Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கலீப்ஸோ ட்ரினிடாட்டின் ஒப்பற்ற நாட்டுப்புற இசை

கலீப்ஸோ ட்ரினிடாட்டின் ஒப்பற்ற நாட்டுப்புற இசை

கலீப்ஸோ ட்ரினிடாட்டின் ஒப்பற்ற நாட்டுப்புற இசை

ட்ரினிடாட்டிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ட்ரினிடாட், டுபாகோ இரட்டைத்-தீவுக் குடியரசு பற்றி கேள்விப்படும்போது, உங்கள் நினைவுக்கு வருவது என்ன? பலருக்கு ஸ்டீல் இசைக்குழுவின் நாதங்களும் கலீப்ஸோ இசையின் உயிரோட்டமுள்ள பாடல்களும் நினைவுக்கு வருகின்றன. உண்மையில், கலீப்ஸோவின் நெஞ்சில் நிற்கும் இராகங்களும் பிரத்தியேகப் பாணிகளும் அது பிறந்த இடமான தெற்கு கரிபியன் கடல் பகுதியில் மட்டுமல்லாமல் பல இடங்களில் பிரபலமாகி இருக்கின்றன. a

கலீப்ஸோ காலலூ என்ற புத்தகத்தின்படி, “ட்ரினிடாட்டில் சுமார் 1898-⁠க்குப் பிறகு விழாக்காலங்களில் பாடப்பட்ட பாடல்களை கலீப்ஸோ என்ற பெயர் குறிக்கலாம். தெருக்களில் குடித்துவிட்டு ஆட்டம்போடுகிறவர்கள் பாடிய பாடலாகவும் அது இருக்கலாம் அல்லது மேடைகளில் தொழில் பாடகர்கள், பகுதி தொழில் பாடகர்கள் பாடிய பாடலாகவும் அது இருக்கலாம். இது வரலாற்றுப் புகழ்பெற்ற ஆப்பிரிக்கக் கதை சொல்பவர்களின் பாரம்பரியத்திலிருந்து உருவாகி ஆப்பிரிக்க அடிமைகளால் ட்ரினிடாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம். அதன்பிறகு, ஆப்பிரிக்கப் பாடல், ஆடல் மற்றும் மேள இசை ஆகியவற்றின் பேணி வளர்க்கப்பட்ட அடிப்படை அம்சங்களுடன், பிரெஞ்சு, ஹிஸ்பேனிக், ஆங்கிலேய இன்னும் மற்ற இனங்களின் செல்வாக்கும் சேர்ந்து இறுதியாக கலீப்ஸோ உருவானது.

கலீப்ஸோ என்ற பெயரின் தோற்றம் பற்றித் தெரியவில்லை. இந்தப் பெயர், மிகச்சிறந்த கலைநிகழ்ச்சியை புகழுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மேற்கு ஆப்பிரிக்கச் சொல்லான கைஸோ என்ற வார்த்தையிலிருந்து வருகிறது என சிலர் சொல்கிறார்கள். 1830-களில் ட்ரினிடாட்டிலும் டுபாகோவிலும் அடிமைத்தனம் முடிவுறுவதற்கு முன்புகூட சான்ட்வல் (பாடகர்கள்) தங்களிடமுள்ள நல்லவற்றைப் புகழ்ந்தும் பாட்டுக்களில் ஒருவரையொருவர் கேலிசெய்தும் பாடினதைக் கேட்க கூட்டம் அலைமோதியது. மற்றவர்களின் மனதில் நீங்கா இடம்பெற, கலீப்ஸோனியன் என அழைக்கப்பட்ட ஒவ்வொரு கலீப்ஸோ பாடகரும் அவருக்கே உரிய மேடைப் பெயரையும் பாணியையும் உருவாக்கிக்கொண்டார்.

அதன் பாணியும் பாதிப்பும்

கலீப்ஸோனியர்கள், நையாண்டியாகப் பேசும் தங்களுடைய திறனுக்காக எப்பொழுதும் புகழப்பட்டிருக்கிறார்கள். மேலும் அநேக கலீப்ஸோ பாடகர்கள் பல வரிகளையுடைய பிழையில்லாத பாடல்களை, நினைத்தவுடன் உருவாக்கும் அபாரத் திறமையைக் வளர்த்திருக்கிறார்கள். அந்தப் பாடல்களின் தலைப்புக்கு ஏற்றபடி மலைக்க வைக்கும் அளவுக்கு திருத்தமான வார்த்தை விளையாட்டால் ரசிக்கும்படி செய்திருக்கிறார்கள். பூர்வ நாட்களில், கலீப்ஸோனியர்கள் ஆப்பிரிக்க சந்ததியில் வந்த ட்ரினிடாட் மக்களாக இருந்தார்கள்; சமுதாய மட்டத்தில் தாழ்நிலையில் இருந்தார்கள். ஆனால், தற்பொழுது அவர்களை ஒவ்வொரு வம்சத்திலும் நிறத்திலும் சமுதாய அந்தஸ்த்திலும் காணமுடிகிறது.

