்ப சங்கடமாக இருக்கிறது.”​—⁠ஆம்பர்.

“‘ . . . இன்று ஒழுங்காக இருக்கப் போகிறேன் . . . ’ என்று மனதுக்குள் சொல்லிக்கொள்வேன். அன்றே கொஞ்ச நேரம் கழித்து என்னையும் மீறி, எக்கச்சக்கமான சாப்பாட்டை மடமடவென சாப்பிட்டுவிடுவேன். பிறகு மனது குறுகுறுக்கும், செத்துவிடலாம் போல் இருக்கும்.”​—⁠ஜெனிஃபர்.

பார்க்க அழகாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள், அது இயல்பான ஆசைதான். நீங்கள் கவலையாக இருக்கும்போது அல்லது சோர்வாக இருக்கும்போது யாராவது ஆறுதலாக நாலு வார்த்தை சொல்ல வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள். இதிலும் தவறில்லை. ஆனால், இங்கே குறிப்பிடப்பட்ட பெண்களில் யாரைப் போலாவது இருந்தீர்களென்றால் உங்களுக்குப் பிரச்சினை இருக்கலாம். இந்தப் பிரச்சினை உங்களுக்கு மட்டுமே இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். சொல்லப்போனால், லட்சக்கணக்கான இளம் வயதினருக்கு, அதிலும் பெரும்பாலும் பெண்களுக்கு, சாப்பிடுகிற விஷயத்தில் பிரச்சினை (eating disorder) இருக்கிறது.#

நாம் இப்போது அனோரெக்ஸியா (anorexia), அதாவது பசியில்லா உளநோய், புலிமியா (bulimia), அதாவது பெரும்பசி நோய், பின்ஞ் ஈட்டிங், அதாவது அரக்கப்பரக்க எக்கச்சக்கமான உணவைச் சாப்பிடுவது ஆகிய பிரச்சினைகளைப் பற்றி சற்று விரிவாகச் சிந்திப்போம். இந்த ஒவ்வொரு நோய்களுக்கும் அவற்றுக்கே உரிய அறிகுறிகள் உள்ளன, இவற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒரு விஷயம் பொதுவாகக் காணப்படுகிறது; அது, உணவுப் பழக்கங்களில் ஒழுங்கீனமாக இருப்பதே. பின்வரும் விளக்கத்தைப் படிக்கும்போது நீங்களும் அத்தகைய நோயால் அவதிப்படுவதாக நினைத்தால் கலங்காதீர்கள், உதவி கிடைக்குமென்ற நம்பிக்கையோடு இருங்கள். நீங்கள் குணமடைய முடியும்!

பொதுவான விளக்கம்

◼அனோரெக்ஸியா. அனோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பெண் ஒல்லிக்குச்சியாக இருந்தாலும் கண்ணாடியில் பார்க்கும்போது தான் குண்டாக இருப்பதாகவே நினைக்கிறாள். எடையைக் குறைக்க அவள் மட்டுக்குமீறிய நடவடிக்கைகள் எடுக்கிறாள். “எத்தனை கலோரி உணவைச் சாப்பிடுகிறேன் என தவறாமல் கணக்கு வைத்துக்கொண்டேன். வாரம் முழுவதும் என்னென்ன சாப்பிட வேண்டுமென பார்த்துப் பார்த்துப் பட்டியல் போட்டேன், சில வேளை சாப்பாட்டை ‘கட்’ பண்ணினேன், நிறைய கலோரி சாப்பிட்டுவிட்டதாக நினைத்த போதெல்லாம் வெறித்தனமாக உடற்பயிற்சியில் இறங்கினேன். தினமும் ஆறு மலமிளக்கி மாத்திரைகளை (laxative) விழுங்கினேன்” என இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்கிறாள்.

சீக்கிரத்திலேயே அனோரெக்ஸியாவால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கின்றன. எடை குறைவது பொதுவான அறிகுறி, அதோடுகூட பாதிக்கப்பட்ட நபரின் முடி உதிரும், தோல் வறண்டு போகும், களைப்பு ஏற்படும், எலும்பின் அடர்த்தி குறையும். ஒழுங்கற்ற விதத்தில் மாதவிடாய் வரலாம் அல்லது பல மாதங்களுக்கு மாதவிடாய் வராமலே இருக்கலாம்.

