Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டேன்

எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டேன்

எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டேன்

சான்க்ளோட் ஃப்ரான்ஸ்வா சொன்னபடி

பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்குக் கீழ்ப்படிந்ததால், பன்னிரண்டுக்கும் அதிகமான சிறைகளில் ஏழு வருடங்களுக்கும் மேலாக பல சித்திரவதைகள் அனுபவித்தேன். துன்பங்களை அனுபவித்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உணர்ந்தேன். நான் அதை விளக்கமாகச் சொல்லட்டுமா?

அல்ஜீரியா நகரிலுள்ள அல்ஜீரியர்ஸில், ஜனவரி 9-ஆம் தேதி, 1937⁠-இல் பிறந்தேன். அப்போது பிரான்சு அல்ஜீரியாவை ஆட்சி செய்தது. என்னுடைய அப்பா பிரெஞ்சு ராணுவத்தில் அதிகாரியாக இருந்தார். அவருடைய வேலை காரணமாக எகிப்து, ஈராக், லெபனான், சிரியா ஆகிய இடங்களுக்கு தொடர்ந்து மாதக்கணக்கில் செல்வார். அதனால் தன்னுடைய ஐந்து குழந்தைகளுடன் இருக்க அவருக்கு நேரமே கிடைக்கவில்லை.

பள்ளி வாழ்க்கை எனக்குப் பிடித்திருந்தது; நல்ல நிலையில் தேர்ச்சி பெற்றேன். ஆனால், நாம் ஏன் சாகிறோம், அனைத்து சக்தியும் படைத்தவராகவும் அன்புள்ளவராகவும் கடவுள் இருந்தால் தீமை எப்படி இருக்க முடியும்? போன்ற கேள்விகள் எனக்கு புரியாத புதிராக இருந்தன. திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை. மேலும், உயிர் எப்படி வந்தது என்பதை அறிந்துகொள்ள ஏங்கினேன். டார்வினுடைய பரிணாமக் கொள்கை மட்டுமே சரியான விளக்கமளிப்பதாகத் தோன்றியது. அதனால், காலப்போக்கில் நான் ஒரு நாத்திகனாக மாறினேன்.

பதில்கள் கிடைத்தன!

ஷார்ஷ் என்ற நண்பர் ஒருவர் பரிணாமமும் புதிய உலகமும் (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தை 1954-⁠ல் எனக்குக் கொடுத்தார். a இவர் யெகோவாவின் சாட்சியாக மாறிய ஒருவர். ஆர்வம்பொங்க அதைப் படித்தேன். அச்சிறு புத்தகம் பரிணாமக் கொள்கையின் தவறுகளைச் சுட்டிக்காட்டியது. அதோடு, கடவுள் ஒவ்வொரு உயிரையும் “அவ்வவற்றின் இனத்தின்படி” படைத்தார் எனச் சொல்லும் ஆதியாகமத்திலுள்ளப் பதிவைப் புதைபடிவ ஆதாரங்கள் நிரூபிப்பதையும் தெளிவுபடுத்தியிருந்தது. (ஆதியாகமம் [தொடக்க நூல்] 1:12, 25, பொது மொழிபெயர்ப்பு) ஆனால், தீமை பற்றிய கேள்வி இன்னும் என் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது.

ஷார்ஷ், பயனியர் என்றழைக்கப்படும் ஒரு முழுநேர ஊழியராக இருந்தார். பைபிளை மக்களுக்குப் போதிப்பதில் அதிக நேரத்தை அர்ப்பணித்தார். பைபிளை அதுவரை நான் படித்ததேயில்லை. என்னுடைய கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பாரா? அவர் தங்கியிருந்த சிறிய அப்பார்ட்மென்டிற்குச் சென்றேன். பல பயனியர்களோடு அவர் தங்கியிருந்தார். என்னுடைய பல கேள்விகளுக்கு வேதப்பூர்வ பதில்களைப் பெற்றேன். அதன்பிறகு, திட்டமிட்ட பைபிள் படிப்பு எனக்கு ஆரம்பிக்கப்பட்டது. அந்த படிப்பு மிக சுவாரஸ்யமாக இருந்தது. அதுமுதல், கடவுளுடைய வார்த்தையில் உள்ள விசுவாசத்தைப் பலப்படுத்தும் பொக்கிஷங்களைத் தோண்டியெடுக்கும் முயற்சியில் நான் சோர்ந்துபோனதேயில்லை.​—நீதிமொழிகள் 2:1-5.

கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தேன். அக்கூட்டங்கள் அல்ஜீரியர்ஸின் மையப்பகுதியில் அமைந்திருந்த ஒரு சிற்றுண்டிச்சாலையின் அடித்தளத்தில் நடந்தன. சாட்சிகள் என்னை அன்பாக வரவேற்றனர். நானும் தவறாமல் கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தேன். ஒரு குறிப்பிட்ட தெருவில் நடக்கப்போகும் கூட்டத்தைப்பற்றி அறிவிப்புச் செய்யப்பட்டபோது, நான் அங்கு போக முடிவு செய்தேன். அங்கு சென்றபோது, வீட்டுக்குவீடு பிரசங்க ஊழியத்திற்காக சாட்சிகள் கூடிவந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன். (அப்போஸ்தலர் 20:20) இருந்தாலும், நான் அங்கிருந்து கிளம்பிவிடவில்லை. இப்படித்தான், வெளி ஊழியத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டேன்.

மூன்றாவது முறையாக ஊழியத்திற்குச் சென்றபோது வீட்டுக்காரர்களிடம் நானாகவே பேசினேன். ஒரு வீட்டில், நான் குறிப்பிடவேண்டிய வசனத்தை பைபிளில் கண்டுபிடிக்க முடியாமல் போனது. “தம்பி, நீ தகுதிபெற்ற பிறகு மற்றவர்களுக்குப் போதிக்கலாம்” என அந்த வீட்டுக்காரர் சொல்லிவிட்டுக் கதவை அடைத்துவிட்டார். ஏமாற்றமடைந்தவனாக, ஒரு பெஞ்சின் மீது அமர்ந்து மாயமாய்ப்போன அந்த வசனத்தைத் தேடினேன். சில நிமிடங்களுக்குப் பிறகு கண்டுபிடித்தேன்; திரும்பச் சென்று அந்த வசனத்தை அவருக்குக் காட்டினேன்.

கடவுளுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக மார்ச் 4, 1956-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன். ஆறு மாதத்திற்குப் பிறகு ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. ஒழுங்கான பயனியராக சேவை செய்வதா, அல்லது அல்ஜீரியாவிலுள்ள ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் பள்ளி ஆசிரியர் வேலையை ஏற்றுக்கொண்டு ஊழியத்தில் குறைந்த மணிநேரமே செலவிடுவதா? பயனியர் ஊழியம் செய்ய முடிவு செய்தேன்.

என்னுடைய தீர்மானத்தால் என் அப்பா கோபத்தில் கொதித்தெழுந்தார். ஒவ்வொரு மாலையும் வீடு திரும்பவேண்டும் என்று என் கழுத்தில் கத்தியை வைத்து அதட்டினார். எனக்கு ஆகும் செலவுகளை கொடுத்துவிட வேண்டுமென்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், என் அப்பா இனிமேல் இந்த வீட்டில் எனக்கு சாப்பாடு கிடைக்குமென எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனவே, காலையில் பசியோடு வீட்டைவிட்டுக் கிளம்புவேன், மதிய உணவை மற்ற பயனியர்களோடு சேர்ந்து சாப்பிடுவேன், மாலையில் வீடு திரும்புவதற்கு முன் சான்ட்விச் சாப்பிடுவேன்.

வெடிகுண்டுகளைத் தவிர்த்தலும் தோட்டாக்களுக்குத் தப்பித்தலும்

பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற அல்ஜீரியா போரில் மும்முரமாக ஈடுபட்ட சமயம் அது, அல்ஜீரியர்கள் குண்டுவெடிப்புகளுக்குப் பலியாகிக்கொண்டும் பதிலடி கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் மட்டும் 100-⁠க்கும் அதிகமான குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பேருந்துகளிலும், மதுபானக் கடைகளிலும், விளையாட்டு அரங்கங்களிலும் குண்டுகள் வைக்கப்பட்டன. ஊழியம் செய்வது மிகுந்த சவாலாக இருந்தது. மக்கள் கதவுகளைத் திறக்கவே பயந்தனர். அடிக்கடி ஊரடங்கு உத்தரவுகள் போடப்பட்டன. அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. மக்கள் சோதனையிடப்பட்டனர்.

