Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவள் கற்றதை நேசித்தாள்

அவள் கற்றதை நேசித்தாள்

அவள் கற்றதை நேசித்தாள்

சமீபத்தில் ஒரு கடிதம் தற்செயலாக கண்டெடுக்கப்பட்டது; மே 2004-⁠ல் கேன்சரால் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்மணி அதை எழுதியிருந்தார். ஆனால் அந்தக் கடிதத்தை அவர் முடித்திருக்கவில்லை; ஒருவேளை, அவருடைய நிலைமை திடீரென்று அதிக மோசமாகியிருக்கலாம். நிறைவுபெறாத அந்தக் கடிதம், யாருக்கும் அனுப்பப்படவில்லை. எனினும், பிற்பாடு அதை வாசித்தவர்களின் கண்களை அது கலங்க வைத்தது; அதோடு, கடவுள்மீது அவர்களுக்கிருந்த விசுவாசத்தையும் பலப்படுத்தியது.

அந்தக் கடிதத்தை எழுதியவர் சூசன். தான் ஒரு டீனேஜராக இருந்தபோது அ.ஐ.மா., கனெடிகட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மூப்பருக்கு முதன்முதலாக ஃபோன் செய்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த இளம் பருவத்தில் எதிர்ப்பட்ட சூழ்நிலைகளை அதில் விவரித்திருந்தார். இந்த உருக்கமான கடிதம் கடந்த ஆண்டின் இறுதியில் அவருடைய அம்மாவிடம் கொடுக்கப்பட்டது; அதன் பிரதியை அவர் நியு யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார்.

1973-⁠ஆம் ஆண்டில் கனெடிகட்டிலுள்ள மூப்பருடைய ஃபோன் நம்பரை டெலிபோன் டைரக்டரியிலிருந்து கண்டுபிடித்ததாக சூசன் எழுதியிருந்தார். “எனக்கு அப்போது 14 வயது; அந்த வருடத்தில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் வாசித்ததை வைத்து, இதுதான் சத்தியம் என முடிவு செய்தேன். அதுவரை சாட்சிகளை நான் சந்தித்ததேயில்லை; அதனால் டெலிபோன் டைரக்டரியில் யெகோவாவின் சாட்சிகள் என்ற தலைப்பில் தேடினேன். அதில் என்னுடைய ஃபோன் நம்பரைப் போலவே முதல் மூன்று நம்பர்களைக் கொண்ட ஒரு ஃபோன் நம்பரைக் கண்டுபிடித்தேன். அந்த நம்பருக்கு நான் ஃபோன் செய்தபோது, சகோதரர் ஜென்ரிக் பேசினார்; நான் இதுவரை ஒரு யெகோவாவின் சாட்சியைக்கூட சந்தித்ததில்லை என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்.” a

வித்தியாசமான பிரச்சினை

பத்து வயதில் கனெடிகட்டிலுள்ள தன்னுடைய சித்தியின் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக சூசன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அங்கே கொஞ்ச நாட்கள் தங்குவதற்குத்தான் சென்றார்; ஆனால், சிறிது நாட்களுக்குப் பிறகு, சித்தியின் வீட்டிலேயே இருக்க விரும்புவதாக ப்ளோரிடாவில் தனியாக வசிக்கும் தன் அம்மாவிடம் சூசன் தெரிவித்தார். தன்னுடைய சூழ்நிலை, “ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் என அழைக்கப்பட்டதைப்போல, அதாவது, தன்னை சித்திரவதை செய்பவர்களிடம் ஒருவர் வளர்த்துக் கொள்ளும் ஒருவித நட்புறவைப்போல” இருந்தது என தன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். b அங்கே மிக மோசமாக நடத்தப்பட்டார்.

“என் சித்தியும் அவரோடு வாழ்ந்தவரும் எனக்கு இழைத்த கொடுமைகளுக்கு அளவே இல்லை; வெளியாட்களும் அவர்களுடைய வீட்டிற்கு அவ்வளவாக வரவில்லை. என் அம்மா தாராளமாக பணம் அனுப்பியபோதிலும்கூட, நான் பள்ளிக்கூடத்துக்கு சென்றபோது, நல்ல சாப்பாடோ, துணிமணியோ எனக்குக் கொடுக்கப்படவில்லை. ஒரே உள்ளாடைகளையே நான் திரும்பத் திரும்ப போட வேண்டியிருந்தது; ஆனால் என்னைவிட சற்றே சிறியவர்களாயிருந்த என் சித்தியின் இரண்டு பெண்பிள்ளைகளுக்கு கேட்டதெல்லாம் கிடைத்தது.” ஏற்கெனவே மோசமாக நடத்தும் தன் சித்திக்கு பைபிளைக் தான் கற்றுக்கொள்ள விரும்பியது தெரியவருகையில் அது பெரும் பிரச்சினையை கிளப்பும் என்று தான் எதிர்பார்த்ததற்கான காரணத்தைத் தெளிவாக்கவே சூசன் தன் கடிதத்தில் இதையெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

