Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ இன்டர்நெட் பயன்படுத்துகிறவர்களை ஏமாற்றுவதற்கு உலகமுழுவதிலும் ஒவ்வொரு நாளும் 57 லட்ச முறை முயற்சி செய்யப்படுகிறது.​—⁠மேகஸின், ஸ்பெயின்.

◼ ஜப்பானில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை “1998 முதல் 2005 வரை தொடர்ந்து எட்டு வருடங்களாக 30,000-⁠க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.” உலகின் மிக அதிக தற்கொலை வீதங்களில் ஜப்பானும் ஒன்று.​—⁠மைனிச்சீ டெய்லி நியூஸ், ஜப்பான்.

◼ “கடந்த 500 வருடங்களில் மனித நடவடிக்கைகளால் 844 உயிரினங்கள் அழிந்துவிட்டன.”​—⁠IUCN, உலக இயற்கை வள பாதுகாப்பு, சுவிட்சர்லாந்து.

◼ அரசாங்க கணிப்பின்படி பிரிட்டனைச் சேர்ந்தவர்களில் ஆறு சதவிகிதத்தினர்​—⁠ஆண்களும் பெண்களும்​—⁠ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள். 2005-⁠இல் விதிக்கப்பட்ட சட்டம், “ஒரே பாலினத்தவர் ‘திருமணம்’ செய்துகொள்ள அனுமதிக்கிறது.” இயல்பான முறையில் திருமணமானவர்களுக்கு இருக்கும் அதே உரிமைகளை இவர்களுக்கும் அளிக்கிறது.​—⁠த டெய்லி டெலிகிராஃப், இங்கிலாந்து.

வேகமாக நகரும் பனிப்பாளங்கள்

“கிரீன்லாந்துப் பனிப்பரப்பில் நகர்ந்து செல்லும் பெரிய பனிப்பாளங்களின் வேகம் அதிகரித்திருப்பதாக” சைன்ஸ் பத்திரிகை அறிக்கையிடுகிறது. அவற்றின் வேகம் கடந்த ஐந்து வருடங்களில் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது, வருடத்திற்கு 12 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் நகர்ந்து விடுகின்றன என்பதாக செயற்கைக்கோள் கண்காணிப்பு காட்டுகிறது. கடந்த பத்து வருடங்களாக 90 கன கிலோமீட்டரிலிருந்து 220 கன கிலோமீட்டர்வரை ஒவ்வொரு வருடமும் பனிப்பாளங்களின் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, “கடல் மட்டம் தற்போதைய கணிப்பைவிட அதிகமாகவே இருக்கும்” என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

டார்வினைப் புகழும் சர்ச்சுகள்

அமெரிக்காவிலுள்ள கிட்டத்தட்ட 450 “கிறிஸ்தவ” சர்ச்சுகள் சார்ல்ஸ் டார்வினுடைய 197-ஆவது பிறந்த நாள் விழாவை பிப்ரவரி 2006-⁠இல் கொண்டாடின. அவர் உருவாக்கிய பரிணாமக் கோட்பாடு கிறிஸ்தவ நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் கிறிஸ்தவர்கள் மதத்தைப் பின்பற்றுவதா விஞ்ஞானத்தைப் பின்பற்றுவதா என்று குழம்ப வேண்டியதில்லை என்பதை வலியுறுத்திய நிகழ்ச்சிகளும் பிரசங்கங்களும் அந்த விழாவில் இடம்பெற்றன.” சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகைப்படி இந்த விழாவை ஒழுங்கமைத்த மைகேல் ஸிமர்மன், “நீங்கள் எதை நம்புவது என்று குழம்பத் தேவையில்லை. இரண்டையுமே நம்பலாம்” என்றார். இவர் விஸ்கான்ஸன்-ஆஸ்காஷ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இலக்கிய மற்றும் விஞ்ஞான கல்லூரியில் உயிரியலாளராகவும் முதல்வராகவும் பணியாற்றுகிறார்.

வேலையிடத்தில் பண்பற்ற நடத்தை

“வேலையிடத்தில் அநாகரிகமாக நடந்துகொள்வதால், நிறுவனத்தின் நேரமும், முயற்சியும், திறமையும் வீணாகின்றன” என்று உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறுகிறது. சுமார் 3,000 பேரை வைத்து நடத்தப்பட்ட சுற்றாய்வில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் “வேலையிடத்தில் அநாகரிகமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள்.” அதில் 50 சதவீதத்தினர் “நடந்த சம்பவத்தைக் குறித்து கவலைப்பட்டதால் வேலைநேரம் வீணாய்ப் போனதாகவும், . . . 25 சதவீதத்தினர் வேலையில் முழுமையாய் ஈடுபட முடியாமல் போனதாகவும்” கூறினார்கள். எட்டில் ஒருவர் வேலையை விட்டுச் சென்றிருந்தார். “வேலையை ஏனோதானோவென்று செய்வது, அடிக்கடி வேலைக்கு மட்டம் போடுவது, ஏன், திருடுவதும்கூட நிறுவனத்தில் பண்பற்ற நடத்தை இருப்பதற்கான அடையாளங்களாக இருக்கலாம்” என்று தெற்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தின் நிர்வாகத் துறைப் பேராசிரியர் கிறிஸ்டீன் போராத் கூறுவதாக ஜர்னல் பத்திரிகை சொல்கிறது.

கடலில் குவியும் குப்பைகள்

2006-⁠இன் முற்பகுதியில், மலைக்கவைக்குமளவு கடல் குப்பைகள் “தெற்கு நோக்கி ஹவாய்க் கடலுக்குள் வந்து சேர்ந்தன, தூக்கியெறியப்பட்ட மீன் பிடி சாதனங்கள், பிளாஸ்டிக் என எக்கச்சக்கமான குப்பைகள் இந்தத் தீவுக் கடற்கரைகளுக்குத் தள்ளப்பட்டன,” என்று ஹோனலுலூ அட்வர்டைஸர் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. வட பசிபிக் கடலில் மிதக்கும் பெரும்பாலான குப்பைகளை கடலின் அமைதியான பகுதிக்கு நீரோட்டங்கள் தள்ளுகின்றன. ஆனால் சில சீதோஷ்ண நிலைகளில் இந்தக் குப்பைகள் ஹவாய் நோக்கி அடித்துச் செல்லப்படுகின்றன. 2005-⁠ஆம் ஆண்டில் “2,000-⁠க்கும் அதிகமான குப்பைத் துணுக்குகளும்” அதோடு, 100-⁠க்கும் அதிகமான மீன்பிடி வலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் குப்பைகள் கடல்வாழ் பிராணிகளின் உயிருக்கு உலை வைக்கின்றன. “இயற்கை இரை தின்னும் மீன்களே கடலில் இல்லை, அவை எல்லாமே பிளாஸ்டிக் துணுக்குகளைத் தின்னுகின்றன” என்பதாக அல்கலீட்டா கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்தாபகர் சார்ல்ஸ் மொயர் சொல்கிறார்.