Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மரணப் பள்ளத்தாக்கில் உயிரினங்கள்

மரணப் பள்ளத்தாக்கில் உயிரினங்கள்

மரணப் பள்ளத்தாக்கில் உயிரினங்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமென்டோ பள்ளத்தாக்கிற்கு அருகே தங்கம் இருப்பது 1848-⁠இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வருடத்திற்குள் சுமார் 80,000 பேர் சீக்கிரத்தில் பணக்காரர்களாக ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையோடு அதிர்ஷ்டம் தேடி கலிபோர்னியாவில் அலைமோதினார்கள். சுமார் 100 வேகன் வண்டிகள் சால்ட் லேக் சிட்டியிலிருந்து மேற்கு நோக்கி புறப்பட்டன. அவர்களில் ஒரு தொகுதியினர் இன்று மரணப் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பகுதிக்குள் 1849-⁠ஆம் வருடம் டிசம்பர் 25 அன்று நுழைந்தார்கள். கலிபோர்னியா-நவாடா எல்லைக்கு அருகில் இருந்த இந்தப் பள்ளத்தாக்கு வழியாகச் சென்றால் சாக்ரமென்டோவை சீக்கிரம் அடைந்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.

அவர்கள் சென்ற அந்தச் சமயத்தில் பள்ளத்தாக்கு குளுகுளுவென இருந்தது. ஆனால் நிலப்பரப்புதான் படுபயங்கரமாக இருந்தது. அவர்கள் சிறிய சிறிய தொகுதிகளாகப் பிரிந்து வெவ்வேறு பக்கமாகச் சென்றார்கள். பெண்களும் பிள்ளைகளும் உட்பட ஒரு தொகுதி பள்ளத்தாக்கிலிருந்து மலையேறி மேற்குப் பக்கமாகச் செல்ல முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சி வெற்றிபெறவில்லை. போதுமான உணவு இல்லாததால் மிகச் சோர்வாக இருந்த அவர்கள் இன்று ஃபர்னஸ் க்ரீக் என்று அழைக்கப்படுகிற இடத்திற்கு அருகேயுள்ள நீரூற்றுக்குப் பக்கத்தில் முகாமிட்டார்கள். அங்கிருந்து பெனட்டின் கிணறு என்று பிற்பாடு அழைக்கப்பட்ட கிணற்றிற்கு வந்து சேர்ந்தார்கள். அந்த இடத்திலிருந்து 20 வயதுள்ள இரண்டு பேர், வில்லியம் மான்லியும் ஜான் ராஜர்ஸும் உதவி தேடிச் சென்றார்கள், மற்றவர்களோ அங்கேயே இருந்துவிட்டார்கள்.

ஒரு சில நாட்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை அடைந்துவிடலாம் என மான்லியும் ராஜர்ஸும் நினைத்தார்கள். ஆனால், அந்நகரம் 300 கிலோமீட்டர் தள்ளி தென்மேற்கில் இருக்கிறது என்பதை அவர்கள் அப்போது அறியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வார நடைப்பயணத்திற்குப் பிறகு, நகரத்தின் வடக்கிலுள்ள சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கை வந்தடைந்தார்கள். அங்கு அவர்கள் உணவையும் தேவையான மற்ற பொருள்களையும் பெற்றுக்கொண்டு முகாமிட்டிருந்த இடத்திற்கு உடனடியாக திரும்பினார்கள்.

அவர்கள் 25 நாட்களுக்குப் பிறகு முகாமிற்கு வந்தபோது அங்கு ஒருவரையும் காணவில்லை. மான்லி, துப்பாக்கியால் மேலே நோக்கிச் சுட்டபோது வேகன் வண்டியின் அடியிலிருந்து ஒருவன் எழுந்து வெளியே வந்தான். அவன் “தன் இரு கைகளையும் உயர்த்தி ‘பசங்க வந்துட்டாங்க, பசங்க வந்துட்டாங்க!’ என்று சந்தோஷத்தில் கத்தினான்” என்று மான்லி பிறகு எழுதினார். மற்றவர்களும் எழுந்து வெளியே வந்தார்கள். உணர்ச்சி மேலிட்டு என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்துப்போனார்கள். மான்லி, ராஜர்ஸ் புண்ணியத்தில் முகாமில் இருந்த அனைவரும் பிழைத்தார்கள், ஒருவனைத் தவிர. காரணம், அவன் பள்ளத்தாக்கிலிருந்து தனியாகவே வெளியே சென்றிருந்தான். முகாமிலிருந்த இந்தப் பயணிகளின் பேரணி பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியபோது ஒரு பெண், பின்னால் திரும்பி ‘போய்வருகிறோம், மரணப் பள்ளத்தாக்கே!’ என்று கூறினதாகச் சொல்லப்படுகிறது. அதுவே அதன் பெயராகிவிட்டது.