ஒருவேளை இந்த அறிகுறிகளால் எந்தப் பாதிப்பும் இல்லாததுபோலவே தோன்றலாம், ஆனால், இந்த உண்மையை மறவாதிருங்கள்​—⁠அனோரெக்ஸியா உயிருக்கு ஆபத்தானது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதத்தினர் இறந்துவிடுகிறார்கள்; பொதுவாக உடல் உறுப்பு இயங்காமல் போனதால் அல்லது ஊட்டச்சத்துக் குறைவு சம்பந்தப்பட்ட பிற பிரச்சினைகளால் இறந்துவிடுகிறார்கள் என்பது ஓர் ஆய்வில் தெரியவந்தது.

◼புலிமியா. சாப்பாட்டை அடியோடு ஒதுக்குவதற்குப் பதிலாக புலிமியாவால் பாதிக்கப்பட்ட பெண் மூக்குமுட்ட அள்ளி அள்ளிச் சாப்பிடுகிறாள்; இரண்டே மணிநேரத்தில் கிட்டத்தட்ட 15,000 கலோரி உணவை விழுங்கிவிடுகிறாள்! பிறகு சாப்பிட்டதையெல்லாம் வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிடுகிறாள்; அதற்காக, பொதுவாக தொண்டைக்குள் கையைவிட்டு வாந்தியெடுப்பதன் மூலமோ, மலமிளக்கி மாத்திரைகளை அல்லது சிறுநீரிறக்கி மாத்திரைகளை (diuretic) விழுங்குவதன் மூலமோ வெளியேற்றிவிடுகிறாள்.

எக்கச்சக்கமான உணவை அரக்கப்பரக்க சாப்பிடுவது பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. “மற்றவர்கள் வீட்டுக்கு வருவதற்கு முன்பே நான் பள்ளியிலிருந்து வந்துவிட்டேன் என்றால் ஓடிப்போய் ஆசை தீர அள்ளி அள்ளி விழுங்குவேன். நான் சாப்பிட்டதற்கு எந்த அடையாளமும் அங்கிருக்காதபடி பார்த்துக்கொள்வேன்” என ஒரு பெண் சொல்கிறாள். இப்படி வயிறுமுட்ட சாப்பிட்ட பின்பு, மனம் குறுகுறுக்கும். “என்மீதே எனக்குக் கோபம் கோபமாய் வரும், ஆனால், என் செயலுக்கு எளிதில் பரிகாரம் தேடிக்கொள்ளவும் எனக்குத் தெரியும். மாடிக்குப் போவேன், வாந்தியெடுப்பேன், அதற்குப் பிறகு ‘அப்பாடா’ என்று இருக்கும்; அதோடு, என்னை என் “கன்ட்ரோலில்” வைத்துக்கொண்ட உணர்வும் எனக்குள் பிறக்கும்.”

பயன் அளிப்பது போலத் தோன்றினாலும் உணவை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது ஆபத்தானது. மலமிளக்கி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்குவது குடலில் உள்ள மெல்லிய படலத்தைப் பலவீனப்படுத்திவிடும், அதனால் வீக்கம் அல்லது தொற்று ஏற்பட்டுவிடலாம். அடிக்கடி வாந்தியெடுக்கும்போது நீரிழப்பு (dehydration), பற்சிதைவு, உணவுக்குழாய் சேதப்படுவது போன்றவற்றோடு, மாரடைப்பு ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது.

◼பின்ஞ் ஈட்டிங்: புலிமியா நோயாளிகளைப் போலவே பின்ஞ் ஈட்டிங் நோயால் அவதிப்படுபவளும் எக்கச்சக்கமாக உணவை விழுங்குகிறாள். வித்தியாசம் என்னவென்றால் விழுங்கிய உணவை வலுக்கட்டாயமாக வெளியேற்ற மாட்டாள். அதனால், பார்க்க குண்டாக இருக்கலாம். எனினும் சிலர், இப்படிச் சாப்பிட்ட பிறகு உடல் இளைக்க பட்டினி கிடக்கிறார்கள் அல்லது தீவிர உடற்பயிற்சியில் இறங்கிவிடுகிறார்கள். சிலசமயங்களில், இப்படிப்பட்ட முயற்சிகளின் மூலம் குண்டாகாமல் பார்த்துக்கொள்வதால், சாப்பிடுகிற விஷயத்தில் பிரச்சினை இருப்பது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தெரியாமலே போய்விடுகிறது.

