Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குவேக்கர்களின் “புனித பரிசோதனை”

குவேக்கர்களின் “புனித பரிசோதனை”

குவேக்கர்களின் “புனித பரிசோதனை”

மேற்கு இந்தியத் தீவிலுள்ள பார்படோஸிலிருந்து வந்த ஸ்வாலோ என்ற கப்பல் இன்றைய அமெரிக்க ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த மாஸசூஸெட்ஸிலுள்ள பாஸ்டன் துறைமுகத்தில் ஜூலை 1656-⁠ஆம் வருடம் நங்கூரம் பாய்ச்சி நின்றது. பயணிகளில் மேரி ஃபிஷரையும் ஆன் ஆஸ்டினையும் கப்பலிலேயே நிறுத்திவைக்கும்படி மாஸசூஸெட்ஸ் காலனியின் உதவி கவர்னரான ரிச்சர்ட் பெல்லிங்ஹாம் கட்டளையிட்டார். இவர்களிடமிருந்த உடமைகளில் 100 புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் “இழிவான, சர்ச்சுக்கு முரணான கடவுளுக்கு எதிரான கோட்பாடுகள்” இருந்ததாகச் சொல்லப்பட்டன.

அந்தப் புத்தகங்கள் சந்தைவெளியில் எரிக்கப்பட்டன. பிறகு அந்தப் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டார்கள்; பில்லிசூனியம் செய்பவர்களா என்று சோதனை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய சிறையின் ஜன்னல் மூடப்பட்டது; ஐந்து வாரங்களாக அவர்கள் இருளில் வைக்கப்பட்டார்கள். அவர்களிடம் துணிந்து பேசுபவர்களுக்கு ஐந்து பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டது. கடைசியில் மேரி ஃபிஷரும் ஆன் ஆஸ்டினும் பார்படோஸுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

“உங்கள் நாட்டைக் கைப்பற்ற வந்த பலம்வாய்ந்த எதிரி படையைப் பார்த்ததுபோல ஏன் அந்த இரண்டு பெண்களைப் பார்த்து மிரண்டு போனீர்கள்?” என்று அந்தச் சமயத்தில் வாழ்ந்த ஒரு வரலாற்றுப் பதிவாளர் நீதிபதிகளிடம் கேட்டார். “ஆபத்தானவர்கள்” என்று கருதப்பட்ட அந்த இரண்டு பெண்களும் வட அமெரிக்காவிற்கு வந்த முதல் குவேக்கர் மிஷனரிகள். யார் இந்த குவேக்கர்கள், அவர்கள் ஏன் அச்சுறுத்துபவர்களாகக் கருதப்பட்டார்கள்?

சொஸைட்டி ஆஃப் ஃபிரண்ட்ஸ்

குவேக்கர்கள் அல்லது ரிலிஜஸ் சொஸைட்டி ஆஃப் ஃபிரண்ட்ஸ் எனப்படுவோர் இங்கிலாந்தில் 17-⁠ம் நூற்றாண்டில் உருவானார்கள். இந்த ஃபிரண்ட்ஸ் சொஸைட்டியை ஸ்தாபித்தவர் ஜார்ஜ் ஃபாக்ஸ் (1624-91). இவர் லிஸ்டர்ஷயர் நகரில் பிறந்தார், இவருடைய தந்தை ஒரு நெசவாளி. ஃபாக்ஸ் அற்புதமான விதத்தில் ஒரு குரலைக் கேட்டார். அதன்பிறகு தன்னால் நேரடியாகவே கடவுளுடன் தொடர்புகொள்ள முடியுமென்றும் எந்த மனித மத்தியஸ்தரும் இல்லாமலே ஞானவொளி பெற முடியும் என்றும் நினைத்தார். “1652-⁠இல் சொஸைட்டி ஆஃப் ஃபிரண்ட்ஸ் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டு வருகிறது” என்று அமெரிக்க மக்களின் மத சரித்திரம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் கூறுகிறது.

