Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காதலர்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வது சரியா?

காதலர்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வது சரியா?

பைபிளின் கருத்து

காதலர்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வது சரியா?

சமீபத்திய ஓர் ஆய்வில் பதிலளித்த டீனேஜர்களில் சுமார் 90 சதவிகிதத்தினர், காதலர்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்று நினைப்பதாக கூறினார்கள். மீடியாவும்கூட இந்த எண்ணத்தையே அளிக்கிறது, அநேக சமயங்களில் அதை ஆதரிக்கவும் செய்கிறது. காதல்வயப்பட்ட இருவர் உடலுறவு கொள்வது இயல்பானதே என்பதைப் போல டிவியிலும் சினிமாவிலும் சித்தரிக்கப்படுகிறது.

ஆனால், கடவுளைப் பிரியப்படுத்த விரும்புவோர் வழிநடத்துதலுக்காக இந்த உலகத்திடம் சார்ந்திருப்பதில்லை. ஏனென்றால், இந்த உலகமானது அதன் அதிபதியான பிசாசின் சிந்தையையே வெளிக்காட்டுகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (1 யோவான் 5:19) அதோடு, தங்கள் உணர்ச்சிகளே தங்களைக் கட்டுப்படுத்தவும் அனுமதிப்பதில்லை. ஏனெனில், “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என்பதையும் அறிவார்கள். (எரேமியா 17:9) மாறாக, உண்மையிலேயே ஞானமுள்ளவர்கள் வழிநடத்துதலுக்காக படைப்பாளரையும் அவருடைய ஏவுதலால் எழுதப்பட்ட வார்த்தையையும் நாடுகிறார்கள்.​—நீதிமொழிகள் 3:5, 6; 2 தீமோத்தேயு 3:16.

உடலுறவு​—⁠கடவுள் தந்த பரிசு

“நன்மையான எந்த ஈவும் [அதாவது, பரிசு] பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” என்று யாக்கோபு 1:17 கூறுகிறது. அந்த அருமையான பரிசுகளில் ஒன்று, திருமண ஏற்பாட்டில் உடலுறவு. (ரூத் 1:9; 1 கொரிந்தியர் 7:2, 7) அது, சந்ததியைப் பிறப்பிக்க மனிதருக்கு உதவுகிறது. அதே சமயத்தில், கணவனும் மனைவியும் உடல்ரீதியாகவும் உணர்ச்சிரீதியாகவும் மிக நெருக்கமான உறவை அன்பான, ஆனந்தமான முறையில் அனுபவிக்கவும் உதவுகிறது. “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. . . . அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக” என்று பூர்வகால அரசனாகிய சாலொமோன் எழுதினார்.​—நீதிமொழிகள் 5:18, 19.

இயல்பாகவே, யெகோவா தாம் தரும் பரிசுகளிலிருந்து நாம் பயன்பெறவும் அவற்றை அனுபவிக்கவும் வேண்டுமென விரும்புகிறார். அதற்காகத்தான், நாம் கடைப்பிடிக்க வேண்டிய மிகச் சிறந்த சட்டங்களையும் நியமங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 19:7, 8) “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற”வர் யெகோவா தேவனே. (ஏசாயா 48:17) அன்பே உருவான நம் பரலோக தகப்பன், நமக்கு உண்மையிலேயே நன்மை தருகிற ஒன்றைக் கொடுக்காமல் வைத்திருப்பாரா?​—சங்கீதம் 34:10; 37:4; 84:11; 1 யோவான் 4:8.

திருமணத்திற்கு முன் உடலுறவு​—⁠அன்பற்றது

ஓர் ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும்போது அவர்கள் ‘ஒரே மாம்சம்’ போலாகிவிடுகிறார்கள். திருமணமாகாத இருவர் உடலுறவு கொள்ளும்போது அவர்களும் ‘ஒரே மாம்சமாகிறார்கள்’; ஆனால், அது கடவுளுடைய பார்வையில் அசுத்தமானது. அது வேசித்தனம் என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமா, அப்படிப்பட்ட உறவுகள் அன்பற்றவையும்கூட. a ஏன் அவ்வாறு சொல்கிறோம்?​—மாற்கு 10:7-9; 1 கொரிந்தியர் 6:9, 10, 16.