அனோரெக்ஸியா, புலிமியா நோயாளிகளைப் போலவே சாப்பிடுகிற விஷயத்தில் பின்ஞ் ஈட்டிங் நோயாளிகளுக்கும் தவறான மனப்பான்மை இருக்கிறது. தன்னைப் பற்றியும் இந்நோயால் அவதிப்படும் மற்றவர்களைப் பற்றியும் ஒரு பெண் இவ்வாறு சொல்கிறாள்: “உணவு எங்கள் சொந்த, இரகசிய நண்பன்​—⁠அதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே நண்பன்.” இன்னொரு பெண் இவ்வாறு சொல்கிறாள்: “அரக்கப்பரக்க அள்ளி அள்ளி விழுங்கும்போது எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. உணவே உலகம் என்பதுபோல் தோன்றும், அதில் கிடைக்கிற சுகமே தனிதான்; இப்படி அள்ளி அள்ளி விழுங்கிய பிறகு, குற்றவுணர்வும், சோர்வும் மனதை வாட்டி வதைக்கும்.”

பின்ஞ் ஈட்டிங் பழக்கமுள்ளவர்கள் சாப்பிட்டதை வலுக்கட்டாயமாக வெளியேற்றாவிட்டாலும் அப்படிச் சாப்பிடுவது ஆபத்தானது. இது சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றையும், இன்னும் பல நோய்களையும் வரவழைக்கும். இது, உணர்ச்சி ரீதியாக பெரும் பாதிப்பைக்கூட ஏற்படுத்தலாம்.

இந்த நோய் உங்களுக்கும் வருமா?

உடல் எடையைக் குறைப்பதற்கு அல்லது சிக்கென்று இருப்பதற்கு முயலும் பெரும்பாலோருக்கு சாப்பிடுகிற விஷயத்தில் பிரச்சினை இருக்காது என்பது உண்மைதான். இருப்பினும், மேற்குறிப்பிடப்பட்டவற்றைச் சிந்தித்த பிறகு, அத்தகைய பிரச்சினை உள்ளவர்களைப் போல் நடந்துகொள்கிறீர்களாவென ஆராய்ந்து பார்க்கலாம். உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்:

சாப்பிடுகிற விஷயத்தில் என் பழக்கங்களை அல்லது வினோதமான நடத்தையைக் குறித்து நான் சங்கடப்படுகிறேனா அல்லது கூனிக்குறுகுகிறேனா?

என்னுடைய உணவுப் பழக்கத்தை நான் மூடிமறைக்கிறேனா?

உணவே உலகம் என்பதாக நினைக்கிறேனா?

தினமும் ஒரு தடவைக்கு மேல் எடையை “செக்” பண்ணுகிறேனா?

என்ன பிரச்சினை வந்தாலும்சரி, எடையைக் குறைத்தே தீரவேண்டுமென்று நினைக்கிறேனா?

தொண்டையில் கைவிட்டு வாந்தியெடுக்க முயற்சி செய்திருக்கிறேனா, மலமிளக்கி மாத்திரைகளை அல்லது சிறுநீரிறக்கி மாத்திரைகளை எப்போதாவது விழுங்கியிருக்கிறேனா?

என் உணவுப் பழக்கங்கள் காரணமாக மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடிவதில்லையா? உதாரணத்திற்கு, மனம்போல் சாப்பிடுவதற்கு அல்லது சாப்பிட்ட உணவை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு வேண்டி, மற்றவர்களுடன் இருப்பதற்குப் பதிலாகத் தனிமையை நாடுகிறேனா?

இக்கேள்விகளுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றிருந்தால் உங்களுக்கு நோய் இருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது, உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்:

இப்படி வாழ்வதால் நான் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறேனா?

இந்தச் சூழ்நிலையைச் சரிசெய்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

இப்போதே நடவடிக்கை எடுங்கள்!

நீங்கள் எடுக்க வேண்டிய முதல் கட்ட நடவடிக்கை, உங்களுக்குப் பிரச்சினை இருப்பதை ஒப்புக்கொள்வது. “இதைக் குறித்து சிந்தித்துப் பார்த்த பிறகு, அனோரெக்ஸியாவால் அவதிப்படும் பெண்களைப் போலவே நானும் உணர்ந்தேன்; அவர்களுக்கு இருந்த அதே பழக்கங்கள் எனக்கும் இருந்ததைப் புரிந்துகொண்டேன். அவர்கள் நடந்துகொண்டதைப் போலவே நானும் நடந்துகொள்வதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை” என டான்யெல் சொல்கிறாள்.

