Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்?

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்?

கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்?

“ஏன்” என்ற கேள்வியைக் கேட்கும் ஒருவர் சில சமயங்களில் ஆறுதல் கிடைக்காதா என்று மட்டுமல்ல பதில் கிடைக்காதா என்றும் ஏங்குகிறார். அவருக்கு தாள முடியாத இழப்பு ஏற்பட்டிருப்பதால் ஆறுதல் ரொம்பவே அவசியம். அப்படிப்பட்டவருக்கு பைபிள் ஆறுதல் அளிக்கிறதா? இது சம்பந்தமாக பைபிளிலிருந்து மூன்று முக்கிய உண்மைகளைக் கலந்தாலோசிக்கலாம்.

முதலாவதாக, கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார் என்று கேட்பதில் தவறேதுமில்லை. அப்படிக் கேட்பது கடவுள்மீது நம்பிக்கை இல்லாததையோ அவரை அவமதிப்பதையோ சுட்டிக்காட்டுவதாக நினைத்து சிலர் கவலைப்படுகிறார்கள். ஆனால், நேர்மை மனதுடன் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் கவலை வேண்டாம். மதிப்பிற்குரிய பலர் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். உண்மையுள்ள தீர்க்கதரிசியான ஆபகூக் “என்னை ஏன் இப்படிப்பட்ட கொடிய அநீதியை காணச் செய்கிறீர்? வன்முறையும் அக்கிரமமும் குற்றச்செயலும் கொடூரமும் எங்கும் பரவ ஏன் அனுமதிக்கிறீர்?” என்று கடவுளிடம் கேட்டார். (ஆபகூக் 1:3, கன்டம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்) இதற்காக யெகோவா தேவன் ஆபகூக்கை கண்டித்தாரா? இல்லை. மாறாக, உண்மையுள்ள அந்த மனிதனின் கேள்விகளை நாம் அனைவரும் வாசித்துத் தெரிந்துகொள்வதற்காக அதை பதிவு செய்து வைத்திருக்கிறார்.​—ரோமர் 15:4.

இரண்டாவதாக, நீங்கள் துன்பப்படுகையில் கடவுள் பரிதாபப்படுகிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். அவர் நம்மிடமிருந்து விலகி இருப்பவரும் அல்ல, நம்மிடமிருந்து காரியங்களை மறைத்து வைப்பவருமல்ல. அவர் “நியாயத்தை விரும்புகிறவர்.” அவர் துன்மார்க்கத்தையும் அது விளைவிக்கும் துன்பத்தையும் வெறுக்கிறார். (சங்கீதம் 37:28; நீதிமொழிகள் 6:16-19) பூர்வத்தில் வாழ்ந்த நோவாவின் காலத்தின்போது பூமியில் வன்முறை அதிகரித்ததால் அது கடவுளுடைய “இருதயத்துக்கு விசனமாயிருந்தது.” (ஆதியாகமம் 6:5, 6) கடவுள் மாறவில்லை; இன்று நடப்பதைக் குறித்தும் அவர் வேதனைப்படுகிறார்.​—மல்கியா 3:6.

மூன்றாவதாக, துன்மார்க்கத்திற்கு ஒருபோதும் கடவுள் காரணர் அல்ல. இதை பைபிள் மிகத் தெளிவாக விளக்குகிறது. கொலை, தீவிரவாதம் ஆகியவற்றிற்கு கடவுள்தான் காரணம் என்று சொல்பவர்கள் அவர்மீது தவறாக பழி சுமத்துகிறார்கள். யோபு 34:10, ஈஸி டு ரீட் வர்ஷன் சொல்வதைக் கவனியுங்கள்: “தேவன் தீயவற்றை ஒருபோதும் செய்யமாட்டார்! சர்வ வல்லமையுள்ள தேவன் தவறிழைக்க மாட்டார்!” யாக்கோபு 1:13-⁠ம்கூட அப்படியே சொல்கிறது: “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” ஆகவே, உங்களுக்கு துன்பம் வந்தால் அதற்கு காரணம் கடவுள் அல்ல என்பதைக் குறித்து நீங்கள் உறுதியாக இருக்கலாம்.