அதற்கு ஒரு காரணம், வேசித்தனம் என்பது எந்தவொரு உண்மையான ஒப்பந்தமும் செய்யாமல் கொள்ளும் உடலுறவு ஆகும். இது சுயமரியாதையைக் கெடுப்பதோடு, வியாதி, தேவையற்ற கர்ப்பம், உணர்ச்சிப்பூர்வ வலி போன்றவற்றையும் உண்டாக்குகிறது. எல்லாவற்றையும்விட, அது கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களை மீறுகிறது. ஆகவே, வேசித்தனம் என்பது அடுத்த நபரின் தற்கால மற்றும் எதிர்கால நலனிலும் சந்தோஷத்திலும் அவ்வளவாக அக்கறை இல்லாதிருப்பதை அல்லது அக்கறையே இல்லாதிருப்பதைக் காட்டுகிறது.

ஒரு கிறிஸ்தவர் வேசித்தனத்தில் ஈடுபடும்போது தன் சக வணக்கத்தாரான சகோதரனை அல்லது சகோதரியை வஞ்சிக்கிறார் அதாவது அவருடைய உரிமைகளை மீறுகிறார். (1 தெசலோனிக்கேயர் 4:3-6) உதாரணமாக, கடவுளை வணங்குவதாக கூறுவோர் மணத்துணை அல்லாத நபரோடு உடலுறவு கொள்ளும்போது கிறிஸ்தவ சபையின் சுத்தத்தைக் கெடுத்துப்போடுகிறார்கள். (எபிரெயர் 12:15, 16) அதுமட்டுமல்ல, யாரோடு வேசித்தனம் செய்கிறார்களோ அவர், ஒழுக்க ரீதியில் தன்னுடைய சுத்தமான நிலைநிற்கையை இழந்துபோகும்படிச் செய்கிறார்கள்; அவர் திருமணமாகாதவராக இருந்தால் ஒழுக்கமுள்ள, கற்புள்ள நபராக திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும் வாய்ப்பை இழந்துபோகச் செய்கிறார்கள். தங்கள் குடும்பத்தின் நற்பெயரையும் தங்களோடு உறவுகொண்ட நபருடைய குடும்பத்தாரின் நற்பெயரையும் கெடுத்துப் போடுகிறார்கள். கடைசியாக, அவர்கள் கடவுளையே அவமதிக்கிறார்கள்; அவருடைய நீதியுள்ள சட்டங்களையும் நியமங்களையும் மீறுவதன் மூலம் அவரை துக்கப்படுத்துகிறார்கள். (சங்கீதம் 78:40, 41) மனந்திரும்பாத நபர்கள் செய்யும் இப்படிப்பட்ட கெட்ட காரியங்களுக்காக யெகோவா ‘நீதியைச் சரிக்கட்டுவார்.’ (1 தெசலோனிக்கேயர் 4:6) ஆகவே, “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்று பைபிள் சொல்வதில் ஏதாவது ஆச்சரியம் இருக்கிறதா?​—1 கொரிந்தியர் 6:18.

நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா, அவரை மணந்துகொள்ள திட்டமிடுகிறீர்களா? அப்படியென்றால், காதலிக்கும் காலத்திலேயே பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை என்ற பலமான அஸ்திவாரத்தைப் போட ஏன் முயலக்கூடாது? இந்தக் கேள்விகளைச் சிந்தித்துப் பாருங்கள்: சுயக்கட்டுப்பாடு இல்லாத ஓர் ஆணை ஒரு பெண்ணால் எவ்வாறு முழுமையாக நம்ப முடியும்? தனது காதலுணர்ச்சிகளை திருப்தி செய்வதற்காக அல்லது ஓர் ஆணை மகிழ்விப்பதற்காக கடவுளுடைய சட்டத்தை மீறுகிற ஒரு பெண்ணை ஓர் ஆண் நேசித்து மரியாதை காட்டுவது அவ்வளவு சுலபமாக இருக்குமா?

கடவுளுடைய அன்பான ஒழுக்க நெறிகளை நிராகரிப்பவர்கள் தாங்கள் விதைப்பதையே அறுப்பார்கள் என்பதையும் நினைவில் வையுங்கள். (கலாத்தியர் 6:7) “வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:18; நீதிமொழிகள் 7:4-27) திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபட்ட இருவர் பின்னர் உண்மையிலேயே மனந்திரும்பி, கடவுளோடுள்ள உறவை சரிசெய்துகொள்ள ஊக்கமாக முயன்று, பரஸ்பர நம்பிக்கையை பலப்படுத்திக்கொண்டால் காலப்போக்கில் குற்றவுணர்வும் அவநம்பிக்கையும் மறைந்துவிடலாம். இருந்தாலும், அவர்களுடைய முந்தைய நடத்தை அழியாத வடுவை ஏற்படுத்திவிடும். இப்போது திருமணம் செய்திருக்கும் ஓர் இளம் தம்பதி தாங்கள் வேசித்தனத்தில் ஈடுபட்டதற்காக மனங்கசந்து வருந்துகிறார்கள். ‘எங்களுடைய வாழ்க்கையின் அஸ்திவாரமே அசுத்தமாக இருந்ததால்தான் எங்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வருகின்றனவா?’ என்ற கேள்வி சிலசமயங்களில் அந்தக் கணவனுடைய மனதைக் குடைகிறதாம்.