சூசன் பைபிளை எப்படிக் கற்றுக்கொண்டார்

சூசன் பின்வருமாறு எழுதினார்: “லாரா என்ற அனுபவமுள்ள கிறிஸ்தவ சகோதரியிடம் சகோதரர் ஜென்ரிக் என்னை அறிமுகப்படுத்தினார். நாங்கள் காசு கொடுத்து துணி துவைக்கும் இடத்தில் சந்தித்துக் கொண்டோம்; பைபிளைப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் லாரா நன்கு நிதானமாக பதிலளித்தார்.” அதுவரை தான் எந்தவொரு விஷயத்திலும் சொந்தமாக முடிவு எடுத்திருக்கவில்லை என்று சூசன் தெரிவிக்கிறார்; ஆனால் பைபிளைக் குறித்து கலந்துரையாடிய பிறகும், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் போன்ற பைபிள் சார்ந்த பிரசுரங்களை வாசித்த பிறகும் சொந்தமாக முடிவெடுக்க ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார்.

சூசன் இவ்வாறு தொடருகிறார்: “சாட்சிகளை நான் சந்தித்துப் பேசுவதாக ஒருநாள் வெள்ளிக்கிழமை இரவில் என் சித்தியிடம் சொன்னேன். இரவு முழுவதும் தூங்கவிடாமல் சமையலறையின் நடுவில் நிற்க வைத்துவிட்டார்கள். அதன் பிறகே, சாட்சியாக ஆகிவிடவேண்டுமென்று மனதுக்குள் உறுதிபூண்டேன்.”

அப்போதிலிருந்து சகோதரர் ஜென்ரிக் பைபிளை நன்கு புரிந்து கொள்வதற்கு சூசனுக்கு பிரசுரங்களைக் கொடுக்கத் துவங்கினார். சூசன் பின்வருமாறு எழுதினார்: “யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1974-⁠ல் நான் வாசித்தவை என் மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது. நாசிக்களின் பிடியிலிருந்த ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் சாட்சிகள் எப்படிப்பட்ட துன்புறுத்துதலை அனுபவித்தார்கள் என்பதை அது விவரித்தது. . . . பாடிப் பழகுவதற்காக ராஜ்ய பாடல்களை கேசட்டில் பதிவு செய்து தரும்படி அந்தச் சமயத்தில் சகோதரர் ஜென்ரிக்கிடம் கேட்டேன். ‘உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணிக் கொண்டிருங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட 1966-⁠ஆம் ஆண்டு பாட்டுப் புத்தகத்திலிருந்த 119 பாடல்களையும் ஒரே வருடத்தில் நன்கு பழகிக்கொண்டேன்.”

“அந்தச் சமயத்தில், சகோதரர் ஜென்ரிக் பைபிள் பேச்சுகளையும், நாடகங்களையும், மாநாட்டு நிகழ்ச்சிகளையும் கொண்ட கேசட்டுகளைத் தந்தார். 10-⁠ம் நம்பர் சாலையிலுள்ள டெலிபோன் கம்பத்திற்கு அருகில் அதை அவர் வைத்துவிடுவார்; அங்கேயிருந்து நான் அதை எடுத்துக் கொள்வேன். . . . அச்சமயத்தில் என் சூழ்நிலை எனக்குள் விரக்தியை ஏற்படுத்தியது. ஏனெனில், அதுவரை ஒரு கூட்டத்திற்குகூட சென்றிராதபோதிலும் என்னால் முடிந்தளவுக்கு முன்னேற்றம் செய்திருந்தேன். இனியும் இந்தப் போராட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தேன்.”