இரண்டாவது கட்ட நடவடிக்கை, உங்கள் நிலையைக் குறித்து யெகோவாவிடம் ஜெபியுங்கள். a இந்தப் பிரச்சினைக்குள் உங்களைத் தள்ளியது எது என்பதைக் கண்டறிந்து, அதை மேற்கொள்வதற்கு விவேகத்தைத் தரும்படி அவரிடம் மன்றாடுங்கள். தாவீதைப் போல நீங்கள் இவ்வாறு ஜெபிக்கலாம்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.”​—சங்கீதம் 139:23, 24.

ஒருவேளை, சாப்பிடுகிற விஷயத்தில் உங்களுக்குள்ள பிரச்சினையைச் சரிசெய்ய நீங்கள் மனமில்லாதவராய் இருக்கலாம். போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டவரைப் போல், நீங்கள் அதை முழுக்க முழுக்க சார்ந்திருக்கலாம். இதைக் குறித்தும் யெகோவாவிடம் ஜெபிக்கலாம். இதைத்தான் டான்யெல் செய்ய வேண்டியிருந்தது. “ஆரம்பத்தில், இப்பிரச்சினையிலிருந்து மீண்டுவர எனக்குத் துளியும் விருப்பமில்லாதிருந்தது. குணமாவதற்கான விருப்பம் எனக்கு வேண்டுமென ஜெபித்தேன்” என அவள் ஒப்புக்கொள்கிறாள்.

மூன்றாவது கட்ட நடவடிக்கை, பெற்றோர் அல்லது உங்களுக்கு உதவ முடிந்த நிலையிலுள்ள பெரியவர் ஒருவரிடம் இதைக் குறித்துப் பேசுவதாகும். கரிசனைமிக்க பெரியவர்கள் உங்களைக் கூனிக்குறுகச் செய்ய மாட்டார்கள். மாறாக, அவர்கள் யெகோவாவைப் போல் நடந்துகொள்ள முயலுவார்கள்; அவரைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.”​—சங்கீதம் 22:24.

இப்பிரச்சினையிலிருந்து முற்றிலும் வெளிவருவது அவ்வளவு எளிதல்ல என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சிலருடைய விஷயத்தில் மருத்துவர்களின் உதவி தேவைப்படுகிறது. b சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பது மிகமிக முக்கியம். அப்படி நடவடிக்கை எடுக்க, புலிமியா நோயால் அவதிப்பட்ட ஒரு பெண் தீர்மானித்தாள். “சாப்பிட்ட பிறகு வலுக்கட்டாயமாக வாந்தியெடுக்கும் பழக்கம், என்னை அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதைப்போல் ஒருநாள் உணர ஆரம்பித்தேன். இருப்பினும், அந்தப் பழக்கத்தை விட்டுவிட முடியுமென எனக்குத் தோன்றவில்லை. கடைசியில், இதுவரை செய்யாத ஒரு காரியத்தைச் செய்தேன். அதாவது, பிறருடைய உதவியை நாடினேன்.”

நீங்களும் பிறருடைய உதவியை நாடலாம்!

[அடிக்குறிப்புகள்]

a சோர்ந்து போகும்போது, யாத்திராகமம் 3:7; சங்கீதம் 9:9; 34:18; 51:17; 55:22; ஏசாயா 57:15; 2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:6, 7; 1 பேதுரு 5:7; 1 யோவான் 5:14 ஆகிய வசனங்களைத் தியானிப்பதன் மூலம் யெகோவா தனிப்பட்ட விதத்தில் உங்களிடம் கரிசனை காட்டுகிறார் என்ற உறுதியைப் பெறலாம்.

b தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்தச் சிகிச்சை முறையும் பைபிள் நியமங்களுடன் முரண்படாதபடி கிறிஸ்தவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

[பக்கம் 18-ன் படக்குறிப்பு]

#சாப்பிடுகிற விஷயத்தில் பிரச்சினையை எதிர்ப்படுகிறவர்களில் பெரும்பாலோர் பெண்கள்; எனவே, பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி விவரிக்கும்போது பெண்பாலிலேயே குறிப்பிடுவோம். இருப்பினும், சிந்திக்கப்படுகிற அநேக விஷயங்கள் ஆண்களுக்கும் பொருந்தும்.