தாளமுடியாத தட்பவெப்பம்

225 கிலோமீட்டர் நீளமும், 8 முதல் 24 கிலோமீட்டர் அகலமும் உடைய இந்த மரணப் பள்ளத்தாக்கு வட அமெரிக்காவிலேயே மிகவும் வறண்ட, தாழ்வான, வெப்பமான இடம். ஃபர்னஸ் க்ரீக்கில், அங்குள்ள காற்றின் வெப்பநிலை 57 டிகிரி செல்சியஸ், நிலத்தின் வெப்பநிலையோ 94 டிகிரி செல்சியஸ் வரை எட்டியது. அதாவது, கடல் மட்டத்திலுள்ள நீரின் கொதி நிலையைவிட 6 டிகிரி செல்சியஸ் குறைவு! a

வருடத்திற்கு 5 சென்டிமீட்டருக்கும் குறைவாகவே இங்கு மழை பெய்கிறது, சில வருடங்களில் அதுவும் பெய்வதில்லை. மேற்கு அரைக்கோளப் பகுதியிலேயே மிகவும் தாழ்வான மேடு, அதாவது கடல் மட்டத்திற்குக் கீழே 86 மீட்டர் அளவிலான மேடு இந்தப் பள்ளத்தாக்கில் காணப்படுகிறது. இது பாட்வாட்டரிலுள்ள உவர் நீர் குளத்தருகே உள்ளது. இங்கிருந்து வெறும் 140 கிலோமீட்டர் தூரத்தில் 4,418 மீட்டர் உயரமுள்ள மலை நிற்கிறது, இதன் பெயர் விட்னீ மலை. அலாஸ்காவில் உள்ளவற்றைத் தவிர்த்து ஐக்கிய மாகாணங்களிலேயே இதுதான் மிக உயரமானது.

1850-⁠க்குள் மரணப் பள்ளத்தாக்கில் உள்ள சால்ட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சிறிதளவு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தாதுக்களைத் தேடுபவர்கள் வெள்ளியையும், செம்பையும், காரீயத்தையும் அந்த இடத்தில் கண்டெடுத்தார்கள். பள்ளத்தாக்கு எங்கும் புல்ஃப்ராக், கிரீன்வாட்டர், ரையோலைட், ஸ்கிடூ என்ற ஆர்வமூட்டும் பெயர்களில் சுரங்க நகரங்கள் மிக வேகமாகப் பிறந்தன. ஆனால், இந்தத் தாதுக்கள் குறைந்தபோது வளமான இந்த நகரங்கள் வெறிச்சோடிப்போயின. என்றாலும் 1880-⁠இல், சோப்புகளையும் மற்ற பொருள்களையும் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் போராக்ஸ் எனும் வெள்ளைப் பளிங்கு கலவை இந்த மரணப் பள்ளத்தாக்கில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளத்தாக்கில் சுரங்கம் வெட்டப்பட்ட வருடங்களிலேயே அந்த வருடம்தான் வெகு லாபம் ஈட்டிய வருடம். போராக்ஸ் நிரப்பப்பட்ட 5 மீட்டர் நீளமான சக்கர வண்டிகள் ஜோடி ஜோடியாகப் பொருத்தப்பட்டன; அவற்றை 18 கோவேறு கழுதைகளும் 2 குதிரைகளும் 270 கிலோமீட்டர் தூரமுள்ள மோஹாவீ நகரத்திற்கு கஷ்டப்பட்டு இழுத்துச் சென்றன. 1888 வரை இவ்வாறு செய்யப்பட்டது. ஜூன் முதல் செப்டம்பர் வரையான மாதங்களில் சரக்குகள் எடுத்துச் செல்லப்படவில்லை. ஏனெனில், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும்கூட அவை வெப்பம் தாள முடியாத மாதங்களாக இருந்தன.

மரணப் பள்ளத்தாக்கு 1933-⁠இல் தேசிய நினைவுச் சின்னமாக்கப்பட்டது. அதன் எல்லைகள் கொஞ்சகொஞ்சமாக விரிவாக்கப்பட்டு, இப்போது 33 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது. 1994-⁠இல் இந்த இடம், ‘மரணப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா’வாக ஆனது. அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய தேசியப் பூங்காக்களில் இதுவும் ஒன்று.