1956, செப்டம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை, நானும் மற்ற பயனியர்களும் கூட்டம் நடக்கும் இடத்தை சீரமைத்துக் கொண்டிருந்தபோது, மேலேயிருந்த சிற்றுண்டிச்சாலையில் குண்டு வெடித்தது; நிறையப்பேர் கொல்லப்பட்டனர், அநேகர் படுகாயமடைந்தனர். நல்லவேளையாக கீழேயிருந்த எங்களில் யாரும் காயமடையவில்லை. டிசம்பர் மாதத்தில் நானும் ஒரு சகோதரியும் ஜனசந்தடி நிறைந்த ஒரு தெருவில் பிரசங்கித்துக் கொண்டிருந்தோம். அப்போது, ஒரு கார் படுவேகமாக வந்தது. திறந்திருந்த ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிக் குண்டுகள் கூட்டத்திற்குள் சரமாரியாகப் பாய்ந்தன. மின்னல் வேகத்தில் அருகிலிருந்த கதவைத் திறந்து உள்ளே ஓடினோம்; சகோதரியை கீழே தரையில் தள்ளிவிட்டு, அதேவேகத்தில் நானும் கீழே படுத்துக்கொண்டேன். தோட்டாக்கள் தெறித்து தலைக்கு மேலே விருட்டென்று சென்றன. அதன்பிறகு சாட்சி கொடுக்கும்போது நாங்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்.

ஆயுதம் ஏந்த மறுத்தேன்

1957, மார்ச் 1-⁠இல் இராணுவத்தில் சேர எனக்கு அழைப்பு வந்தது. ஆயுதம் ஏந்த என் கிறிஸ்தவ மனசாட்சி அனுமதிக்காததால், அதிகாரிகளுடன் பேச பலம் தரும்படி ஜெபம் செய்தேன். இது சம்பந்தமாக எனக்கும் அப்பாவிற்கும் சண்டை வரக்கூடாது என்றும் வேண்டினேன். ஆறுதல் தரும்விதமாக, பிரான்சிலுள்ள, லில்லி நகரத்திற்கு வந்து விவரம் கூறும்படி சொல்லப்பட்டேன். இந்நகரம் வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்தது.

ஆறு நாட்களுக்குப் பிறகு நான் லில்லி அரணுக்குப் போய்ச்சேர்ந்தேன். 17-⁠ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினான்காம் லூயி அரசனின் காலத்திலிருந்தே லில்லி அரண் இருந்து வருகிறது. பைபிளைப் பயன்படுத்தி, என்னுடைய நடுநிலையை இராணுவ அதிகாரிகளிடம் விளக்கினேன். ஆனால், என்னை அவர்கள் சிறையிலெறிந்தனர். ஒருநாள் காலையில் காவலர்கள் என்னை தரதரவென சிறையிலிருந்து இழுத்துவந்து, என்னைச் சோதனையிட்டு, ஒரு சிறிய பைபிளைக் கண்டுபிடித்தனர். பின்பு அவர்கள் பனியில் என்னைக் குப்புறக்கிடத்தி, பைபிளை எனக்கருகே தூக்கியெறிந்தனர். துப்பாக்கியின் பிடியைக்கொண்டு என் தலையின் பின்புறத்தை அழுத்தி, அப்படியே 30 நிமிடங்கள் அமுக்கிப் பிடித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு, நான் பைபிளை வைத்துக்கொள்ள காவலர்கள் விட்டுவிட்டனர்; அது எனக்கு சந்தோஷமாயிருந்தது. இந்நாள் வரைக்கும் அந்த பைபிள் என் புத்தக அலமாரியில் இருக்கிறது. என்றாலும், அந்த நாளில் நான் பட்ட கொடுமையினால் வயிற்றில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு பல வருடங்களுக்கு இருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு, ஆணை அதிகாரி என் அப்பாவிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை எனக்கு வாசித்துக் காட்டினார். “அவனை அடக்குங்கள். தேவைப்பட்டால் அடித்து நொறுக்குங்கள்” என்று அதில் எழுதியிருந்தது. அதன்பிறகும் நான் அவர்களுக்கு உடன்படாததால், அந்த அதிகாரி என்னை இருட்டறையில் வீசியெறிந்தார்; அங்கே ஒரு மரப்பலகையில் படுத்தேன், ஒரு சின்ன போர்வையால் என்னைப் போர்த்திக்கொண்டேன். கழிப்பறையில்லை, அறையின் ஒரு மூலையில் கழிவுகளை வெளியேற்றினேன். குளிக்க முடியவில்லை, பல் துலக்க முடியவில்லை, சாப்பாட்டுப் பாத்திரத்தையும் சுத்தம் செய்ய முடியவில்லை. இரண்டு வாரங்களுக்குப்பின், பாரிஸில் உள்ள ஃபிரென் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன்.

