Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிவி பார்ப்பதைக் கட்டுப்படுத்த . . .

டிவி பார்ப்பதைக் கட்டுப்படுத்த . . .

டிவி பார்ப்பதைக் கட்டுப்படுத்த . . .

“டிவியைப் போட்டதும், எதையெல்லாம் காட்டுகிறார்களோ அதையெல்லாம் வரிசையாகப் பார்த்துக்கொண்டே இருப்போம். படுக்கப் போகும்வரை அதை நிறுத்தவே மாட்டோம்” என்று சொன்னார் க்ளோடீன் என்ற பெண். “வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருப்பேன்” என்று சிலர் சொல்கிறார்கள். “இனிமேல் இந்தளவுக்கு டிவி பார்க்கக் கூடாதென நினைப்பேன், ஆனால் முடியவில்லையே” என்று வேறு சிலர் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். நீங்கள் அளவுக்கு அதிகமாக டிவி பார்ப்பீர்களா? உங்கள் குடும்பத்தை டிவி எந்தளவு பாதிக்கும் என்பதைக் குறித்து கவலைப்படுகிறீர்களா? டிவி பார்ப்பதைக் கட்டுப்படுத்திக்கொள்ள இதோ சில ஆலோசனைகள்:

1. நேரத்தைக் கணக்கிடுங்கள். ‘விவேகி தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்’ என்று நீதிமொழிகள் 14:15 சொல்கிறது. வழக்கமாக எப்போதெல்லாம் டிவி பார்க்கிறீர்கள் என்பதை ஆராய்வது ஞானமான செயலாகும். டிவி பார்க்க ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட எவ்வளவு மணிநேரம் செலவிடுகிறீர்கள் என்பதை எழுதி வையுங்கள். நீங்கள் என்னென்ன நிகழ்ச்சிகளைப் பார்த்தீர்கள், அதிலிருந்து என்னென்ன விஷயங்களைக் கற்றுக்கொண்டீர்கள், அந்நிகழ்ச்சிகளை எந்தளவு ரசித்தீர்கள் என்பவற்றையும் எழுதி வையுங்கள். எனினும், எவ்வளவு மணிநேரம் டிவி பார்த்தீர்கள் என்பதைக் கணக்கிடுவது முக்கியம். நேரத்தைக் கூட்டிப் பார்த்தால் நீங்களே மலைத்துப் போவீர்கள். உங்கள் வாழ்நாளில் எவ்வளவு நேரத்தை டிவி பார்க்கச் செலவிடுகிறீர்கள் என்பதை அறிவது மாற்றங்களைச் செய்ய உங்களைத் தூண்டலாம்.

2. நேரத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். முதலில், டிவியை வாரத்தில் ஒருநாள் முழுவதும் பார்க்காதிருக்க, பின்பு வாரம் முழுவதும் பார்க்காதிருக்க, அதன் பின்பு ஒரு மாதம் முழுவதும் பார்க்காதிருக்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால், ஒவ்வொரு நாளும் இவ்வளவு நேரம்தான் பார்க்க வேண்டுமென திட்டவட்டமான நேரத்தை ஒதுக்குங்கள். ஒவ்வொரு நாளும் டிவி பார்க்கிற நேரத்தில் அரை மணிநேரத்தைக் குறைத்துக்கொண்டால் ஒரு மாதத்தில் 15 மணிநேரம் உங்களுக்குக் கிடைக்கும். அந்த நேரத்தைப் பயனுள்ள காரியத்திற்குப் பயன்படுத்துங்கள்; ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கு, நல்ல புத்தகத்தை வாசிப்பதற்கு, குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சேர்ந்து செலவழிப்பதற்குப் பயன்படுத்துங்கள். சதா டிவி பார்ப்பவர்களைவிட கொஞ்ச நேரம் பார்ப்பவர்கள்தான் அதை ரொம்பவே ரசிக்கிறார்கள் என ஆய்வுகள் காட்டுகின்றன.

படுக்கை அறையில் டிவியை வைக்காதிருப்பது அதைப் பார்ப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். தங்களுடைய அறையில் டிவி வைத்திருக்கும் பிள்ளைகள் அப்படி வைத்திராத பிள்ளைகளைவிட நாளொன்றுக்கு, கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் கூடுதலாக டிவி பார்க்கிறார்கள். மேலும், பிள்ளைகளின் அறையில் டிவி இருந்தால் அவர்கள் என்னென்ன நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதைப் பெற்றோர் கவனிக்க முடியாது. ஏன், தங்களுடைய படுக்கை அறையிலிருந்தும் டிவியை மாற்றும்போது பெற்றோரும் தம்பதிகளும் ஒருவரோடொருவர் அதிக நேரம் செலவழிக்க முடிவதைக் காண்பார்கள்.

