Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முதல் நூற்றாண்டில் மக்களின் பொழுதுபோக்கு

முதல் நூற்றாண்டில் மக்களின் பொழுதுபோக்கு

முதல் நூற்றாண்டில் மக்களின் பொழுதுபோக்கு

தெற்கு இத்தாலியில், அருகருகே இருந்த இரு நகரங்களிலிருந்து வந்த விளையாட்டு ரசிகர்களுக்கிடையே பயங்கர கலவரம், எண்ணற்றோர் படுகாயம், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பலி. இந்த அவல சம்பவத்தினால், அந்த விளையாட்டு அரங்கத்தை பத்து வருடங்களுக்கு இழுத்துமூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டார்கள்.

இன்றைய செய்தித்தாள்களில் இதுபோன்ற கலவரச் செய்திகளைக் காண்பது சகஜம். ஆனால் இந்தக் குறிப்பிட்ட சம்பவம் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்னால் பேரரசன் நீரோவின் ஆட்சிக்காலத்தில் நடந்தது. பாம்ப்பேயிலுள்ள விளையாட்டு அரங்கத்தில் வாளேந்தி சண்டையிடும் ஒரு பந்தயத்தின்போது பாம்ப்பே நகர மக்கள் பக்கத்து நகரமான நியுகெரியாவிலிருந்து வந்திருந்த விளையாட்டு ரசிகர்களுடன் சண்டையிட்டதுதான் இச்சம்பவம். இதுபற்றி ரோம சரித்திராசிரியரான டாஸிடஸ் விளக்கியுள்ளார்.

முதல் நூற்றாண்டில் பொழுதுபோக்கு என்பது பெருந்திரளான மக்களைக் கவர்ந்தது. ரோம பேரரசின் முக்கிய நகரங்களில் அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், சர்க்கஸ் கொட்டகைகள் ஆகியவை இருந்தன; சில நகரங்களில் இம்மூன்றும் இருந்தன. ரோம உலகின் வரைபடம் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “போட்டிகள் பயங்கர ஆபத்தாகவும், நடுநடுங்க வைப்பதாகவும் . . . எப்போதும் இரத்தம் சிந்துவதாகவும் இருந்தன.” ஒவ்வொரு அணியின் தேரோட்டியும் வெவ்வேறான வண்ணங்களில் உடை உடுத்தியிருந்தார்; ஒவ்வொரு விளையாட்டு அணியும் அரசியலிலோ சமுதாயத்திலோ உள்ள குறிப்பிட்ட தொகுதி மக்களை பிரதிநிதித்துவம் செய்தது. ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணி அரங்கத்திற்குள் நுழைந்தபோது உணர்ச்சிப் பொங்க ஆரவாரம் செய்தனர். தேரோட்டிகளின் உருவப்படங்கள் மக்களின் வீடுகளை அலங்கரிக்குமளவுக்கு அவர்கள் மிகவும் பிரபலமானவர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஏராளமான பணமும் கொடுக்கப்பட்டது.

நகரங்களில் இரத்தம்கொட்டும் வாள்சண்டைகளும், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான சண்டைகளும் நடைபெற்றன; சிலசமயங்களில் மனிதர்கள் ஆயுதம் இல்லாமலே இதில் ஈடுபட்டனர். சரித்திர ஆசிரியரான வில் டூரன்ட் சொல்கிறபடி, “சில சமயங்களில் மரணதண்டனைக் குற்றவாளிகள் மிருகங்களைப் போல் தெரிவதற்காக அதுபோல் ஆடையணிவித்து மிருகங்களுக்கு இரையாகத் தூக்கியெறியப்பட்டனர்; இப்படிப்பட்ட சமயங்களுக்காகவே அந்த மிருகங்களை அகோரப் பசியோடு வைத்திருந்தனர்; மிருகங்களுக்கு இரையானோர் அணுஅணுவாக சித்திரவதைப்பட்டு செத்தார்கள்.”

இதுபோன்ற தேவபக்தியற்ற பொழுதுபோக்கை ரசித்தவர்கள் உண்மையில் ‘புத்தியில் அந்தகாரப்பட்டவர்களாயும்,’ ‘உணர்வில்லாதவர்களாயும்’ இருந்தார்கள். (எபேசியர் 4:17-19) இரண்டாம் நூற்றாண்டில், டெர்டுல்லியன் இவ்வாறு எழுதினார்: “சர்க்கஸில் வெளிப்பட்ட பைத்தியக்காரத்தனம், அரங்குகளில் காணப்பட்ட வெட்கங்கெட்டத்தனம், வட்டரங்குகளில் நடந்த அட்டூழியம் என எதுவுமே கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒருபோதும் சொல்லப்பட்டதுமில்லை, பார்க்கப்பட்டதுமில்லை, கேட்கப்பட்டதுமில்லை.” இன்றைய உண்மை கிறிஸ்தவர்களும்கூட வன்முறையைத் தவிர்க்க கவனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்; வன்முறையைப் பற்றி புத்தகங்கள், டிவி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என எதில் சித்தரித்துக்காட்டப்பட்டாலும் சரி, அத்தகைய பொழுதுபோக்கைத் தவிர்க்க கவனமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஏனெனில், “கொடுமையில் பிரியமுள்ளவனை” யெகோவா வெறுக்கிறார் என்பதை அவர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.​—சங்கீதம் 11:5.

[பக்கம் 30-ன் படம்]

வெற்றிபெற்ற தேரோட்டியின் சித்திரம்

[பக்கம் 30-ன் படம்]

ஒரு மனிதன் பெண் சிங்கத்துடன் சண்டையிடுவதைக் காண்பிக்கும் ஓவியம்

[பக்கம் 30-ன் படம்]

முதல் நூற்றாண்டு ரோம அரங்கம்

[படத்திற்கான நன்றி]

Ciudad de Mérida

[பக்கம் 30-ன் படங்களுக்கான நன்றி]

மேலேயும் கீழே இடப்புறமும்: Museo Nacional de Arte Romano, Mérida