உலகத்தை ஆளுவது யார்?

இத்தனை விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிற போதிலும் இன்னும் ஒரு கேள்வி எஞ்சியிருக்கிறது. கடவுளுக்கு அன்பும், நியாயமும், வல்லமையும் இருக்கிறதென்றால் நம்மைச் சுற்றி ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன? பொதுவாக எல்லாரும் தவறாகப் புரிந்துவைத்திருக்கும் ஒன்றை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வ வல்லமையுள்ள கடவுளே இந்த உலகத்தை ஆளுகிறார் என்றும் இந்த உலகத்தில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் அவரே காரணம் என்றும் அநேகர் நினைக்கிறார்கள். “இப்பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு அணுவையும் மூலக்கூறையும் அவர் கட்டுப்படுத்துகிறார்” என்று ஓர் இறையியல் கல்லூரியின் முதல்வர் கூறினார். இதைத்தான் பைபிளும் கற்பிக்கிறதா?

இல்லவே இல்லை. உண்மையிலேயே இந்த உலகத்தை ஆளுவது யார் என்பதைப் பற்றி பைபிள் சொல்வதைத் தெரிந்துகொள்ளும் அநேகர் ஆச்சரியப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது’ என்று 1 யோவான் 5:19 சொல்கிறது. யார் இந்தப் பொல்லாங்கன்? அவனை பிசாசாகிய சாத்தான் என இயேசு அடையாளம் காட்டினார்; “உலகத்தின் அதிபதி” என்றும் அவனை அழைத்தார். (யோவான் 14:30) இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு கெட்ட காரியங்களும் துன்பங்களும் நிகழ்கின்றன என்பதை இப்போது உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? கொடூரமும், வஞ்சகமும், பயங்கரமும் நிறைந்தவனாக சாத்தான் இருக்கிறான். இவனுக்கிருக்கும் இந்தக் கெட்ட குணங்களே மக்கள் படுகிற பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அப்படியென்றால், உலகத்தை ஆளுவதற்கு சாத்தானை கடவுள் ஏன் அனுமதித்திருக்கிறார்?

ஏதேனில் எழுந்த சவால்

அன்பான, திறமைவாய்ந்த ஒரு தகப்பன் இருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் தன் பிள்ளைகளிடம் பொய் சொல்லுகிறார், அவர்களை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துகிறார், நல்லவற்றை அவர்களுக்குத் தர மறுக்கிறார் என்றெல்லாம் சொல்லி அனைவருக்கும் முன்பாக அவரைக் குற்றஞ்சாட்டினால் அவருக்கு எப்படி இருக்கும்? தான் அப்படிப்பட்டவரல்ல என்பதைக் காட்டுவதற்காகத் தன்மீது குற்றஞ்சாட்டின நபரை அடித்து நொறுக்குவாரா? நிச்சயம் அப்படிச் செய்யமாட்டார்! ஏனென்றால், அவர் அப்படி நடந்துகொண்டால் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையென்றே ஆகிவிடும்.

ஏதேன் என்ற இடத்தில் மனித சரித்திரம் ஆரம்பித்தபோது யெகோவாவுக்கு எதிராக எழுந்த சவாலை யெகோவா தேவன் எவ்வாறு கையாண்டார் என்பதை விளக்குவதற்கு இந்த உதாரணம் உதவுகிறது. தம் பூமிக்குரிய பிள்ளைகளுக்கு தாம் வைத்திருந்த அருமையான திட்டத்தை அந்த முதல் மனித ஜோடியான ஆதாம் ஏவாளுக்கு அவர் வெளிப்படுத்தினார். அவர்கள் தங்களுடைய சந்ததியால் பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி முழு உலகத்தையும் பூங்காவன பரதீஸாக மாற்றும்படிச் சொன்னார். (ஆதியாகமம் 1:28) சுவாரஸ்யமான இந்த வேலையில் கடவுளுடைய கோடிக்கணக்கான ஆவி குமாரர்களும் அக்கறையாய் இருந்தார்கள்.​—யோபு 38:4, 7; தானியேல் 7:10.