[பக்கம் 19-ன் படக்குறிப்பு]

உங்களுக்குப் பிரச்சினை இருக்கிறதென நினைக்கிறேன் . . .

[பக்கம் 19-ன் படக்குறிப்பு]

குடும்பத்தார் ஒருவரோ சிநேகிதியோ இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்று மறுக்காதீர்கள். உங்கள் உடையின் பின்புறத்தில் தையல் பிரிந்திருப்பதை உங்கள் சிநேகிதி கவனித்ததாக வைத்துக்கொள்ளுங்கள். முழுவதும் பிரிந்துவிடுவதற்கு முன்பு அதை அவள் உங்களிடம் சொன்னதற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாய் இருப்பீர்கள், அல்லவா? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.” (நீதிமொழிகள் 18:24) உங்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதை அறிந்து ஒருவர் கரிசனையோடு உதவ வரும்போது அவர் அத்தகைய நண்பராகவே இருக்கிறார்!

[பக்கம் 19-ன் படக்குறிப்பு]

நான் ஒல்லியாக இருக்க ஆசைப்பட்டேன்

[பக்கம் 19-ன் படக்குறிப்பு]

“எனக்கு வெயிட் குறைய ஆரம்பித்திருந்தது. பிறகு, ஞானப்பல் என்ற கடைவாய்ப் பல்லைப் பிடுங்க வேண்டியிருந்தது, ஆகவே என்னால் சாப்பிட முடியவில்லை. இப்படித்தான் அனோரெக்ஸியா நோய் எனக்கு ஆரம்பமானது. என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எத்தனை இளைத்தாலும் திருப்தியில்லை. கடைசியில் என் எடையைப் பார்த்து நானே அதிர்ந்து போகும் அளவுக்கு அது குறைந்துபோனது. என் உடம்பை நான் ரொம்பவே கெடுத்துக்கொண்டேன்! இப்போது என் விரலில் நகம்கூட வளருவதில்லை. என் உடலின் இயற்கை கடிகாரத்தை நானே பாழ்ப்படுத்திவிட்டேன். நான்கு முறை எனக்குக் கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. ரொம்ப சீக்கிரத்திலேயே எனக்கு ‘மெனோபாஸ்’ துவங்கிவிட்டது, உடலில் வளர்சிதை மாற்றம் சரிவர நிகழ்வதில்லை. எனக்குப் பெருங்குடல் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாவற்றுக்கும் காரணம், நான் ஒல்லியாக இருக்க ஆசைப்பட்டதுதான்.”​—⁠நிகால்.

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

மீண்டும் பிரச்சினை தலைதூக்கினால்

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

சாப்பிடுகிற விஷயத்தில் இருக்கும் பிரச்சினையை நீங்கள் ஒருவழியாகச் சமாளித்த பிறகு, சில வாரங்களுக்குள்ளாக அல்லது சில மாதங்கள் கழித்துக்கூட மீண்டும் அதே பிரச்சினை தலைதூக்கலாம். இப்படி நேர்ந்தால், சோர்ந்துவிடாதீர்கள். “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 24:16) மீண்டும் பிரச்சினை தலைதூக்குவதை வைத்து, நீங்கள் அதிலிருந்து விடுபடவே முடியாதென நினைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் தீர்மானத்தில் உறுதியாய் இருப்பதும், மீண்டும் பிரச்சினை தலைதூக்குவது சாத்தியம் என்ற எச்சரிக்கை சமிக்கைகளை நீங்கள் அறிந்திருப்பதும், உங்களுக்கு உதவ முடிந்த அன்பானவரை அணுகி ஒருவேளை மீண்டும் இது குறித்துப் பேசுவது அவசியம் என்பதை மட்டுமே அது வலியுறுத்துகிறது.

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

இதைப் பற்றி அதிகம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

சாப்பிடுகிற விஷயத்தில் உங்களுக்குப் பிரச்சினை இருந்து கஷ்டப்படுகிறீர்கள் என்றால் இது சம்பந்தமான தகவலை வாசித்துப் பார்ப்பதும், ஆராய்ச்சி செய்து தெரிந்துகொள்வதும் நல்லது. இந்தப் பிரச்சினையைப் பற்றி நீங்கள் எந்தளவுக்கு அறிந்துகொள்கிறீர்களோ அந்தளவுக்கு எளிதாக நீங்கள் அதை எதிர்த்துப் போராட முடியும். விழித்தெழு! இதழில் ஜனவரி 22, 1999, பக்கங்கள் 3-12-லும், ஏப்ரல் 22, 1999, பக்கங்கள் 13-15-லும் வெளிவந்த பயனுள்ள தகவலை ஒருவேளை மீண்டும் வாசித்துப் பார்த்தால் நீங்கள் பயன் அடைவீர்கள்.