பல உயிரினங்கள் நிறைந்த மரணப் பள்ளத்தாக்கு

மரணப் பள்ளத்தாக்கில் உயிர் ஏது என்று நீங்கள் நினைப்பது நியாயம்தான். என்றாலும், நூற்றுக்கணக்கான மிருக இனங்கள் இந்தப் பள்ளத்தாக்கிற்கு வருகை தருகின்றன, அல்லது அங்கேயே வாழுகின்றன. ஆனால், வெப்பத்தின் காரணமாக அநேகமானவை இரவுநேர விலங்குகளாகவே இருக்கின்றன. இங்குள்ள பாலூட்டிகளில் மிகப் பெரியது, பெரிய கொம்புகளுடைய காட்டுச் செம்மறியாடுகள். இவை அத்தி பூத்ததுபோல் எப்போதாவது ஒரு முறை அருகிலுள்ள மலைகளிலிருந்து இந்தப் பள்ளத்தாக்கைச் சந்திக்க வருகின்றன. இங்கு வந்துசெல்லும் மற்ற விலங்கினங்களில் பேட்ஜர்கள், வெளவால்கள், பாப் பூனைகள், நரி இனத்தைச் சேர்ந்த காயோட்டிகள், கிட் நரிகள், கங்காரு எலிகள், மலைச் சிங்கங்கள், முள்ளம்பன்றிகள், முயல்கள், ஸ்கங்குகள், காட்டு பர்ரோ கழுதைகள், பல்லிகள், பாம்புகள், பாலைவன ஆமைகள் ஆகியன உள்ளடங்கும். இந்தப் பள்ளத்தாக்கில் வசிக்கும் பறவைகளில் நாமக்கோழிகள், வல்லூறுகள், கொக்குகள், காடைகள், அண்டங்காக்கைகள், உள்ளான்கள், கழுகுகள், அதோடு நூற்றுக்கணக்கான வேறு பறவைகளும் உள்ளடங்கும்.

இந்த எல்லா உயிரினங்களிலும் கங்காரு எலிகள் மிகக் கடினமான சூழலிலும் நன்றாகத் தாக்குப்பிடிக்கின்றன. வாழ்நாள் முழுவதும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட குடிக்காமலேயே இந்த எலிகள் வாழ்ந்துவிடும்! “தேவையான தண்ணீரை அவை சாப்பிடும் காய்ந்த கொட்டைகளிலுள்ள மாவுச்சத்திலிருந்தும் கொழுப்புச் சத்திலிருந்துமே அவற்றின் உடல் பெற்றுக்கொள்கிறது” என்று ஒரு பத்திரிகை சொல்கிறது. மேலும் அவற்றின் சிறுநீரகங்களுக்கு, மனித சிறுநீரகங்களைவிட ஐந்து மடங்கு அதிக சிறுநீரை அடர்த்தியான நிலையில் வைத்துக்கொள்ளும் திறன் இருக்கிறது. பொந்துகளில் வாழ்கிற, கொறித்து தின்னும் இந்தச் சின்னஞ்சிறிய பிராணி இரவில் இரை தேடுவதால் பகலின் வெப்பத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறது.

இந்தப் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான தாவர வகைகளும் செழித்தோங்குகின்றன. சோஷோன்கள் என்றழைக்கப்படும் இந்தியர்கள் இந்தப் பள்ளத்தாக்கில் ஆயிரத்திற்கும் அதிகமான வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் உணவுக்காகவும் பண்டம் பாத்திரம் செய்வதற்குத் தேவைப்படும் கச்சாப் பொருள்களுக்காகவும் இங்கிருந்த செடிகளையே நம்பியிருந்தார்கள். எதைத் தேட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், மரணப் பள்ளத்தாக்கில் ஏராளமான உணவை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் என்கிறார்கள்.

பாலைவனம் பூத்துக் குலுங்குகையில்

எப்போதாவது ஒரு முறை, மரணப் பள்ளத்தாக்கு காட்டு புஷ்பங்களைச் சூடிக்கொண்டு ரம்யமாகக் காட்சியளிக்கிறது. இவை தக்க சமயம் வரும்வரை நிலத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் விதைகளிலிருந்து வளருகின்றன. சரியான அளவு மழைக்காகவும் ஏற்ற சீதோஷ்ணத்திற்காகவும், சில சமயங்களில் பல பத்தாண்டுகள்கூட இவை காத்திருக்கின்றன. “அநேக வருடங்களில் இங்கு பூக்களையே பார்க்க முடிவதில்லை” என்கிறார் தேசியப் பூங்கா நிறுவனத்தின் தாவரவியலாளர், டிம் க்ராஸான்ட்.