ஃபிரண்ட்ஸ் எவ்வாறு குவேக்கர்களாக (அதாவது, நடுங்குபவர்களாக) ஆனார்கள்? அவர்கள், “தெய்வீக வெளிப்படுத்துதல் கிடைப்பதற்குச் சற்று முன் ஆவேசமாக குலுங்கி ஆடினார்கள்” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. “கடவுளின் எல்லையில்லா புனிதத்தன்மையையும் மாட்சிமையையும் கருதி அவர்கள் அஞ்சி நடுங்கினார்கள்” என்று இன்னொரு புத்தகம் கூறுகிறது. மத உண்மையைக் கண்டுபிடித்து பூர்வ கிறிஸ்தவத்திற்குப் புத்துயிரளிக்க வேண்டும் என்பதே இந்தக் குவேக்கர்களின் குறிக்கோளாக இருந்தது.

வழிநடத்துதலுக்காக, பைபிள் தீர்க்கதரிசிகளையும் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களையும் பரிசுத்த ஆவியையும் ஆன்மீக உண்மையின் “உள்ளொளி”யையும் அல்லது “குரலை”யும் நாடியதாக உரிமை பாராட்டினார்கள். எனவே, அவர்களுடைய மதக் கூட்டங்களில் ஒவ்வொருவரும் கடவுளுடைய வழிநடத்துதலுக்காக காத்திருந்ததால் அவர்களுடைய கூட்டம் அமைதியாகவே இருந்தது. தெய்வீக செய்தி பெறும் நபர்கள் பேசுவார்கள். a

குவேக்கர்கள் நீதியையும், இணங்கிப்போகா நேர்மையையும் கடைப்பிடித்தார்கள், எளிமையாகவும் வன்முறையில் ஈடுபடாமலும் வாழ்ந்தார்கள். பெண்கள் உட்பட அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஊழியத்தில் ஈடுபட வேண்டுமென்று கருதினார்கள். ஸ்தாபிக்கப்பட்ட மதங்களை அவர்கள் எதிர்த்தார்கள்; சர்ச்சுகளில் பொதுவாக நடத்தப்படும் பகட்டான பூசைகளையும் தவிர்த்தார்கள்; அதுமட்டுமின்றி, மத போதகர்களால் அல்ல உள்ளொளியினாலேயே வழிநடத்தப்படுவதாகவும் சொல்லிக்கொண்டார்கள். எனவே, குவேக்கர்களைக் கண்டு மக்கள் நடுங்கினார்கள், அவர்களைச் சந்தேகித்தார்கள். எல்லாவற்றையும்விட மோசமானது என்னவென்றால், ஊழியத்தில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டதைப் பார்த்து பொதுமக்கள் கொதித்தெழுந்து அவர்களைத் தாக்கினார்கள், அதோடு, அதிகாரிகளும் அவர்களை எதிர்த்தார்கள்.

இங்கிலாந்தில், குவேக்கர்கள் துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நியூ இங்கிலாந்திலிருந்து அவர்கள் துரத்தப்பட்டார்கள், ஏன், கொலையும் செய்யப்பட்டார்கள். பார்க்கப்போனால், 1659-லிருந்து 1661-⁠க்குள் மேரி டயர், வில்லியம் லெட்ரா, வில்லியம் ராபின்ஸன், மார்மட்யூக் ஸ்டீவன்ஸன் ஆகிய மிஷனரிகள் பாஸ்டன் நகரில் தூக்கிலிடப்பட்டார்கள். மற்ற மிஷனரிகள் விலங்கிடப்பட்டார்கள், சூடுபோடப்பட்டார்கள், சவுக்கடியும் கொடுக்கப்பட்டார்கள். சிலருடைய காதுகள் வெட்டப்பட்டன. வில்லியம் ப்ரென்ட் என்பவருக்கு முதுகில் 117 சவுக்கடிகள் விழுந்தன, அதுவும், தார் பூசப்பட்ட சவுக்கால். இப்படிப்பட்ட கொடுமைகள் மத்தியிலும், குவேக்கர்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தார்கள்.

