Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இருளில் ஜொலிக்கும் “குட்டி ரயில்கள்”

இருளில் ஜொலிக்கும் “குட்டி ரயில்கள்”

இருளில் ஜொலிக்கும் “குட்டி ரயில்கள்”

ஓர் அமைதியான அந்திப்பொழுது, அது பிரேசிலின் கிராமப்புறம். காட்டில் மக்கிப்போன சருகுகளிலிருந்து ஒரு குட்டி “ரயில்” மேலெழும்பி வருகிறது. இரண்டு சிவப்பு “முன்விளக்குகள்” அதனுடைய பாதையை வெளிச்சமாக்குகின்றன; 11 ஜோடி மஞ்சள்-பச்சை விளக்குகள் அதன் பக்கங்களைப் பிரகாசிக்கச் செய்கின்றன. இது சாதாரண ரயிலல்ல என்பது நிச்சயம். அப்படியென்றால் அது என்ன? அது 70 மில்லிமீட்டர் நீளமுள்ள ஒரு முட்டைப்புழு; ஃபின்கோடிடே வண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. வட மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகிறது. புழு வடிவிலேயே இருந்துவிடுகிற இவற்றின் பெண் இனம் உட்புறத்தில் பிரகாசிக்கும் ரயில் பெட்டிகளைப்போலக் காட்சியளிப்பதால் ரயில் புழுக்கள் என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகின்றன. பிரேசில் நாட்டின் கிராமப்புற மக்கள் அவற்றை சிறிய ரயில்கள் என்றழைக்கின்றனர்.

மங்கலான-பழுப்பு நிறத்திலுள்ள இந்தப் புழுவை பகல் நேரத்தில் பார்ப்பது அரிது. ஆனால் இரவு நேரங்களில் வியப்பூட்டும் தன்னுடைய விளக்குகளின் ஒளிக் கீற்றினால் ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று பறைசாற்றிக் கொள்கிறது. லூசிபெரின் என்ற வேதிப்பொருள் லூசிபெரேஸ் என்ற நொதியின் உதவியுடன் ஆக்ஸிஜனோடு வேதிவினைபுரிவதால் அந்தப் புழு குளிர்ஒளியைத் தருகிறது. இந்த ஒளி சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் இருக்கும்.

சிவப்பு முன்விளக்குகள் கிட்டத்தட்ட எல்லா சமயங்களிலுமே ஒளியை உமிழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் மஞ்சள்-பச்சையான பக்கவிளக்குகள் அப்படியல்ல. இந்த முன்விளக்குகள் புழுவுக்கு தன்னுடைய ருசியான இரையை​—⁠காட்டு மரவட்டையை⁠—⁠கண்டுபிடிக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்; அதேசமயத்தில் அதன் பக்கவிளக்குகள் அதனை வேட்டையாடும் பூச்சிகளான எறும்புகளையும், தவளைகளையும் சிலந்திகளையும் பின்வாங்கச் செய்கின்றன. “என்னை நீங்கள் சாப்பிட முடியாது, தூரப்போங்கள்!” என்று சொல்வதுபோல் அந்த ஒளி இருக்கிறது. இதற்கிசைவாக, அந்தப் புழு தன்னைத் தாக்க வல்ல ஓர் எதிரியைப் பார்க்கும்போது பக்கவிளக்குகள் பிரகாசிக்கின்றன. மேலும் காட்டு மரவட்டையை வேட்டையாடும்போதும், பெண் புழு தன் முட்டைகளைச் சுற்றி சுருண்டுகொள்ளும் போதும் இந்த விளக்குகள் ஒளிருகின்றன. சாதாரண சந்தர்ப்பங்களில், இந்தப் பக்கவிளக்குகள் படிப்படியாகப் பிரகாசமடைந்து உச்சநிலையை அடைந்து, பிறகு இருளடைகின்றன; இவையெல்லாம் ஒரு சில வினாடிகளில் நடக்கின்றன. தேவைப்படும் சமயத்தில் அடிக்கடி இது நடக்கிறது.

ஆம், காட்டில் மக்கிப்போன சருகுகளுக்கு அடியிலும், மனதைக் கொள்ளைகொள்ளும் அழகைக் காணமுடியும். இதனால் படைப்பாளரைப் புகழும் சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகள்தான் நம் மனதுக்கு வருகின்றன: “பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.”​—சங்கீதம் 104:24.

[பக்கம் 26-ன் படக்குறிப்பு]

Robert F. Sisson / National Geographic Image Collection