உண்மையான அன்பு​—⁠சுயநலமற்றது

உண்மையான அன்பிலும்கூட காதலுணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. என்றாலும் அது, “அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை [அதாவது, தன் விருப்பத்தையே] நாடாது.” (1 கொரிந்தியர் 13:4, 5) மாறாக, அது மற்றவரின் நலனிலும் நித்திய சந்தோஷத்திலும் அதிக அக்கறை காட்டும். இப்படிப்பட்ட அன்பு, ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் மதிக்க வழிநடத்தும். அதோடு, உடலுறவை கடவுள் கொடுத்த அதற்குரிய இடத்தில், அதாவது திருமண உறவில் மட்டுமே வைத்துக்கொள்ளத் தூண்டும்.​—எபிரெயர் 13:4.

நம்பிக்கையுணர்வும் பாதுகாப்புணர்வும், உண்மையான மகிழ்ச்சி பொங்கும் மண வாழ்க்கையை உருவாக்கும். அதிலும், பிள்ளைகள் பிறக்கும்போது இந்த உணர்ச்சிகள் அதிமுக்கியமானவை; ஏனெனில், பிள்ளைகள் அன்பான, நிலையான, பாதுகாப்பான சூழலில் வளர வேண்டும் என்பதே கடவுளுடைய நோக்கமாகும். (எபேசியர் 6:1-4) இரண்டு நபர்கள் திருமண பந்தத்தில் இணையும்போதுதான் உண்மையிலேயே தங்களை ஒருவருக்கொருவர் ஒப்படைத்துக்கொள்கிறார்கள். வாழ்நாள் முழுவதிலும், சுகத்திலும்சரி துக்கத்திலும்சரி, ஒருவரையொருவர் கவனித்து, ஆதரிக்க தங்கள் உள்ளத்தில் உறுதிசெய்து கொள்கிறார்கள். அநேக சமயங்களில், அந்த வாக்குறுதியை மற்றவர்கள் முன்னிலையிலும் சொல்கிறார்கள்.​—ரோமர் 7:2, 3.

கணவனும் மனைவியும் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் மத்தியிலுள்ள பந்தம் இன்னும் பலமடைகிறது. சந்தோஷமான மண வாழ்க்கையில் உடலுறவு பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் அதிக அர்த்தமுள்ளதாகவும் ஆகிறது. அதேசமயம், தம்பதிகள் உடலுறவு கொள்கையில் அது திருமண பந்தத்தின் புனிதத்தன்மையைக் குலைப்பதுமில்லை, மனசாட்சியை குறுகுறுக்க வைப்பதுமில்லை, சிருஷ்டிகருக்கு கீழ்ப்படியாமல் போகச் செய்வதுமில்லை.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதை கடவுள் எவ்வாறு கருதுகிறார்?​—⁠1 கொரிந்தியர் 6:9, 10.

◼ வேசித்தனம் ஏன் ஆபத்தானது?​—⁠1 கொரிந்தியர் 6:18.

◼ காதலர்கள் எவ்வாறு உண்மையான அன்பைக் காண்பிக்கலாம்?​—⁠1 கொரிந்தியர் 13:4, 5.

[அடிக்குறிப்பு]

a “வேசித்தனம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை, மணத்துணை அல்லாதவரோடு வைத்துக்கொள்ளும் எல்லாவித பாலின உறவுகளையும் குறிக்கிறது; அது வாய்வழி புணர்ச்சி உட்பட பாலுறுப்புகளை உபயோகிக்கும் எல்லாவித பழக்கங்களையும் உட்படுத்துகிறது.​—⁠யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட விழித்தெழு! ஆகஸ்ட் 8, 2004, பக்கம் 12-ஐயும், காவற்கோபுரம், பிப்ரவரி 15, 2004, பக்கம் 13-ஐயும் காண்க.