வில்லியம் பென்னும் அவருடைய ‘புனித பரிசோதனையும்’

வட அமெரிக்காவில் வாழும் குவேக்கர்களின் வாழ்க்கையில் 1681-⁠ஆம் வருடத்திலிருந்து பிரமிக்கவைக்கும் திருப்பங்கள் ஏற்பட்டன. சொஸைட்டி ஆஃப் ஃபிரண்ட்ஸில் சேர்ந்துகொண்ட வில்லியம் பென் (1644-1718) என்ற இளம் ஆங்கிலேயர், குவேக்கர்களின் நிர்வாகத்தின் கீழும் அவர்களுடைய கொள்கைகளின் அடிப்படையிலும் ஒரு காலனியை உருவாக்கினார். அது ஆட்சிக்கலையில் “புனித பரிசோதனை” என்று அழைக்கப்பட்டது. பிரிட்டன் நாட்டு கப்பற்படைத் தலைவரின் மகனான வில்லியம் பென் போரொழிப்புக் கொள்கையை ஆதரித்தார்; அவர் பிரசங்கித்ததாலும், தன் கருத்துகளை எழுத்தில் வெளியிட்டதாலும் சிறையிலடைக்கப்பட்டார்.

வில்லியம் பென்னின் தந்தைக்கு இங்கிலாந்து நாட்டின் அரசர் சார்ல்ஸ் கடன்பட்டிருந்ததால், வட அமெரிக்காவில் ஒரு பெரிய நிலத்தை பென்னிற்கு அளித்தார். அரசரிடமிருந்து கிடைத்த பத்திரம், இளைஞரான வில்லியம் பென்னுக்கு புதிய காலனியின் மீது கிட்டத்தட்ட முழு அதிகாரத்தையும் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். அந்த காலனிக்கு, கப்பற்படைத் தலைவரான பென்னின் நினைவாக, “பென்னின் காடுகள்” என்ற அர்த்தத்தில் பென்ஸில்வேனியா என்று பெயர் சூட்டப்பட்டது. அங்கு எல்லா மதத்தினருக்கும் மத சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த காலனி உருவாக்கப்பட்டது.

அந்தப் புதிய காலனியில் வசித்துவந்த சில ஐரோப்பியர்களின் ஆதரவை பெறவேண்டியதோடு பூர்வ அமெரிக்கர்களிடமிருந்து நிலத்தை வாங்கவும் வேண்டியிருந்தது. அதனால் பென், முதலில் தன் அத்தை மகன், வில்லியம் மார்கமை தன் பிரதிநிதியாக அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்தார். 1682-⁠இல் டிலாவர் ஆற்றில் பயணித்து முதன்முறையாக பென் தன் காலனியைப் பார்க்கச் சென்றார். அங்கிருந்த பூர்வ அமெரிக்கர்களுடன் ஷாக்காமாக்ஸோன் என்ற இடத்தில் (இப்போது கென்ஸிங்கடன், பிலடெல்ஃபியாவின் ஒரு பகுதி) நியாயமான ஓர் ஒப்பந்தம் செய்தார். ஷாக்காமாக்ஸோனிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் இன்னொரு காலனியை உருவாக்கி அதற்கு பிலடெல்ஃபியா என்று பெயரிட்டார். “சகோதர சிநேகம்” என்ற பொருளை உடைய அந்தக் காலனி விரைவாக முன்னேறியது.

பென், இங்கிலாந்திற்கு திரும்பிய பிறகு அந்தப் புதிய காலனியை விளம்பரப்படுத்தி, அங்கு குடிமாறிப் போகும்படி மக்களை உற்சாகப்படுத்தினார். அங்கிருந்த அருமையான நிலங்கள், காடுகள், மனதைக்கொள்ளை கொள்ளும் ஆறு, காட்டு மிருகங்கள், அவற்றின் கம்பளித்தோல்கள் ஆகியவற்றைப் பற்றி விவரித்து எழுதினார். புதிய அரசாங்கம் மத சகிப்புத்தன்மையை முன்னேற்றுவித்து சமாதானத்தைக் காக்கும் என்பதாகவும் உறுதியளித்தார். வியாபாரிகள், ஏழைகள், நல்லதோர் அரசாங்கம் உருவாக உதவி புரியும் இலட்சியவாதிகள் என எல்லாருமே அந்தக் காலனியில் கால்பதிக்க வரவேற்கப்பட்டார்கள்.