அடுத்து வந்த ஆறு வருடங்களில், நான்கு முறை சிறைத்தண்டனை பெற்றேன்; 14 சிறைகளில் காலம் கழித்தேன். ஒரு குளிர்காலத்தில், லவார் பள்ளத்தாக்கிலுள்ள ஃபான்டவ்ரோவில் அடைக்கப்பட்டிருந்தேன். 12-⁠ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் துறவிகள் மடம் சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்டது. நான் அங்கு போய்சேர்ந்தபோது என் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. நான் என்னுடைய பைபிளைக்கேட்டு தொடர்ந்து நச்சரித்து கொண்டிருந்ததால், காவலர்கள் என்னை ஒரு மாதத்திற்கு தனிச்சிறையில் அடைத்தார்கள். அங்கே, என்னுடைய இன்னொரு எதிரியான குளிர் பழிவெறியோடு என்னிடம் திரும்பியது, நான் இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்தேன்.

பிறகு ஷாடோடடுயர்கான் என்ற ஒரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டேன், அங்கு கைதிகள் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டார்கள். அது ஸோம்வருக்கு அருகில் இருந்தது. அங்கே கைதிகள் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு வீட்டு வேலைகள் செய்து வந்தனர். அல்ஜீரியக் குடியரசின் வருங்கால அதிபர் ஆஹ்மெட் பென் பெலாவும் அங்கே இருந்தார். அவருக்கு பல மாதங்களாகச் சாட்சி கொடுத்தேன். ஒரு சமயம் அவர் என்னிடம் இவ்வாறு சொன்னார்: “நீ அல்ஜீரியர்ஸ் நகரத்தைச் சேர்ந்தவன், அல்ஜீரியர்களுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்த மறுத்ததால்தானே நீ இங்கேயிருக்கிறாய்.” என் நிலைநிற்கையினால் அவர் என்னை மதித்தார்.

மேலுமான சோதனைகளில் பலப்படுத்தப்பட்டேன்

என் உடல்நிலை படுமோசமாகப் பாதிக்கப்பட்டது; எனக்கு காசநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பிரான்சின் தென் பகுதியிலுள்ள காசநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். அங்கே பல மாதங்களாகப் படுத்தபடுக்கையாய் இருந்தேன். பாதிக்கப்பட்ட நுரையீரலை அப்புறப்படுத்த அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென மருத்துவர் கூறினார். இரத்தமேற்றாமல் அறுவை சிகிச்சை செய்யும்படி கேட்டுக்கொண்டேன். (அப்போஸ்தலர் 15:28) அதனால் மருத்துவர் என்மீது கோபமடைந்து, சிகிச்சை செய்ய மறுத்துவிட்டார். அது என் சிறைவாசத்தின் ஆறாவது வருடம்.

குளிர்காலத்தின் மத்தியில் மருத்துவமனையைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது. என்னிடம் இருந்ததெல்லாம், நான் அணிந்திருந்த உடை மட்டுமே. அப்போஸ்தலன் பவுலுக்கு உதவிசெய்ய ஒநேசிப்போரை யெகோவா அனுப்பினார். அதேபோல இப்போது எனக்கு உதவிசெய்ய சகோதரர் அடால்ஃப் காராடோனீயை அனுப்பினார். அவர் எனக்கு தங்குவதற்கு இடமளித்து ‘பக்கபலமாக’ நிரூபித்தார். (கொலோசெயர் 4:11; 2 தீமோத்தேயு 1:16-18) அவருடைய உதவியாலும், பிரான்சின் தென் பகுதியிலிருந்த ஒரு மருத்துவருடைய ஒத்துழைப்பினாலும் என்னுடைய உடல்நலம் சீராய் முன்னேறியது.