[பக்கம் 21-ன் படக்குறிப்பு]

பெற்றோர்களுக்குக் குறிப்பு

[பக்கம் 21-ன் படக்குறிப்பு]

உங்கள் மகளுக்குச் சாப்பிடுகிற விஷயத்தில் பிரச்சினை இருந்து, அவள் கஷ்டப்படுகிறாள் என்றால் நீங்கள் என்ன செய்யலாம்? முதலாவது, இந்தக் கட்டுரையிலும் பக்கம் 20-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற இதழ்களிலும் உள்ள தகவலைக் கவனமாகப் படியுங்கள். உங்கள் மகள் ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

இப்பிரச்சினை உள்ள பலரிடம் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை இருப்பதும், எல்லாவற்றிலும் நூறு சதம் சரியாக இருக்கும்படி எதிர்பார்ப்பதும், தங்களுக்காக எட்ட முடியாத நியாயமற்ற இலக்குகளை வைப்பதும் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் காரணமாகிவிடாதீர்கள். தன்னம்பிக்கையுடன் இருக்க உங்கள் மகளுக்கு உதவுங்கள். (ஏசாயா 50:4) எதிலும் நூறு சதம் எதிர்பார்க்கிற பிள்ளைகளைச் சமாளிப்பதில், ‘உங்கள் சாந்தகுணத்தை [அதாவது, நியாயத்தன்மையை]’ காட்டுங்கள்.​பிலிப்பியர் 4:5.

மேலும், உணவு, எடை சம்பந்தமாக உங்களுடைய மனப்பான்மையையும் ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கே தெரியாமல் சொல்லிலோ செயலிலோ இந்தக் காரியங்களுக்கு மட்டுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்களா? பருவப் பெண்கள் தங்கள் தோற்றத்திற்கு ரொம்பவே கவனம் செலுத்துவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். சிறுவயதில் ரொம்ப குண்டாக இருந்ததையோ, வயதுக்கு வருவதற்கு முன்பு உடலின் திடீர் வளர்ச்சியையோ சொல்லிக்காட்டி மற்றவர்கள் கேலிசெய்தால்கூட, அது அவளுடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிடும், பிறகு பிரச்சினைகளில் கொண்டுபோய் விடும்.

இப்பிரச்சினையில் உட்பட்டுள்ள எல்லா அம்சங்களையும் கவனமாய் ஜெபசிந்தையுடன் எண்ணிப் பார்த்த பிறகு, உங்கள் மகளுடன் மனந்திறந்து பேசுங்கள்.

◼என்ன சொல்ல வேண்டும், எப்போது சொல்ல வேண்டும் என கவனமாய் திட்டமிடுங்கள்.

நீங்கள் அக்கறை காட்டுவதையும் உதவ விரும்புவதையும் தெளிவாகச் சொல்லுங்கள்.

முதலில் மறுக்கும் விதத்தில் பதில் கிடைத்தால் ஆச்சரியப்படாதீர்கள்.

பொறுமையாய் காதுகொடுத்துக் கேளுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிரச்சினையைச் சமாளிக்க உங்கள் மகள் முயற்சி செய்யும்போது உதவியாய் இருங்கள். அவள் அதிலிருந்து மீண்டுவர குடும்பமாக எல்லாரும் சேர்ந்து பாடுபடுங்கள்!

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

சிந்திப்பதற்கு

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

◼சாப்பிடுகிற விஷயத்தில் உங்களுக்குப் பிரச்சினை இருப்பதாக நினைக்கிறீர்களா? அப்படியென்றால், உதவிக்காக நீங்கள் யாரை நாடலாம்?

◼இத்தகைய பிரச்சினை உள்ள உங்கள் தோழிக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

விழித்தெழு!

[பக்கம் 20-ன் படக்குறிப்பு]

அழகா ஆரோக்கியமா?

[பக்கம் 21-ன் படக்குறிப்பு]

குணமாவதற்கான விருப்பத்தை உங்களுக்குத் தரும்படி ஜெபிக்கலாம்