Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ “தாங்கள் செய்த செலவுகளைப்பற்றி துணையிடம் பொய் சொல்லி ‘நிதி மோசடி’ செய்ததாக 50 சதவீதம் வரையிலான தம்பதியர் ஒத்துக்கொண்டுள்ளனர்.”​—⁠த உவால் ஸ்ட்ரீட் ஜர்னல், அ.ஐ.மா.

◼ “கிரீஸ் நாட்டின் 84 சதவிகித நிலம் பாலைவனமாக மாறும் ஆபத்தில் இருக்கிறது; அதுபோக இன்னும் 8 சதவிகித நிலம் ஏற்கெனவே வறண்டு போய்விட்டது.”​—⁠காத்திமெரீனி (ஆங்கில பதிப்பு), கிரீஸ்.

◼ ஓசியானியாவைச் சேர்ந்த வனுவாட்டுவில் உள்ள டிக்வா தீவில் இருக்கும் லாடேவூ என்ற கிராமமே, தட்பவெப்பத்தினால் ஏற்படுகிற மாற்றம் காரணமாக கைவிடப்பட்ட முதல் கிராமமாக இருக்கலாம். அங்கேயிருந்த வீடுகள் “பெரும் புயலாலும் கோர அலைகளாலும் திரும்பத் திரும்ப வெள்ளத்தில் அமிழ்ந்து போயிருக்கின்றன.”​—⁠வனுவாட்டு நியூஸ், வனுவாட்டு.

அதிகரிக்கும் நூறுவயதினர்

இப்போதெல்லாம் நூறுவயது வரைக்கும் வாழ்கிறவர்களைப் பார்ப்பது அவ்வளவு ஒன்றும் கடினமல்ல என நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. தற்போது, உலகில் நூறு வயதானவர்கள் சுமார் 2,00,000 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 66 பேர் 110-வது பிறந்தநாளைக் கொண்டாடி, ‘சூப்பர் நூறு வயதினராக’ ஆகியிருக்கிறார்கள் என்பதாக அந்தப் பத்திரிகை கூடுதல் தகவல் அளிக்கிறது. நீண்டகால வாழ்க்கையைப் பற்றிய தகவல்களின் உண்மைத்தன்மையை நிர்ணயிப்பது சில சமயங்களில் கடினமாக உள்ளது என்பதை நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகை ஒத்துக்கொள்கிறது. ஆனால் “நம்பகமான பதிவுகள் இல்லாதிருப்பது, ‘சூப்பர் நூறு வயதினராக’ இருப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை தற்போது அதிகபட்சம் 450-ஆக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது” என்றும் கூறுகிறது.

அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட மர்மக் கொலையாளி

ஒரு பூர்வ கொலையாளியைக் “கண்டுபிடிக்க பண்டைய ஏதேனியர்களின் சவக்குழியில் இருந்த பற்களிலிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ உதவியது” என்று கனடாவின் மாக்லீன்ஸ் பத்திரிகை கூறுகிறது. கிரேக்க எழுத்தாளர் தூசிடடிஸ், பெலபனீஸியன் போரின் சரித்திரம் என்ற தனது புத்தகத்தில் ஒரு கொள்ளைநோயைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அது சுமார் பொ.ச.மு. 430-⁠ல் ஏதன்ஸ் நகரம் முழுவதும் பரவியது என்றும் இந்நகரத்திற்கு எதிராகப் போரிட்ட ஸ்பார்ட்டா நகரத்திற்கு அது சாதகமாக ஆனது என்றும் குறிப்பிடுகிறார். கொள்ளைநோய் பற்றிய தூசிடடிஸின் விளக்கம் அதை அடையாளம் காணுமளவுக்குப் போதுமானதாகவும் திட்டவட்டமானதாகவும் இல்லை. என்றாலும், தற்போது பல்லின் பல்ப்பை வைத்துச் செய்யப்பட்ட ஆராய்ச்சி அந்த மர்மக் கொலையாளி டைஃபாய்டு காய்ச்சல்தான் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பதற்கு உதவியிருப்பதாகச் சொல்லப்படுகிறது; இந்தப் பல்ப்பு, கிருமிகளைப் பல நூற்றாண்டுகள் பாதுகாத்து வைக்கிறது.

ஒட்டகங்களில் சவாரி செய்ய ‘ரோபாட்’

பெர்சிய வளைகுடா நாடுகளில் பிரபலமாகக் கருதப்படுகிற ஒட்டகப் பந்தயங்களில் சவாரிசெய்ய சிறுவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். மனித உரிமைக் குழுக்கள் இதைக் கண்டனம் செய்தபோது இந்த ஒட்டகப் பந்தயம் எதிர்ப்பைச் சந்தித்தது. ஒட்டகங்களின் திறமைகளைச் சிறப்பான விதத்தில் பயன்படுத்த, சவாரி செய்பவர்கள் 27 கிலோவுக்கும் குறைவான எடையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்; அதனால்தான் டீனேஜர்கள்கூட அதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தீர்வு? ரோபாட் சவாரியாளர்கள். சுவிட்ஸர்லாந்திலுள்ள வடிவமைப்பாளர்கள் ரிமோட்-கன்ட்ரோலால் இயங்கும் 27 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள ரோபாட்டை வடிவமைத்திருக்கிறார்கள். அது ஒட்டகத்தின் மீது உட்காருவதற்கு விசேஷித்த ஒரு சேணம் பூட்டப்பட்டிருக்கிறது. ஒட்டகம் பயந்துவிடாமல் இருப்பதற்காக, அது மனித உருவமும் குரலும் கொண்டிருக்கிறது. அது சாய்ந்துகொள்ளவும், சமநிலைப்படுத்தவும், சாட்டையை பயன்படுத்தவும், ஒட்டகத்தை ஓட்டிச் செல்லவும் திறமையுடையதாக இருக்கிறது. ஒட்டக உரிமையாளர்கள் அதைப் பயன்படுத்த ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

2000 வருடங்களுக்குப் பிறகு முளைக்கும் விதை

பண்டைய யூதாவின் பேரீச்சை மரங்கள் அவற்றின் அழகுக்காகவும், நிழலுக்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் மிக உயர்வாக மதிக்கப்பட்டன. அவை மத்திப காலங்களில் சிலுவைப் போர் வீரர்களால் அழிக்கப்பட்டன. ஆனால் இப்போது, “இஸ்ரேலின் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் அறிவியலாளர்களும் கிட்டத்தட்ட 2,000 வருடங்கள் பழமையான ஒரு பேரீச்ச விதையை முளைக்கச் செய்வதில் வெற்றி கண்டிருக்கிறார்கள்” என த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. “மெத்தூசலா என்று செல்லமாய் அழைக்கப்படும் இந்த விதை, மஸாடாவில் செய்யப்பட்ட ஓர் அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்டது.” செங்குத்தான மலைப்பகுதிகள் நிறைந்த இந்த மஸாடா அரணை பொ.ச. 73-⁠ல் ரோமர்கள் கைப்பற்றினர். அந்த விதை பெண் விதையாக இருந்தால் மரமாகி கனி கொடுப்பதற்குப் பல வருடங்கள் ஆகும் என வறண்டநில விவசாயத்தில் வல்லுநரும் அந்த விதையை முளைப்பிக்கச் செய்தவருமான டாக்டர் இலேன் சாலவே குறிப்பிடுகிறார். ஆனால், அது “ஓர் ஆண் விதையாக இருந்தால் ஆர்வத்துக்குரிய ஒன்றாக மட்டுமே இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.