அடுத்த இரண்டு வருடங்கள் மிகவும் கடினமாக இருந்தது என்று சூசன் சொல்கிறார். அவருக்கு தெரிந்த இரண்டே இரண்டு சாட்சிகளுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டிருந்தார். ஆனால், “எல்லா பாடல்களையும் பழகியது மனதை நெருடத் தொடங்கியது” என்று தெரிவிக்கிறார். ஏன் அப்படி? “‘யாவின்வீரர் சுகவாழ்வு நாடாமல்’ போன்ற பாடல் வரிகள் என் மனதுக்குள் ரீங்காரமிடும். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய சித்திரவதை முகாமிலிருந்த ஒரு சாட்சியால் இந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டன என்பது எனக்குத் தெரியும்; அது என் மன உளைச்சலை இன்னும் அதிகப்படுத்தியது. கோழையைப்போல உணர்ந்தேன்; யெகோவா என்னை கைவிட்டுவிட்டார் என்றும் நினைத்தேன்.” c

ஒருவழியாக விடுதலை

“என்னுடைய 18-⁠ஆம் பிறந்தநாளில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் எங்களை ‘சந்திக்க வேண்டாம்’ என்று தெரிவித்திருந்த வீடுகளின் பட்டியலில் எங்கள் வீடும் இருந்ததால், பல வருடங்களாக சாட்சிகள் அங்கு வந்ததே கிடையாது. ஆனால், பக்கத்துச் சபையைச் சேர்ந்த ஒருவர் அன்றைக்கு பிரசங்கிப்பதற்காக எங்கள் வீட்டுக்கு வந்தார்; அந்தச் சமயம் பார்த்து, வீட்டில் யாரும் இல்லாததால் என்னால் அவரிடம் பேச முடிந்தது. சனிக்கிழமைகளில் வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன். யெகோவா என்னைக் கைவிடவில்லை என்பதற்கு இதை அத்தாட்சியாக கருதினேன். மீண்டும் சகோதரர் ஜென்ரிக்-கிற்கு ஃபோன் செய்தேன். நான் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டேன் என்றும் இது சம்பந்தமாக அவருடைய கருத்தை தெரிவிக்கும்படியும் கேட்டேன். கடைசியில், ஒருவழியாக என்னால் அங்கிருந்து வெளியேற முடிந்தது.”

ஏப்ரல் 1977-⁠ல் சூசன் வேறொரு இடத்திற்கு மாறிச் சென்றார். அவருடைய கடிதம் இவ்வாறு தொடர்கிறது: “அடுத்த வருடத்திலிருந்து எல்லா கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் போகத் துவங்கினேன்; அதோடு ஊழியத்திலும் கலந்துகொள்ளத் துவங்கினேன். என் அம்மாவோடு மீண்டும் தொடர்புகொண்டேன். இத்தனை வருடங்களாக நான் இந்தளவு கொடுமைப்படுத்தப்பட்டதை அவர் அறிந்திருக்கவில்லை. அதைக் கேட்டு அவர் மிகவும் மனமுடைந்துவிட்டார். உடனடியாக எனக்கு தேவையானதெல்லாம் வாங்கிக் கொடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அம்மா அலாஸ்காவிற்கு மாறிச் சென்றிருந்தார். பைபிள் சத்தியங்களின்மீது அவர் அதிகமாக ஆர்வம் காட்டியதால், 1978-⁠ல் அவருடன் இருப்பதற்காக நானும் அலாஸ்காவிற்குச் சென்றேன். அவர் பிற்பாடு ஒரு சாட்சியாக ஆனார், இன்றுவரை உண்மையாக நிலைத்திருக்கிறார்.

“நான் கூட்டங்களில் கலந்துகொள்ள துவங்கிய பிறகு, புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்திற்கு குழுவாக விஜயம் செய்ய சகோதரர் ஜென்ரிக் ஏற்பாடு செய்தார்; அந்தக் குழுவில் சேர்ந்துகொள்ள என்னையும் அழைத்தார். அந்தப் பயணம்தான் இதுவரை எனக்கு கிடைத்ததிலேயே அதிக பிரயோஜனமான பரிசாக இருந்தது; ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் யெகோவாவின் அமைப்பின்மீது மதிப்பையும் நன்றியுணர்வையும் வளர்த்துக்கொள்ள அது உதவியது. சரி, இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை. கடிதத்தை சீக்கிரத்தில் முடிக்கவேண்டும் என்பதால் விஷயங்களைச் சுருக்கிவிட்டேன்.”