ட்ரினிடாட், டுபாகோவின் முன்னாள் கலாச்சார இயக்குநராக இருந்த டாக்டர். ஹாலிஸ் லிவர்பூல் என்பவர் ஒரு வரலாற்று ஆசிரியர், மேலும் அவர் ஒரு கலீப்ஸோனியரும்கூட. அவர் பண்டைய கலீப்ஸோ பாடகர்கள் குறித்து விழித்தெழு!விடம் இவ்வாறு கூறினார்: “எப்பொழுதும் நகைச்சுவையாக பேசுவதுதான் அவர்களுடைய முக்கிய அம்சம். முக்கியமாக பொழுதுபோக்கிற்காகவும், வதந்திகளைக் கேட்பதற்காகவும், கேட்டவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் மக்கள், [கலீப்ஸோ] கூடாரத்துக்கு வந்தார்கள். குறிப்பாக, கீழ்த்தட்டு வர்க்கத்தினர் சொல்லும் காரியங்களைத் தெரிந்துகொள்ள மேல்தட்டு வர்க்கத்தினர் அங்கு வந்தார்கள். ஆளுநரும் அவருடைய ஆதரவாளர்களும், தங்களுடைய செல்வாக்கு எந்தளவு உயர்வாக அல்லது தாழ்வாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வந்தார்கள்.”

கலீப்ஸோனியர்கள் அரசாங்க அதிகாரிகளையும் மேல்தட்டு வர்க்கத்தினரையும் அடிக்கடி கேலி செய்து பாடினார்கள். அதன் விளைவாக கலீப்ஸோனியர்கள் பொதுமக்களின் கதாநாயகர்களாகவும் ஆதரவாளர்களாகவும் மதிக்கப்பட்டார்கள். ஆனால் அதிகாரத்தில் இருந்தவர்களோ அவர்களைத் தொல்லை தருபவர்களாகக் கருதினார்கள். கலீப்ஸோனியர்கள் அந்தளவு அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பாடல்களை இயற்றியதால் அவர்களைக் கட்டுப்படுத்த கட்டாயம் சட்டம் கொண்டுவர வேண்டுமென சிலசமயங்களில் குடியேற்ற அரசாங்கம் உணர்ந்தது. அதனால் பாடகர்கள் இரட்டை அர்த்தமுள்ள வரிகளைத் தங்கள் பாடல்களில் சேர்த்துப் பாடத் தொடங்கினார்கள். அதில் வல்லவர்களாகவும் ஆனார்கள். இரட்டை அர்த்தமுள்ள இரட்டுற மொழிதல் அவர்களுடைய பாடல்களில் முக்கிய அம்சமாகவே இன்றுவரை தொடர்கிறது.

கலீப்ஸோனியர்கள், மொழியைப் பயன்படுத்துபவர்களாக மட்டுமல்ல அதைப் படைப்பவர்களாகவும் இருந்தனர். முக்கியமாக, மேற்கிந்தியத் தீவில் உள்ளவர்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல வார்த்தைகள் இந்த கலீப்ஸோனியர்கள் கண்டுபிடித்தவையே. அநேக மக்கள், ஏன், சில அரசியல்வாதிகள்கூட ஒரு குறிப்பை வலியுறுத்திக் காட்ட அடிக்கடி கலீப்ஸோனியர்களை மேற்கோளாகக் குறிப்பிடுவதில் ஆச்சரியமேதுமில்லை.

நவீன கலீப்ஸோ

சமீப காலங்களில் கலீப்ஸோ இசையில் நிறைய பாணிகளும் இசைக் கலவைகளும் உருவாகியிருக்கின்றன; அவை பலதரப்பட்ட இசை ரசனைகளுக்குப் பொருந்துகின்றன. மற்ற அநேக இசைப்பாணிகளைப் போலவே, சில கலீப்ஸோ பாடல்களும் உயர்ந்த ஒழுக்கப் பண்புகளை பிரதிபலிப்பவையாக இல்லை. தெளிவாகவே, நாம் எதைக் கேட்கிறோம் என்பதில் எச்சரிக்கையாக இருப்பது ஞானமானது. (எபேசியர் 5:3, 4) நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம், ‘குறிப்பிட்ட இரட்டை அர்த்தமுள்ள வரிகளை என்னுடைய பிள்ளைகளுக்கு அல்லது கலீப்ஸோ பாடலைப் பற்றி தெரியாத நபருக்கு விளக்கிச் சொல்ல சங்கடமாக இருக்கிறதா?’

ட்ரினிடாட்டிற்கும் டுபாகோவுக்கும் நீங்கள் வந்தால், அங்குள்ள அழகான கடற்கரைகளையும் கடற்பாறைகளையும் கண்டு நீங்கள் மகிழ்ந்து போவீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தத் தீவுகளில் உள்ள பல்வேறுபட்ட இனங்களாலும் கலாச்சாரங்களாலும் நீங்கள் கவரப்படுவீர்கள். அதோடு, உலகத்திலுள்ள இளைஞர், முதியோர் என அனைவரின் உள்ளத்தைக் கவரும் உயிரோட்டமான, கவர்ந்திழுக்கும் கலீப்ஸோவையும் ஸ்டீல் இசைக் கச்சேரிகளையும் அனுபவித்து மகிழுவீர்கள்.

[அடிக்குறிப்பு]

a ஸ்டீல் இசைக்குழுவினர் பொதுவாக கலீப்ஸோ இசைகளையே இசைக்கிறார்கள், ஆனால் கலீப்ஸோ பாடகர்கள் வழக்கமாக கிட்டார், டிரம்பெட், சாக்ஸாஃபோன், டிரம்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள்.

[பக்கம் 2425-ன் படங்கள்]

ஸ்டீல் டிரம்ஸ்