Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடினமான கேள்வி

கடினமான கேள்வி

கடினமான கேள்வி

“ஏன்?” இந்த இரண்டு எழுத்துக்கள் வெளிப்படுத்தும் வேதனையையும் தவிப்பையும் எண்ணிப்பார்க்கையில் கதிகலங்குகிறது. பேரழிவு அல்லது சோக சம்பவம் ஏற்படும்போதே மக்கள் இந்தக் கேள்வியைப் பெரும்பாலும் கேட்கிறார்கள்: சூறாவளி நகரத்தை முற்றிலுமாகத் துடைத்தழித்துவிட்டு சாவையும், அழிவையும் தடயமாக விட்டுச்செல்கிறது. பூமியதிர்ச்சி நகரத்தைக் கற்குவியலாக மாற்றிவிடுகிறது. தீவிரவாதத் தாக்குதல் சந்தோஷமான நாட்களை திகில் நிறைந்த நாட்களாக மாற்றிவிடுகிறது; அதனால் ஒருசமயத்தில் அமைதி குடிகொண்டிருந்த நகரங்களில் இன்று பயமும் வன்முறையுமே குடிகொண்டிருக்கின்றன. விபத்து நாம் நேசிக்கும் ஒருவரை காயப்படுத்திவிடுகிறது அல்லது உயிரையே பறித்துவிடுகிறது.

பெரும்பாலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு பலியாவது ஆபத்திலிருந்து தப்பிக்க முடியாத அப்பாவிகளே. சமீப காலங்களில் இதுபோன்ற துயர் சம்பவங்களின் எண்ணிக்கை எகிறியுள்ளன. இதைப் பார்த்து அநேகர் கடவுளிடம் “ஏன்?” என்று கேட்டு கதறி அழுகிறார்கள். சில உதாரணங்களைக் கவனியுங்கள்:

“கடவுளே எங்களுக்கு ஏன் இந்தக் கஷ்டத்தைக் கொடுத்தீங்க? நாங்க என்ன தப்பு செய்தோம்?” தான் வாழ்ந்த கிராமத்தை சுனாமி சின்னாபின்னமாக்கிய பிறகு வயதான ஒரு பெண்மணி இந்த இரண்டு கேள்விகளையும் கேட்டதாக ராய்டர்ஸ் நியூஸ் ஏஜென்சி அறிக்கையிடுகிறது.

“கடவுள் எங்கே இருந்தார்? கடவுளுக்கு எல்லா சக்தியும் இருக்கிறதென்றால், அவர் ஏன் இதை தடுத்து நிறுத்தவில்லை?” சர்ச்சில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் அநேகர் காயமடைந்து இறந்துபோனார்கள்; இச்சம்பவத்தை ஒட்டி அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தின் ஒரு செய்தித்தாள் இந்தக் கேள்விகளை எழுப்பியது.

“கடவுள் ஏன் அவளை சாகவிட்டார்?” புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தன் ஐந்து பிள்ளைகளையும் கணவனின் பொறுப்பில் விட்டுவிட்டு கண்ணை மூடிவிட்டாள். இதைப் பார்த்த அந்தப் பெண்ணின் தோழி இந்தக் கேள்வியைக் கேட்டாள்.

இவர்களைப் போல பலர் தங்களுக்கு வருகிற கஷ்டங்களுக்குக் கடவுளே காரணம் என்று நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, இயற்கைப் பேரழிவுகளைக் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட இன்டர்நெட் சுற்றாய்வில் கலந்துகொண்டவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் சூறாவளி போன்ற பேரழிவுகள் கடவுளிடமிருந்தே வருவதாக தெரிவித்தார்கள். ஏன் இத்தனை அநேகர் அப்படி நினைக்கிறார்கள்?

மதத்தினால் குழப்பங்கள்

திருப்தியான பதில்களைத் தருவதற்குப் பதிலாக மதத் தலைவர்கள் பெரும்பாலும் குழப்பத்தையே உண்டாக்குகிறார்கள். அவர்கள் தரும் விளக்கங்களில் மூன்றை மட்டும் இப்போது சிந்திக்கலாம்.

முதலாவதாக, கீழ்ப்படியாத மனிதர்களைத் தண்டிக்கவே கடவுள் பேரழிவுகளைக் கொண்டுவருவதாக அநேக மதத் தலைவர்கள் போதிக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவைச் சேர்ந்த லூசியானாவிலுள்ள நியூ ஆர்லியன்ஸ், கேட்ரீனா சூறாவளியால் சீரழிக்கப்பட்டபோது கடவுள் அந்த நகரத்தைத் தண்டித்திருப்பதாக மதத் தலைவர்கள் சிலர் சொன்னார்கள்; நகரத்தின் ஊழலையும், சூதாட்டத்தையும், ஒழுக்கக்கேட்டையும் அதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டினார்கள். கெட்டவர்களை கடவுள் வெள்ளத்தினாலும் தீயினாலும் அழித்த சம்பவங்களை சிலர் பைபிளிலிருந்தேகூட மேற்கோள் காட்டினார்கள். என்றாலும், இப்படிப்பட்ட தவறான விளக்கங்கள் பைபிளைத் திரித்தே கூறுகின்றன.​—⁠“கடவுளின் செயல்களா?” என்ற பெட்டியைக் காண்க.