யெகோவா தேவன் தாராளமான கடவுளாக இருப்பதால் ஆதாம் ஏவாளுக்காக ருசியான பழங்களையுடைய அழகிய ஒரு தோட்டத்தை உருவாக்கினார். அதிலிருந்த ஒரே ஒரு மரத்தின் பழத்தை மட்டும் அவர்கள் சாப்பிடக்கூடாது. அதுதான் “நன்மைதீமை அறியத்தக்க” மரம். அந்த மரத்தின் பழத்தை சாப்பிடாமல் இருந்திருந்தால் ஆதாமும் ஏவாளும் தங்கள் தந்தைமீது முழு நம்பிக்கை வைத்திருப்பதைக் காண்பித்திருப்பார்கள்; தம் பிள்ளைகளுக்கு எது நல்லது எது கெட்டது என்பதைத் தீர்மானிக்க கடவுளுக்கு உரிமை இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதும் இதிலிருந்து வெளிப்படையாக தெரிந்திருக்கும்.​—ஆதியாகமம் 2:16, 17.

ஆனால், வருத்தகரமாக கடவுளுடைய ஆவி குமாரர்களில் ஒருவனின் மனதில், எல்லாரும் தன்னை வணங்க வேண்டுமென்ற ஆசை முளைத்தது. அதனால் சாப்பிடக்கூடாதென்று கடவுள் சொல்லியிருந்த பழத்தைச் சாப்பிட்டால் அவள் சாகமாட்டாள் என ஏவாளிடம் கூறினான். (ஆதியாகமம் 2:17; 3:1-5) இப்படியாக, பொல்லாத தூதனான சாத்தான், கடவுள் பொய் சொல்லியிருப்பதாக அவர்மீது அப்பட்டமாக பழிசுமத்தினான்! ஆதாம் ஏவாளுக்கு கடவுள் அதிமுக்கியமான அறிவைக் கொடுக்க மறுத்துவிட்டார் என்று மேலுமாக குற்றஞ்சாட்டினான். மனிதர்கள் தங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை தாங்களாகவே தீர்மானித்துக்கொள்ள வேண்டுமென சொல்லாமல் சொன்னான். சுருங்கச் சொன்னால், மனிதர்களை ஆட்சி செய்வதற்கும் அவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும் கடவுளுக்குத் தகுதி இல்லை என்று குற்றஞ்சாட்டினான். ஆனால் தனக்கு அந்தத் தகுதி இருக்கிறதென மறைமுகமாகச் சொன்னான்.

இப்படிப்பட்ட அநியாயமான வஞ்சகமான பொய்களைச் சொன்னதன் மூலம் அந்தத் தேவதூதன் தன்னை பிசாசாகிய சாத்தானாக ஆக்கிக்கொண்டான். பிசாசு என்றால் “பழிதூற்றுபவன்,” சாத்தான் என்றால் “எதிர்ப்பவன்” என்று அர்த்தம். ஆதாம், ஏவாள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் கடவுளை ஒதுக்கிவிட்டு பிசாசுடன் சேர்ந்துகொண்டார்கள்.​—ஆதியாகமம் 3:6.

நொடிப்பொழுதில் கடவுள் அந்தக் கலகக்காரர்களை அழித்திருக்க முடியும். ஆனால் முன்பு குறிப்பிடப்பட்ட உதாரணத்தின்படி, அப்படிச் செய்திருந்தால் பிரச்சினையை தீர்க்க முடிந்திருக்காது. கடவுளிடம் சாத்தான் சவால்விட்டபோது கோடானுகோடி தேவதூதர்களும் அதைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள் என்பதை நினைவில் வையுங்கள். பார்க்கப்போனால், எண்ணற்ற தேவதூதர்கள் பிறகு சாத்தானுடன் சேர்ந்துகொண்டு கலகம்செய்து பிசாசுகளாக மாறினார்கள்.​—மாற்கு 1:34; 2 பேதுரு 2:4; யூதா 6.