ஐரோப்பாவின் சமூக மற்றும் அரசியல் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை, இங்கிலாந்திலும் வட அயர்லாந்திலும் இருந்த குவேக்கர்களை கவர்ந்திழுத்தது. மெனனைட்டுகளும் அவர்களைப்போன்ற தொகுதிகளும் ஐரோப்பாவிலுள்ள ரைன் ஆற்று பகுதியிலிருந்து வந்து குடியேறினார்கள். அங்கு முதலில் குடியேறியவர்களில் குவேக்கர்களே அதிகம். காலனியின் வெற்றிகரமான ஆரம்பத்தைக் குறித்து 1683-⁠ல் பென் இவ்வாறு எழுதினார்: “நடைபெற்ற இரண்டு பொதுப் பேரவைகளில் . . . எழுபது சட்டங்களாவது விதிக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்றுக்கும் எதிர்ப்புக்குரல் எழும்பவில்லை.” ஆனால், நிலைமை இப்படியே இருந்துவிடவில்லை.

புனித பரிசோதனை படுத்துவிட்டது

பென் காலனியின் சட்டங்கள், அங்கிருந்தவர்கள் தங்களுக்கு விருப்பமானதைப் பின்பற்ற சுதந்திரமளித்தன. எனவே, சட்ட ஒழுங்கைக் காப்பதற்காக வன்முறை அவசியமென்று கருதப்பட்டபோது குவேக்கர்களின் போரொழிப்புக் கொள்கை ஒரு சவாலை முன்வைத்தது, காலப்போக்கில் அக்கொள்கையினால் பல பிரச்சினைகள் தலைதூக்கின. “அக்கம்பக்கத்தாரை எதிர்த்து நிற்கவேண்டிய சமயம் நேரிட்டால்” அவர்களுக்கு எதிராக சண்டையிடுவதற்கு குவேக்கர் அல்லாத அதிகாரிகளை பென் நியமித்தார். ஆரம்பத்தில், இப்படிச் செய்ததன் மூலம் பிரச்சினையை சமாளித்துவிட்டார். 1689-⁠இல் பிரான்சுடன் போர் தொடுக்க வேண்டிய சாத்தியம் இருந்ததால் குவேக்கர்களின் கொள்கைக்கு அது இன்னொரு பிரச்சினையாக இருந்தது.

போதாக்குறைக்கு, இன்னொரு பிரச்சினையும் தலைதூக்கியது. புதிதாகக் குடியேறியவர்களில் குவேக்கர்கள் அல்லாத பலர் அமெரிக்க பழங்குடியினரிடமிருந்து நிலத்தை அபகரித்துக் கொண்டார்கள். இப்படியாக குவேக்கர்களின் எண்ணிக்கை குறைய குறைய அங்கிருந்த அமெரிக்க பழங்குடியினரோடு பகைமை அதிகரித்துக்கொண்டே சென்றது.

1756-⁠இல் டலவார், ஷானி ஆகிய அமெரிக்க இந்திய பழங்குடியினர் மீது கவர்னரும் சட்ட மன்றமும் போர் அறிவிப்பு செய்தபோது குவேக்கர்களின் அரசியல் அதிகாரத்திற்கு இதுவே கடைசி அடியாக இருந்தது. குவேக்கர்கள் அரசியலிலிருந்து விலகி, தங்கள் ஆட்சியை முடித்துக்கொண்டார்கள். ஆக, சுமார் 75 வருடங்களுக்குப் பிறகு, ஆட்சிக்கலையில் வில்லியம் பென் முயன்றுபார்த்த “புனித பரிசோதனை” முடிவுக்கு வந்தது.

காலப்போக்கில், குவேக்கர்களின் பொருளாதார செழுமையால் அவர்களுடைய மதப்பற்றும் குறைய ஆரம்பித்தது. அதைக் குறித்து குவேக்கர்களில் ஒருவரான சாம்யெல் ஃபாதர்கில் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “தங்களுடைய எண்ணமும் சிந்தனையும் உலகத்திடம் திரும்பிவிட்டதால், [குவேக்கர் குடியேறிகள்] தாங்களே மறந்துவிட்ட சட்டங்களை தங்கள் சந்ததிக்கு கற்பிக்க முடியவில்லை.” நாளடைவில் குவேக்கர்களுக்குள்ளேயே பிரிவுகள் ஏற்பட்டன.