இரண்டாவதாக, எதிர்பாராத விதத்தில் மனிதர்களை தாக்குகிற இந்தப் பேரழிவுகளைக் கொண்டுவர கடவுளுக்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன, ஆனால், அவை நம் அறிவுக்கு எட்டாதவை என்று சில குருமார் அடித்துக் கூறுகிறார்கள். அநேகர் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ‘அன்புள்ள கடவுள் இப்படிப்பட்ட தீங்கைச் செய்துவிட்டு ஆறுதலுக்காக ஏங்கி “ஏன்?” என்று பரிதாபமாக கேட்பவர்களுக்கு காரணத்தை சொல்லாமல் இருப்பாரா?’ என்று அவர்கள் யோசிக்கிறார்கள். பைபிளோ, “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்கிறது.​—1 யோவான் 4:8.

மூன்றாவதாக, கடவுளுக்கு சர்வத்தையும் கட்டுப்படுத்தும் சக்தி இல்லை என்றும் அவர் அன்பற்றவர் என்றும் மற்ற மதத் தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த விளக்கமும் யோசிக்க வைக்கும் கேள்விகளை எழுப்புகிறது. நாம் கற்பனை செய்ய முடியாதளவு பரந்து விரிந்திருக்கும் அண்டம் உட்பட ‘சகலத்தையும் சிருஷ்டித்த’ ஒருவருக்கு இந்த ஒரு கிரகத்தில் உள்ள துன்பங்களை நீக்குவதற்கு மட்டும் சக்தியிருக்காதா என்ன? (வெளிப்படுத்துதல் 4:11) அன்பு காட்டும் திறமையுடன் நம்மை படைத்தவர், அன்பே உருவானவராக தம்முடைய வார்த்தையில் விவரிக்கப்பட்டிருப்பவர் மனிதர்களின் கஷ்டங்களைப் பார்த்து மனமிரங்காமல் இருப்பாரா?​—ஆதியாகமம் 1:27; 1 யோவான் 4:8.

கடவுள் ஏன் துன்பங்களை அனுமதித்திருக்கிறார் என்பதற்கு மனிதர்கள் தரும் பல விளக்கங்களில் மூன்றை மட்டுமே நாம் இதுவரை பார்த்தோம். பல நூற்றாண்டுகளாகவே இந்தக் கேள்வி, சிந்திக்கும் மக்களின் மனங்களை குடைந்திருக்கிறது. அடுத்த கட்டுரையில் முக்கியமான, அதேசமயம் நம் காலத்திற்கு பொருத்தமான இந்த விஷயத்தைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதைச் சிந்திக்கலாம். பைபிளின் நம்பகமான, நியாயமான விளக்கங்கள் உங்கள் குழப்பங்களை எல்லாம் நீக்கிவிடும்; அதை நீங்களே பார்ப்பீர்கள். அதோடு, வாழ்க்கையில் பல துயரங்களை எதிர்ப்பட்டிருப்பவர்களுக்கு பைபிள் ஆறுதல் அளிக்கிறதையும் பார்ப்பீர்கள்.

[பக்கம் 4-ன் படக்குறிப்பு]

SENA VIDANAGAMA/AFP/Getty Images ▸

[பக்கம் 4-ன் படக்குறிப்பு]

மதத் தலைவர்கள் குழப்பமான பல விளக்கங்களை அளித்திருக்கிறார்கள்

[பக்கம் 4-ன் படக்குறிப்பு]

கடவுளின் செயல்களா?

இன்று நடக்கிற இயற்கைப் பேரழிவுகளுக்குக் கடவுளே காரணம் என்று பைபிள் கற்பிக்கிறதா? இல்லவே இல்லை! இயற்கைப் பேரழிவுகளுக்கும் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள் அளித்த தண்டனைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்திற்கு, கடவுள் கண்மூடித்தனமாக எல்லாரையும் அழிப்பதில்லை; அவர் மனிதனின் இருதயத்தை ஆராய்வதால் கெட்டவர்களை மட்டுமே அழிக்கிறார். (ஆதியாகமம் 18:23-32) அதோடு, அவர் முதலில் எச்சரிப்பதன் மூலம், நல்லவர்கள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பளிக்கிறார்.

மறுபட்சத்தில் இயற்கைப் பேரழிவுகளோ மிகக் குறைந்த எச்சரிப்புடன் அல்லது எந்த எச்சரிப்புமின்றி திடீரென வருகின்றன. அவை நல்லவர்கள் கெட்டவர்கள் என எல்லாரையுமே கொன்றுவிடுகின்றன அல்லது முடமாக்கிவிடுகின்றன. மனிதன் இயற்கைச் சூழலை நாசமாக்கியிருக்கிறான்; நிலநடுக்கம், வெள்ளம், மிதமிஞ்சிய சீதோஷ்ணம் ஆகியவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படும் பகுதிகளில் வீடுகளை கட்டியிருக்கிறான். இவ்வாறு இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் சேதங்கள் அதிகரித்திருப்பதற்கு மனிதனும் ஓரளவு காரணமாக இருக்கிறான்.