Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிவி காலத்தைக் களவாடும் கள்ளன்

டிவி காலத்தைக் களவாடும் கள்ளன்

டிவி காலத்தைக் களவாடும் கள்ளன்

“நான் உங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் தருகிறேன், இனிமேல் டிவியே பார்க்கக் கூடாது” என்று யாராவது சொன்னால் நீங்கள் சம்மதிப்பீர்களா? “சம்மதிக்க மாட்டேன்.” இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில் கலந்துகொண்ட சில அமெரிக்கர்கள் பதில் அளித்தார்கள். அதுவும் 4 பேரில் ஒருவர் அப்படிப் பதில் அளித்தார்! ஆண்களை வைத்து நடத்தப்பட்ட இன்னொரு சுற்றாய்வின்போது. “உங்களுக்கு முதலில் எது கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?” என கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் சமாதானமும் சந்தோஷமும் தங்களுக்கு வேண்டுமென பதில் அளித்தார்கள். ஆனால், “வேண்டும்” என்று அவர்கள் வரிசைப்படுத்தியவற்றில் இவை இரண்டாவது இடத்தையே பிடித்திருந்தன. முதல் இடத்தைப் பிடித்தது பெரிய ஸ்கிரீன் டிவி என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

உலகில் டிவி இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவுக்கு அது எங்கும் காணப்படுகிறது. 1931-⁠ல், டிவி அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில், ரேடியோ கார்ப்பரேஷன் ஆஃப் அமெரிக்கா என்ற கம்பெனியின் தலைவர் இவ்வாறு சொன்னார்: “தொழில்நுட்ப ரீதியில் டிவி முன்னேற்றம் கண்ட பிறகு, உலகெங்குமுள்ள மக்கள் அனைவரும் அதைப் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.” அந்தச் சமயத்தில் அந்த வார்த்தைகள் மிகைப்படுத்திக் கூறப்பட்டதாகத் தோன்றினாலும் அதுவே இன்றைய நிஜம். உலகெங்கும் 150 கோடி டிவிகள் விற்பனையாகி இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது; அப்படியிருக்க அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாகவே இருக்கும். டிவியை மக்கள் விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி, அது மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

அநேகர் எவ்வளவு நேரம் டிவி பார்க்கிறார்கள் என்பதைக் கேட்டால் மலைத்துப் போவீர்கள். உலகெங்கும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று மணிநேரத்திற்கும் மேல் மக்கள் டிவி பார்க்கிறார்கள். வட அமெரிக்கர்கள் தினமும் நாலரை மணிநேரம் டிவி பார்க்கிறார்கள், ஜப்பானியரோ தினமும் ஐந்து மணிநேரம் டிவி பார்க்கிறார்கள்; இவ்வாறு பட்டியலின் முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்த மணிநேரத்தையெல்லாம் கூட்டிப் பார்த்தால் மக்கள் டிவி முன் ஏராளமான நேரம் செலவிடுவது தெரிகிறது. தினமும் நான்கு மணிநேரம் என்ற கணக்கில் நாம் டிவி பார்த்து வந்தால், 60 வயதை எட்டும்போது டிவி முன்பாக பத்து வருடங்களைச் செலவிட்டிருப்போம். ஆனால், பின்வரும் வாசகம் நம் கல்லறையில் பொறிக்கப்பட நாம் யாரும் விரும்ப மாட்டோம்: “தன் வாழ்நாளில் ஆறில் ஒரு பகுதியை டிவி பார்ப்பதற்கு அர்ப்பணித்த எமது ஆருயிர் நண்பர் அமைதியாக உறங்குகிறார்.”

நிகழ்ச்சிகளை மகிழ்ந்து அனுபவிப்பதாலேயே மக்கள் மணிக்கணக்கில் டிவி பார்க்கிறார்களென்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாது. எக்கச்சக்கமான நேரத்தை டிவி பார்ப்பதில் தொலைத்துவிட்டதாக அநேகர் நினைக்கிறார்கள், அந்த நேரத்தை இன்னும் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தியிருக்கலாமே என்ற உறுத்தல் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இன்னும் சிலர் தங்களை, “டிவிக்கு அடிமைகள்” என சொல்லிக் கொள்கிறார்கள். ஆட்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகும் அதே விதத்தில் டிவிக்கும் அடிமையாவதாகச் சொல்ல முடியாது; இருப்பினும், அடிமைப்படுத்தும் விஷயத்தில் போதைப் பொருள்களுக்கும் டிவிக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. போதைப் பொருள்களுக்கு அடிமையாகிறவர்கள் பெருமளவு நேரத்தை அவற்றுக்காகவே செலவிடுகிறார்கள். அப்படிச் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளவோ, அப்பழக்கத்தை அடியோடு விட்டுவிடவோ அவர்கள் ஆசைப்பட்டாலும்கூட அதன் பிடியிலிருந்து வெளிவர அவர்களால் முடிவதில்லை. குடும்ப, சமுதாய நடவடிக்கைகளுக்காக அவர்கள் முக்கியமாக செலவிட வேண்டிய நேரத்தைப் போதைப் பொருள்களுக்கென்று செலவிடுகிறார்கள், அந்தப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்போதோ பின்விளைவுகளால் அவதிப்படுகிறார்கள். இத்தகைய பின்விளைவுகள் அனைத்தும் டிவிக்கு அடிமையாகிறவர்களுக்கும் நேரிடலாம்.

“தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல” என ஞானமுள்ள சாலொமோன் ராஜா எழுதினார். (நீதிமொழிகள் 25:27) டிவி பார்க்கிற விஷயத்திற்கும் இந்த நியமம் பொருந்துகிறது. டிவி பார்ப்பதன் மூலம் பயனுள்ள அநேக காரியங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும், மணிக்கணக்காக அதில் மூழ்கிவிடுவது, குடும்பமாகச் சேர்ந்து செலவிட வேண்டிய நேரத்தில் பெருமளவை உறிஞ்சிவிடுகிறது, பிள்ளைகளுடைய வாசிப்புத் திறனையும் பள்ளிப் படிப்பையும் பாதிக்கிறது; அதோடு, உடல் பருமனாவதற்கும் காரணமாகிவிடுகிறது. டிவி பார்ப்பதில் ஏராளமான நேரத்தை நீங்கள் முதலீடு செய்கையில் என்ன லாபம் கிடைக்கிறது என்பதைக் குறித்து சிந்திப்பது ஞானமான செயலாகும். காலம் பொன்னானது, அதை விரயம் செய்யக் கூடாது. நாம் எத்தகைய நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதும் புத்திசாலித்தனமான செயலாகும். இந்த விஷயத்தைக் குறித்து அடுத்த கட்டுரையில் நாம் ஆராய்வோம்.