இந்தச் சமயத்தில், சில பெரிய செலவுகள் இருந்தன. அவற்றை சமாளிக்க பணம் தேவைப்பட்டது. எப்படிச் சமாளிப்பதென்றே தெரியவில்லை. பிறகு ஒரு நாள் முன்பின் தெரியாத ஒரு பெண்மணி என்னைப் பார்க்க வந்தார். “நான் ஒரு வக்கீல். அல்ஜீரியாவின் அதிபர் திரு. பென் பெலா இதை உங்களிடம் கொடுக்க என்னை அனுப்பினார்” என்று கூறி, ஓர் உறையை என்னிடம் கொடுத்தார். அதில், என் செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணத்துக்கும் அதிகமாகவே இருந்தது. ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவாவுக்கு நெஞ்சார நன்றி செலுத்தினேன்.​—சங்கீதம் 65:2.

அருமையான சேவையும் அழகான துணையும்

இப்பொழுது நான் சிறைப்பறவை அல்ல; அதனால், மீண்டும் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். பாரிஸுக்கு அருகில் உள்ள மலாயன் சபையில், 35 வயது விதவையான ஆன்ட்ரே மாரெல் என்பவரைச் சந்தித்தேன். அவருடைய முதல் கணவரும் சாட்சிதான், ஒரு வாகன விபத்தில் பலியாகிவிட்டார். நாங்கள் இருவரும் 1964, செப்டம்பர் 26-⁠இல் திருமணம் செய்துகொண்டோம். 1965, ஆகஸ்ட் 1-⁠இல் விசேஷப் பயனியர்களுக்கான நியமிப்பைப் பெற்றோம். ஆன்ட்ரேவுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் இல்லாவிட்டாலும், 28 வருடங்களாக முழுநேர சேவையை சந்தோஷமாகவே செய்தாள் என்றால் ஆச்சரியம்தானே!

1967-⁠இல் வட்டாரக் கண்காணியாக, யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்குச் சென்று உற்சாகப்படுத்தும் ஒரு பயண ஊழியராக நியமிக்கப்பட்டேன். பிரான்சின் தென் பகுதியில் பர்டோவிலிருந்து மொனாகோ வரையிலும், பாரிஸில் ஒரு வருடமும் சேவை செய்தோம். எங்களுடைய உடல்நிலை காரணமாக, பயணம் செய்வது சுலபமாக இருக்கவில்லை. ஆனால் யெகோவாவின் உதவியோடு, 1986 வரை அந்த நியமிப்பில் 20 வருடங்களாக சேவை செய்தோம். பிறகு அதே வருடம் மீண்டும் விசேஷ பயனியர்களாக ஆனோம்.

இன்றைய வாழ்க்கை

எனக்கு இப்பொழுது கிட்டத்தட்ட 70 வயது. சோதனைகளைச் சகித்துக்கொள்ள யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களுக்கு எப்பொழுதும் பலத்தைத் தருகிறார் என்பதை பல முறை கற்றுக்கொண்டேன். ஆம், அந்தப் பலத்தை பெறுவதற்கு ஒரு வழி, தேவனால் ஏவப்பட்ட வார்த்தையைப் படிப்பதாகும். நானும் ஒவ்வொரு வருடமும் அதை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படிக்க முயலுகிறேன்.​—ஏசாயா 40:28-31; ரோமர் 15:4; 2 தீமோத்தேயு 3:16.

மக்கள் நற்செய்திக்கு செவிசாய்ப்பதைப் பார்க்கும்போதும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதைப் பார்க்கும்போதும் ஆன்ட்ரேவும் நானும் உற்சாகமடைகிறோம். இத்தனை வருடங்களில் எங்களுடைய 70 பைபிள் மாணாக்கர்கள் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதைப் பார்த்திருப்பது அளவிலா ஆனந்தத்தையும் முடிவிலா இன்பத்தையும் தருகிறது. “இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.” எங்கள் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது, சங்கீதக்காரன் எங்கள் சார்பாக இந்த வார்த்தைகளை சொன்னதுபோல் உணருகிறேன்.​—சங்கீதம் 34:6.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, இப்போது அச்சில் இல்லை.

[பக்கம் 21-ன் படம்]

ஸோம்வருக்கு அருகில் ஷாடோடடுயர்கான் சிறையில்

[பக்கம் 23-ன் படங்கள்]

என் மனைவியுடன் 1967-⁠லிலும் இப்போதும்