என்றாலும், இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை பெய்ததைக் காட்டிலும் 2004/2005 வருட மழைக்காலத்தில், மூன்று மடங்கு அதிகமாக மழை கொட்டியது. அதன் விளைவாக, 50-⁠க்கும் அதிகமான வகை காட்டு புஷ்பங்கள் பூத்துக்குலுங்கின. அவற்றில், லார்க்ஸ்பர், லைலாக், ஆர்கிட்டுகள், பாபீ, பிரிம்ரோஸ், சூரியகாந்தி, வெர்பெனா ஆகியவை அடங்கும். பூக்கடையிலிருந்து நறுமணம் வீசுவதுபோல் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் மணம் வீசியதென அங்குச் சென்ற ஒரு பெண் கூறினார். இந்த மலர்கள் வண்டுகளையும் மற்ற பூச்சிகளையும் வசீகரிக்கின்றன. எனவே, மரணப் பள்ளத்தாக்கு பூத்துக் குலுங்கும் சமயத்தில் குட்டிச் சிறகுகளை அடித்துப் பறக்கும் பூச்சிகளின் ரீங்காரமும் அங்கே கேட்கிறது.

மிகவும் சாதகமற்ற நிலைமைகளை உடைய இந்தப் பள்ளத்தாக்கை பார்ப்பதற்கு ஒருவேளை நீங்கள் திட்டமிட்டால் நல்ல நிலையிலுள்ள வாகனத்தையும், நிறைய தண்ணீரையும் எடுத்துச்செல்லுங்கள். வண்டுகள் பூக்களைச் சந்திக்க வரும் சமயத்திலேயே நீங்களும் வருவதானால் உங்கள் கேமராவை எடுத்துவர மறந்துவிடாதீர்கள். நீங்கள் வீடு திரும்புகையில் குடும்பத்தினரும் நண்பர்களும் மரணப் பள்ளத்தாக்கில் அத்தனை உயிரினங்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

[அடிக்குறிப்புகள்]

a உலகிலேயே மிக அதிக வெப்பநிலையை எட்டிய இடம் லிபியா. 1922-⁠ல் அதன் வெப்பநிலை 58.0 டிகிரி செல்சியஸாக இருந்தது. என்றாலும் கோடைக் காலங்களில், மரணப் பள்ளத்தாக்குதான் பூமியிலேயே மிக அதிக வெப்பமுள்ள இடமாகத் தெரிகிறது.

[பக்கம் 15-ன் படக்குறிப்பு]

வட அமெரிக்காவிலேயே மிகவும் வறண்ட, தாழ்வான, வெப்பமான இடம்

[பக்கம் 14-ன் படக்குறிப்பு]

அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்

[பக்கம் 14-ன் படக்குறிப்பு]

மரணப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா

[பக்கம் 14-ன் படக்குறிப்பு]

கலிபோர்னியா

[பக்கம் 15-ன் படக்குறிப்பு]

கோவேறு கழுதைகள்: Courtesy of The Bancroft Library/University of California, Berkeley

[பக்கம் 16-ன் படக்குறிப்பு]

சிறு கழுதை வகை: ©Joseph C. Dovala/age fotostock; மேலேயுள்ள வண்ணக்காட்சி: © Neil Mishalov​—⁠www.mishalov.com; பூக்கள்: Photo by David McNew/Getty Images

[பக்கம் 17-ன் படக்குறிப்பு]

மேலேயுள்ள மீன்: © Neil Mishalov​—⁠www.mishalov.com; கீழேயுள்ள மீன்: Donald W. Sada, Desert Research Institute

[பக்கம் 17-ன் படக்குறிப்பு]

பாலைவனத்தில் மீன்!

வியப்பூட்டும் பாலைவன பப் மீன் (desert pupfish) என்ற ஒரு சிறிய மீன் வகையைச் சேர்ந்த நான்கு இனங்கள் மரணப் பள்ளத்தாக்கில் உயிர்வாழ்கின்றன. குளிர் காலத்தில், 6 சென்டிமீட்டர் நீளமுள்ள இந்த வெள்ளி நிற மீன்கள் ஓடைகள் மற்றும் குட்டைகளின் சேறுநிறைந்த அடிப்பகுதியில் செயலற்று கிடக்கின்றன. இளவேனிற் காலத்தில் சூரிய வெப்பத்தால் தண்ணீர் வெதுவெதுப்பாகையில் இவை சுறுசுறுப்பாகி இனப்பெருக்கம் செய்கின்றன. அந்தச் சமயங்களில் ஆண் மீன், தன் நிறத்தை பளிச்சென்ற நீல நிறத்திற்கு மாற்றிக்கொண்டு அதனுடைய பகுதிக்கு வேறு ஆண் மீன்கள் வராதபடி கவனமாகப் பாதுகாக்கிறது. ஆனால், கோடைக்காலத்தில் சூரியனின் சீற்றத்தால் பெரும்பாலான தண்ணீர் சீக்கிரம் வற்றிவிடுகிறது, அதனால் ஏகப்பட்ட பப் மீன்கள் இறந்துவிடுகின்றன. அதையும் தாக்குப்பிடித்து உயிரோடிருக்கிற மீன்கள் மிகவும் உப்புக் கரிக்கும் தண்ணீரில் வாழ வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, தண்ணீர் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடைந்துவிடலாம்.