Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர் தரும் வாழ்க்கை

அவர் தரும் வாழ்க்கை

அவர் தரும் வாழ்க்கை

“இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்.” மனதைத் தூண்டும் இவ்வாக்குறுதி இயேசுவின் அரசாட்சியைப் பற்றியது; இதுபோன்ற வாக்குறுதிகள் பைபிளின் முக்கிய அம்சமாக திகழ்கின்றன. மற்றொரு வாக்குறுதியைக் கவனியுங்கள்: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். . . . அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”​—ஏசாயா 32:1; சங்கீதம் 72:12-14.

மனிதகுலத்திற்கு இத்தகைய நீதிநேர்மையான ஆட்சி அவசியம் என்பதை எவரேனும் மறுக்க முடியுமா? கடவுளுடைய ராஜ்யத்தை மனதில் வைத்து செயல்படும்படி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களை உந்துவித்தார். “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று ஜெபிக்கும்படி அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.​—மத்தேயு 6:9, 10.

கடவுளுடைய ராஜ்யம் அருகில் என்பதற்கான அத்தாட்சி

இந்த ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் விதமாக இந்த ராஜ்யம் எப்போது வரும் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? இயேசுவின் ஆரம்பகால சீஷர்களும் இதை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர்; எனவே, “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? [ஆட்சிபுரியும் அரசராக] உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று இயேசுவிடம் கேட்டனர். அதற்கு இயேசு, ‘ஜனத்துக்கு விரோதமாய் ஜனம் . . . எழும்பும்; பஞ்சங்களும், . . . பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்’ என்று பதிலளித்தார். அதோடு, “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என்றும்கூட எச்சரித்தார்.​—மத்தேயு 24:3-12.

மற்றொரு பைபிள் தீர்க்கதரிசனம் பின்வருமாறு சொல்கிறது: “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.”​—2 தீமோத்தேயு 3:1-5.

‘கடைசி நாட்களைப்’ பற்றிய இவ்விவரிப்பு நம் காலத்திற்கு துல்லியமாகப் பொருந்துகிறது என்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள். பின்வரும் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்கான காலம் இதுவே என்பதற்கு அத்தாட்சிகள் ஏராளம்: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”​—தானியேல் 2:⁠44.

இந்த உலகத்தின் முடிவை தப்பிப்பவர்களுடைய அமைதிக்கு இடையூறாக இருக்கும் எதையும் “சமாதானப் பிரபு”வின் ஆட்சி அகற்றிவிடும். (ஏசாயா 9:6) பைபிள் தீர்க்கதரிசனத்தில் இந்த வாக்குறுதியைப் பார்க்கிறோம்: “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.” (1 யோவான் 2:17) நம் முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்ததன் காரணமாக மனிதகுலம் இழந்துபோனவற்றை கடவுளுடைய விருப்பத்தின்படி வாழ்பவர்கள் இந்த உலக முடிவுக்குப் பிறகு அனுபவித்து மகிழ்வார்கள்.

ஆனந்தமான வாழ்க்கை​—⁠அருகில்!

“புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 19:28, பொது மொழிபெயர்ப்பு) ‘புதுப்படைப்பு’ என்றால் என்ன? “சகலமும் புதுப்பிக்கப்படும்போது” என்ற பதத்தை மற்றொரு மொழிபெயர்ப்பு பயன்படுத்துகிறது. (நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) இதற்கு இணையான மற்றொரு பைபிள் பதிவு இதை, “வரவிருக்கும் உலகம்” என அழைக்கிறது. (லூக்கா 18:30, NW) சமாதானப் பிரபுவாக இருக்கும்படி கடவுள் தமக்கு தந்திருக்கும் அதிகாரத்தை அச்சமயத்தில் பயன்படுத்தி தம்முடைய மீட்பின் கிரயபலியில் விசுவாசத்தை வைக்கும் அனைவருக்கும் இயேசு நித்திய ஜீவனை அளிப்பார்.​—யோவான் 5:⁠21.

ஆதாமையும் ஏவாளையும் பரதீஸில் வைத்தபோது அவர்கள் எத்தகைய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென கடவுள் விரும்பினாரோ அத்தகைய வாழ்க்கையை கடவுளுடைய புதிய உலகில் மக்கள் அனுபவிப்பர். பிள்ளைகளைப் பெற்று, ‘பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தும்படி’ கடவுள் அவர்களிடம் சொல்லியிருந்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். அதாவது, அவர்கள் முழு பூமியையுமே பரதீஸான ஏதேன் தோட்டத்தைப்போல ஆக்க வேண்டியிருந்தது! (ஆதியாகமம் 1:28) அதுபோலவே, புதுப்படைப்பின் நாளில், உலக முடிவைத் தப்பித்தவர்களாலும், அவர்களுடைய பிள்ளைகளாலும், உயிர்த்தெழுந்தவர்களாலும் இந்தப் பூமி நிறைந்திருக்கும். கடவுள் முதலில் நோக்கங்கொண்ட விதமாக, இந்தப் பூமியை பரதீஸாக்கும் வேலையில் அவர்கள் அனைவரும் பங்கு கொள்வார்கள்.

நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியில் மக்கள் அனுபவிக்கப் போகும் ஆசீர்வாதங்களைக் குறித்து பைபிள் குறிப்பிடுவதை கவனியுங்கள்.​—2 பேதுரு 3:⁠13.

இந்தப் பக்கங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகளை நம்புவது கடினமாக தோன்றலாம்; ஆனால் ‘வரவிருக்கும் உலகில்’ இவை நிச்சயம் நிறைவேறும். இந்த ஆசீர்வாதங்களை அனுபவிக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து இயேசு கடவுளிடம் ஜெபிக்கும்போது தெரிவித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) ஜீவனை அளிக்கும் இந்த அறிவைத் தாழ்மையோடு நாடுபவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்களாக!

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

“அவர் நாமம் . . . சமாதானப்பிரபு என்னப்படும். . . . அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”​—⁠ஏசாயா 9:​6, 7

[பக்கம் 89-ன் படங்கள்]

வீடும் வேலையும்​—⁠அனைவருக்கும்

“வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், . . . அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை.” ​—⁠ஏசாயா 65:21, 22.

ஏராளமான உணவு​—⁠எல்லாருக்கும்

“எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும்.” “வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.”​—⁠சங்கீதம் 67:6; 72:16, ஈஸி டு ரீட் வர்ஷன்.

உலக சமாதானம் மிருகங்களையும் தொற்றிக்கொள்ளும்

“அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; . . . ஒரு சிறுபையன் அவைகளை நடத்துவான்.” ​—⁠ஏசாயா 11:⁠6.

போருக்கு சமாதி, நிலைக்கும் அமைதி

“ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.”​—⁠ஏசாயா 2:4; 9:⁠7.

இறந்துபோன அன்புக்குரியவர்கள் உயிர்பெறுதல்

“காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது [இயேசுவின்] குரலைக் கேட்டு வெளியே வருவர்.”​—⁠யோவான் 5:28, 29, பொ.மொ.

வியாதிக்கும் மரணத்துக்கும் முற்றுப்புள்ளி

“வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” “இனி மரணமுமில்லை, . . . முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—⁠ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4.