3.திட்டமிட்டுப் பாருங்கள். உண்மைதான், பார்ப்பதற்குப் பல நல்ல நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக அல்லது எந்த நிகழ்ச்சியானாலும் பரவாயில்லையென பார்ப்பதற்குப் பதிலாக, ஒளிபரப்பப்படவிருக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியலை முன்னதாகவே ஆராய்ந்து, எதைப் பார்க்கலாம் என்பதைத் தேர்ந்தெடுங்கள். சரியாக அந்த நிகழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் டிவியைப் போடுங்கள், அது முடிந்ததும் நிறுத்திவிடுங்கள். அல்லது ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியை அப்போதே பார்ப்பதற்குப் பதிலாக அதை ரெக்கார்ட் செய்துவிட்டு பின்னர் பார்க்க விரும்பலாம். அப்படிச் செய்யும்போது, உங்களுக்கு அதிக சௌகரியமான நேரத்தில் பார்ப்பதற்கும், விளம்பரங்களை ஃபாஸ்ட்-ஃபார்வர்ட் செய்வதற்கும் அது வசதியாக இருக்கும்.

4. தேர்ந்தெடுத்துப் பாருங்கள். நம் காலத்தில் ஆட்கள், “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” இருப்பார்கள் என பைபிள் முன்னறிவித்தது. டிவியில் வரும் கதாபாத்திரங்கள் அப்படிப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள் என நீங்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்வீர்கள். “இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு” என பைபிள் அறிவுறுத்துகிறது. (2 தீமோத்தேயு 3:1-5) “மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் [அதாவது, மோசமான சகவாசம்] நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என அது நம்மை எச்சரிக்கிறது.​—⁠1 கொரிந்தியர் 15:33.

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பதற்குச் சுயகட்டுப்பாடு தேவை. நாடகத்திலோ திரைப்படத்திலோ ஆரம்ப காட்சிகளைப் பார்த்ததுமே அது சரியில்லை என தெரிந்தும், அடுத்து என்னவாகும் என்பதை அறியத் துடிக்கும் ஆர்வத்தில் முழுவதையும் எப்போதாவது பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? அநேகருக்கு இருக்கிறது. அந்தச் சமயத்தில் டிவியை நிறுத்திவிட்டு வேறு காரியங்களைச் செய்ய உங்களுக்கு மனோதிடம் இருந்தால், காட்டப்படும் விஷயங்களில் உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வமில்லை என்பதை ஒருவேளை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

டிவி கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பே சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்க மாட்டேன்.” (சங்கீதம் 101:3) பார்க்கும் நிகழ்ச்சிகளை நாம் தேர்ந்தெடுக்கும்போது நினைவில் வைப்பதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த இலட்சியம் இது! க்ளோடீனைப் போல சிலர் டிவியே வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார்கள். அவர் இவ்வாறு சொன்னார்: “என் உணர்ச்சிகளை டிவி இந்தளவுக்கு மரத்துப்போகச் செய்யுமென நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. எப்போதாவது டிவி பார்க்க இப்போது வாய்ப்புக் கிடைக்கையில், ‘ஒருகாலத்தில் இதையெல்லாம் பார்த்தபோது மனம் நெருடவில்லையே’ என நினைத்தால் அதிர்ச்சியாய் இருக்கிறது. நல்ல நிகழ்ச்சிகளை மட்டுமே பார்த்துவந்ததாய் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அப்படிப் பார்க்கவில்லை என்பதை இப்போது தெரிந்துகொண்டேன். நல்ல நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது ரொம்பவே ரசிக்கிறேன்.”

[பக்கம் 8-ன் படம்]

டிவி பார்க்கச் செலவிடும் நேரத்தை எழுதி வையுங்கள்

[பக்கம் 8-ன் படம்]

டிவி பார்க்கும் நேரத்தைப் பயனுள்ள காரியத்திற்குப் பயன்படுத்துங்கள்

[பக்கம் 9-ன் படம்]

டிவியை நிறுத்தத் தயங்காதீர்கள்!