கடவுள் ஏன் தலையிடவில்லை?

ஆதாம், ஏவாள் தங்களுடைய படைப்பாளரைச் சாராமல் சுதந்திரமாகச் செயல்படும்படி சாத்தான் அவர்களை வஞ்சித்தான். அந்தக் குடும்பத்திற்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்ததா? இல்லை. அவர்கள் சாத்தானுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் தங்களுடைய “பிதாவினால்,” அதாவது, பிசாசினால் கட்டுப்படுத்தப்பட்டார்கள்; அதனால், தங்களுடைய இலட்சியங்களையும் வாழ்க்கை தராதரங்களையும் தாங்களாகவே தீர்மானித்துக்கொண்டார்கள். (யோவான் 8:44) ஆனால், அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை அவர்களுக்கு உண்மையான சுதந்திரத்தையும் நித்திய சந்தோஷத்தையும் அளிக்குமா? நிச்சயம் அளிக்காது என்பது யெகோவாவுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், அந்தக் கலகக்காரர்கள் தான்தோன்றித்தனமாகச் செயல்பட அவர் அனுமதித்தார். ஏனென்றால், அவ்விதமாக மட்டுமே ஏதேன் தோட்டத்தில் எழுந்த விவாதம் நிரந்தரமாகத் தீர்க்கப்படும்.

இந்த 6,000 வருடங்களில் மனிதன் இந்த உலகத்தில் எத்தனையோ விதமான ஆட்சிமுறைகளை முயற்சி செய்துவிட்டான்; பல சட்டங்களை இயற்றிப்பார்த்துவிட்டான். அவனுடைய முயற்சிகளில் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? மனித குடும்பம் உண்மையிலேயே சந்தோஷமாக, சமாதானமாக, ஒற்றுமையாக இருக்கிறதா? இல்லவே இல்லை! போர்களும், பஞ்சங்களும், இயற்கைப் பேரழிவுகளும், வியாதிகளும், மரணமும்தான் மனிதனை வாட்டி வதைத்திருக்கின்றன. பைபிள் சொல்கிறபடியே அவை ‘மாயையையும்’, ‘தவிப்பையும்’, ‘வேதனையையும்’ விளைவித்திருக்கின்றன.​—ரோமர் 8:19-22; பிரசங்கி 8:9.

என்றாலும் சிலர், ‘கடவுள் ஏன் பேராபத்துகளைத் தடுத்து நிறுத்துவதில்லை?’ என்று கேட்கலாம். கடவுள் அப்படித் தடுத்து நிறுத்துவது நீதியாக இருக்காது; கடவுளுக்கு விரோதமாக செயல்படுவது எந்த எதிர்விளைவையும் ஏற்படுத்தாது என்ற தவறான அபிப்பிராயத்தைக் கொடுத்துவிடும்; ஏதேன் தோட்டத்தில் எழுப்பப்பட்ட விவாதத்தின் பேரில் பல குழப்பங்களை உண்டாக்கும். அதனால், தமக்கு கீழ்ப்படியாததன் காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ விளைந்த குற்றச்செயல்களையும் பேராபத்துக்களையும் கடவுள் மறைமுகமாக இருந்து தடுத்து நிறுத்துவதில்லை. a சாத்தானுடைய ஆட்சிமுறை வெற்றிபெறும், அது மனிதவர்க்கத்திற்கு சந்தோஷத்தை அளிக்கும் என்ற அப்பட்டமான பொய்களை கடவுள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்! என்றாலும், உலகத்தில் நடக்கும் காரியங்களைப் பார்த்துகொண்டு அவர் அமைதியாக இருப்பதில்லை. மாறாக, அவர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார். அதைத்தான் நாம் இப்போது சிந்திக்கப் போகிறோம்.

