Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

அன்பு எங்கே? (மார்ச் 2006) அன்பு என்ற வார்த்தைக்கு இந்த உலகம் தவறான விளக்கத்தைத் தருகிறது. அதற்குச் சமாதி கட்டவேண்டுமென சாத்தானும் குறியாய் இருக்கிறான். அன்பை தன்னலமின்றி செயலில் காட்ட இதுபோன்ற கட்டுரைகள் உதவுகின்றன. இந்த மாபெரும் சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ள உதவியதற்கு நன்றி.

ஒய். பி., ஐக்கிய மாகாணங்கள்

என்னுடைய ஆருயிர்த் தோழிகள் இருவரும் வேற்று மொழி சபையில் சேவை செய்வதற்காக மாறிச் சென்றபோது தனிமையில் வாடினேன். அதைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்தப் பத்திரிகை கிடைத்தது. “அன்பு வேண்டுமானால், அன்பு காட்டுங்கள்” என்பதை நினைப்பூட்டியதற்கு நன்றி. புதிய நண்பர்களைப் பெறுவதற்கு அன்பு காட்டுவதில் ‘விரிவடையவும்’ இதயங்கனிந்த அன்பைக் காட்டவும் இப்போதிருந்து தீர்மானித்திருக்கிறேன்.​—2 கொரிந்தியர் 6:12, 13, NW.

எம். டி., ஜப்பான்

முதுமை​—⁠சவாலை சந்தித்தல் (பிப்ரவரி 2006) முதியவர்கள் ஓரங்கட்டப்படுவதாக நான் சிலசமயம் உணர்ந்திருக்கிறேன். நோயாளியான என் கணவரை கடந்த 11 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன். இப்போதும் சில சமயங்களில் தனிமையில் வாடுகிறேன். விழித்தெழு!-வில் வந்த இக்கட்டுரையை திரும்பத் திரும்ப வாசித்தேன்; அதோடு, ஆடியோ கேசட்டையும் பலமுறைக் கேட்டேன். இது எனக்காகவே எழுதப்பட்ட பத்திரிகை. மிக்க நன்றி.

எஸ். டி., ஜப்பான்

செயற்கை உறுப்புகள் (பிப்ரவரி 2006) செயற்கை உறுப்புகளைப் பற்றிய கட்டுரைக்கு மிக்க நன்றி. நான் நாலுமாத கர்ப்பிணியாக இருந்தபோது, எங்களுக்கு கையும் காலும் இல்லாத குழந்தை பிறக்கும் என்றும், அவனுக்கு ஒரு வயதாகும்போது செயற்கை கால்களைப் பொருத்தலாம் என்றும் சொன்னார்கள். டேரிலுக்கு சரியாக ஒரு வயதான அதே மாதத்தில் இந்தக் கட்டுரை வெளிவந்தது. அவன் இப்போது நிற்பதற்கும் நடப்பதற்கும் பழகிக்கொண்டிருக்கிறான். டேரில் ‘மானைப் போல குதிக்கும்’ நாளுக்காக நானும் என் கணவரும் ஆசையாக காத்திருக்கிறோம்.​—ஏசாயா 35:⁠6.

ஒய். எ., பிரான்சு

வாழ்க்கை வாழ்வதற்கே (அக்டோபர் 22, 2001) நான் மனதுக்குள் வாடி வதங்கும்போதெல்லாம் அக்டோபர் 22, 2001 விழித்தெழு!-வை எடுத்து திரும்பத் திரும்ப வாசிப்பேன். அதிலுள்ள தகவல்கள் எனக்கு மருந்தைப் போல இருக்கின்றன. மருந்துக்கும் இவற்றுக்கும் என்ன வித்தியாசமென்றால், இவை ஒருபோதும் காலாவதியாகுவதில்லை. நம்முடைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அறிவுரைகளும் தீர்வுகளும் அதிக உதவியாக உள்ளன. விழித்தெழு!-வை வாசிக்கும்போதெல்லாம் என் உள்ளத்தில் புத்துணர்ச்சி பொங்குகிறது; என்னைப் போன்றவர்களின்மீது உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்றும் உணரச் செய்கிறது. “வாழ்க்கை வாழ்வதற்கே” என நினைப்பூட்ட நீங்கள் இருப்பதை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டு நன்றி சொல்கிறேன்.

பி. டி., மடகாஸ்கர்

பில்கிரிம்களும் பியூரிடன்களும்​—⁠அவர்கள் யார்? (பிப்ரவரி 2006) இந்தக் கட்டுரையில் வெளியான தவறான தகவல்களை வாசித்து அதிர்ச்சி அடைந்தேன். வட அமெரிக்க இந்தியர்கள் தேங்ஸ் கிவ்விங் டே கொண்டாடாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது; ஆனால் அதைச் சொல்லாமல் நீங்கள் வெறுமனே பூசிமெழுகியிருக்கிறீர்கள்.

பெயர் குறிப்பிட விரும்பவில்லை, ஐக்கிய மாகாணங்கள்

“விழித்தெழு!” பதில்: தேங்ஸ் கிவ்விங் டேயைப் பற்றிய விளக்கமான சரித்திரத்தை அளிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். 1621-⁠ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் பில்கிரிம்கள் தங்களுடைய அமெரிக்க இந்திய நண்பர்களுடன் சேர்ந்து மூன்று நாளைக்கு இதைக் கொண்டாடினார்கள் என்று “என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா”வும் இன்னும் அநேக புத்தகங்களும் குறிப்பிடுகின்றன. டிசம்பர் 11, 1621, தேதியிட்ட கடிதத்தில் எட்வர்டு வின்ஸ்லோ இதைப்பற்றி விவரித்துள்ளார். இருந்தபோதிலும், தொடர்ந்து வந்த வருடங்களில் அறுவடை சமயத்தில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு கொண்டாட்டங்களிலும் தேங்ஸ் கிவ்விங் டேயை சேர்த்துக்கொண்டார்கள். 1637-⁠ல் நூற்றுக்கணக்கான அமெரிக்க இந்தியர்கள் (Pequot Indians) கொன்று குவிக்கப்பட்ட பிறகு மாஸசூஸெட்ஸ் பே காலனியைச் சேர்ந்த கவர்னர் ஜான் வின்த்ராப் என்பவர் “தேங்ஸ் கிவ்விங்” டேயைக் கொண்டாடுவதற்கு அழைப்பு விடுத்தார். இது மிகக் கொடூரமான செயலாக இருந்தது. எனவே, தேங்ஸ் கிவ்விங் டேயைக் குறித்து ஏன் சில வாசகர்கள் புண்பட்டிருக்கிறார்கள் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.