வில்லியம் பென்னுக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் உயர்ந்த நோக்கங்கள் இருந்திருக்கலாம், தற்காலிக வெற்றியும் பெற்றிருக்கலாம். என்றாலும், தாமும் தமது சீஷர்களும் ‘உலகத்தார் அல்ல’ என்று இயேசு சொன்னதை குவேக்கர்கள் சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லை அல்லது புரிந்தும் ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 17:16) ஆக, எந்தவொரு அமைப்பும் நல்ல காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டாலும் மதத்துடன் இவ்வுலக அரசியலை இணைக்க முயன்றால் அதற்கு கடவுளுடைய ஆசீர்வாதமோ அவருடைய மகனின் ஆசீர்வாதமோ இருக்காது. (யாக்கோபு 4:4; 1 யோவான் 5:19) ஆகவே, அப்படிப்பட்ட எந்த அமைப்பும் நிலைக்காது.​—சங்கீதம் 127:1, 2.

[அடிக்குறிப்புகள்]

a இப்போதெல்லாம், ஒழுங்கான முறையில் ஆராதனை நடத்துவதற்காக அநேக குவேக்கர் சர்ச்சுகளில் சம்பளம் தரப்படுகிற ஓர் ஊழியர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

[பக்கம் 10-ன் படக்குறிப்பு]

1800-களில், பிலடெல்ஃபியா நகரில் குவேக்கர்களின் ஒரு கூட்டம்

[பக்கம் 10-ன் படக்குறிப்பு]

இரண்டு படங்களும்: © North Wind Picture Archives

[பக்கம் 11-ன் படக்குறிப்பு]

கப்பல்கள்: © North Wind Picture Archives; treaty: Brown Brothers

[பக்கம் 11-ன் படக்குறிப்பு]

[பக்கம் 11-ன் படக்குறிப்பு]

குவேக்கரான மேரி டயர், மாஸசூஸெட்ஸ் பே காலனியில் மரண தண்டனைக் கொடுக்கப்பட அழைத்துச் செல்லப்படுகிறார்

[பக்கம் 11-ன் படக்குறிப்பு]

[பக்கம் 11-ன் படக்குறிப்பு]

1600-களில் குவேக்கர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறும் காட்சி

[பக்கம் 11-ன் படக்குறிப்பு]

[பக்கம் 11-ன் படக்குறிப்பு]

1682-⁠இல் வில்லியம் பென், பழங்குடி அமெரிக்கர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்கிறார்

[பக்கம் 12-ன் படக்குறிப்பு]

“என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல”

யோவான் 18:36-⁠இல் உள்ள இந்த வார்த்தைகளை இயேசு ஏன் கூறினார்? பதிலைத் தெரிந்துகொள்ள கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இயேசுவினுடைய போதனையின் மையக்கருவான கடவுளுடைய ராஜ்யம் என்பது இயேசுவின் கரங்களிலுள்ள ஓர் உலக அரசாங்கத்தையே குறிக்கிறது. (ஏசாயா 9:6, 7; லூக்கா 4:43) இந்த அரசாங்கம் மனித ஆட்சிகள் மூலம் இயங்குவதற்குப் பதிலாக அவை எல்லாவற்றையும் துடைத்தழித்துவிட்டு அதுவே முழு பூமியையும் அரசாளும். (தானியேல் 2:44; 7:13, 14) இதைத்தான் இயேசு தன் மாதிரி ஜெபத்தில் குறிப்பிட்டார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப் படுவதாக.” (மத்தேயு 6:9, 10) இந்த அரசாங்கத்தின் கீழ்படிதலுள்ள குடிமக்கள் அருமையான வாழ்க்கையை​—⁠வில்லியம் பென் போன்ற நேர்மையான ஆட்களாலும் கொண்டுவரவே முடியாத அருமையான வாழ்க்கையை​—⁠அனுபவிப்பார்கள். அவர்கள், சமாதானமான பூங்காவன பரதீஸில் பூரண சுகத்தையும் நித்திய வாழ்வையும் பெற்று மகிழ்வார்கள்.​—⁠லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3, 4.