மேலேயுள்ள கூற்றுகள், வரிகளுக்கு இடையே இடைவெளிவிடாமல் நெருக்கமாக எழுதப்பட்டிருந்த ஆறரைப் பக்க கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள் மட்டுமே. கடிதத்தின் முடிவில் சூசன் இவ்வாறு எழுதியிருந்தார்: “கடந்த மாதம் மருத்துவமனையிலிருந்தபோது, என்னுடைய நிலைமை மிகவும் மோசமடைந்தது; அதனால் சீக்கிரமே இறந்துவிடுவேன் என நினைத்தேன் . . . இன்னும் இரண்டு வாரங்களுக்கு நான் நன்றாக இருந்தால், சில காரியங்களை ஒழுங்குபடுத்திவிடுவேன் என்று யெகோவாவிடம் ஜெபம் பண்ணினேன். . . . நான் இன்னும் அதிக நாட்களுக்கு உயிரோடிருப்பேன் என்று தோணவில்லை; ஆனால், ஒன்றை மட்டும் அடித்துச் சொல்வேன். நான் சத்தியத்தில் இருந்த காலங்கள்தான் மிக அற்புதமான காலங்கள்; இதைவிட சிறந்த வாழ்க்கை ஒன்று இருக்கவே முடியாது!”

கடிதத்தின் முடிவில் வாழ்த்துக்களோ கையொப்பமோ இருக்கவில்லை; அது தபாலில் சேர்க்கப்படவுமில்லை. அதைக் கண்டெடுத்தவர்களுக்கு அதை யாரிடம் கொடுப்பது என்றும் தெரியவில்லை. அதனால்தான், முன்னர் குறிப்பிட்டபடி, கடைசியாக அந்தக் கடிதம் சூசனின் அம்மாவிற்கு அனுப்பப்பட்டது.

சூசனைப் பற்றிய கூடுதல் தகவல்கள்

ஏப்ரல் 14, 1979-⁠ல் சூசன் முழுக்காட்டுதல் பெற்ற பிறகு அவருடைய அம்மா ப்ளோரிடாவுக்குத் திரும்பிச் சென்றார். அலாஸ்காவிலுள்ள நார்த் போல் சபையிலுள்ளவர்களோடு நெருங்கிப் பழகிய காரணத்தால், சூசன் அங்கேயே தங்கிவிட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு பயனியராக, அதாவது முழுநேர ஊழியராக ஆனார். கடைசியில், அவரும் ப்ளோரிடாவுக்கு குடிமாறினார்; அங்கே பயனியராகவும் மூப்பராகவும் சேவை செய்த ஒரு சகோதரரை 1991-⁠ல் மணந்துகொண்டார்; சூசன் இறந்த கொஞ்ச காலத்திலேயே அவரும் இறந்துவிட்டார்.

முழுநேர ஊழியர்களான சூசனையும் அவருடைய கணவரையும் சபையிலுள்ளவர்கள் உயிருக்கு உயிராக நேசித்தனர். சூசன் நோயால் பாதிக்கப்படும்வரை இருவருமே முழுநேர ஊழியத்தில் நிலைத்திருந்தனர். மொத்தமாக அவர் 20 ஆண்டுகளை முழுநேர ஊழியத்தில் செலவிட்டிருந்தார். ப்ளோரிடாவில் நடைபெற்ற அவருடைய சவ அடக்க நிகழ்ச்சிகள் தொலைபேசி இணைப்பு வழியாக நார்த் போல் சபையிலும் ஒலிபரப்பப்பட்டது.

யெகோவாவைச் சேவிப்பவர்கள் அனுபவிக்கும் ஆன்மீக ஆசீர்வாதங்களையும் மகத்தான உயிர்த்தெழுதல் நம்பிக்கையையும் உயர்வாய் மதித்துப் போற்ற சூசனின் கடிதம் நமக்கு உதவும். (அப்போஸ்தலர் 24:15) தம்மிடம் நெருங்கும் அனைவரிடமும் கடவுள் நெருங்கிச் செல்கிறார் என்பதையும் இந்த வாழ்க்கை அனுபவம் காட்டுகிறது!​—யாக்கோபு 4:7,  8.

[அடிக்குறிப்புகள்]

a சகோதரர் ஜென்ரிக்கும் அவருடைய மனைவியும் 1993-⁠ஆம் ஆண்டு ஒரு கோர விபத்தில் பலியானார்கள்.

b டிசம்பர் 22, 1999, விழித்தெழு!-வில் பக்கம் 7-ஐக் காண்க.

[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]

“நான் சத்தியத்தில் இருந்த காலங்கள்தான் மிக அற்புதமான காலங்கள்; இதைவிட சிறந்த வாழ்க்கை ஒன்று இருக்கவே முடியாது”

[பக்கம் 21-ன் படம்]

பத்து வயதில் சூசன்

[பக்கம் 23-ன் படம்]

சூசன் தன் கணவர் ஜேம்ஸ் சீமோருடன்