Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகில் வாழ்ந்தவருள் தலைசிறந்த மனிதர்

உலகில் வாழ்ந்தவருள் தலைசிறந்த மனிதர்

உலகில் வாழ்ந்தவருள் தலைசிறந்த மனிதர்

உலகில் வாழ்ந்தவருள் தலைசிறந்த மனிதர் யார் என்ற கேள்வியைக் கேட்டால் நீங்கள் யாரைக் குறிப்பிடுவீர்கள்? ஜலப்பிரளயத்தை தப்பிப்பிழைத்து, இன்று பூமியில் உயிர்வாழும் அனைவருக்கும் மூதாதையான நோவாவைக் குறிப்பிடுவீர்களா? (ஆதியாகமம் 7:1, 21, 22; 9:18, 19) எழில் கொஞ்சும் நகரை உருவாக்கி அதை மகா பாபிலோன் என்றழைத்த பண்டைய பேரரசரான நேபுகாத்நேச்சாரைக் குறிப்பிடுவீர்களா? (தானியேல் 4:28-30) ஒருவேளை, அவருடைய வீரதீர சாதனைகளைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனங்களும் தெரிவிக்கிறதே, அந்த மகா அலெக்சாந்தரைக் குறிப்பிடுவீர்களா? (தானியேல் 8:5-8, 21-22) அல்லது புகழ் பெற்ற ரோம பேரரசர் ஜூலியஸ் சீசரைக் குறிப்பிடுவீர்களா?

ஜூலியஸ் சீசர் இறந்து 45 வருடத்திற்குள், பெத்லகேமில் ஒரு குழந்தை பிறந்தது; அக்குழந்தைக்கு இயேசு என்று பெயர் சூட்டப்பட்டது. அவர் உலகில் வாழ்ந்தவருள் தலைசிறந்த மனிதராக ஆனாரா? கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சரித்திராசிரியர்களின் உலக சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு தெரிவித்தது: “மதச்சார்பற்ற நோக்குநிலையில் பார்த்தாலும்கூட, சரித்திரப்புகழ் வாய்ந்த வேறெந்த நபருடைய பணிகளைக் காட்டிலும் [இயேசுவின்] பணிகள்தான் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு புதிய சகாப்தம் அவருடைய பிறப்பிலிருந்து தொடங்கியதை உலகின் முக்கிய கலாச்சாரங்கள் பொதுவில் ஏற்றுக்கொள்கின்றன.”

இன்றும்கூட இயேசு கிறிஸ்துவின்மீது மக்களுக்கு ஆர்வம் தணியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் முன்னணி செய்திப் பத்திரிகைகளான டைம், நியூஸ்வீக், யு.எஸ். நியூஸ் அண்டு உவர்ல்ட் ரிப்போர்ட் ஆகியவற்றில் அவரைப்பற்றிய அட்டைப்படக் கட்டுரைகள் ஒரே சமயத்தில் வெளிவந்தன. உண்மையில், இயேசுவின் மீது மக்கள் காட்டும் ஆர்வம் இன்னும் தீவிரமடைந்தே வருகிறது. டோரண்டோ ஸ்டார் என்ற செய்தித்தாள் 2004-⁠ஆம் ஆண்டில் இவ்வாறு தெரிவித்தது: “இன்றும்கூட திரைப்படங்களில், இசையில், நவநாகரிக உடைகளில் அவருடைய செல்வாக்கைப் பார்க்க முடிகிறது. நம்முடைய பிரபல ஹீரோக்களின் பட்டியலில் அவரையும் சேர்த்து விட்டோம்.”

விந்தை என்னவென்றால், சில காலத்திற்கு முன்பு இயேசு வெறும் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்தான் என்பதாக சிலர் வாதிட்டனர். புரூனோ பார் (1809-82) என்ற பிரபல ஆசிரியரும் இவர்களில் ஒருவர். அவரிடம் பயின்ற மாணவர்தான் கார்ல் மார்க்ஸ். சமீபத்தில், புதிய ஏற்பாட்டுக்கு வெளியே இயேசு என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் ராபர்ட் இ. வேன் வோர்ஸ்ட் இவ்வாறு எழுதினார்: “இயேசுவை ஒரு புராண கதாபாத்திரமாகத்தான் பார் கருதினார். பிற்பாடு மார்க்ஸ் தன்னுடைய கோட்பாட்டில் அக்கருத்தை புகுத்தினார்; பின்னர் சோவியத் நாட்டு அரசாங்க புத்தகங்களும், மற்ற கம்யூனிஸ பிரச்சாரங்களும் இதைப் பரப்பிவிட்டன.”

இருந்தாலும், இயேசு உண்மையான நபர் என்பதை இன்று வெகுசிலரே மறுக்கின்றனர். சொல்லப்போனால், பெரும்பாலோர் அவரை உண்மையில் வாழ்ந்த நபராகவும் அதோடு மிக முக்கியமான நபராகவும் மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்கின்றனர். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற பத்திரிகையில், “விஞ்ஞானம் இயேசுவை புறக்கணிக்க முடியாது” என்ற தலைப்பிடப்பட்ட தலையங்கக் கட்டுரை டிசம்பர் 2002-⁠ல் வெளிவந்தது. அதன் எழுத்தாளர் அக்கட்டுரையை இவ்வாறு முடித்தார்: “எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒருசில நாத்திகர்களைத் தவிர பெரும்பாலான அறிஞர்கள் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை ஒரு சரித்திரப்பூர்வ நபராக ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளனர்.”

ஆனால், இயேசு வெறுமென சரித்திரப் புருஷர்களில் ஒருவர் மட்டுமல்ல, அவர்களை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். டைம் பத்திரிகை இவ்வாறு தெரிவிக்கிறது: “கடந்த இரண்டாயிரம் வருடங்களாக மட்டுமல்ல, மனித சரித்திரம் முழுவதிலுமே நாசரேத்தைச் சேர்ந்த இயேசுதான் மற்றவர்கள்மீது அதிக செல்வாக்கு செலுத்திய நபர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது பெரும் முட்டாள்தனம். இயேசுவின் வாழ்க்கையைப்போல வேறு யாருடைய வாழ்க்கையும் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று அடித்துக் கூறலாம்.”

இருப்பினும், அவர் உண்மையில் யார்? அவர் எங்கிருந்து வந்தார்? அவர் ஏன் பூமியில் மனிதராக பிறந்தார்? நம்மால் முடிந்தளவுக்கு அவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது ஏன் அவ்வளவு முக்கியம்? ஆகிய கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டியவை.