“என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார்”

உலக சம்பவங்களைப் பார்த்துகொண்டு கடவுள் அமைதியாக இருக்கவில்லை என்பதை இயேசுவின் இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. (யோவான் 5:17) மாறாக, ஏதேன் தோட்டத்தில் கலகம் ஆரம்பித்தது முதற்கொண்டு கடவுள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டுவருகிறார். உதாரணத்திற்கு, சாத்தானையும் அவனுடன் சேர்ந்துகொண்ட அனைவரையும் எதிர்காலத்தில் பிறக்கப்போகும் ஒரு ‘வித்து’ அழிக்கும் என்ற விஷயத்தை பைபிளில் பதிவுசெய்யும்படி பைபிள் எழுத்தாளர்களைத் தம் பரிசுத்த ஆவியினால் தூண்டினார். (ஆதியாகமம் 3:15) அதுமட்டுமல்ல, அந்த வித்துவைக் கொண்டு தாம் பரலோகத்தில் ஓர் ராஜ்யத்தை ஆரம்பிக்கப்போகும் விஷயத்தைப் பற்றியும், அந்த ராஜ்யம் கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதர்களையும் ஆசிர்வதித்து துன்பத்திற்கு காரணமான எல்லாவற்றையும் ஏன், மரணத்தையும் நீக்கிவிடும் விஷயத்தைப் பற்றியும் பைபிளில் பதிவு செய்திருக்கிறார்.​—ஆதியாகமம் 22:18; சங்கீதம் 46:9; 72:16; ஏசாயா 25:8; 33:24; தானியேல் 7:13, 14.

அருமையான இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக யெகோவா அந்த ராஜ்யத்தின் பிரதான அரசராக ஆக இருப்பவரை பூமிக்கு அனுப்பினார். இவர் வேறு யாருமில்லை, கடவுளுடைய மகனான இயேசு கிறிஸ்துவே. (கலாத்தியர் 3:16) கடவுள் விரும்பினபடி கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியே இயேசு முக்கியமாகக் கற்பித்தார். (லூக்கா 4:43) சொல்லப்போனால், பரலோக ராஜ்யத்தின் அரசராக ஆகும்போது தாம் என்னவெல்லாம் செய்வார் என்பதை பூமியிலிருந்தபோதே செய்துகாட்டினார். பசியாயிருந்த ஆயிரக்கணக்கானோருக்கு உணவளித்தார், வியாதியாக இருந்தவர்களைக் குணப்படுத்தினார், இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார். அதுமட்டுமல்ல, புயல்காற்றை அடக்குவதன் மூலம் இயற்கைச் சக்திகளையும் கட்டுப்படுத்த தமக்கு வல்லமை இருப்பதைக் காண்பித்தார். (மத்தேயு 14:14-21; மாற்கு 4:37-39; யோவான் 11:43, 44) இயேசுவைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்று . . . இருக்கிறதே.”​—2 கொரிந்தியர் 1:20.

இயேசுவுக்கு செவிசாய்த்து, கடவுளிடமிருந்து விலகி சாத்தானுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்த “உலகத்திலிருந்து,” வெளியே வருபவர்களை யெகோவாவின் குடும்பம் வரவேற்கிறது. (யோவான் 15:19) உண்மைக் கிறிஸ்தவர்களாலான இந்த உலகளாவிய குடும்பம் அன்பினால் வழிநடத்தப்படுகிறது. அதில் சமாதானம் குடிகொண்டிருக்கிறது, எந்தவிதமான தப்பெண்ணத்திற்கும் இன வேறுபாட்டிற்கும் இடமளிக்கக்கூடாது என்ற உறுதியும் நிலவுகிறது.​—மல்கியா 3:17, 18; யோவான் 13:34, 35.

உண்மைக் கிறிஸ்தவர்கள் இன்றைய உலகத்தை ஆதரிப்பதற்குப் பதிலாக மத்தேயு 24:14-⁠ல் உள்ள இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரித்து, அதைக் குறித்து மக்களுக்கு அறிவிக்கிறார்கள். இவற்றைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்: ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தை’ உலகெங்கும் பிரசங்கித்து வருகிறவர்கள் யார்? உலகளாவிய ஆன்மீகக் குடும்பமாக போரிலும் பிளவை உண்டாக்கும் தேசிய மற்றும் இனக் கலவரங்களிலும் ஈடுபட மறுக்கிறவர்கள் யார்? கடவுளுடைய உயர்ந்த தராதரங்கள் பிரபலமாக கருதப்படுகிறதோ இல்லையோ தங்கள் நடத்தையை கடவுளுடைய வார்த்தைக்கு இசைய மாற்றிக்கொள்கிறவர்கள் யார்? (1 யோவான் 5:3) இவை எல்லாவற்றையும் யெகோவாவின் சாட்சிகள் செய்திருப்பதை அநேகர் கவனித்திருக்கிறார்கள். இவற்றை நீங்களும் ஆராய்ந்துப் பார்க்கலாமே?

கடவுளுடைய ராஜ்யத்தை தேர்ந்தெடுங்கள்!

கடவுளிடமிருந்து தங்களைப் பிரித்துகொண்டு சாத்தானால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கும் மக்கள் ஓர் உலகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதில் கொடுமைகளும் அநியாயமுமே அதிகரித்துவருகின்றன. பூமியும்கூட நாசமாக்கப்பட்டிருக்கிறது! மறுபட்சத்தில், யெகோவா பரலோகத்தில் ஓர் ராஜ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அது லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை முன்னேற்றுவித்து ஒவ்வொருவருக்கும் நிச்சயமான நம்பிக்கையை அளித்திருக்கிறது. (1 தீமோத்தேயு 4:10) நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு இதுவே சரியான சமயம். ஏனென்றால், சாத்தானையும் அவனுடைய பொல்லாத உலகத்தையும் கடவுள் இப்படியே விட்டுவைக்க மாட்டார். இந்தப் பூமியை பூங்காவனப் பரதீஸாக மாற்றுவதற்கான அவருடைய நோக்கம் மாறவேயில்லை. கடவுளுடைய இந்த நோக்கத்தை நிறைவேற்ற அவருடைய அரசாங்கம் இன்னும் வலுப்பெறும், அதை ஆதரிக்கும் மக்களும் இன்னும் அதிக உறுதியடைவார்கள். ஆனால், சாத்தானின் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்த உலகமோ கடவுள் அதை அழிக்கும்வரை அதிகமான “வேதனை”யை அனுபவிக்கும். (மத்தேயு 24:3, 7, 8) எனவே, நீங்கள் நேர்மை மனதுடன் “ஏன்?” என்று கேட்டு கடவுளிடம் அழுதிருக்கிறீர்கள் என்றால் கடவுள் சொல்வதற்குச் செவிகொடுங்கள். பைபிள் மூலம் ஆறுதலான, நம்பிக்கையான செய்தியை அவர் உங்களுக்கு அளிக்கிறார். அதைக் கேட்டு நடந்தால் இப்பொழுதேகூட உங்கள் துக்கக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறும்.​—மத்தேயு 5:4; வெளிப்படுத்துதல் 21:3, 4.

[அடிக்குறிப்புகள்]

a அவ்வப்போது மனித விவகாரங்களில் கடவுள் தலையிட்டிருக்கிறபோதிலும், அவருடைய செயல்கள் இந்த உலகத்தை ஆதரிப்பதாக இருக்கவில்லை. மாறாக அவை, அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதுடன் சம்பந்தப்பட்டிருந்தன.​—⁠லூக்கா 17:26-30; ரோமர் 9:17-24.

[பக்கம் 7-ன் படக்குறிப்பு]

மனித ஆட்சியில் நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா?

[பக்கம் 7-ன் படக்குறிப்பு]

குழந்தை: © J. B. Russell/Panos Pictures; அழுகிற பெண்: © Paul Lowe/Panos Pictures

[பக்கம் 8-ன் படக்குறிப்பு]

இயேசு இந்தப் பூமியை பூங்காவனப் பரதீஸாக மாற்றுவார்; இறந்தவர்களையும் உயிரோடு எழுப்புவார்